கல்வெட்டிலேயே தொடங்கிய சமற்கிருதத் திணிப்பு – தமிழ நம்பி
கல்வெட்டிலேயே தொடங்கியசமற்கிருதத் திணிப்பு!
கழக(சங்க)க் காலத்தில் தமிழ்நாட்டில் அரசர், போர்மறவர் முதலிய செல்வர் மனைகளில் மகன் பிறந்தால் அவனை முதன்முதலாகத் தந்தை சென்று காண்பது ஒரு சிறப்பு நிகழ்ச்சி! அதனைத் “தவமகன் முகம் காண்டல்” என்பர். தகடூரை ஆண்ட அதியமானுக்கு மகன் பிறந்த போது நடந்த இச்சிறப்பை ஒளவையார் புறநானூற்றுப் பாடல் ஒன்றில் (புறம்.100) கூறுவதை அறியலாம்.
இந்த வழக்கம் கி.பி.14ஆம் நூற்றாண்டிலும் இருந்தது என்பதைத் திருமயம் பகுதியிலுள்ள நெக்கோணம் பெருமாள் கோயில் கல்வெட்டு (பி.எசு.672) தெரிவிக்கிறது. இங்கிருந்து நாடுகாவல் புரிந்த சுந்தரத்தோள் மாவலி வாணாதிராயர்க்குத் திருமாலிருஞ் சோலை நின்றான் என்ற மகன் பிறந்த போது இந்த ‘மகன் முகம் காண்டல்’ என்பதைப் “புத்ர முக தரிசனம்” என்று கூறுகிறது.
இந்தச் செய்தியை உரைவேந்தர் ஒளவை.சு.துரைசாமியார் ‘கல் கூறும் சான்றுகள்’ என்ற கட்டுரையிலும் “பிள்ளை மாவலி வாணராயர்” என்ற கட்டுரையிலும் கூறுகிறார்.
ஐயா அவர்கள் ‘இத்தனை ஆண்டுக்காலமாய் வடமொழித் திணிப்பு நடக்கிறதே’ என்பதாக இதை எழுதியிருக்கிறார். இன்னும் கொஞ்ச நாளில் பாருங்கள்; இதையே தலைகீழாக மாற்றி, “அந்தக் காலத்திலேயே தமிழில் வடமொழி கலந்துதான் இருந்தது என்பதற்கு இதுவே அத்தாட்சி! வடமொழி இன்றித் தமிழ் இல்லை என்பதற்கு இதுவே சான்று” என்று விரைவில் ஒரு கட்டுரை எழுதுவார்கள் மேதாவிகள் சிலர்.