கருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்! – இலக்குவனார் திருவள்ளுவன்
கருநாடகாவில் கருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்!
15 நாள் கால வாய்ப்பில் ச.ம.உ.களை வாங்கி ஆட்சியைச் சிக்கலின்றி அமைக்கலாம் எனப் பாசக திட்டமிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் 24 மணி நேர வாய்ப்பே அளித்தமையால் பேர வணிகத்திற்கு வாய்ப்பில்லாமல் போனது. இச்சூழலை எதிர்பார்த்தே எடியூரப்பா விலக வேண்டும் என நேற்று குறிப்பிட்டிருந்தோம்,( எடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும். )
மோசமான தோல்வியை வெளிப்படுத்துவதை விட விலகுவதே மேல் எனக் குறுக்கு வழியில் கருநாடகாவின் முதல்வராகப் பொறுப்பேற்ற எடியூரப்பா பதவி விலகினார். விலகல் காரணம் என்னவாயினும் அவருக்கு வாழ்த்துகள்! இதனால் கொல்லைப்புற வழியில் ஆட்சியைப் பிடித்துத் தென்னகத்தின் மாபெரும் நுழைவு எனப் பரப்புரை மேற்கொள்ள நினத்த பாசகவின் கனவு பொய்த்தது.
பாசக இப்பொழுது பேராயக்(காங்.)கட்சி, ம.ச.த. கட்சியின் கூட்டை எதிர்த்துக் கூறிய தகவல் அக் கட்சிக்கும் பொருந்தும்தானே! ஆனால், ம.ச.த. உடன் கூட்டணி வைக்க முயன்றதே பாசக! இரண்டு எதிர்க்கட்சிகளிலிருந்தும் ஆட்களை இழுக்க முயன்றதே!
ஆனால், கடிபட்ட நரி மேலும் குழப்பத்தை உண்டு பண்ணும். பாசகவினர் பதவி விலகும் முடிவு எடுத்தால் பலர் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். அமைதியாக மத்திய ஏவல் துறைகளின் மூலமும் பேராசை காட்டியும் பலரை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்க்க முயலும். பிற கட்சியினரும் மக்களும் விழிப்பாக இருக்க வேண்டும்.
மக்கள் நாயகம் நிலை நிற்க உதவிய உச்சமன்ற நீதிபதிகளுக்கும் போராடிய வழக்குரைஞர்கள் அரசியல்வாதிகள், ஊடகத்தினர், கட்சியினர், வலை யன்பர்கள் ஆகியோருக்கும் பாராட்டுகள்.
நாம் முன்பே கூறியபடி இவ்வாறு தவறான செயல்பாட்டிற்கு வழி வகுத்த ஆளுநர் வாயூபாய் வாலா, தூண்டுகோலாக இருந்த தலைமையர் நரேந்திர (மோடி), தொடர்புடையோர் மான உணர்வு இருப்பின் பதவி விலக வேண்டும்.
நரேந்திர மோடி கருநாடகாவில் 21 தொகுதிகளில் பேசினார். ஆனால் இவற்றுள் பாசக 10 தொகுதிகளில் தோல்விதான் தழுவியுள்ளது. பாசகவிற்கு வெற்றி என அடையாளம் காட்டிக் கொண்ட 46 தொகுதிகளில் 41 தொகுதிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது.
மோடி இல்லாத பொழுது பாசக வெற்றி பெற்ற தொகுதிகளை விட இப்பொழுது குறைவான தொகுதிகளிலேயே வெற்றி கண்டுள்ளது.
29 தொகுதிகளில் மிகக் குறைவான வாக்குகள் பெற்று பாசக காப்புத் தொகையை இழந்துள்ளது.
இருப்பினும் மாபெரும் வெற்றி எனக் கூக்குரலிட்டு மக்களை மயக்க முயலும் அமீத்து சா கட்சித்தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும். மோசடிக்குத் துணை நின்ற அனைவருமே தத்தம் பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும். ஆனால், இத்தகைய பண்பு நம் நாட்டில் இல்லை.
சாதி, சமய, மத, இன வெறி பிடித்தவர்களை ஓரங்கட்டியுள்ள கருநாடாகாவிற்குப்பாராட்டுகள்!
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.(திருவள்ளுவர், திருக்குறள் 541)
என நடுநிலையுடன் தீர்ப்பு வழங்கிய உச்ச மன்ற நீதிபதிகள் ஏ.கே.சிருகிரி(AK Sikri), சரத்து அரவிந்து போபுதே (SA Bobde), அசோக்கு பூசன்( Ashok Bhushan) ஆகியோருக்கு மீண்டும் பாராட்டுகள்!
- இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply