குடும்ப ஒற்றுமை, கட்சிக்கும் நாட்டிற்கும் நலம் பயக்கும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
குடும்ப ஒற்றுமை, கட்சிக்கும் நாட்டிற்கும் நலம் பயக்கும்!
[சுற்றத்தாருடன் அன்புடன் பழகாதவன் வாழ்க்கை கரையில்லாக் குளத்தின் நீர்போன்று பயனற்றுப் போகும்.]
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று. (திருவள்ளுவர், திருக்குறள் 523)
“ஒருவீர் தோற்பினும் தோற்பது நும் குடியே”
புறநானூறு கூறும் இப்பொன்னுரை உலகமக்கள் யாருக்கும் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது. சோழவேந்தன் நலங்கிள்ளிக்கும் சோழவேந்தன் நெடுங்கிள்ளிக்கும் இடையே போர் மூண்டது. அப்பொழுது புலவர் கோவூர் கிழார் இருவரிடமும் ”இருவர் வெற்றி காண்பது என்பது இயலாத ஒன்று. ஒருவர் வெற்றி பெற்றாலும் மற்றவர் தோற்றவர் ஆகிறார். அதனால் சோழர் குடி தோற்றது என்னும் இழிபெயர் சோழர் குலத்திற்கு வரும்.” என அறிவுரை கூறினார். இதனை உணர்ந்த சோழ வேந்தர்கள் போரினை நிறுத்தினர். அவ்வறிவுரையை இன்று தி.மு.க., அ.தி.மு.க. தலைமையைச்சேர்ந்த குடும்பத்தினர் உணர்தல் நன்று.
நம் நாடு மக்களாட்சி நாடு எனக் கூறப்பட்டாலும் கட்சியாட்சி நாடாகத்தான் விளங்குகிறது. கட்சிகள் எண்ணற்று இருந்தாலும் இரண்டு அல்லது மூன்று கட்சிகளே முதன்மை பெறும் வகையில் அவற்றின் ஆட்சிகளே நாட்டில் அமைகின்றன. அக்கட்சிகளிலும் தலைமை நிலையில் இருப்பவர்களின் குடும்பங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. கட்சித்தலைவர்களின் கொத்தடிமைகளாக இருக்கும் மக்களால் இவை தவிர்க்க இயலாக் கேடுகளாய் மாறிவிட்டன. இவையாவது உருப்படியாக இருக்க வேண்டும் அல்லவா? தலைமையில் உள்ளவர்கள் சிதறுண்டால் கட்சியும் சிதறத்தானே செய்யும். கட்சிநலன் கருதியாவது ஒற்றுமையாக இருக்க வேண்டும். முதன்மைக் கட்சிகள் சிதையும்பொழுது அவற்றைச் சார்ந்துள்ள ஆட்சியும் சிதைவது இயற்கைதானே! எனவே நாட்டு ஒற்றுமைக்கும் இவர்களின் ஒற்றுமை தேவை! இவர்களைத் தூக்கி எறிந்துவிட்டுப் பிறரை – பிற கட்சிகளை – ஆட்சியில் அமர்த்தலாமே என எண்ணலாம். அந்த நிலைக்கு மக்கள்மாறும் வரை அல்லது நன்னெறியாளர் ஆட்சிக்கு வரும்சூழல் வரும் வரை, இருக்கும் சூழலில் முதன்மையாளர்களை முன்னிலைப்படுத்தித்தான் சிந்திக்க வேண்டி உள்ளது.
இன்றைய எதிர்க்கட்சியாக உள்ள, ஆளுங்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் மாறி மாறி இருந்த, தி.மு.க.வின் குடும்பச் சண்டை யாவரும் அறிந்ததே! அழகிரி, தாலின், மாறன்கள், கனிமொழி என்று பல்வகையிலும் அணிகள் இவர்கள் பின் அமைந்துள்ளன. இதுவும் கலைஞரின் தந்திரம் என்று தொடக்கத்தில் எண்ணத் தோன்றியது. ஏனெனில், கலைஞருக்குப் பின்னர் தி.மு.க. பிளவுபட்டாலும் இவர்கள் பின்தான் தனித்தனியாக அணிவகுப்பர். அதனால் எப்படியும் கலைஞர் கருணாநிதியின் பரம்பரையினர்தான் தி.மு.க.வை ஆள்வர். அதன்வழி வாய்ப்புள்ளபொழுது நாட்டையும் ஆள்வர் என்ற எண்ணமே இவர்களின் பிளவு குறித்துக் கலைஞர் கருணாநிதியைக் கவலைப்படச் செய்யவில்லை எனலாம்.
அழகிரி திறமை மிக்கவர்தான். அவரையே தாலின் ஓரங்கட்டுகிறார் என்றால் இவரும் திறமையாளர்தானே! பிறரும் ஒவ்வொருவகையில் திறமையாளர்களே! யார் வல்லவர் என்ற போட்டி ஏன் தேவை? குடும்பத்தினர் ஒவ்வொருவரும் தங்களின் முதன்மையை மறந்து கட்சி இருந்தால்தான் தாங்கள் இருக்க முடியும் என்பதை நினைந்து ’ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதை உணரவேண்டும். கொள்கைத் தடுமாற்றங்களால் கட்சி தேய்ந்து கொண்டிருக்கும் பொழுது அவற்றைச் சரிசெய்து கொள்கை வழி நடத்திச் செல்ல வேண்டிய கடமை தலைவர்களுக்கு உள்ளது. அதிமுகவின் இன்றைய சிதைவுகளின்பொழுதுகூடத் தி.மு.க. வலுப்பெறவில்லை என்பதை உணர்ந்து யார் பெரியவர் என்று ஆராயாமல் ஒன்றுபட்டு நின்று கட்சியையும் அதன் வழி நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டும்.
இந்த அறிவுரை அதிமுகவிற்கும்தான். செயலலிதா இருந்த வரை அவருக்கு அணுக்கமாக இருந்த சசிகலாவிடமும் அவர் குடும்பத்தினரிடமும் அடிமைபோல் நடந்துகொண்டவர்கள்தாம் அடுத்த நிலையில் இருந்தவர்கள். செயலலிதா மறைந்த பின்னும் சசிகலாவிடம் கட்டுப்பட்டுக் கிடந்தவர்கள்தான் இவர்கள். மத்திய ஆட்சியின் சூழ்ச்சியால் இன்றைக்கு அடுத்தடுத்து பிளவுபட்டு எதிர்நிலையில் உள்ளனர். இந்நேரத்தில் சசிகலா குடும்பத்தினரும் அதிகாரக் கைப்பற்றலுக்காகப் பிளவுபட்டு இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. முனைவர் ம.நடராசன் செயற்பாடுகளால்தான் செயலலிதாவே கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்தும் நிலைக்கு உயர முடிந்தது. கட்சியினரும் அதிகாரத்தினரும் கொடுக்க வேண்டியவற்றைக் கொடுத்தோ வேறு வகையிலோ பொறுப்புகளை வாங்கியுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. அவர்களுள் பலர் இவர்கள் பக்கம் இருப்பதையெ விரும்புவர் என்பதே உண்மை. சசிகலா சிறையில் இருக்கும் சூழலில், முனைவர் ம.நடராசன் நலங்குன்றி உள்ள நேர்வில், தினகரன், திவாகரன், வெங்கடேசு, கிருட்டிணப்பிரியா, விவேக்கு எனப் பலவகையிலும் அணிஅணியாகச் சிதறுவதால் அவர்கள் இலக்கை அடைய முடியுமா? தினகரன் திறனாளராக உள்ளார். அவர் தலைமையில் குடும்பத்தினர் ஒன்றுபடுவதில் தவறு எதுவும் இல்லை. ‘பொறுத்தார் பூமி யாள்வார்’ என்பதை உணர்ந்து விட்டுக்கொடுத்துச் செயல்பட்டால் நன்றல்லவா? இவர்களை விரட்டுவதற்கென்றே காவி வலையில் ஒவ்வொருவராகச் சிக்க வைக்கப்பட்டிருக்கும் பொழுது பிளவு படுவது குடும்பத்திற்கும் கட்சிக்கும் நல்லதல்ல.
தேர்ந்தெடுக்கப்படும் அரசு பதவிக்காலம் வரையும் ஆட்சி செய்வதே நல்லது. செயலலிதாவை மட்டும் மக்கள் ஆட்சி செய்யத் தேர்ந்தெடுத்ததாகக் கருதுவது தவறு. அவர் தலைமையிலான அதிமுகவையும்தான் ஆள்வதற்கு மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆட்சி கலைக்கப்பட்டால் பாசகவின் பிடி மேலும் தமிழ்நாட்டிற்குக் கேடு விளையும் என்பதில் ஐயமில்லை. பன்னீர், எடப்பாடியார் முதலானார் பழிவாங்கப்படலாம் என்ற அச்சத்திலும் ஒன்றுபடத் தயங்கலாம். அரசியலில் உறவும் பகையும் மாறிமாறி அமையும் என அறிந்தவர்கள்தாமே நாம்!
பிரிந்து போனவன் திரும்பி வந்தால், தலைவன் பிரிந்ததற்கான காரணத்தை ஆராய்ந்து சரிசெய்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல். (திருவள்ளுவர், திருக்குறள் 530)
ஆதலின் இணையுங்கள்! நாடாள எண்ணும் ஆசையைக் கருதியாவது ஒன்றுபடுங்கள்! மக்கள் உங்களைத் தூக்கி எறியும் முன்னராவது கட்சிகளைக் காப்பாற்றுங்கள்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 220 மார்கழி 23- மார்கழி 29, 2048 – சனவரி 07-13, 2018
Leave a Reply