களப்பிரர்காலத்தில் பள்ளிகளும் விகாரங்களும்

  களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பௌத்தரும் சமணரும் பள்ளிகளையும் விகாரங்களையும் கட்டியிருந்தனர். அந்தக் கட்டடங்களின் உருவ அமைப்பும் இந்தக் கட்டங்களின் அமைப்பு போலவே இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. சமண சமயக் கோவில்களுக்குச் சினகரம் என்று பெயர் இருந்தது (சினன் + நகரம் = சினனகரம், சினகரம்). விட்டுணுவின் கோயிலுக்கு விண்ணகரம் என்று பெயர் இருந்தது. சமண, பௌத்தக் கோவிலுக்குச் சேதியம் என்னும் பெயரும் உண்டு.

  பௌத்தப் பிக்குகள் இருந்த ஆசிரமம் அல்லது விகாரைகள் பெரிய கட்டடங்கள். அவை காஞ்சி, நாகை, உறையூர், காவிரிப் பூம்பட்டினம் முதலான நகரங்களில் இருந்தன. காவிரிப்பூம்பட்டினத் தில் இருந்த பௌத்த விகாரை, நெடுஞ்சுவர்களும் பெரிய வாயில்களும் உடையதாக வெண்சுதை பூசப்பெற்றுக் கயிலாயம் போன்று இருந்ததென்றும் அது கண (கண்ண) தாசன் என்னும் அமைச்சனால் (களப்பிர அரசனுடைய அமைச்சன்) கட்டப்பட்ட தென்றும் அபிதம்மா வதாரம் என்னும் பௌத்த மத நூல் கூறுகிறது. சோழநாட்டில் பூத மங்கலம் என்னும் ஊரில் இருந்த பௌத்த விகாரையைக் கட்டியவர் வேணுதாசர் (விட்டுணுதாசர்) என்று வினய வினிச்சயம் என்னும் நூல் கூறுகிறது. இவையெல்லாம் செங்கற் கட்டடங்களே.

மயிலை சீனி. வேங்கடசாமி:

ஆய்வுக் களஞ்சியம் 3:

பண்டைத் தமிழக வரலாறு