கலைஞர் பெயரைக் கேடயமாகப் பயன்படுத்தி மொழிக்கொலை புரிய அரசைத் தூண்டுவதா?

 பதவி ஆசை உள்ள ஓய்வு பெற்ற சிலரும் உயர்பதவியில் அதிகாரச் சுவையைச் சுவைக்க விரும்பும் சிலரும் தங்கள் பதவி அரிப்பைத் தணித்துக் கொள்ள புதிய பல்கலைக்கழகம் ஒன்றுக்குக் குரல் கொடுத்துள்ளார்கள். நேரடியாகத் தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடியாதே! அதனால் அவர்கள் எடுத்துள்ள கருவியே விடுதலைச்சிறுத்தை.  எனவேதான், “கலைஞரின் பெயரில் மொழியியல் பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்க வேண்டும்..” – என அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய திருமாவளவன் மூலம் அறிக்கை ஒன்று வந்துள்ளது. அக்கட்சியில் உள்ள இதழாளர், சாதி எதிர்ப்பு இயக்கவாதி, தீவிர இயக்கவாதி மூலம் அவரிடம் இக்கருத்தைச் சேர்த்து வெளியிடச் செய்துள்ளார்கள்.

அவர்களின் நோக்கம் கலைஞரைச் சிறப்பிக்க வேண்டும் என்பதல்ல. முகநூல் நண்பர் ஒருவர் குறிப்பிட்டதுபோல் கலைஞர் நிகழ்த்துக்கலைப் பல்கலைக்கழகம் என ஒன்றை அமைப்பது பொருத்தமாக இருக்கும். திரைப்படங்களுக்கு வாய்ப்பு தேடுபவர்களுக்கும் திரைத்துறையில் தங்களை மெருகேற்றிக் கொள்தற்கும் உதவியாக இருப்பது முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் உரையாடல் வரிகள்தாம். கலைஞர் என்னும் பெயருக்குக்  காரணமே அவரின் திரைக்கலை ஈடுபாடுதானே. கலைஞர் திரையியல் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கலாமே. கவிதையில் புதுவகை உரைவீச்சை அறிமுகப்படுத்திப் பல்லாயிரக்கணக்கில் எழுதியவர் கலைஞர். கலைஞர் கவிதையியல் பல்கலைக்கழம் ஒன்றை அமைக்கலாமே. ஆனால், அப்படி யெல்லாம் அமைத்தால் பதவி ஆசையர்களின் நோக்கம் நிறைவேறாதே. எனவேதான் மொழியியல் பல்கலைக்கழகம் வேண்டுகின்றனர்.

 இது குறித்துப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் தமிழ்த்துறையினரும் குறிப்பாக மொழியியல் துறையினரும் எதிரான கருத்தைத்தான் கொண்டுள்ளனர். “மொழியியல் அறிஞர் கணித்தமிழ்ச்செயற்பாட்டாளர் முனைவர் தெய்வசுந்தரம் கூறுவது போன்று இருக்கின்ற மொழியியல் துறைகளைச் சரியாகச் செயல்பட வைக்காமல் மொழியியல் துறைகளையே தோற்றுவிக்காமல் மொழியியல் பல்கலைக்கழகம் எதற்கு” என்கின்றனர் மொழியியல் அறிஞர்கள்.

 மொழியியல் துறையின் தாயாகத் திகழும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலேயே மொழியியல் துறைச் செயல்பாடு சொல்லும்படி இல்லை. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திலும் இதுதான் நிலை. சென்னைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையே இல்லை. மொழியியல் துறை இருக்கின்ற 3 பல்கலைக்கழகங்களிலும் துறைத்தலைவர் நிலையிலான பதவியில் பதவி நிலைக் குறைந்தவர்களே உள்ளனர். வேறு சில பதவிகளும் நிரப்பப்படாமல் உள்ளன. இருக்கின்றவற்றைக் காப்பாற்றாமல் புதிய கூத்தை அரங்கேற்ற வேண்டுமா என்கின்றனர்.

 சிலர் முன்னாள் முதல்வர் செயலலிதா பெயரிலான பெயரளவு பல்கலைக்கழகம் மூடப்படும் நிலையில் முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகத்தை நிறுவுவது அவப்பெயர் ஏற்படுத்தும். எனவே, அரசு இக்கோரிக்கையை நிறைவேற்றாது என்கின்றனர். இருப்பினும் நம் செவிகளில் வந்து விழும் கருத்துகளைச் சொல்ல வேண்டியது நம் கடமையல்லவா?

தொல்காப்பியர் மிகச்சிறந்த மொழியியல் அறிஞர். தொல்காப்பியப் புலமையாளர்களும் போற்றுதலுக்குரிய மொழியியல் அறிஞர்களாக உள்ளனர். ஆனால், மொழியியல் அறிஞர்கள் சிலர் தமிழை அழிப்பதற்கு இதனை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருகின்றனர். வாழும் மொழி எனச் சொல்லிக் கொண்டு கொச்சை வழக்குகளைப் பரப்பி வருகின்றனர். உயர்தனிச் செம்மொழியின் இலக்கியங்களாக உயர்ந்த நடை இருக்கக்கூடாது எனக் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். கொச்சை நடையைப் பார்த்து இனி வருவோர் இஃது எங்ஙனம் செம்மொழியாகும் எனக் கேட்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம். எனவே, மொழியியலுக்கு எனப் பல்கலைக்கழகம் அமைத்தால் அத்தகையோர்களின் ஆளுமைக்கு அகப்பட்டுத் தமிழ்மொழி சிக்கிச் சின்னா பின்னமாகும் என்கின்றனர். எனவே மொழியியல் என்னும் பெயரில் தனித்த பல்கலைக்கழகம் தேவையில்லை என அஞ்சுவோர்களின் கருத்துகளுக்கு தமிழ் நல அரசு மதிப்பு கொடுத்துத்தான் ஆக வேண்டும்.

 வேறு மாநில மொழியியல் பேராசிரியர் வேறு ஒரு கருத்தைத் தெரிவிக்கின்றார். தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் மொழியியல் துறையினரின் ஆதிக்கம் உள்ளது. தங்கள் துறையினரே பதவிகளில் அமர வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பர். எடுத்துக்காட்டாக ஒன்றையும் தெரிவிக்கின்றார். உயராய்வு நிறுவனம் ஒன்றில் இயக்குநர் பதவிக்குத் தகுதிவாய்ந்த இலக்கிய அறிஞர்கள் நால்வர் விண்ணப்பத்திருந்தனர். அவர்களுள் பட்டறிவு மிகுந்த ஒருவரை அப்பதவியில் அமர்த்த இருந்தனர். ஆனால், மொழியியல் துறையினரே இப்பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என்பதற்காக அந்நியமனம் மேற்கொள்ளப்படாமல் இருக்கத் தடையாக இருந்தனர். ஆனால் வேறு வகையிலான போராட்டமாகக் காட்டிக் கொண்டு அப்பதவியைக் காலியிடமாக ஆக்கினர். இதனால் அந்நிறுவனத்தின் வளர்ச்சி பல ஆண்டுகள் பாதிக்கப்பட்டன என்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் அப்பதவிக்கு மொழியியல் துறையைச் சேர்ந்த யாரும் விண்ணப்பிக்கவில்லையாம். இத்தகையோரின் செல்வாக்கால்தான் மொழியியல் பல்கலைக்கழகத்திற்கான குரல் வந்துள்ளது. இதனைச் சாதியக் குரலாக மாற்றவும் சதி நடப்பதாக அவர் கூறினார்.

நேர்மையான பேராசிரியர்களும் அதிகாரிகளும் மற்றொரு கருத்தையும் முன் வைக்கின்றனர். கடந்த ஆட்சியில் பல்கலைக்கழகங்களில் பணி நியமன முறைகேடுகளால் துணைவேந்தர், பதிவாளர்,  வேறு நிலை அதிகாரிகள் விசாரணை வளையங்களுள் சிக்கி உள்ளனர்.  இதுவரை இருந்த கட்சிச் செல்வாக்காமல் தண்டனையிலிருந்து தப்பி வந்தனர். புதிய ஆட்சியிலும் தப்பிக்க வேண்டுமே. எனவேதான் ஓய்வு பெற்றவர்களுக்கு ஆசை காட்டி இக்கோரிக்கையை வைக்கின்றனர். இதன் மூலம் தங்களை அரசின் ஆதரவாளர்களாகக் காட்டிக் கொண்டு விசாரணையிலிருந்து வெளியே வர முயல்கின்றனர். எனவேதான், இத்தகைய கோரிக்கையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லாவிட்டால் இருக்கின்ற பல்கலைக்கழகங்களை உருப்படியாகச் செயல்படச் செய்யாமல், அவரவர் துறை சார்ந்து, சிறுகதை இலக்கியப் பல்கலைக்கழகம், புதின இலக்கியப்பல்கலைக்கழகம் போன்று பல்கலைக்கழகங்கள் அமைக்கக் குரல் கொடுப்பர் என்கின்றனர். பல்கலைக்கழகங்கள் பெருகுவது தவறில்லையே என்றால், இருப்பனவற்றைப் பேணாமல், இல்லாதனவற்றிற்குப் பறப்பானேன் என்கின்றனர். விசாரணை வளையத்திலுள்ள தண்டனை பெற வேண்டியவர்கள் தப்பிப்பதற்கு அரசே பாதுகாப்பு வளையத்தை அமைத்துக்கொடுப்பது முறையல்லவே என்கின்றனர்.

இவர்களின் நோக்கம் கலைஞரைச்சிறப்பிப்பதல்ல என்பதற்கு மற்றொன்றையும் நினைவு படுத்துகின்றனர். இத்தகையோர், கலைஞரின் ஒரு படைப்பையாவது ஆய்வு செய்ய மாணாக்கர்களுக்கு வழிகாட்டியாக இருந்திருப்பார்களா? ஆய்வு உலகில் மதிக்கப்படவேண்டிய கலைஞரை அங்கே மதிக்காமல் இப்போது வீண் முழக்கமிடுவானேன் என்கின்றனர். 

இத்தகையோர் கலைஞர் செம்மொழி விருதுகளை வழங்குவதற்குக் குரல் கொடுத்தார்களா? நாம் குரல் கொடுத்து வந்தோம்.”கலைஞர் செம்மொழி விருதுகள் வழங்குவதே கலைஞருக்கு உண்மையான அஞ்சலி!” என நக்கீரனிலும் கட்டுரை எழுதியிருந்தோம். புதிய அரசு அமைத்ததும் முதல்வருக்கு மடல் அனுப்பினோம். தமிழ்அமைப்புகள் சார்பிலான புதிய அரசிற்கான வாழ்த்தரங்கத்திலும் கோரிக்கை வைத்தோம். முதல்வர் மு.க.தாலினும் விருதாளர்களைத் தேர்ந்தெடுக்கப் புதிய தெரிவுக் குழுவை அமைத்துள்ளார். ஆனால், நேற்றுவரை அவரை நினைக்க அஞ்சியவர்களுக்கு இன்றைக்குத் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் மீது பாசம் பொங்கிக் கொண்டு வந்துவிட்டதாம். யாரேனும் இவர்கள் நடிப்பை நம்புவார்களா?

 மொழியியல் பல்கலைக்கழகத்தின் நோக்கம் என்னவாம்? உலகின் பல்வேறு மொழிகளைக் கற்பிக்கவும், இந்திய மொழிகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும், மொழிபெயர்ப்புகளை ஊக்குவிக்கவும், உலகின் பல்வேறு நாடுகளிலுமிருந்து ஆராய்ச்சிக் கல்வி பயிலுவோர் இந்தியாவுக்கு வந்து மொழியியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும்தானாம். இப்பொழுது தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் அயல் நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை என ஒன்று உள்ளது. உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மொழியியல் புலமும் அயல்நாட்டுத் தமிழர் புலமும் உள்ளன. இவற்றைக் கொண்டே பன்மொழிக் கற்பிப்பை மேற்கொள்ளலாம். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலுமே பன்மொழிப் புலத்தை அமைக்கலாம். நாம் பிற மொழிகளை அறிவது சிறப்புதான். எனினும் நம் முதல் கடமை தமிழே அறியாத தமிழர்களையும் தமிழ்நாட்டில் உள்ள பிற மொழியினரையும் தமிழ் அறியச் செய்வதுதான்.

 இருக்கின்ற சமற்கிருத அமைப்புகளையெல்லாம் பல்கலைக்கழகத் தகுதி அளித்து உயர்த்தி வருகிறது மத்திய அரசு. தமிழ்நாட்டரசும் உலகத்தமிழராய்ச்சி நிறுவனம், தமிழ் இணையக்கல்விக்கழகம் முதலிய அரசு நிறுவனங்களையும் மதுரைத்தமிழ்ச்சங்கம், கரந்தைத்தமிழ்ச்சங்கம் முதலான தமிழ்ச்சங்கங்களையும் பல்கலைக்கழக நிலைக்கு மேம்படுத்தலாம். கட்டமைப்பு உள்ள கல்வி நிறுனங்களைத் தகுநிலைப்பல்கலைக்கழகங்களாக மாற்றாமல் புதிய பல்கலைக்கழகம் அமைத்துக் கட்டமைப்பை உருவாக்குவது வீண் வேலையன்றோ?

 “பெருக்கத்து வேண்டும் பணிதல்” என்னும் திருக்குறளடிக்கு(963) எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் முதல்வர் மு.க.தாலின். தனக்கொரு நீதி, பிறருக்கொரு நீதி என்றோ தன் கட்சியினருக்கு ஒரு நீதி, பிற கட்சியினருக்கு ஒரு நீதி என்றோ பாராமல் நடுநிலையுடன் செயல்படுபவர். இவரைத்தவிர வேறு யாரும் முதல்வர் பொறுப்பில் அமர்ந்திருந்தால் அவர் நின்றாலும் நடந்தாலும் ஊர் தோறும் சென்றாலும் ஆரவாரப் புகழ்ச்சி உரைகளே கேட்டிருக்கும். செல்லுமிடங்களிலெல்லாம் வரவேற்புப் பதாகைகளும் வெட்டுருக்களும் ஆடம்பரக் காட்சிகளுமே வீற்றிருக்கும். ஆனால், இவர் முன்னெடுத்துக்காட்டான தலைவராகத் திகழும் ஆன்றோராக் காட்சி அளிக்கிறார். எனவே, கலைஞரின் பெயரைப் பயன்படுத்திப் பல்கலைக்கழகம் கேட்குநரின் பேராசையை நிறைவேற்ற மாட்டார்; ஊழலில் திளைத்தோர் தப்பிப்பதற்கு இடம் தர மாட்டார்; மொழிக்கொலைஞர்கள் தங்கள் கொலைப்பணியைத் தொடர வாய்ப்பு தரமாட்டார் என நம்புகிறோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை, அகரமுதல

ஆடி 25, 2052 / 10.08.2021