கலப்பினால் வரும் கேடு! – நெல்லை ந.சொக்கலிங்கம்
மறுமலர்ச்சி இயக்கம்:
மனிதன் பண்பாடு பெற்ற நாள் தொட்டுப் பயன்பட்டு வரும் கருவி மொழி, நாட்டிற்கேற்பவும், சூழ்நிலைக்கேற்பவும் மொழிகள் வேறுபட்டு நிற்கின்றன. மனிதன் எப்படித் தனித்து வாழவியலாதோ அது போன்றே மொழியும் தனித்து வாழவியலாது என்பது ஓரளவிற்குப் பொருந்தும். இருப்பினுங் கூட கூடுமான வரை தனித்து – அதாவது தூய்மையுடன் இயங்க முடியும். ஆனால் சிலர் கூறுகின்றார்கள். வடமொழி செத்தொழிந்தது அதன் தூய்மைப் பண்பினால்தான் என்பர். மொழி நூலறிஞர்களின் கருத்துப்படி ஒரு மொழி தன் தூய்மையைப் பாதுகாத்ததனால் அழிந்து விடாது என்பதாகும். வடமொழி வையகத்தில் இதுகாறும் வாழாது அழிந்து விட்டதற்குக் காரணம் அதன் வன்மையான ஒலித்தன்மையும் இலக்கணச் சிக்கலுமே ஆகும். எனவே ஒரு மொழி அழிவதற்கு அடிப்படையான ஏது வேறொன்றாக விளங்க, தூய்மைத் தன்மையே அழிவிற்குக் காரணம் என்பது பொருந்தாது.
இன்று தமிழர்கள் தாயனை மொழிக்குத் தக்க பாதுகாப்பு அளிப்பதில்லை. தலைமயிரைப் பணிய வைத்துப் பளிச்சிடுவதற்குப் படித்த தமிழர்கள் பண்பாட்டின் பெட்டகம் பைந்தமிழைப் பேணக் கற்றுக் கொண்டாரில்லை; ஆடை கலைந்து விட்டது. கரை படிந்து விட்டது என்று சொல்லி அதனைக் களைய எடுக்கும் முயற்சி கூடப் பண்பாட்டு வேராம் பசுந்தமிழின் நலங்காக்க எடுக்கப்படுவதில்தைல. வடசொற் கலப்பினை வாரி வாரி எடுத்துப் போற்றித் தமிழின் தூய்மைத் தனைக் கெடுத்த காலத்தில்தான் தனித்தமிழ் இயக்கம் தலைதூக்கிற்று.
தொல்காப்பியர் வகுத்த சட்டம்:
தொல்காப்பியப் பெருந்தகையின் காலத்திலேயே பிறமொழிச் சொற்கள் கலக்கத் தொடங்கின. அது கண்ட அருந்தமிழ் இலக்கணப் பேராசிரியர் தமிழ் இலக்கணச் சட்டம் வகுத்தார்.
‘‘வடசொற்கிளவி வடவெழுத் தொரீ இ
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே!’’
என்று அணைபோட்டுத் தடுத்தார். இதற்கு எடுத்துக் காட்டாகச் சங்க இலக்கியத்திலேயே சான்று கூறலாம். ‘‘அக்நி’’ என்ற சொல்லை ‘அங்கி’ என்று தமிழ் ஒலிமுறைக் கேற்பவும் இலக்கண நெறிக்கேற்பவும் தக்கவாறு அமைத்து வழங்கினர்.
‘‘அவிர்சடை முனிவர் அங்கி வேட்கும்,
ஆவுதி நறும்புகை முனைஇ’’ (பட்டினப் 54-55)
இப்படி இலக்கண வரம்பு கடவாக்கன்னித் தமிழ் களப்பிரர் எனும் கவியரசர் படை எடுப்பாலும் வேற்றரசர் ஆட்சியாலும் மாற்று மொழிகளின் தாக்குதல்களாலும் பெரும் இன்னலுக்குள்ளானது. தமிழ் தூய்மைத் தன்மை இழந்து தாங்குவாரின்றித் தானும் நிலைக்குள்ளாயிற்று. அப்படிப் பெருமளவு கலப்பு நிகழ்ந்த பின்னும் தனக்கேயுரிய உயிர்ச் சொற்களைக் கொண்டு விளங்கி வந்தது. தமிழ்ப் புலவர்கள் தமது வேற்று மொழி அறிவைக் காட்ட வேண்டி வேற்றுமொழிச் சொற்களைத் தமிழில் புகுத்தி வந்தனர். அம்மட்டோ! தமிழில் தூய்மை நலம் பேணிப் பேசுவது என்பது இழிவு என்று கருதி ஒதுக்கிய காலமும் உண்டு. இந்த நிலை தன்னை எண்ணி ஏங்கிய மேனாட்டறிஞர் கால்டுவேலர் ‘‘தமிழ் தன்னிடத்துக் கலந்துள்ள வடசொற்களில் பெரும் பகுதியை நீக ஒல்லும்; அவ்வாறு நீக்கிய தமிழ் தூய்மையும் அழகும் பொலிய விளங்கும். ஆனால் ஆங்கிலமோ இலத்தின் சொற்களை விட்டொதுக்கித் தனித்து இயங்க வியலாது’’ என்று கூறி விழிப்புறச் செய்தார். இதனை அறிந்த தமிழ்ப் படை தறுகண்மையுடன் தனித்தன்மையைப் பெரிதும் பேண தொடங்கிற்று. தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடிகளாக மறைமலை அடிகள், பரிதிமாற்கலைஞர் கா.சு.பிள்ளை, பாரதிதாசனார், போன்றோர் விளங்கினார்.
கலப்பினால் கேடு:
பிறமொழிச் சொற்கள் தமிழில் கலப்பதால் சொல்வளம் மிகுதியாகும் என்று பெருமிதம் தோன்றக் கூறுவர். ஆனால் தமிழில் உள்ள தரமான பொருட்செறிவுடைய நல்ல சொற்கள் அழிந்தொழிவதை இவர்கள் சற்றும் அறிவதில்லை. ‘சந்தோஷம்’ என்றசொல் மகிழ்ச்சி, இன்பம், களிப்பு போன்ற நாள் வழக்கில் உள்ள சொற்களை வென்று விட்டு நம் நாவில் பயின்று வருமானால் அதைச் சொல்வளம் பெருகுவதாக எண்ண முடியுமா? ஒரு சொல்லை ஏற்க நாலைந்து சொற்களை இழந்து தவிக்க வேண்டுமா? இந்த நிலை இனியும் நீடிக்க வேண்டா என்று எண்ணிய பாரதிதாசனார்,
‘‘நகுமாறு நந்தமிழை நலிவு செயும்
தீயர்களோ? நல்வாழ்வுக்கோர்
புகும் ஆறு புறக்கணித்தும் தமிழ் உயிர்
வாழ்வதினும் இறத்தல் நன்றே!’’
என்று வீர உரைகூறினார். இனி தமிழ் மரபு அடியோடு மாற்றப்படும்; மாண்புடைய இலக்கண மரபு மடிந்துவிடும். எடுத்துக்காட்டாக ஒன்று காண்போம். ‘ஒருவன்’ என்ற ஆண்பால், ஒருமைக்குரி உரிய பெண்பால் ஒருமைச் சொல் ‘ஒருத்தி’ என்பதாகும். ஆனால் இன்று ‘ஒருவள்’ எனும் புதுச் சொல் புகுந்துவிட்டது. முயல் என்னும் வினைச்சொல்லுக்கு ஏற்ற இறந்த காலம் முயன்றேன், முயன்றான், முயன்றார் என்பதாகும். ஆனால் நாளிதழ்களின் வரம்பு கடந்த போக்கால் முயற்சித்தேன், முயற்சித்தாள், என்ற வழக்குகள் பழக்கத்தில் வந்து விட்டன. இது தவிர, புணர்ச்சி வழி ஐயப்பாடும் ஏற்படும். தமிழ்ப் புணர்ச்சி உலக மொழிகளிலேயே இல்லாத (ஒரு) சிறப்புடைய ஒன்றாகும்.
(எ-டு) பால்+ காரன் = பாற்காரன்
பால் + பானை = பாற்பானை
என்பது முறையான தமிழ்ப் புணர்ச்சி ஆகும். வேற்றுமொழியின் உறவு ஏற்பட்டதன் விளைவாக, பால்க்காரன் என்றும், பாற்க்காரன் என்றும் தவறுபட எழுதத் தொடங்கிவிட்டனர். ஆகவே முறையான தமிழ் என்று கூடத் துணிந்து சொல்லி வந்தனர்.
அடுத்து எழுத்து வழி ஐயப்பாடு ஏற்படும். இதனைப் பள்ளி மாணவர்களிடம் மிகுதியாய்க் காணமுடியும். தமிழில் முதலில் ல, ற, ட, ர, போன்ற எழுத்துக்கள் வாரா. ஆனால் இன்று பிறமொழிக் கலப்பால், லாடம், ரயில், டமாரம் போன்ற ஒற்றெழுத்துக்களைக் கொண்டும் தொடங்கும் சொற்கள் பெருகிவிட்டன. இரண்டு ஒற்றெழுத்துக்கள் தமிழில் இணைந்து வராது; மேலும் ஒரு சில ஒற்றுக்களே சொல்லிறுதியில் வரும் என்று கூறும் தமிழ் இலக்கணம். ஆனால் இன்று இந்த விதிகள் எல்லாம் வலிவற்று நலிந்து விட்டன; மதிப்பிழந்து விட்டன. ஆயுத எழுத்து தமிழ் எழுத்தா என்ற ஐயங்கூடச் சிலர் உள்ளத்தில் எழுந்து விட்டது. அடுத்தாற்போன்று ‘ல, ழ, ள,’ ‘‘ற, ர, ’ ண,ந,ன’ இவற்றுக்குரிய நுட்பமான வேறுபாடு நாளடைவில் மறைந்து வருதலைக் கண்கூடாகக் காண்கிறோம். ‘அறம்’ என்றெழுத ‘அரம்’ என்றும் ‘குளம்’ என்றெழுத ‘குலம்’ என்றும் எழுதும் தவறான நிலை நாட்டில் பரவி வருகின்றது. இம்மட்டோ! ‘னா, ந’ என்ற ஒரே ஒலியுடைய இரு எழுத்துக்கள் எதற்கு என்று கேட்கத் துணிந்து விட்டனர் சிலர். எனவே, சீருடை இலக்கணமும் சிறந்தோர் மரபும் கொண்ட தமிழைச் சிதைந்து வரும் செயல் மறைய வேண்டும். அன்றுதான் தமிழ் வெல்லும் நாள் ஆகும். கூடுமான வரை தமிழறிந்தோர் அனைவருங் கூடி அருந்தமிழ் நலங்காக்கும் திறங்கொள்ள வேண்டும்.
நெறிகாத்து நிறைவு செய்க: வெறும் ஆரவாரத்திற்காகவும், ஆடம்பரத்திற்காகவும் வேற்றுமொழிச் சொற்களை வலிந்து நுழைத்தால் தமிழ் நலிந்து விடுதல் திண்ணம். ஒரு மொழியில் இல்லாத கருத்துக்களைப் பிறமொழியினின்றும் ஏற்றுக் கொள்ளுதல் இயல்பு. இக்கட்டான நிலையில் அம்மொழிச் சொற்களைத் தம் மொழி மரபுணர்ந்து மாற்றி அமைத்துக் கொள்வதை யாரும் தடுக்கவியலாது. எனவே தமிழர்கள் வேற்று மொழிச் சொற்களை வேகமாகக் கடன் வாங்குவதன் மூலம் தம் கூர்மை அறிவை மழுங்குமாறு செய்து கொள்ளுகின்றனர். எனவே தமிழில் இல்லாத சொற்களைத் தமிழ் இலக்கண மரபு கெடாதவாறு ஏற்றுக் கொள்வோம். புகுத்துதல் என்பது தகாது. தொல்காப்பினார் வகுத்துவிட்ட வண்டமிழ் நெறிதனைப் போற்றி வளர்க்க வேண்டும். மேலும் மேலும் பிறமொழிச் சொற்களைக் கடன் பெறுவதால் அச்சொற்களைப் எப்படிப் பயன்படுத்துவது என்ற ஐயங்கூட எழுக்கூடும். அதனை எண்ணி வருந்திய பாரதிதாசனார்,
‘‘தனித்தமிழில் இந்நாட்டுத் தக்க புதுக்காப்பியம் நன்னூல் இயற்ற
நினைப்பாரேல் நம்புலவர் நிலவாவோ ஆயிர நூல் தமிழகத்தே!’’
என்று கூறிச் சென்றார். எனவே பிறமொழிக் கலப்பினால் தமிழுக்கேற்படும் கேடுகளை அறிந்தோம். இனியேனும் அருந்தமிழின் தூய்மை நலம் பேணி அழகுற & வளமாக்கி வாழ்வளிக்க வேண்டும்!
தூய தமிழ் நெறி வளர்க!
– குறள்நெறி: ஆடி 31, 1995 /15.08.64
Leave a Reply