முனைவர் மு.மோகனராசின் ‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ –

நூலாய்வு 1/4

1.0.0.0.நுழைவாயில்:

1-8-1973 முதல் 30-6-2008 வரை [34 ஆண்டுகள், 10 திங்கள்கள் 29 நாள்கள்–மொத்தம் 12477 நாள்கள்] சென்னைப் பல்கலைக் கழகத் திருக்குறள் இருக்கையில், போற்றுதலுக்கு உரிய பெரும் பணி ஆற்றியவர் திருக்குறள் தூயர் பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு அவர்கள்.

அப்போது “ஆய்வே வாழ்வு; வாழ்வே ஆய்வு” என்னும்  பே ராசிரியர் முனைவர் ந. சஞ்சீவி அவர்களின் ஆய்வியல் கோட் பாட்டை அகத்தில் ஏற்றுக் கொண்டார். அன்றுமுதல்  சாய்வும் ஓய்வும் இன்றித் தோய்வு மீதூரத் திருக்குறள் ஆய்வுப் பணிகளை   முன்னெடுத்து, நன்னடை நல்கி வருகிறார்.

திருக்குறளை உள்நாட்டு, வெளிநாட்டு நூல்களோடு ஒப்பீட்டு ஆய்வியல் முறைமையிலும்  வேறுபாடுகளையும்  மாறுபா டுகளையும் காட்டும் ஆய்வியல் முறைமையிலும் அணுகி, நுணுகி, கூர்ந்து, ஆழ்ந்து ஆய்வு செய்தல் வேண்டும்.

அவற்றின்வழித் திருக்குறளின்  உயர்வு, உயரம், தனிமனித வியல், சமுதாயவியல், நாட்டியல், உலகியல் விழுமியங்கள், ஓர் உ லக உணர்வு போன்றவற்றை உலகம் முழுவதும் கொண்டுசெல்லல் வேண்டும் என்னும் உலகளாவிய — வாழ்நாள் குறிக்கோளர் பேராசிரியர் முனைவர் கு. மோகனராசு அவர்கள்.    

அவ்வகையில் அவரது ஓப்பாய்வு நூற்கொடையாம் ‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ என்னும் அருநூலைத் திறனாய்தல்  இவ்ஆய்வுக் கட்டுரையின் ஆழ்நோக்கு.    

2.0.0.0.நூல் உருவாக்கப் பின்புலம்:

            நல்ல படைப்பாளர் ஒரு நூலை உருவாக்க நினைத்தால், அவரிடம் நற்குறிக்கோள் ஒன்று, ஒன்றியிருக்கும்.  அகத்தில் இருக்கும். அவ்வகையில் ‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ என்னும் இந்நூல், நன்முறையில் உருக்கம் பெற்ற தற்கான பின்புலத்தை முனைவர் கு. மோகனராசு அவர்கள், :

               “கல்வி தொடர்பான சிந்தனைகளை முறையே சீனத்து மண்ணிலும் தமிழ் மண்ணிலும் முறைப்படுத்தித் தந்த முதல்வர்கள் கன்பூசியசும் திருவள்ளுவரும். இவ்விருவடைய கல்வி தொடர்பான சிந்தனைகளை ஆராய்ந்து உண்மை காண வேண்டும் என்னும் உந்துதலின் உருவே இந்த ஒப்பாய்வு.” என இந்நூலின் நுழை வாயிலில் [பக்.4,] நுவல்கின்றார்.

3.0.0.0.நூல் பெயர்ப் பொருத்தம்:

            நூலுக்குப் பெயர்ப் பொருத்தம் இன்றியமையாத ஒன்று.  ஒரு நூலின் பெயர் அந்நூலின் உள்ளடக்கத்தை நம் முன்னாடி மிகத் தெளிவுற வெளிப்படுத்தும் கண்ணாடி. இது நூலாசிரியரின் நூல் பெயரமைப்புத் திறனை நுவலும் தன்மையது.

இந்நூலின் பெயர் ‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’  என்பது. இப்பெயர் நூலின் உள்ளடக்கத்தை எளிதாகவும் மிகத் தெளிவாகவும் வெளிப்படுத்துகிறது. இவ்வாறு பெயர் இட்டுள்ளமை, நூலாசிரியரது நுண்மாண் நுழைபுலத்தை நன்முறை யில் நவில்கிறது.  

இத்தலைப்பில் இன்னொரு சிறப்பும் உண்டு. அஃதாவது திருவள்ளுவருக்கு முந்தியவர் கன்பூசியசு என்னும் வரலாற்றுக் குறிப்பே அது.

இத்தகு முறைமையில் நூலுக்குப் பெயரிட்டமை, நூலாசிரியர் முனைவர் கு,மோகனராசு அவர்களின் நூல் பெயரிடல் திறனையும் கன்பூசியசு திருவள்ளுவர் ஆகியவர் பற்றிய  வரலாறுகளை அவர் அறிந்தவர் என்பதையும் அறிவிக்கின்றன.  

4.0.0.0.நூல் அமைப்பு முறைமை:

நூல் அமைப்பு முறைமையை

4.1.0.0.நூல் புறக்கட்டமைப்பு முறைமை 

4.1.0.0.நூல் அகக்கட்டமைப்பு முறைமை

என இரு வகைகளுக்குள் அடக்கலாம். இவற்றை இனி ஆய்ந்து  கண்டு உணர்வோம்.   

4.1.0.0.நூல் புறக்கட்டமைப்பு முறைமை:

            நூலின்  அட்டையின் மேலே  ‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ என்னும் நூல் பெயர், ஒரு வட்டத்திற்குள்  கன்பூசியசு ஓவியம், அடுத்த வட்டத்திற்குள் திருவள்ளுவரது ஓவியம் ஆகியன ஒளிர்கின்றன.

முதல் பக்கத்தில் நூல் பெயர், நூலாசிரியரது பெயர், வள்ளுவர் கழகம், சென்னை, 1984 என்பன அச்சிடப்பட்டுள்ளன.

            2ஆவது பக்கத்தில் முதல் பதிப்பு 25-12-1984, உரிமம் செல்வன் கு.மோ.பாவேந்தன், விலை உரூ.12, வெளியீடு: திருமதி சாந்தி மோகனராசு முகவரி, அச்சக முகவரி ஆகியன ள்ளன.  

            3ஆவது பக்கம் படையல். அதில்

                   “என்னிடம் கல்வி பயின்ற – பயிலும் – பயிலவிருக்கும் மாணவ மணிகளுக்கு இந்நூல் அன்புப் படையல்.” என உள்ளது.

                  4ஆவது பக்கம் நூலாசிரியரின் நுழைவாயில் உள்ளது. 5 ஆவது பக்கம் பேராசிரியர் முனைவர் சூ.இன்னாசி அவர்களது அணிந்துரை அணிசெய்கிறது.  

பின்னட்டையில்  ‘நூலாசிரியரின் நூல்கள்’ என்னும் தலைப்பில், 14 நூல்களின் பெயர்ப் பட்டியல் தரப்பட்டுள்ளது. நூலின்  மொத்தப் பக்கங்கள் 128.

4.2.0.0. நூல் அகக்கட்டமைப்பு முறைமை:

            நூல் அகக்கட்டமைப்பு முறைமை என்பது நூலின் பொருளடக்கமாகிய ஆய்வுக் கட்டுரைகளின் தலைப்புகள் பற்றியது.  இந் நூலில்,

4.2.1.0.கன்பூசியசும் திருவள்ளுவரும்

4.2.2.0.கல்வியின் நோக்கங்கள்

4.2.3.0.கற்கும் எல்லை

4.2.4.0.எல்லார்க்கும் கல்வி

4.2.5.0.ஆசிரியர்

4.2.6.0.ஆசிரியர் – மாணவர் தொடர்பு 

4.2.7.0.மாணவர்

4.2.8.0.கற்பதற்கு உரியன

4.2.9.0.கற்பிக்கும் முறைமை

4.2.10.கற்கும் முறைமை

4.2.11.0.கல்வியின் பயன்கள்

4.2.12.0.நிறைவுரை

ஆகிய 12 ஆய்வுக் கட்டுரைத் தலைப்புகள் அமைந்துள்ளன. 

(தொடரும்)

பேராசிரியர் வெ.அரங்கராசன்

(முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர்

கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி

கோவிற்பட்டி – 628 502, )

கைப்பேசி: 9840947998

   மின்வரி: arangarasan48@gmail.com