(ஊரும் பேரும் 61 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – தானமும் தருமமும் – தொடர்ச்சீ)

ஊரும் பேரும்

விண்ணகரம்


தமிழ் நாட்டில் ஈசனது கோவில் ஈச்சரம் என்று பெயர் பெற்றாற்போன்று, விட்ணுவின் கோவில் விட்ணுகிரகம் என வழங்கிற்று. அப்பெயர் விண்ணகரம் என்று மருவிற் றென்பர்.5 வைணவ உலகம் தலைக்கொண்டு போற்றும் நூற்றெட்டுத் திருப்பதிகளுள் ஆறு விண்ணகரங்கள் உள்ளன.

திருவிண்ணகரம்
கும்பகோண்த்திற்கு மூன்று கல் அளவில் உள்ள திருமால் கோவில் திருவிண்ணகரம் என்று விதந்துரைக்கப்பட்டது.6 ஆழ்வார்களில் நால்வர் அதற்கு மங்களா சாசனம் செய்துள்ளனர்.


“திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்
தன்னொப்பார் இல்லப்பன்
தந்தனன் தனதாள் நிழலே”

என்று நம்மாழ்வார் திருவிண்ணகரத்து அப்பனைப் பாடி யருளினார். அவர் திருவாக்கின் அடியாக ஒப்பிலியப்பன் என்னும் திருநாமம் அப் பெருமாளுக்கு அமைந்தது. அது நாளடைவில் உப்பிலியப்பன் என மருவிற்று. அப்பெயருக்கு ஏற்ப உப்பில்லாத நிவேதனம் அந்த அப்பனுக்குச் சிறந்ததாகக் கருதப்படுகின்றது.

சீராம விண்ணகரம்
சீகாழிப் பதியில் உள்ள திருமங்கை யாழ்வாரால் பாடப் பெற்ற பழம் பதியாகும். பதிகத்தின் முதற் பாசுரத்தில் ஈரடியால் உலகளந்த திருமாலின் பெருமையைப் பாடினார் அவ்வாழ்வார்.


“ஒருகுறளாய் இருநிலம் மூவடிமண் வேண்டி
உலகனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும் தருகளினா மாவலியைச் சிறையில் வைத்த
தாடாளன் தாளணைவீர்”

என்றெழுந்த திருவாக்கின் மகிமையால் ‘தாடாளன் கோயில்‘ என்னும் பெயர் அவ்விண்ணகர்க்கு இன்று வழங்கி வருகின்றது.


வைகுந்த விண்ணகரம் அரிமேய விண்ணகரம்
தஞ்சை நாட்டுச் சீகாழி வட்டத்திலுள்ள பதினொரு திவ்விய தேசமும் திருநாங்கூர்த் திருப்பதிகள் என்று வைணவ உலகத்தில் வழங்கப் பெறும். அவற்றுள் இரண்டு, விண்ணகரங்கள் ஆகும். வைகுந்த விண்ணகரம் ஒன்று, அரிமேய விண்ணகரம் விண்ணகரம் மற்றொன்று. “மாறாத பெருஞ் செல்வம் வளரும் மணி நாங்கூர், வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே” என்றும், “அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர், அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே” என்றும் அவற்றைத் திருமங்கை யாழ்வார் பாடியருளினார்.

மணிமாடக்கோயில் செம்பொன் செய்கோயில்
இன்னும், மணிமாடக் கோயில், செம்பொன் செய்கோயில் என்னும் இரண்டும் திருநாங்கூர்த் திருப்பதிகளாகும். மணிமாடக் கோயிலில் அமர்ந்த பெருமானை “நந்தாவிளக்கே நாநாரணனே” என்று ஆழ்வார் ஆதரித்து அழைத்து மங்களா சாசனம் செய்தமையால் அத்திரு நாமம் இரண்டும் அவர்க்கு அமைந்துள்ளன. செம்பொன் செய்கோயிலில் திருமாலின் நின்ற திருக்கோலம் விளங்குகின்றது. அதனைக் கண்களிப்பக் கண்ட ஆழ்வார், “செம்பொன் செய் கோயிலின் உள்ளே, உயர்மணி மகுடம் சூடி நின்றானைக் கண்டு கொண்டு உய்ந் தொழிந் தேனே” என்று பாடித் தொழுதார்.7


மகேந்திர விண்ணகரம்
தமிழ்நாட்டை யாண்ட மன்னர் தம் பெயரால் அமைத்த விண்ணகரங்கள் பலவாகும். பல்லவ மன்னனாகிய மகேந்திரவர்மன் மகேந்திர புர நகரத்தில் ஒரு குன்றத்தைக் குடைந்து எடுத்து அக் கோவிலுக்கு மகேந்திர விட்ணு கிரகம் என்று பெயரிட்டான்.8

பரமேச்சுர விண்ணகரம்
காஞ்சிபுரத்திலுள்ள வைகுந்தப் பெருமாள் கோவில் முன்னாளில் பரமேச்சுர விண்ணகரம் என்னும் பெயரால் விளங்கிற்று. திருமங்கை யாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப் பெற்ற திவ்ய தேசங்களில் ஒன்று அவ்விண்ணகரம். பரமேச்சுரன் என்னும் இயற்பெயருடைய இரண்டாம் நந்திவர்மனால் அக்கோயில் கட்டப்பட்டது என்பர்.”9


நந்திபுர விண்ணகரம்
திருமங்கையாழ்வார் பாடிய மற்றொரு விண்ணகரம் கும்பகோணத்திற்குத் தெற்கே நான்கு கல் தூரத்திலுள்ள நந்திபுரம் என்னும் பல்லவ நகரத்தில் அமைந்தது. “நந்தி பணி செய்த நகர் நந்திபுர விண்ணகரம்” என்று அவர் பாடும் நந்தி வர்மன் அக்கோவிற் பணியில் ஈடுபட்டிருந்தான் என்பது இனிது விளங்கும். அவ் விண்ணகரப் பெருமாள் செகநாதன் என்னும் திருநாமம் உடையார். நாளடைவில் செகநாதன் கோயிலாகிய விண்ணகரம் நாதன் கோயில் என வழங்கலாயிற்று. அதுவே பின்னர் ஊர்ப் பெயரும் ஆயிற்று.

வீர நாராயண விண்ணகரம்
புதுவை நாட்டில் (புதுச்சேரி) உள்ள திரிபுவனி என்னும் திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலத்தில் வீர நாராயண விண்ணகரம் விளங்கிற் றென்று சாசனம் கூறுகின்றது.10 வீர நாராயணன் என்பது பராந்தக சோழனது வீரநாராயண விருதுப் பெயர்களில் ஒன்று. முதற் விண்ணகரம் குலோத்துங்க சோழன் காலத்தில் திருநாராயண பட்டர் என்ற கவிஞர் குலோத்துங்க சோழன் சரிதை என்னும் பெயரால் ஒரு காவியம் இயற்றினார் என்றும், அஃது அரசன் ஆணைப்படி வீரநாராயண விண்ணகரத் திருமுற்றத்தில், ஊர்ச் சபையார் முன்னிலையில் அரங்கேற்றப் பட்டதென்றும், காவியம் பாடிய புலவர்க்குச் சபையார் சம்மானம் அளித்தனர் என்றும் தெரிகின்றன.11

இராசராச விண்ணகரம்
தென்னார்க்காட்டு விழுப்புர வட்டத்தில் உள்ள எண்ணாயிரம் என்னும் ஊரில் இராசராச விண்ணகரம் ஒன்று உள்ளது. அங்குத் திருவாய் மொழி ஒதுதற்காக விட்ட நிவந்தம் சாசனத்தால் விளங்குகின்றது.12
தாராபுரம் என்னும் இராசராச புரத்தில் குந்தவைப் பிராட்டியார் கட்டிய பெருமாள் கோயில் குந்தவை விண்ணகரம் என்று பெயர் பெற்றது.13

இராசேந்திரசோழ விண்ணகரம்
உத்தர மேரூரில் இராசேந்திர சோழ விண்ணகரம் விளங்கிற்று.14 இராசேந்திர சோழ சதுர்வேதி மங்கலம் என்னும் மறுபெயர் பெற்ற உத்தரமேரூரில் கொங்கரையர் ஒருவர் அவ் விண்ணகரத்தைக் கட்டுவித்தார் என்பது கல்வெட் டால் விளங்குகின்றது.15

நெல்லை நாட்டு அம்பா சமுத்திர வட்டத்தில் மன்னார்கோயில் என்ற ஊர் உள்ளது. அழகிய மன்னார் என்னும் திருநாமமுடைய பெருமாள் அங்குக் கோயில் கொண்டிருத்தலால் மன்னார்கோயில் என்று அது பெயர் பெற்ற தென்பர். பிற்காலத்தில் இராசேந்திர சோழ விண்ணகரம் என்னும் திருக்கோயிலும் அவ்வூரில் எழுந்தது. அக்கோயிலைக் கட்டியவன் இராசசிம்மன் என்ற சேர மன்னன்.16 அவன் இராஜேந்திரனுக்கு அடங்கி ஆட்சி புரிந்தமையால் சோழ மன்னன் பெயரை அவ்விண்ணகரத்துக்கு அளித்தான் போலும்!


குலோத்துங்கசோழன் விண்ணகரம்
தஞ்சை நாட்டு உடையார் கோயில் என்ற ஊரில் குலோத்துங்க சோழ விண்ணகரம் உள்ளதென்று சாசனம் உணர்த்துகின்றது. அது முதற் குலோத்துங்கனால் கட்டப்பட்டதாகும்.17 திருச்சி நாட்டு உடையார் பாளையத் தில் உள்ள கீழப்பழுவூரில் வீரசோழ விண்ணகரம் விளங்கிற் றென்று சாசனம் கூறும்.18


திருப்பொதியில் விண்ணகரம்
கோவில்குளம் என்பது நெல்லை நாட்டு அம்பாசமுத்திர வட்டத்திலுள்ள ஒரு ஊரின் பெயர். அவ்வூரில் தென்னழகர் என்னும் பெருமாள் கோயில் கொண்டுள்ளார். பழமையான பல வட்டெழுத்துச் சாசனங்கள் அக்கோயிலிற் காணப் படுகின்றன. திருப்பொதியில் என்னும் பெயர் முற் காலத்தில் அதற்கமைந்திருந்த தென்பது அக் கல்வெட்டுக்களால் அறியப்படும்.19 புகழ் வாய்ந்த பொதிய மலையின் அடிவாரத்தில் அமைந்த கோவில், பொதியில் விண்ணகரம் என்று பெயர் பெற்றது மிகப் பொருத்தமாகத் தோன்று கின்றது. அக்கோயிலின் பெருமையாலேயே முன்பு குளம் என்னும் பெயருடையதாயிருந்த ஊர், கோவில் குள மாயிற்று.20

விண்ணபள்ளி
கோவை நாட்டுக் கோபி வட்டத்தில் உள்ள விண்ணபள்ளி யென்னும் ஊர் அங்குக் கோயில் கொண்டுள்ள பெருமாள் பெயராற் பெருமை யுற்றதாகும். ஆதி நாராயணப் பெருமாளின் கோவிலடியாக விண்ணபள்ளி என்ற பெயர் அதற்கு அமைந்தது.21

மாமணிக் கோயில்
திருமால் நீலமேனியன் என்றும், மணிவண்ணன் என்றும் தமிழ் நூல்கள் கூறும். தஞ்சையில் கோயில் கொண்ட திருமாலைத் தஞ்சை மாமணி என்று ஆழ்வார்கள் போற்றினர்.22 அதனால் அத்தலம் தஞ்சை மாமணிக் கோயில் என்னும் திரு நாமம் பெற்றது. நூற்றெட்டுத் திருப்பதிகளுள் ஒன்றாகிய மாமணிக் கோயில் தஞ்சாவூருக்கு வடக்கே மூன்று கல் தூரத்தில் உள்ளது.


வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை
மாமணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான்கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்”


என்ற திருமங்கை யாழ்வார் திருமொழியைப் பெற்றது இத்தலமே யாகும்.

பச்சைப்பெருமாள் கோயில்
திருமால், “பச்சைமா மலைபோல் மேனியர்” என்று ஆழ்வார்களால் பாடப்பட்டிருத்தலால் பச்சைப் பெருமாள் எனவும் அவரை வழங்குவர். காஞ்சிபுரத்தில் பச்சை வண்ணர் கோயில் ஒன்று உண்டு. பூவிருந்தவல்லிக்கு மேற்கே பெருமாள் கோயில் என வழங்குவது, பச்சை வண்ணப் பெருமாள் வீற்றிருக்கும் தலமாகும்.

சிங்கப்பெருமாள் கோயில்
சின்னக் காஞ்சிபுரம் என வழங்கும் அத்தியூரில் வேளுக்கை என்னும் திருமால் கோயில் உள்ளது. “மன்னு மதிட்கச்சி வேளுக்கையாளரியை” என்று திருமங்கையாழ்வார் இப்பெருமாளையே பாடினர் என்பர். இன்னும், சிங்கப் பெருமாள் கோயில் என்னும் தலம் செங்கற்பட்டுக்கு வடபால் உள்ளது.

சிங்கர் குடி
புதுச்சேரிக்குத் தென்மேற்கே ஆறு கல் தூரத்தில் சிங்கர்குடி என்னும் ஊர் உள்ளது. அங்குப் பழமையான பெருமாள் கோவில் ஒன்று கானப் படுகின்றது. நரசிங்கப் பெருமாள் கோயில் என்பது அதன் பெயர். நரசிங்க மூர்த்தியின் பெயரே ஊருக்கு அமைந்ததாகத் தோற்றுகின்றது. நரசிங்கர் குடி என்பது சிங்கர்குடி என வழங்கலாயிற்று.

சம்பங்கிகுடி
வட ஆர்க்காட்டு வேலூர் வட்டத்திலுள்ள ஊர் ஒன்று சம்பங்கி நல்லூர் என வழங்கப்படுகின்றது. செண்பகப் பெருமாள் நல்லூர் என்னும் பெயரே இங்ஙனம் சிதைந்துள்ள தென்பது கல்வெட்டுகளால் விளங்கும்.23

சோழிங்கர்
வட ஆர்க்காட்டு வாலாசா வட்டத்தில் சோழிங்கர் என்ற ஊர் உள்ளது. சோழ சிம்மபுரம் என்னும் பெயரே அவ்வாறு மருவிற்றென்று குரு பரம்பரை கூறும்.24 அவ்வூரிலுள்ள கடிகாசலம் என்ற குன்றின் மீது கோயில் கொண்டுள்ள நரசிங்கப் பெருமாளை பேயாழ்வாரும், திருமங்கை யாழ்வாரும் பாடியுள்ளார்கள்.இந்நாளில் கடிகாசலப் பெருமாள் கோவில் சாலச் சிறப்புற்று விளங்குகின்றது.


திருநாராயணபுரம்
நாராயணன் என்னும் நாமம் பல ஊர்ப் பெயர்களில் விளங்குவதாகும். திருச்சி நாட்டிலுள்ள திரு நாராயணபுரம், அங்குக் கோயில் கொண்டருளும் வேத நாராயணப் பெருமாள் பெயரால் நிலவுகின்றது.25 திருச்சானூர்
கீழைத் திருப்பதி
க்கு மூன்று பல் தூரத்தில், சுவர்ணமுகி யென்னும் பொன் முகலியாற்றங் கரையில் உள்ளது திருச்சானூர். முன்னாளில் இராசேந்திர மண்டலத்துத் திருவேங்கடக் கோட்டத்தில் குடவூர் நாட்டில் திருச்சானூர் என்னும் சுகனூர் இருந்ததென்று சாசனம் கூறும்.26 திருச்சுகனுரில் இப்பொழுது சிறந்து விளங்குவது அலர்மேல் மங்கையின் கோயிலாகும். ஆயினும், பழங்காலத்தில் திப்பலா தீச்சுரம் என்னும் சிவாலயமும் அங்குச் சிறந்திருந்ததாகத் தெரிகின்றது. திருப்பதி மலையில் கோயில் கொண்டுள்ள வேங்கடாசலபதியின் தேவியாகிய அலர்மேல் மங்கையின் திருக்கோயில் இக் காலத்தில் அங்கு சிறப்புற்று விளங்குதலால் அலர்மேலு மங்கை புரம் என்னும் பெயரும் அதற்குண்டு.

(தொடரும்)

ஊரும் பேரும், இரா.பி.சேது(ப்பிள்ளை)

அடிக் குறிப்பு

  1. செ.க.அ.(M. E. R.), 1935-36.
  2. 5. தேவலோகம் போன்ற தென்ற காரணம் பற்றி விண்ணதாடு என்னும் பெயர் வந்தது என்பாரும் உளர் – நாலாயிரம், நூற்றெட்டுத் திருப்பதிப் பிரபாவம், 33.
  3. திருநாகேச்சுரம் என்னும் சிவாலயமும் திருவிண்ணகரமும் ஒன்றையொன்று அடுத்திருந்தமையால், அவ்வூர் திருவிண்னகர் திருநாகேச்சுரம் என்று முற்காலத்தில் வழங்கிற்று. திரைமூர நாட்டுத் தேவதானமாகிய திருவிண்ணகர் திருநாகேச்சுரம் என்பது சாசனம். 218 of 1911, .
  4. இன்னும், திருமணிக்கூடமும், தெற்றி யம்பலமும், காவளம் பாடியும், தேவனார் தொகையும், வெள்ளக் குளமும், வண்புருடோத்தமும், பார்த்தன் பள்ளியும் மற்றைய திருநாங்கூர்ப் பதிகள் ஆகும்.
  5. Ep. Ind. தொகுதி 4, பக்கம் 125.
  6. பல்லவர்கள்(Pallavas,) ப. 131.
    10, 186 / 1919.
  7. 198 / 1919.
  8. 333 / 1917.
  9. 8 / {9}9.
  10. 184 / 1923.
    15, 174 / 1923.
  11. 112 / 1905.
  12. 399 / 1902.
  13. S. I. H. Vol. HI. 154.
  14. 551 of 1911.
  15. 551 of 1911.
  16. செ.க.அ.(M. E. R.), 1935-36.
  17. மா என்பது நீல நிறத்தைக் குறிக்கும். “மாயிரும் பீலி மணி நிற மஞ்ஞை” என்னும் சிலப்பதிகாரத் தொடருக்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார், மா-கருமை என்று கூறுதல் காண்க. மனை யறம் படுத்த காதை, 53.
    23/ S. I. I., ப.. 74.
  18. சோழலிங்கபுரம் என்ற பெயரே சோழங்கிபுரம் ஆயிற்றென்றும் கூறுவர். (N. A. Manual. (1, p. 435) அவ்வூரின் நடுவே உள்ள சோழேச்சுரத்தி லுள்ள சுயம்பு லிங்கம் அதற்குச் சான்றாகக் காட்டப்படுகின்றது.
  19. இவ்வூர் முசிரி வட்டத்தில் உள்ளது.
  20. 265 / 1904,
  21. திப்பலாதீசுவரர் என்பது தெலுங்கில் குன்றுடையார் (The Lord of the Hills) என்று பொருள்படும் என்பர். இப்பொழுது இக் கோயில் பராசரேஸ்வரர் கோயில் என வழங்கப்படுகிறது.
  22. 430 / 1922.
  23. 385 / 1902.
  24. 277 / 1916.
  25. 392 /1907.
  26. செ.க.அ.1937-38.