(தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 5. உயிர்த்தொண்டு – தொடர்ச்சி)

தமிழ்க்கலை

6. வ. உ. சிதம்பரனார்


[9-11-47 ஞாயிறன்று சென்னை செயின்ட்மேரி மண்டபத்தில் நடைபெற்ற தமிழரசுக் கழக மகாநாட்டில் தோழர் வ. உ. சிதம்பரம் பிள்ளையவர்களின் படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய சொற்பொழிவு.)



நான் வ. உ. சிதம்பரம்பிள்ளை யவர்கள் படத்தைத் திறப்பேன் என்றார் தலைவர். இத்தனிப்பேற்றினை வழங்கிய கழகத்தாருக்கும் உங்களுக்கும் என் நன்றி உரியதாகுக. நான் இங்கு எக்கட்சியின் சார்பிலும் வரவில்லை, நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல.

சிலர் நினைக்கிறார்கள், திரு. வி. க-வுக்கு ஒரு கட்சி கிடையாது, ஒரு கொள்கை கிடையாது, எங்கும் போவார் எவர் படத்தையும் திறப்பார் என்று. எனக்குக் கொள்கையுண்டு. என் கொள்கை என் கையில் இருக்கிறது. ஏழை மக்கள் கையில் இருக்கிறது. பாட்டாளி மக்கள் கையில் இருக்கிறது. நான் சாதி, மத, நிற, மொழி, நாடு முதலிய எல்லா பேதங்களையும் கடந்தவன். பொது மக்களின் சுக வாழ்வுதான் எனது குறிக்கோள். ஒவ்வொரு மனிதனையும் சுயேச்சையுடன் வாழ உயர்த்த எக்கட்சி பாடுபட்டாலும், அங்கெல்லாம் நான் போவேன், வருவேன், பாடுபடுவேன்.

நான் காங்கிரசில் மிகத் தொண்டு செய்தவன். நாட்டில் காங்கிரசு வீழ்ந்துபட்ட காலத்திலெல்லாம் தொண்டு செய்தவன். பின் ஏன் காங்கிரசைவிட்டு விலகினேன்? கொள்கையில் வேறுபாடா? முரண்பாடா? அல்ல, அல்ல, அல்ல! காங்கிரசு செயற்குழுவிற்கு அடிமையாக இருக்க விரும்பவில்லை யென்ற காரணந்தான். காங்கிரசின் பாசிசக் கொள்கைகளையும், பிற்போக்கான சுயநலப் போக்கையும் கண்டித்தே வெளியேறினேன்.

பரந்த நோக்குடன் காங்கிரசில் பாடுபட்டு உழைத்த எனது நண்பர் பெரியார் இராமசாமியும் விலகினார். ஏன்? இதே காரணங்களால்தான். வ. உ. சிதம்பரனாரும் வெளியேறினார். ஏன்? உரிமை, உரிமை, உரிமை. மறுக்கப்பட்டது. பிரிந்தோம். தனி மனிதனின் உரிமையைக் காக்கவே நாங்கள் பிரிந்தோம் காங்கிரசு செயற்குழுவின் பாசிசக் கொடுமையை வெறுத்தே வெளியேறினோம்.  

காங்கிரசு பதவி வேட்டையாடும் சுயநலவாதிகளின் பிடியிலே சிக்கிக் கொண்டுள்ளது. காங்கிரசு பாசிசப் போக்குடன் செல்கிறதா, இல்லையா என்று தமிழ்நாடு காங்கிரசு தலைவரையே கேட்கிறேன். இல்லையென்று திரு காமராசர் கூறுவாரா? ‘சமதர்மம்தான் காங்கிரசு கொள்கை’ என்று வாய்தவறி காமராசு அவர்கள் கூறி விட்டார். அஃது அல்ல, அல்ல, அல்ல என்று நான் கூறுகிறேன். வெகு சுலபமாக சொல்லி விட்டார் இப்படி. இவ்வளவு வயதான எனது அனுபவத்தின் மூலம் உணர்ந்து கூறுகிறேன். காங்கிரசு சமதர்மத்தை நாட்டுவது எவ்வளவு கடினமென்று. காமராசு அவர்கள் அதை ஏற்று நடத்துவாரானால் அவருக்குப் பின் தொண்டனுக்குத் தொண்டனாக பணி செய்யத் தயார்.

சுயநலவாதிகளிடம் சிக்கிக்கொள்ளும் எக்கட்சியையும் அந்தப் பிற்போக்காளர்களிட-மிருந்து மீட்கவேண்டும். அன்றைய வ. உ. சி. இதே நோக்கத்துடன் தான் காங்கிரசில் போராடினார்.

வ. உ. சி. அவர்கள் சைவர். ஆனால் வடநாட்டுச் சைவத்தைப் பின்பற்றுகின்ற திருவாவடு துறை, தருமபுரம் ஆகிய மடத்தார் போற்றுகின்ற சைவமல்ல. சாதி, சமய வழக்குகள் தென்னாட்டுச் சைவத்தில் இல்லை, எவ்வுயிரிடத்தும் அன்பாயிரு, எல்லாரும் ஒரு குலம் என்பதே உ. சி. யின் கொள்கை. தென்னாட்டு மகாசன சபை உண்மையாக வடநாட்டுக் காங்கிரசை எதிர்ப்பதற்காக ஏற்பட்டது. ஆனால் அது இன்றைக்கு அக்கொள்கைக்கு முரண்பட்டிருக்கிறது.

வ. உ. சி-க்குக் காந்தியத்தில் நம்பிக்கை இல்லை . அவர் கதர் கட்டமாட்டார். ‘கதரில் நம்பிக்கை யில்லை’ யென்று பச்சையாகச் சொல்லுவார்.

அவர் அறவாள் வைத்திருப்பார். அது தான் அறிவு நிறைந்த திருக்குறள் வாள். திருக்குறளின் உண்மைகளை அறியாத துருப்பாக்கியத்தால்தான் இத் திருநாடு அதன் சிறப்பை இழந்தது.

வட நாட்டாரால் திணிக்கப்பட்ட போலித் தியாகம் தமிழர்களின் நாகரிகத்தையும் கலைப்பண்பையும் பாழ்படுத்திவிட்டது. ஒன்றின்மீது அளவற்ற பைத்தியம் பிடித்தலைவது சகசமாய் விட்டது. உதாரணமாக நமது மாகாணத்தின் மந்திரிகளில் ஒருவர் தமிழர்களின் கலைப்பொக்கிசமான குறளிலிருந்து காதல், மண வாழ்க்கை ஆகிய பகுதிகளை எடுத்துவிடவேண்டும் என்றுகூட சொல்லும் அளவுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது. தமிழர்களின் பண்பு நமது மந்திரியாருக்குத் தெரியாதென்று தான் நினைக்கிறேன்! 

வ. உ.சி யின் தொண்டினைப் பற்றிப் பேசப் பேச நம் நாட்டில் தன்னம்பிக்கை யுண்டாகும்.. அப்போது நேருவின் கண்காணிப்பு தேவையில்லை. பட்டேலின் உதவி வேண்டியதில்லை. (நீண்ட கைத்தட்டல்.)


தமிழ்நாடு தமிழருக்கானால், ஆந்திரநாடு பிரியும், மலையாள நாடு பிரியும், கன்னடநாடு பிரியும் எல்லாம் தனித்தனியாகப் பிரியும். பிரிந்த சில மாதத்திற்குள் என்ன ஏற்படும்?

ஆந்திரர்கள் அச்ச தெலுங்கு காவல (சுத்த தெலுங்குவேண்டும்) என்பார்கள். மலையாளிகளும் அச்ச மலையாளம் வேண்டும் என்பார்கள். கன்னடியர்களும் அப்படியே. அப்பொழுது சுத்த தெலுங்கில் 100-க்கு 90 தமிழ்ச்சொற்களாக இருக்கும். சுத்த மலையாளத்தில் 100-க்கு 95 தமிழாகும். அப்படியே கன்னடத்திலும் அமையும். அதுபோது மொழியால் எல்லாரும் ஓர் இனம் என்பதை உணர்வார்கள். இன்பத்தால் ஒன்றென்று அணைவர்.


எனவே இப்பொழுது தமிழ்நாடு, ஆந்திர நாடு, மலையாள நாடு, அதற்குப் பிறகு என்ன? நீங்களே சொல்லுங்கள்? என்று மக்களைப் பார்த்துக் கேட்டார். கூடியிருந்தோரில் பெரும்பகுதியினர் “திராவிட நாடு திராவிடருக்கே!” என்று பெரும் ஆரவாரம் செய்தனர்.

ஆம்! அடுத்து, திராவிட நாடு திராவிடருக்கே ஆகும். (மக்கள் நெடுநேரம் கைதட்டல்.)

இப்பொழுது வடவேங்கடம் எல்லை. பிறகு இன்னும் விரியும். மராட்டியரும் கண்விழிப்பர். அவர்களும் மொழியால் திராவிடர், இனத்தால் திராவிடர் என்பதை உணர்வர். இப்பொழுதும் அவர்கள் இருப்பிடத்தை தட்சிணம் என்றுதான் சொல்லிக்கொள்கின்றனர்.

அப்போது நமக்கு வடக்கு எல்லை வடவேங்கடம் அல்ல, விந்தியமலையாக விளங்கும். இதுதான் முடிவு. தமிழ்நாடு தமிழருக்கே! திராவிடநாடு திராவிடருக்கே! என்பது (நீண்ட கைதட்டல்).

இதை அடைவது தான் தமிழனுக்குப் பெருமை. வடநாட்டுப் பாசிசத்தைத் தமிழன் இன்று தாங்கி, திணறவேண்டியிருக்கிறது. (கை தட்டல்) இதையே நான் கடலூர் மாநாட்டிலும் கூறினேன்.
சாதி, மத, உயர்வுதாழ்வுகளை யொழித்த சமதருமமே எனது கொள்கை.

வெள்ளையனுக்குத் துணையாக இருந்து கொண்டு வடநாட்டுப் பாசிசம் நம்மை ஆட்டிப் படைக்கின்றது. அதற்கு இடம்தராதே, தராதே, தராதே இந்த வடநாட்டுப் பாசிசத்தை யொழிப்பது தான், எந்தக் கழகமாயிருந்தாலும், அக்கழகத் தின் முதல் வேலையாக இருக்கவேண்டும்.

சென்னை மாகாண ஆட்சியை ஆந்திர நாட்டுக்கு வேறு தமிழ் நாட்டுக்கு வேறாகப் பிரிக்கத் தலைமை ஆளுநர்( கவர்னர் செனரல்) முயல்வதாகக் கூறப்படுகிறது. இதை நம்பவேண்டா என உங்களை எச்சரிக்கிறேன். இந்த முயற்சிக்குக் காரணம் தலைமை ஆளுநர்( கவர்னர் செனரல்) அல்லவே அல்ல. காங்கிரசை ஆட்டிப் படைத்து நாட்டிலே சருவாதிகார ஆட்சி செலுத்தும் வேறொருவரே இதற்குக் காரணம்.

உடனடியாகப் போரிடவேண்டியது ஆந்திரர்களோடோ, அல்லது மற்ற நம் சகோதரர்களோடோ அல்லவே அல்ல. பாசிசப் படேலிசத்தை முறியடிப்பதே நம்மை முன்னோக்கியுள்ள மாபெரும் பணியாகும். (பெரும் கைதட்டல்).

தமிழ் மக்கள் உரிமை உணர்வு கொண்டவர்கள். பாசீசம் எந்த வடிவிலே வந்தாலும் விரட்டத் தானே செய்வர் எனவே சனநாயகம் தழைக்க, சமதர்மம் நம் நாட்டு விடுதலைக்குப் பாடுபடுவதே நமது கடமையாகும்! ஓங்குக விடுதலை!

தமிழ்க்கலை (சொற்பொழிவுகள்)

தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார்