கருணாவைக் குற்றஞ் சாட்டும் முன்னர்த் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ! – இலக்குவனார் திருவள்ளுவன்
கருணாவைக் குற்றஞ் சாட்டும் முன்னர்த்
தண்டிக்கப்பட வேண்டியவர்கள் !
“யா காவாராயினும் நா காக்க” என்பதை சமய/மத வெறியர்களும் அவ்வாறு வெறியைத் தூண்ட விரும்பும் அரசியல்வாதிகளும் பின்பற்றுவதில்லை. இத்தகைய பேச்சிற்கான அரசு நடவடிக்கை என்பது ஒன்றுமில்லை என்னும் பொழுது இப்பேச்சுகள் பெருகுவதில் வியப்பில்லை. ஆனால், இவ்வாறு பேசுவோர் பாசக பிராமணராக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அரசின் பாதுகாப்பு என்பது அக்கட்சிக்கும் அச்சமுதாயத்திற்கும் அவப்பெயர் என்பதை உரியவர்கள் உணரவில்லையே!
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கடந்த ஆவணி 31, 2049/16.09.2018 அன்று ச.ம.உ. கருணாசு பேச்சு சில அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசிய பேச்சிற்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று குரல் எழும்பிக் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இவர் காவல்துறையை மிகவும் மதிப்புடன்தான் குறிப்பிட்டுள்ளார். தான் கண்டிக்கும் காவல் அதிகாரியையும் தமிழ் படித்தவன், தமிழன் என்பதால் மதிப்புடன் பார்ப்பதாகவும்தான் குறிப்பிட்டுள்ளார். கட்சித்தொண்டர்கள் சமுதாயக் காரணங்களால் கொலைகளில் ஈடுபடக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். அதே நேரம் பாதிப்புற்றுக் குற்றம் செய்ய நேரும்பொழுது தன்னிடம் சொல்லிவிட்டுச் செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளார். இவரது தவறான சில கருத்துகளுக்குப் பிறர் கேட்கும் முன் தானாகவே வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டுள்ளார்.
முதல்வரைத் தான் அடிப்பதாக இவர் கூறவில்லை. அவ்வாறு காவல்துறை கூறுவது குறித்துத் தான் அப்படிப்பட்டவனா என்ற தொனியில்தான் பேசியுள்ளார். ஒரு வேளை “எடப்பாடிக்கு முதல்வர் பதவி என்பது சின்னம்மா போட்ட பிச்சை” என்று பேசியது கைதிற்குக் காரணமாக இருக்கலாம். உலகறிந்த உண்மைதானே! அதற்கு ஏன் சினமடையவேண்டும் இப்பொழுது ஆட்சியை நிலைக்கச்செய்யும் வினைத்திறம் மிக்க முதல்வர் இதனை யெல்லாம் பொருட்படுத்தலாமா? பாசகவின் அடிமையல்ல என்று கூறிக்கொண்டே பாசகவினரைத் தாலாட்டிக் கொண்டு பிறரைத் துன்புறுத்தலாமா?
காவல்துறையினரைத் தலைமைக்கு எதிராகத் தூண்டிப்பேசியவர், காவல்துறையினரிடம் மதவெறியைத் தூண்டிப் பேசியவர், உயர்நீதிமன்றத்தை இழிவாகப் பேசியவர், ஊடகத்தினரை இழிவுபடப் பேசியவர் என இழிவாகவும் வன்முறையாகவும் பேசிய சிலர் வருத்தம் தெரிவிக்காத பொழுதும் கட்டுப்பாடின்றி நடமாடுகின்றனர். இவர் கைது செய்யப்பட்டுள்ளார்!
ஆனால், இத்தகைய பேச்சுகளுக்குக் காரணம் அரசுதான். சொல்லப்பட்ட செய்தியை நோக்காமல் சொல்லியவர் யார் என்ற அளவுகோல் கண்டு பாராமுகமாக இருக்கும் அரசு இத்தகைய பேச்சுகளுக்கு வழி வகுத்து விடுகிறது.
நூற்றுக்கணக்கிலான வன்முறைப் பேச்சுகள் இதற்கு முன்பு பேசப்பட்டுள்ளன, ஏசப்பட்டுள்ளன. ஆனால் அவ்வாறு பேசுவோர் தங்களை மாவீரர்களாக எண்ணிக்கொண்டு தொடர்ந்து வன்முறைப்பேச்சில் ஈடுபடும் வண்ணம் மத்திய அரசும் மாநில அரசுகளும் பாராமுகமாக இருக்கின்றன. இதனால் மாற்றுக்கட்சியினர் உணர்ச்சிவயப்பட்டுப் பேசினால் தளையிடப்படுகின்றனர்.
அவற்றைப் பட்டியலிட்டால் பக்கங்கள் நூற்றுக்கணக்கில் வரும். சில பார்ப்போம்.
கேரள மாநில முதல்வர் பினராய் விசயன் தலையை வெட்டுபவருக்கு 1 கோடி உரூ. பரிசு வழங்கப்படும் என்ற ம.பி.மாநிலம் உச்சயினி இரா.சே.ச/ ஆர்.எசு.எசு. தலைவர் சந்திராவத்து
நடிகை தீபிகா படுகோனேவின் மூக்கை வெட்டுவோம்; பத்மாவதி படத்தின் இயக்குநர் தலையை வெட்டிக் கொண்டு வந்தால் 5 கோடி உரூ.பரிசு வழங்கப்படும் என்று அறிவித்த வன்முறை எதிர்ப்பில் ஊறிய இராசுபுத்து கருனி சேனா(Shree Rajput Karni Sena)
கன்னையா குமாரின் தலையைவெட்டினால் 11 இலட்சம்; நாக்கை வெட்டினால் 4 இலட்சம் என விலை பேசிய மேற்குவங்க மாநிலப் பதுவான் மாவட்டச்செயலாளர் குரு தீபுவரு சினி
மேற்குவங்க முதல்வர் மமுதா பானர்சியின் தலையை வெட்டிக், கொண்டு வருபவர்களுக்கு 11 இலட்சம் உரூ.பரிசு வழங்கப்படும் என அறிவித்த பா.ச.க இளைஞர் அணியான பா.ச. யுவ மோட்சா தலைவர்
கன்னையா குமாரின் தலையைவெட்டினால் 11 இலட்சம்; நாக்கை வெட்டினால் 4 இலட்சம். – திலீபு கோசு,( மேற்கு வங்கம்)
கவிஞர் வைரமுத்துவின் நாக்கை வெட்டினால் உரூ.10 கோடி பரிசு அளிக்கப்படும்.-முன்னாள் அமைச்சரும் பாசக மாநில துணைத்தலைவருமான நயினார் நாகேந்திரன்.
உவைசியின் கன்னத்தில் அறைந்தால் ஒரு இலட்சம் பரிசு . பாபாராம்தேவு
உவைசியின் தலையை வெட்டினால் ஒரு கோடி பரிசு – எச்சு.இராசா
நடிகை தீபிகா படுகோனேவை உயிருடன் எரிக்கும் ஆளுக்கு 1 கோடி உரூ.பரிசு அளிக்கப்படும் என்று அறிவித்த பாரதீய சத்திரிய மகாசபை இளைஞர் அணித் தலைவர் புவனேசுசிங்கு
எனப் பலர் மீது எந்நடவடிக்கையும் இல்லை.
இவை தவிர அனந்தகுமார் எக்டே, பெங்களூர், இரவிசங்கர்(மனிதவள இணை அமைச்சர்), இராமகோபாலன், ஓகி ஆதித்தியாநாத்து(இப்போதைய உ.பி.முதல்வர்), கிரிராசு(சிங்கு)கிசோர், சாத்வி தேவிதாக்கூா், சாத்விபிராச்சி, சுப்பிரமணியசுவாமி, தேவாதாக்கூா், நரேந்திர(மோடி)(இப்போதைய தலைமையர்), நாராயணன், நிதின்கட்கரி(இப்போதைய மத்திய அமைச்சர்), நிரஞ்சன் சோதி, விகேசிங்கு(இப்போதைய மத்திய அமைச்சர்), முதலான பாசகவினர் உதிர்த்த பொன்மொழிகள்(?) பின்வருவன. ஒத்த கருத்துடையவர்கள் என்ற முறையில் ஒரே வன்முறைப்பேச்சு பிறராலும் சொல்லப்பட்டுள்ளதால் யார் யார் விவரம் குறிக்கவில்லை.
“இந்துக்களின் விந்தை இசுலாமியப் பெண்களின் கருவுக்குள் செலுத்துங்கள்”
“சூலாயுதத்தின் மூன்று முனைகளைக் கொண்டு நடுநிலை இந்துக்கள், இசுலாமியர்கள், கிறித்துவர்கள் ஆகிய 3 பிரிவினரைக் குத்திக் கொலை செய்யவேண்டும் “
“இசுலாமியர் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்!”
“பாரத் மாதா கி சே என முழக்கமிடாதவர்கள் தலையை வெட்டுவேன்.”
(அரியானா மாநிலத்தில் பட்டியல் சாதிக் குழந்தைகள் இருவர் எரித்துக் கொல்லப்பட்டதற்கு அவ்வினத்தை இழிவுபடுத்தும் வகையில்) “நாய் மீது யாராவது கல் எறிந்தால், அரசு என்ன செய்ய முடியும்? அதற்கு அரசு பொறுப்பல்ல”
(குசராத்து இசுலாம் இனப்படுகொலை குறித்து) “ஒரு நாய்க்குட்டி சீருந்தின்(காரின்) சக்கரத்தில் சிக்கிக் கொண்டால் நமக்கு வேதனை ஏற்படுமா? “
(கேரளா தேர்தல் தோல்வி எதிரொலியாகப்) “பொதுவுடைமைக்கட்சிப் பெண்களின்பிறப்புறுப்புகளில் குண்டு வைப்போம்.”
“மசூதி என்பது வழிபாட்டுத் தலமல்ல, ஒரு கட்டடம் மட்டுமே எனவே அதனை எந்நேரத்திலும் இடிக்கலாம். “
“இசுலாத்தை அடியோடு ஒழித்துக்கட்ட வேண்டும். “
“கங்கை நதி ஓரம் உள்ள இசுலாமியர்களை வெளியேற்றுங்கள். அவர்களின் ஊர்களைக் காலி செய்யுங்கள். அரித்துவார், காசி, அலகபாத்தில் இசுலாமியர்கள் நுழையத் தடைவிதியுங்கள். “
இவ்வாறு பேசியவர்கள், பேசுபவர்கள் உயர் பொறுப்பிலும் உள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுத்துவிட்டுக் கருணாசு வழக்கை ஆராய்வது பொருத்தமாக இருக்கும்.
மத்திய ஆட்சியில் மதவெறியும் சாதி வெறியும் மிக்க கட்சி ஆட்சி செய்வதால் நாடு முழுவதும் கொலைவிலைஞர்களும் அதிதீவிரப் பிராமணியப்பேச்சாளர்களும் பெருகி வருகின்றனர். இந்தியா முழுவதும் அவர்களுக்குப் பாதுகாப்பு உள்ளதுபோல் தமிழ்நாட்டிலும் பாதுகாப்பு உள்ளது. எனவேதான் தமிழக அரசு ஆட்சிக்குடை நிழலில் உள்ளவர்களை விட்டுவிட்டுப் பிறர் மீதுமட்டும் பாய்கிறது.
நூலணிந்தவர் பேசினால் அரசே வெண்சாமரம் வீசும்.
நூலறிந்தவர் பேசினால் ‘நகர நக்சல்’ என்று சிறைவாசம்.
என்னும் இத்தகைய நிலை நாட்டை அழிவிற்கு இட்டுச் செல்லும்.
அறநூல் கல்லாதவருக்கு அரணாக இருக்கும் கொடுங்கோலாட்சி நிலத்திற்குச் சுமையாகும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். மாநில அரசுகளும் தன்னுரிமையுடன் திகழ்ந்துஅறவழி நிற்க வேண்டும்.
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை (திருவள்ளுவர்,திருக்குறள் 570)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல
சிறப்பான கட்டுரை ஐயா! நாவடக்கமும் மனிதநேயமும் இன்றிப் பேசிய பல பேச்சுக்களைப் பேசியவர் பெயருடன் நீங்கள் அளித்துள்ள இப்பட்டியல் வருங்காலத்தில் இதே போன்ற நேர்வுகளில் பலருக்கும் எடுத்துக்காட்டுக்குப் பயன்படும். மிக்க நன்றி!