காட்டைப் பார்த்து வெகு நாளாயிற்று … குமுறும் ஆடுகள் 2
2
மேற்குமலைத்தொடர்ச்சிப் பகுதியில் அமைந்துள்ள திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உழவிற்கு அடுத்தபடியாக விளங்குவது கால்நடை வளர்ப்புத்தொழில்தான். இந்த இரு மாவட்டங்களும் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய நிலையில் உள்ளமையால் கால்நடை வளர்ப்பதைப் பரம்பரைத் தொழிலாக வைத்துள்ளனர். தற்பொழுது கோடை மழை பெய்து நின்றுவிட்டதாலும் அணைகள், அருவிகள் அனைத்தும் நிரம்பி விட்டதாலும் இப்பகுதிகளில் உள்ள வேளாண் பூமிகளில் நெல், கரும்பு, தக்காளி, வாழை முதலான பயிர்த்தொழிலும், மானாவாரிப் பகுதிகளில் விதைகள் விதைப்புப் பணி தொடங்குகிறது. எனவே ஆடு, மாடுகளை மேய்க்கக் காட்டுப்பகுதிகளைத்தான் நாடிச்செல்லவேண்டியுள்ளது. இவற்றைத்தவிர வனப்பகுதி, குளக்கரை, ஆற்றின் ஓரங்களிலும் அரசு புறம்போக்கு நிலங்களிலும்தான் ஆடுகளை மேய்க்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். இதற்குக் காரணம் பெரும்பாலான உழவு நிலங்கள் அழிக்கப்பட்டு வீட்டுமனைகளாக மாற்றப்பட்டுவிட்டன. இந்நிலையில் மேற்குமலைத்தொடர்ச்சிப்பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்க்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அப்படி மீறி ஆடுகளை மேய்த்தால் தண்டத்தொகையும்(அபராதமும்), ஆடுகளைப் பறிமுதல் செய்யும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. வறட்சி மாவட்டங்களாக இராமநாதபுரம், சிவகங்கைப் பகுதிகளில் வறட்சியாகக் காணப்படுவதால் பட்டி அமைத்து ஆடுகளைக் கூட்டம், கூட்டமாக மேய்த்து வருகின்றனர். பண்டைய காலம் முதல் பட்டி அமைத்து ஆடு, மாடுகளை மேய்த்துள்ளதால் இப்பகுதிகளில் அவற்றின் நினைவாகப் பட்டி என்ற ஊர்ப்பெயர்கள் மிகுதி. தேவதானப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, சில்வார்பட்டி, புதுப்பட்டி, நடுப்பட்டி, கள்ளிப்பட்டி, கைலாசபட்டி, அழகர்நாயக்கன்பட்டி, வாடிப்பட்டி, கட்டக்காமன்பட்டி எனப் பல பட்டிகள் ஊர்களின் பெயர்களாக அமைந்துள்ளன.
இவ்வாறு ஆடு மேய்ப்பவர்கள்படும் துன்பங்களைக் கேட்டால் ‘கல்லும் கண்ணீர் விடும்; புல்லும் போருக்குப் புறப்படும்’. காரணம், குடும்பம் குடும்பமாக ஆடுகளை மேய்க்க வந்தாலும் ஆடு மேய்க்கும் பெண்களை அந்தப் பகுதியில் உள்ள நிலக்கிழார்கள் பாலியல்துன்புறுத்தும்முறையில் சீண்டுவதும், வனத்துறையில் பணிபுரியும் காப்பாளர், காவலர் முதலானோர் ஆடுகளை மேய்க்கும் பெண்களைத் தங்கள் காம இச்சைக்குப் பயன்படுத்துவதும் அன்றாட நடைமுறையாகிவிட்டது. இவற்றைத்தவிர சில (மாபியா)கொள்ளைக் கும்பல் ஆடுகளை இரவோடு இரவாகச் சுமையுந்து அல்லது மூடுந்துகளில் திருடிச்சென்றுவிடுகின்றனர். தண்ணீர் இருக்கும் இடத்தை நோக்கி ஆடுகளைக் கொண்டு செல்ல இரவு நேரங்களில் கால்நடையாக நடந்து செல்வார்கள். அவ்வாறு செல்லும்போது இரவு நேரத்தில் பேருந்துகள் மோதிக் கூட்டம், கூட்டமாக ஆடுகள் விபத்துக்குள்ளாவதும், ஆடு மேய்ப்பவர்கள் அந்த இடத்தில் உயிர்துறப்பதும் தமிழகத்தில் நடக்கும் அன்றாடச்செய்திகள். இவற்றைத்தவிர புலிகள், சிறுத்தைப்புலி ஆகிய வனவிலங்குகளும் ஆடுகளைத் தூக்கிச்சென்றுவிடுவதும் உண்டு. இவற்றையெல்லாம் தாண்டி ஆடுகளை மேய்க்க வனத்துறை தடை செய்துள்ளது. மீறி ஆடுகளை மேய்ப்பவர்களை மிரட்டியும், வழக்குகளைத் தொடர்ந்து தளைப்படுத்தியும் விடுகின்றனர். இதற்குக் காரணம் சப்பான் நாட்டு உதவியுடன் மரக்கன்றுகள் நடும் திட்டம் வனத்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காடு வளர்ப்புத்திட்டத்தின் கீழ்ப் பெயர் அளவில் சில மரக்கன்றுகளை நட்டுவிட்டு மற்ற மரக்கன்றுகளை வெளியில் விற்கின்றனர் அல்லது மொத்தம், மொத்தமாக ஓடைகளில் தூக்கி எறிந்துவிடுகின்றனர். மேலும் வனப்பகுதியில் உள்ள தேக்கு, சந்தனம், செம்மரம், நாவல் போன்ற மரங்களை வெட்டிக் கடத்துபவர்கள்பற்றியும் வனத்துறையில் வேட்டையாடுபவர்களைப்பற்றியும் தகவல் வெளியில் கசிந்துவிடும் என்ற அச்சமும் கொண்டு ஆடு மேய்ப்பவர்களை வனப்பகுதிக்குள் நுழைய விடுவதில்லை என்று காரணம் கூறுகிறார்கள் கால்நடை வளர்ப்பவர்கள். எப்படி இருப்பினும் கால்நடை என்ற இனமும், வனமும் அழிவது உறுதி என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
தனித்தனியாகவோ பட்டிபட்டியாகவோ ஆடுமாடுகளை வளர்ப்பவர்களுக்கு ஊரையொட்டிய வனப்பகுதிகள், தரிசு நிலங்கள், ஆற்றங்கரைகள், ஓடைக்கரைகள், மலைப்பாங்கான பகுதிகள்தான் கால்நடைகளின் வாழ்வாதாரம். இங்கே வளர்ந்து கிடக்கும் புல், பூண்டுகளைச் சாப்பிட்டு அந்த ஆடு, மாடுகள் வளரும். கூடவே, அவற்றின் கழிவுகள் எருவாக மாறி அந்த இடங்களை வளப்படுத்தும்.
இந்நிலையில் பட்டி ஆடுகள் வனப்பகுதிகளில் மேய்வது தடை செய்யப்படுகிறது என்றும் நான்கு, ஐந்து ஆடுகள் என்ற அளவில் வைத்திருப்பவர்கள் மட்டும் ஆடுகளை மேய்த்துக்கொள்ளலாம் என்றும் கடந்த முறை வனத்துறை அமைச்சர் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதனால் ஆடு மாடு வளர்க்கும் உழவர்கள் அரண்டு போயுள்ளனர்.
வனப்பகுதிகளில் ஆடு, மாடுகளை மேய்த்தால் அங்கே வளரும் மரச்செடிகளுக்கு ஆபத்தாக இருக்கிறது என்ற காரணத்தை வனத்துறை கூறுகிறது. ஆனால் வெள்ளாடுகள் மேய்த்தால்தான் சிக்கல் வரும். செம்மறியாடுகள் வளர்த்தால் எந்தச் சிக்கலும் வராது என்கிறார்கள் ஆடு வளர்ப்போர். இதன் தொடர்பாக ஆடு வளர்க்கும் சங்கத்தைச் சேர்ந்த வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்த பால்சாமி கூறுகையில், “வேட்டை சமூகமாக இருந்த மனிதன் கடந்த 2000 வருடத்திற்கு முன்பாக ஆடு, மாடு வளர்க்கிற தொழிலுக்கு மாறினான். இந்தத் தொழிலை எங்கள் பரம்பரை வயிற்றைக் கழுவிக்கொண்டு இருக்கிறோம். அரசாங்கம் எந்த வரியும் விதிக்க வில்லை. கால்நடைகளைக் கொள்ளையடித்தவர்களை எதிர்த்துப் போரிட்டு மாண்ட வீரனுக்கு நடுகல் நடப்பட்டுள்ளது. பண்டைய காலத்தில் போர்நடந்தால் முதலில் அவர்களின் கால்நடைகளை கவர்ந்து செல்வதுதான் மன்னர்களின் வழக்கமாக இருந்தது. ஆடு, மாடுகளை மேய்ப்பவர்கள் ஒற்றர்களாகவும் இருந்துள்ளனர். அதனால் மன்னர் அந்த ஒற்றர்களைக் கண்டுபிடித்து அவர்களைக் கொலையும் செய்துள்ளனர். அவ்வாறு கொலை செய்யப்பட்டவர்கள் இப்பொழுது தெய்வங்களாக வணங்கப்படுகின்றனர். ஆங்கிலேயர் காலத்தில்தான் வனப்பகுதியில் செம்மறியாட்டை மேய்க்க வருடத்திற்கு ஓர் ஆட்டிற்கு நாலணா வரி போட்டார்கள். இந்தியா விடுதலை அடைந்த பின்னர் அதை 2 உரூபாயாக உயர்த்தினார்கள்.. அதை எதிர்த்து நீதிமன்றத்திற்குப் போனோம். 1 உரூபாயாகக் குறைத்துத் தீர்ப்பு கொடுத்தார்கள்.
அண்டை மாநிலங்களான ஆந்திரா, கருநாடாக வனப்பகுதிகளில் செம்மறியாட்டைக் கட்டணம், வரியின்றி மேய்க்க இசைவு அளித்திருக்கிறார்கள். அதனைத் தமிழக அரசுக்குத் தெரியப்படுத்தினோம். அதைத் தொடர்ந்து ஆடு வளர்ப்பவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டு இலவசமாக ஆடுகளை மேய்க்கலாம் என்று 2000 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார்கள். இப்பொழுது எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் தடை போட்டு எங்கள் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றிவிட்டார்கள்” என்றார்.
(இனியும் குமுறும்)
Leave a Reply