கலைகளைத் தன்னுள் கொண்டிருக்கும் தமிழின் பெருமையை விரித்துரைப்பது எளிதன்று!
உலகம் நாகரிகம் கண்டறியாத அக்காலத்திலேயே கோட்டை கொத்தளம் கட்டி, தனக்கெனச் சில வரையறைகள் உண்டாக்கி அரசு நடத்தி, உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் அகிலும் தோகையும் முத்தும் பட்டும் அனுப்பிச் செல்வம் கொழித்த நாடு தம் தாய்த் திருநாடாம் தமிழகம். பல்வேறு நாட்டாரின் விருப்புக்கும் தேவைக்கும் உகந்த நாடாக இருந்து, வந்தவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து இறுமாந்து நின்றது தமிழ்நாடு. என்று பிறந்தது, என்று ஆய்ந்து காலத்தை அறுதியிட்டுக் காட்ட முடியாத நம் மொழியும் இனமும் இதற்குச் சான்று பகரும்.
சங்கம் கண்டு தமிழ் வளர்த்த நாடு; ஞாலம் போற்றும் உலகப் பொதுமறையாம் திருக்குறள் வழங்கிய நாடு; நம் அருந்தமிழ்நாடு. இத்தனைக்கும் கருவான ‘தமிழ்’ என்னும் இனிய மொழியைத் தன்னகத்தே கொண்ட நாடு. தன்னகத்தே இல்லாததில்லை என ஏறு நடைபயிலும் இத்தமிழ்மொழியினிடத்தில் இருப்பதுதான் என்னவோ?
ஆய கலைகள் அறுபத்து நான்கையும் தன்னுள் கொண்டிருக்கும் தெய்வத் தமிழின் பெருமையை நாம் விரித்துரைப்பது அத்துணை எளிதன்று. அதன்கண் இருக்கும் சிலவற்றை மட்டும் நாம் ஈண்டு ஆராய்வோம்.
– மே.வேங்கடேசன்: ஞானத்தமிழ் பக்கம்.1
Leave a Reply