முகம்மது அலி :muhmmaduali01

[தி.பி.: தை 04, 1973 – வைகாசி 21, 2047 – சனவரி 17, 1942 – சூன் 3, 2016]

முகம்மதுஅலிக்கு மாலையிடும் எம்ஞ்சியார் : muhmmaduali_with_MGR

 

முகமது அலி, உலகக்குத்துச்சண்டை உலகில்

சுற்றிச் சுழன்ற கறுப்புச் சூறாவளி.

 அமெரிக்காவில் நிலவும் நிறவெறிக் கொடுமைகளுக்கு எதிராகத் தொடர்ந்து மிகுவலுக் குத்துகளை விட்டுகொண்டிருந்த மாவீரர் அவர். நடுக்குவாத (Parkinson) நோயோடு 30 ஆண்டுகளுக்கும் மேலாய், மல்யுத்தம் நடத்திகொண்டிருந்த அந்த மாவீரர், தனது 74-ஆவது  அகவையில், கடந்த 3-ஆம்நாள் தன்  நேயர்களிடமிருந்து  நிலையாக விடைபெற்றுக்கொண்டார். உலகைப் போட்டிகளில் அழுத்தமான குத்துகளால் எதிராளிகளை மிரட்டிய அவரது கைகள், அசைவற்ற  அமைதியில் அமிழ்ந்துவிட்டன.

 

  அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் 1942- இல் பிறந்த அலியின் இயற்பெயர், காசியசு  மார்செலசு கிளே(Cassius Marcellus Clay ). அவர்  இளமைப் பருவத்திலேயே இசுலாமைத் தழுவி, முகமது அலி எனப் பெயர் புனைந்துகொண்டார். அவர் குத்துசண்டை வீரராய் மாறியதே எதிர்பாரா ஒன்று. 12  அகவைச் சிறுவனாக இருந்தபோது, அலியின்  மிதிவண்டியை ஒருவன் திருட முயன்றான். இதைப்பார்த்து ஆவேசமான அலி, சரமாரியாக அவனைக் கையால் குத்தி வீழ்த்தினார். இதைத் தூரத்திலிருது கவனித்த  சோ மார்ட்டின் என்ற  காவற்காரர், அலியைக் கட்டித் தழுவி, ’டேய். உனக்குள் ஒரு குத்துச்சண்டை மாவீரன் ஒளிந்துகொண்டிருக்கிறான். அவனை வெளியே கொண்டு வா’ என்றபடி, முகமதுஅலியை முறையாகக் குத்துசண்டை பயிற்சிபெறச் செய்தார். பயிற்சிக் காலத்திலேயே அலி, தன் அதிரடித் தாக்குதலால் அசத்தத் தொடங்கினார்.

 

  பொழுதுபோக்கு வீரராக உருவெடுத்த அலி, 60-இல்  உரோமில் நடந்த உலக(ஒலிம்பிக்கு)ப் போட்டியில்  இலேசான மிகுஎடை(‘லைட் ஹெவி வெயிட்’)பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். இதன்பின் உலகம் அவரை ஆச்சரியமாய் திரும்பிப் பார்க்கத் தொடங்கியது. அடுத்தடுத்து 61 முறை மிகுஎடை குத்துச் சண்டைப் போட்டிகளில் பங்கேற்று, 56-முறை வெற்றிமகுடம் தரித்தார். 37 முறை  அதிரடிமோது (knockout)பாணியில் வென்றதால் அவரை அன்பர்கள் கூட்டம் ‘ அதிரடி நாயகன்’ என்று  மகிழ்ச்சியாக அழைத்தது.

  மூன்று முறை உலகளாவிய போட்டிகளில், தங்கப் பதக்கங்களை வென்று, குத்துச் சண்டை வரலாற்றில், தனது  அருவினைகளைப் பக்கம் பக்கமாய் எழுதிய அலி, 1981-இல் ஓய்வை நோக்கி நகர்ந்தார். எனினும் சமூகக்களத்தில் இருந்து விலகாமல், நிறவெறிக்கு எதிரான குரலையே, அழுத்தமான குத்துகளாகக் கொடுத்துக்கொண்டே இருந்தார்.

  அவரது  தன்மதிப்பிற்குச் சான்றாக ஒரு  நிகழ்ச்சி. உரோம்  உலகஆட்டத்தில்(ஒலிம்பிக்கில்) அவர் தங்கப் பதக்கம் வென்ற சமயத்தில், அமெரிக்க  உணவகம் ஒன்றில்  காநீர் குடிக்கப் போனார் முகமது அலி. அப்போது  உணவகப் பணிப்பெண், ‘கருப்பினத்தவருக்கு எங்கள்  உணவகத்தில் எதுவும் தரமாட்டோம்’ என்றார் ஆதிக்கத் திமிரோடு. அவ்வளவுதான், “மனிதாபிமானத்தை மதிக்கத் தெரியாத இந்த நாட்டில், இந்தப் பதக்கத்துக்கு மட்டும் என்ன மதிப்பு இருக்கப்போகிறது?” என்றபடி கோபமாக எழுந்துசென்ற முகமது அலி, அருகில் சலனமற்று ஓடிக்கொண்டிருந்த ஓகியோ நதியில், தனது  உலக(ஒலிம்பிக்கு)ப் பதக்கத்தை தூக்கி வீசி, நதியையே அதிரவைத்தார். அவர் வீசியது பதக்கத்தை மட்டுமல்ல; அமெரிக்காவின் நிறவெறியையும்தான்!

  குத்துச்சண்டை நாயகரான முகமது அலிக்கும் தமிழகத்திற்கும் ஆழமான அன்புப் பிணைப்பு உண்டு. 80-இல் தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கமும் அப்பீசே என்ற அமைப்பும், இணைந்து நடத்திய குத்துச் சண்டை போட்டி, நமது சென்னை மாநகர நேரு  ஆட்டஅரங்கத்தில் நடந்தது. இதில் முகமது அலி,  உடன் வீரரான சிம்மி எல்லீசை எதிர்கொண்டு வெற்றிவாகை சூடினார்.

 இதற்காகச் சென்னை வந்த அலிக்கு, அப்போதைய முதல்வரும் குத்துச்சண்டை  அன்பருமான ‘மக்கள் திலகம்’ எம்ஞ்சியார், அன்போடு விருந்துகொடுத்தார்.  இராமாவரம் தோட்டத்தில்  சானகிஅம்மாள் மேற்பார்வையில், கைப்பக்குவம் மிக்க மணி என்பவர், அசைவ உணவை வகை வகையாய் ஆக்க, அதைச்  சுவைத்துச் சாப்பிட்ட முகமது அலி, ‘சாப்பாட்டில் உங்கள் அன்பின்  சுவை, தூக்கலாகவே இருக்கிறது’ என்று எம்ஞ்சியாரைப் பாராட்டினார்.

  இதேபோல் கலைஞர் முதல்வராக இருந்த 90-இலும் முகமது அலி, தன் துணைவியாரோடு சென்னைக்கு வந்தார்.  கோபாலபுரம் இல்லத்தில் கலைஞரைச்சந்தித்து அளவளாவினார். பின்னர் அங்கிருந்து அண்ணா அறிவாலயம் சென்று சுற்றிப் பார்த்த முகமது அலிக்கு, தமிழகத்தின் திராவிட இயக்கப் போராட்டம் குறித்து சொல்லப்பட, அதை வியந்து கேட்டார். குத்துச் சண்டை  வளையத்தைத் தாண்டி, முகமது அலியை தமிழகம், ஒரு கருப்பினப் போரளியாகவே பார்க்கிறது.

களத்தில் வீழ்ந்து பழக்கப்படாத முகமது அலி, தனது கல்லறையில் எழுதிவைக்கச் சொன்ன  தொடர் என்ன தெரியுமா?

‘ஒன்று..இரண்டு..மூன்று… எண்ணுங்கள்.

இந்தமுறை இவன் எழுந்திருக்கப் போவதில்லை’

ஆரூர் தமிழ்நாடன்ூ aarurThamizhnaadan

ஆரூர் தமிழ்நாடன்

முத்திரை-நக்கீரன் :muthirai_nakkeeran