கலைச்சொல் தெளிவோம் 16: விந்துச்சுரப்பி – Prostate
16: விந்துச்சுரப்பி – Prostate
[பிராசுடேட்(prostate) என்பதற்கு உரிய தமிழ்ச்சொல் என்ன என்று திரு நாகராசன் திருமலை(ப்பிள்ளை) கேட்ட வினாவிற்கான விடையிது.]
பிராசுடேட் சுரப்பி சிறுநீர்ப்பைக்குக் கீழே ஆண்குறியின் மேற்புறம் சிறுநீர்க்குழாய் (urethra) தொடங்கும் இடத்தருகே இச்சுரப்பி உள்ளது. நெல்லிக்காய் அளவு உள்ள இதன் எடை 7 முதல் 16கல்(கிராம்) ஆகும். இதன் வேலை ஆண் உயிரணுக்களைக் கொண்ட விந்துவின் அளவை அதிகரிக்கும் திரவங்களைச் சுரப்பதாகும். ஒருசார் ஆண்களுக்கு 50 அகவை கடந்த நிலையில் விந்துச்சுரப்பி விரிவடைகின்றது. இதனால் சிறுநீர் வரும் பாதையில் தடை ஏற்படுகிறது. அடிக்கடி சிறுநீர் கழித்தல், முக்கி முக்கிச் சிறுநீர் கழித்தல், விட்டுவிட்டுப்போதல், சிறுநீர் கழித்த பின்பும் சொடடு சொட்டாக வெளியேறல் முதலான தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படுகின்றது. மிகுதியாக விரிவடைந்தால் சிறுநீர் முற்றிலும் வராமல் அடைத்துப் போகலாம். இதைக் கவனிக்காது அப்படியே விட்டுவிட்டால் அழற்சி ஏற்படவும் பாற்சுரப்பிப் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது; மிகுதியாக விரிவடைந்தால்சிறுநீர் முற்றிலும் வராமல் அடைத்துப் போகலாம்; சிறுநீரகச் செயலிழப்பு கூட நேரிடலாம்.
பிராசுடேட் என்னும் சொல் ‘முன் நிற்பவர்’ என்னும் பொருள் கொண்ட கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானது.
எனவே, கிரேக்கப் பொருளின் நேர் ஆக்கமாக விக்கிபீடியா ‘முன்னிற்கும் சுரப்பி’ என்கிறது; மணவை முசுதபாவின் மருத்துவக்களஞ்சியப் பேரகராதி(2006) Prostate(gland) ‘சிறுநீர்ப்பை முன்வாயில் சுரப்பி’ என்கிறது.
தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் உடற்கூறு நூலில் பேரா.மரு.கிருட்டிணமூர்த்தி ‘முன்னிலைச் சுரப்பி’ என்கின்றார்.
தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் மருத்துவக் களஞ்சியம் ‘Prostate gland – ஆண்மைச் சுரப்பி’ என்கிறது.
விந்து ஆண்மையின் அடையாளம் என்ற கருத்தில் இவ்வாறு கூறப்படுகிறது. ஆனால், ஆண்மை என்பதை ஆணின் தன்மை என்ற பொருளில் கையாளக்கூடாது. சான்றாண்மை, பேராண்மை, ஊராண்மை என்றெல்லாம் சொல்லும் பொழுது பொதுவான ஆளுமைத் தன்மையைக் குறிக்கிறது. ஆண்மை என்றால் வீரம், வெற்றி, செருக்கு, வலிமை, வாய்மையுடைமை எனப் பல பொருள்கள் உள்ளன. இப்பண்புகள் இருபாலருக்கும் உரியன. எனவே இதனைத் தவிர்க்க வேண்டும்.
Prostate gland – சுக்கிலச் சுரப்பி என்கிறது மரு.ச.சம்பத்குமாரின் மருத்துவ அறிவியல் அகராதி (பக்.415). சுக்கிலம் என்பது தமிழ்ச்சொல் அல்ல. தமிழில் விந்துச் சுரப்பி என்றே கூறலாம்.
சுக்கிலம் என்றால் வெண்மை என்றும் பொருள். எனவே வளர்பிறைப்பருவக் காலத்தைச் சுக்கிலப்பக்கம் அல்லது சுக்கிலப்பட்சம் என்கின்றனர். விந்துவின் நிறம் வெண்மை என்ற முறையில் சுக்கிலம் என அழைக்கப்பட்டிருந்தாலும் சுக்கிலப்பக்கத்தையும் சுக்கிலச் சுரப்பியையும் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடாது.
மூத்திரக்காய் என்று தமிழ்ச்சிறுநீரக (tamilkidney.com) இணையத்தளம் கூறுகிறது. இதனால், சிறுநீரகம் எனத் தவறாகப் பொருள் கொள்ளவாய்ப்புள்ளது.
‘சுக்கியன் / சுக்கிரியன் சுரப்பி’ என ஐரோப்பிய அகராதி, தமிழ் கியூபு அகராதி ஆகியன குறிக்கின்றன. வெண்மை நிறமுடைய சுக்கிரனில் இருந்து இப்பெயர் உருவானதா? அல்லது மேற்கோள் அகராதியில் நேர்ந்த தட்டச்சுப்பிழையா எனத் தெரியவில்லை.
பராகச் சுரப்பி என மருத்துவத்துறை அகராதி குறிப்பிடுகின்றது. (பராகம் என்றால் நறுமணப்பொடி, பூந்தாது எனப் பொருள்கள் உள்ளன.)
“பிராசுடேட் சுரப்பி என்பது ஆண்பால் சுரப்பி : பால்குடி உயிர்களில் ஆண்பால் உறுப்புக்கு உடனிணைவான சுரப்பித் திரள்களாலான பெருஞ்சுரப்பி” என விளக்குகிறது, மணவை முசுதபாவின் ம.அ.தொ.கலைச்சொல் களஞ்சிய அகராதி (1995) (பக்கம் 504). செயற்பாட்டு அடிப்படையில் அமையும் இச்சொல் பொருத்தமாக உள்ளது.
எனினும் விந்துச்சுரப்பி என்பது சுருக்கமாக உள்ளது. எனவே, விந்துச்சுரப்பி என்றே சொல்லலாம். விந்துப்பை என்றும் சுருக்கமாகச் சிலர் குறிக்கின்றனர். ஐரோப்பிய அகராதி விந்து கூழ்ச் சுரப்பி எனக்கூறுகிறது. பால் என்பதை இந்த இடத்தில் பசும்பால், ஆட்டுப்பால் என்பதுபோல் தவறாக யாரும் கருதமாட்டார்கள். ஆண்பால் சுரப்பி என்பதைச் சுருக்கமாகப் பாற்சுரப்பி என்றும் கூறலாம்.
விந்துச்சுரப்பி – Prostate
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply