kalaicho,_thelivoam01leatherskin

 தோலும் அதளும் – (skin and leather)

 

தொல்லியல், பொறிநுட்பவியல், கால்நடையியல் ஆகியவற்றில் leather-தோல் எனப்படுகின்றது; மனையியலில் பதனிட்ட தோல் எனப்படுகிறது. வேளாணியல், தொல்லியல், மருத்துவயியல், கால்நடையியல் ஆகியவற்றில் skin-தோல் எனப்படுகின்றது. இவற்றை வேறுபடுத்திக் கூற வேண்டும்.

அதளன்(1) (அகநானூறு 274.6)

அதளோன் றுஞ்சுங் காப்பின் (பெரும்பாண் ஆற்றுப்படை 151)

அதட்பள்ளி- தோற்படுக்கை

இலைவேய் குரம்பை உழைஅதள் பள்ளி – மதுரைக் காஞ்சி

310

மெய்உரித்து இயற்றிய மிதிஅதள் பள்ளித் – மலைபடுகடாம் 419

ஞெலிகோல் கலப்பை அதளொடு சுருக்கிப் – நற்றிணை 142.3,

களிற்றுத் துப்பு அஞ்சாப் புலிஅதள் இதணத்து – நற்றிணை 351.7

வரிஅதள் படுத்த சேக்கை, தெரிஇழைத் – அகநானூறு 58.4,

பூங்கொடி அவரைப் பொய்அதள் அன்ன – அகநானூறு 104.8

பெருங்களிற்று மருப்பொடு வரிஅதள் இறுக்கும் – அகநானூறு 109.13

புலிஉரி வரிஅதள் கடுப்ப, கலிசிறந்து – அகநானூறு 205.19

அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின் – புறநானூறு 193.1

அதள்உண் டாயினும் பாய் உண்டாயினும் – புறநானூறு 317.3

மான்அதள் பெய்த உணங்குதினை வல்சி – புறநானூறு 320.10

இருங்கேழ் வயப்புலி வரிஅதட் குவைஇ, – புறநானூறு 374.14

இங்கெல்லாம் மான்தோல், புலித்தோல் முதலானவை அதள் எனக் குறிக்கப் பட்டுள்ளன.

தோல் படுக்கையை உடையவனை அகநானூறு (274.6) அதளன் என்றும் பெரும்பாணாற்றுப்படை(151) அதளோன் என்றும் குறிப்பிடுகின்றன. எனவே, நாம்

skin – தோல் என்றும்

leather – அதள் என்றும்

வேறுபடுத்திக் கூறுவது பொருத்தமாக இருக்கும்.

   – இலக்குவனார் திருவள்ளுவன்