(அகல் விளக்கு – மு.வரதராசனார். 20. தொடர்ச்சி)

அகல் விளக்கு

எழுதும் போதும் இடக்கை அந்தச் சேவையில் ஈடுபடும்; சில சமையங்களில் வலக்கை எழுதுவதை விட்டு அதில் ஈடுபடும். எங்கே இருக்கிறோம், எதிரில் இருப்பவர் யார் என்ற எண்ணமே இல்லாமல் அதில் ஈடுபடும். மற்றப் பிள்ளைகள் என்னை எள்ளி நகையாடினார்கள். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. என் நண்பன் சந்திரனே ‘சொஞ்சரி சொஞ்சரி’ என்று என்னை எள்ளிப் பேசத் தொடங்கினான். எனக்கு அது வருத்தமாகவே இருந்தது. என் தங்கையும் அவ்வாறு நகையாடினாள். அவ்வாறு எள்ளி நகையாடாதவர்கள் என் தாயும் பாக்கிய அம்மையாரும் கற்பகமும்தான்.

மருந்து பூசிப் பூசி அஃது ஒருவாறு அடங்கியது எனலாம். ஆனால் அடங்கிய நோய்ப்பொருள் உள்ளே அமைதியாய்க் கிடந்த பிறகு வேறு வடிவில் வெளிப்பட்டது போல், சளிக்காய்ச்சல் (நிமோனியா) வந்துவிட்டது. இருபது நாள் படுக்கையில் கிடந்து வருந்தினேன். அம்மாவும் அப்பாவும் தவிர, வேறு யாரும் என்னை அணுகவில்லை. தங்கையும் தம்பியும் அணுகி வந்தாலும் பெற்றோர் தடுத்து விட்டார்கள். கற்பகம் வந்தாலும் அவ்வாறே தடுத்தார்கள். தொத்தக்கூடிய நோய் என்று தடுத்தார்கள். ஆனாலும் கற்பகம் நாள்தோறும் திண்ணை வரையில் வந்து என் தங்கையிடம் பேசியிருந்து விட்டுச் செல்வாள். படுக்கையில் இருந்த என் செவிகளில் அவளுடைய குரல் நாள்தோறும் விழுந்தது. சில நாட்களில் மெல்ல வந்து ஒரு நொடிப் பொழுதில் எட்டிப்பார்த்துத் தன் முகத்தைக் காட்டிவிட்டுப் போவாள்.

சந்திரன் சில நாளுக்கு ஒரு முறை வந்து போவான். பாக்கியம்மா மட்டும் காலை மாலை இரு வேளையும் தவறாமல் வந்து எதிரே உட்கார்ந்து அம்மாவிடம் பேசிவிட்டு, ‘தம்பி கஞ்சி சாப்பிட்டதா? இரவு தூங்கினதா?’ என்று அன்போடு கேட்டுவிட்டுப் போவார். அப்போதுதான் அந்த அம்மாவின் உண்மையான அன்பு எனக்குப் புலப்பட்டது. காய்ச்சல் விட்டுத் தேறிய பிறகு அம்மா ஒருநாள் பாக்கியத்தின் அன்பைப் பற்றிக் குறிப்பிட்டார். “உனக்கு காய்ச்சல் தன்னை மீறி இருந்தபோது இரவில் தூங்கிவிட்டுக் கவனிக்கத் தவறிவிடுவேனோ என்று பயந்து பாக்கியமும் என்னோடு வந்து படுத்துக்கொள்வாள். நான் தூங்கிவிடுவேன். தூங்கி விழித்தபோது பார்த்தால் அவள் உன் பக்கத்தில் உட்கார்ந்து விழித்திருப்பாள். பிறகு நான் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி அவளை உறங்கும்படி வற்புறுத்துவேன். இப்படி எல்லாம் உன்னைக் காப்பாற்றினாள். உன் தொண்டை வறண்டு போகாதபடி பாலும் கஞ்சியும் கொடுத்துக் காப்பாற்றினாள். வேறு யார் அப்படிக் கண் விழிப்பார்கள்!” என்றார். அதைக் கேட்ட போது என் உள்ளம் உருகியது. ஆனாலும் பாக்கியத்திடம் முன்போல் நெருங்கிப் பழக முடியவில்லை. உள்ளத்தில் மட்டும் அன்பு மிகுதியாயிற்று.

அந்த நோயால், என் முடிவுத் தேர்வு என்ன ஆகுமோ என்று கவலைப்பட்டேன். உடம்பு தேறிய பிறகும் அளவுக்கு மேல் படிக்கக் கூடாது என்று எல்லாரும் சொல்லத் தொடங்கினார்கள். சந்திரன் அவ்வப்போது வந்து அந்த இருபது நாளில் நடந்த பாடங்களைச் சொல்லிக் கொடுத்தான். இரவில் சாப்பிட்ட பிறகு படிக்கவே கூடாது என்று அம்மா கடுமையாகச் சொல்லிவிட்டார்.

தேர்வு நெருக்கத்தில் சந்திரன் பாக்கிய அம்மையாரின் வீட்டில் இரவும் பகலும் தனியாக இருந்து படித்தான். ஒருநாள் காலை பள்ளிக்குச் சென்ற போது அவன் தலை மிக ஒழுங்காக வாரப்பட்டிருந்தது கண்டு, “இன்று மிகச் சீராகத் தலை வாரி வந்திருக்கிறாயே” என்றேன்.

“நான் வாரியது அல்ல. பாக்கியம்மா வாரிவிட்டார்கள்” என்றான்.

அதைக் கேட்டபோது எனக்குச் சிறிது பொறாமை ஏற்பட்டது. என்னிடம் உள்ளத்தில் அன்பு வைத்திருக்கிறாரே தவிர, இவ்வளவு நெருங்கி அன்பு பாராட்டுவதில்லையே என்று எண்ணினேன். உடனே நானே என் மனத்தைத் தேற்றிக் கொண்டேன். அந்த அம்மா நெருங்கி வந்தாலும் நான் நெருங்கிப் பேசாமலும் பழகாமலும் இருந்தது என் குற்றம்தானே என்று உணர்ந்து மனத்தைத் தேற்றிக் கொண்டேன்.

இரவும் பகலும் அந்த அம்மாவின் வீட்டிலேயே இருந்து படித்த அவன், ஒருநாள் நான் போனபோது அங்கே இல்லை. “எங்கே தம்பி வந்தாய். போகிறாய்?” என்று அந்த அம்மா கேட்டார். “சந்திரனைப் பார்க்க வந்தேன்” என்றேன். “அது வீட்டில் இருக்கும்” என்றார். அன்று இரவும் அவன் அங்கே போகவில்லை. கணக்கில் ஒரு சந்தேகம் கேட்பதற்காகத் தான் போயிருந்தேன். அங்கே இல்லாமற் போகவே மறுபடியும் அவனுடைய வீட்டுக்கே போய்ப் பார்த்தேன்.

“பாக்கியம்மா வீட்டுக்குப் போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். ஏன் அங்கே போகவில்லை?” என்று கேட்டேன்.

“எனக்கு அங்கே இருந்து படிப்பதைவிட இங்கிருந்து படிப்பதே நன்றாக இருக்கிறது” என்றான். அவனுடைய முகமும் வாட்டமாக இருந்தது.

“அண்ணன் போக்கு மனம் போன போக்கு. மறுபடியும் நாளைக்கு அங்கேதான் நன்றாகப் படிக்க முடிகிறது என்று போய்விடுவார்” என்றாள் கற்பகம்.

“சே! உன்னை யார் குறுக்கே பேசச் சொன்னார்கள்” என்று சந்திரன் எரிச்சலோடு கடிந்து கூறினான்.

அதைக் கேட்டவுடன், நான் காரணம் வேறே இருக்க வேண்டும் என்று உணர்ந்தேன். பாக்கியம்மா வீட்டில் சந்திரனுக்கும் அந்த அம்மாவுக்கும் அல்லது சந்திரனுக்கும் அந்த அம்மாவின் தம்பிக்கும் ஏதோ கசப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணினேன். ஆனால், என்ன காரணம் என்று அவனைக் கேட்கவில்லை. எரிச்சலோடு பேசுவதால் இப்போது கேட்கக்கூடாது. நாளை மறுநாள் அவனே சொல்லட்டும் என்று, என் கணக்குச் சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டு வந்துவிட்டேன்.

அதன் பிறகு நானும் அவனும் முனைந்து படித்துக் கொண்டிருந்தோம். சில நாட்களில் பள்ளிக்கூடம் போவதும் நின்றது. அப்போதும் அவன் பாக்கியம் வீட்டுக்குப் போனதை நான் பார்த்ததில்லை. அந்த அம்மாவும் அதைப் பற்றி யாரிடமும் குறிப்பிடவில்லை. தேர்வு நெருக்கடியால், நானும் அந்த அம்மாவின் வீட்டுக்குப் போகவில்லை. அவர் மட்டும் எங்கள் வீட்டுக்கும் சந்திரன் வீட்டுக்கும் வந்து போய்க்கொண்டிருந்தார்.

நன்றாகப் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு நிறைய இருந்தது. ஆனால் படிக்க உடம்பு இடம் தரவில்லை. சோர்வு மிகுதியாக இருந்தது. மறுபடியும் காய்ச்சல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அம்மாவும் அப்பாவும் விழிப்பாக இருந்தார்கள். காலையில் எழாதபடி தடுத்தார்கள்.

அதற்கு நேர்மாறாக சந்திரன் முன்போல் படிக்கவில்லை என்று அத்தை குறை சொன்னார். அவனும் அடிக்கடி சோர்ந்து போவதாகவும், போன ஆண்டில் படித்த அளவும் இந்த ஆண்டில் படிக்கவில்லை என்றும், குணமும் முன்போல் இல்லை என்றும், தாம் கண்டித்து அறிவுரை செய்வதால் தம்மோடு முன்போல் பேசுவதில்லை என்றும் அம்மாவிடம் சொல்லி வருந்தினார். “அப்படித்தான் இருப்பார்கள் சின்னப் பிள்ளைகள். தவிர, படிப்பு பொல்லாதது; பெரிய சுமையாக இருக்கும். அதனால் சரியாகப் பேசவும் மனம் இருக்காது” என்று அம்மா தேற்றியனுப்பினார்.

(தொடரும்)

முனைவர் மு.வரதராசனார், அகல்விளக்கு