கலைஞர் செம்மொழி விருதுகள் வழங்குவதே

கலைஞருக்கு உண்மையான அஞ்சலி!

தமிழுக்குரிய தொன்மையான செம்மொழித் தன்மையை மத்திய அரசை ஏற்கச் செய்ததில் கலைஞர் கருணாநிதிக்கு முதன்மைப் பங்குண்டு. தமிழறிஞர்களின் வேண்டுகோளுக்கிணங்கச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் அமைய அவரே காரணமாக இருந்தார். இந்நிறுவனம் வளரவும் தமிழ் மேம்படவும் கனவு கண்டார்.  எனவே தனிப்பட்ட முறையில் சொந்தப்பணம் உரூ 1 கோடி வழங்கிச் செம்மொழித் தமிழ் அறக்கட்டளையை வழங்கினார். இத்தொகை தரும் வட்டியிலிருந்து ஒவ்வோராண்டும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கவும் ஏற்பாடு செய்யப்பெற்றது. விருது என்பது உரூ 10,00,000 தொகையாகும். இத்துடன் தகுதிச்சான்றிதழும் தமிழ்த்தாய்ச்சிலை நினைவளிப்பும் தங்கப்பதக்கமும் பொன்னாடையும் வழங்கப் பெறும். ஆண்டுதோறும் ஏப்பிரலில் விண்ணப்பங்கள் கேட்டு, மேத் திங்கள் முடிவெடுத்து, நன்கொடையாளரான கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளான சூன் 3 இல் விருது வழங்கப்பெறும் எனவும் அறிவிக்கப்பெற்றது.

செம்மொழித் தமிழாய்விற்குச் சீரிய முறையில் பங்காற்றியுள்ள அறிஞர் அல்லது நிறுவனத்திற்கு இவ்விருது வழங்கப்பெறும். பண்டைத் தமிழ்ப் பண்பாடு, நாகரிகம்பற்றிய புதிய கருத்துகளை வெளிப்படுத்துவதாகவும் உலக அளவில் ஏற்புடையதாகவும், தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், பண்டை இலக்கணமும் மொழியியலும், இலக்கியத் திறனாய்வு, படைப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு, இசை, நடனம், நாடகம், ஒவியம், சிற்பம் முதலான ஏதேனும் துறையில் மேற்கொண்ட ஆய்வாகவும் பங்களிப்பு அல்லது படைப்பு இருக்கலாம். தமிழ் குறித்துப் பிற மொழியிலும் இருக்கலாம். இவ்விருது உலகளாவியது. அது மட்டுமல்ல நம் நாட்டில் கூடுதல் பரிசுத் தொகை உடைய இலக்கிய விருதாகும்.

2009 இல் கோயம்புத்தூரில் செம்மொழி மாநாடு நடைபெற்ற பொழுது முதல் விருது பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அசுகோ பர்ப்போலா(Prof. ASKO PARPOLA) என்னும் அறிஞருக்கு வழங்கப் பெற்றது.  இவர் சிந்துச் சமவெளி, அரப்பா நாகரிகம் குறித்தும் அவற்றின் எழுத்துவகைகள் குறித்தும், திராவிட மொழிக் குடும்பத்தின் நோக்கில்    ஆராய்ச்சி மேற்கொள்பவர். எனவே முதல் விருது தக்கவருக்குக் கிடைத்ததில் அனைவரும் மகிழ்ந்தனர்.

அதன் பின்னர் ஆண்டுதோறும் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் வந்துபோய்க் கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் விருது தரும் வழி கண்ணுக்கு எட்டிய  தொலைவு காணப்படவில்லை.

2010 இற்கு விண்ணப்பங்கள் வரப்பெற்று அவை இயக்குநர்(பொறுப்பு) மேசையில் பசைபோட்டு ஒட்டப்பட்டன. எந்த நடவடிக்கையும் இல்லை. தொடர் ஆண்டுகளுக்கும் அறிவிப்பு இல்லை. அதிமுக ஆட்சி இருந்ததாலும் அதன் தலைவர் முதல்வர் செயலலிதா எதிர் உணர்வு கொண்டிருந்ததாலும் விருது அறிவிப்பு எதுவும் வரவில்லை. ஆனால், அவர் மறைந்ததும் 2011, 2012, 2013, 2014, 2015, 2016 என 6 ஆண்டுகளுக்கும் கலைஞர் கருணாநிதி செம்மொழித்தமிழ் விருதிற்கான விண்ணப்பங்கள் கோரப்பெற்றன. இதற்கான நடவடிக்கையை அப்போதைய பதிவாளர் முனைவர் முகிலை இராச பாண்டியன் எடுத்திருந்தார்.

6 ஆண்டு விருதுகளுக்குமாக ஏறத்தாழ 150 விண்ணப்பங்கள் வந்திருந்தும் தெரிவுக் குழு அமைக்கவே நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்பான பதிவாளரின் குறிப்புகள் இயக்குநர் அறையில் உறங்கிக் கொண்டுள்ளன. அதிகாரமற்ற துணைத்தலைவர் ஒன்றும் செய்ய இயலா நிலைதான் உள்ளது. இது குறித்துக்கேட்டால் தங்களுக்குக் கிடைக்க இருக்கும் விருது கிடைக்காமல் போய்விடுமோ என்று தமிழறிஞர்களும் அமைதி காக்கின்றனர்.

பொதுவாகத் தமிழ்ப்பேராசிரியர்களே பதிவாளர்களாக அமைந்தமையால் அவர்கள் செம்மொழி நிறுவனப் பணிகளில் ஆர்வம் காட்டினர். ஆனால் இயக்குநர் பொறுப்பாக இருப்பவர்கள் மத்திய அரசின் அதிகாரிகள். அவர்களும் கூடுதல் பொறுப்பில்தான் செயல்படுவர். சான்றாக இப்போது இயக்குநர் பொறுப்பாக இருக்கும் அ.பழனிவேல், திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசியத் தொழில்நுட்பக்கழகத்தின் (NIT) பதிவாளர். மத்திய அரசின் தொழில்நுட்ப அதிகாரிகளிடம் எங்ஙனம் தமிழார்வத்தை எதிர்பார்க்க முடியும்?

மத்திய அரசைப் பொறுத்தவரை இந்நிறுவனம் செயல்படுவதில் நாட்டமில்லை. எனவேதான், பத்தாண்டுகளாக இயக்குநர் பதவியை நிரப்பாமல் உள்ளது. பதிவாளர் பதவியும் அவ்வப்பொழுது இப்பொழுது உள்ளதுபோல் காலியாகத்தான் இருக்கும். பொறுப்பாளர்கள் இருக்கும் பொழுதே செயல்பாடு சிறப்பாக இருக்க முடியும் என்று சொல்ல முடியாது.

உயர்நிலை அதிகாரிகளே இல்லாத நிலையில் எங்ஙனம் செம்மொழி நிறுவனம் இயங்கும்?

இதனைப் புறக்கணிப்பதன் ஒரு பகுதியாகத்தான் இதனைத் திருவாரூரிலுள்ள மத்தியப்பல்கலைக் கழகத்துடன் இணைக்க முயன்றது. இருப்பினும் நமது எதிர்ப்பால் அதனைக் கைவிட்டது. ஆனால், மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைத்துச் செயல்பாட்டை நிறுத்த முயன்ற மத்திய அரசு, “தனியாக எப்படிச் செயல்படுகிறீர்கள், பார்ப்போம்” எனப் பாராமுகமாக இருப்பதாக நிறுவனப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கருணாநிதி எதிர் அரசியலைக் கைவிட்டுக் காட்சிக்கு எளியராக இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். செம்மொழி நிறுவனத்தின் தனித்தன்மையைக் காப்பதற்காக ஆட்சிக்கு வந்த புதிதில் முதன் முறையாகச் செம்மொழி நிறுவன ஆட்சிக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றார். தலைவர் என்ற முறையில் அவர் நடவடிக்கை எடுத்து ஏற்கெனவே அறிவித்த 7 ஆண்டுகளுக்கும் 2017 ஆம் ஆண்டிற்கும் சேர்த்து விருதுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோன்ற காலத்தாழ்ச்சி இல்லாமல் இருக்கவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

‘கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளை’யைப் பதிவு பெற்ற தனி அமைப்பாக மாற்ற வேண்டும். நன்கொடையாளரான கலைஞர் கருணாநிதி குடும்பத்தினர், தமிழறிஞர்கள், செம்மொழி நிறுவன உயரதிகாரிகள் கொண்ட குழு இதன் பொறுப்பாக இருக்க வேண்டும். ஆண்டுதோறும் காலத்தாழ்ச்சியின்றித் தெரிவுக் குழுவை அமைத்தும் விருதாளர்களைத் தேர்ந்தெடுத்தும் செம்மொழி நிறுவனம்சார்பில் சூன் 3 ஆம் நாளில் விருது வழங்க வேண்டும். இத்தகைய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாய் கையில் கிடைத்த தேங்காயாக   அறக்கட்டளை வைப்புத் தொகை பயனற்றுப் போகும்.

பொறுப்பில் உள்ளவர்களின் குடும்பத்தவருக்கோ வேண்டியவருக்கோ விருது வழங்குவதாக இருந்தால் இப்படிப் பாரா முகமாக இருப்பார்களா? நாடாளுமன்றங்கள் ஒத்திவைக்கப்படுதல் தேசியத் துக்கம் கடைப்பிடித்தல் ஆகியவற்றைவிட, உண்மையான அஞ்சலி என்பது அவர் கனவை நனவாக்கும் வகையில் செம்மொழித் தமிழ் விருதுகளை வழங்குவதுதானே! உரிய நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசும் செம்மொழி நிறுவனமும்

இலக்குவனார் திருவள்ளுவன்

நக்கீரன், தொகுப்பு 31, இதழ் எண் 57,

நாள் அக்.27-30 பக்கங்கள் 24-26

 

 

https://nakkheeran.in/nakkheeran/tribute-kalaingar/tribute-kalaingar