ther

 

காடுவெட்டிப் போட்டுக் கடிய நிலந்திருத்தி
வீடுகட்டிக் கொண்டிருக்கும் வேள்வணிகர் வீடுகட்கு
அன்றைக்கு வந்தவெங்கள் அம்மா இலக்குமியே
என்றைக்கும் நீங்கா திரு!

  இந்த இனிய மாலைப்பொழுதில் இவ்வரங்கிற் கூடியிருக்கும் பள்ளத்தூர்வாழ் மக்களுக்கும் விழா அழைப்பாளருக்கும் முதற்கண் என் வணக்கம். சிவன்கோயிற் தேரையிழுத்து நிலைகொள்ளச் செய்த களைப்போடு எல்லோருங் கூடியுள்ள நிலையில், அடுத்த கோயில்நிகழ்ச்சி தொடங்குமுன் இடைப்பட்ட நேரத்தில், உங்களோடு செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வாய்ப்பு தந்தமைக்கு என் நன்றிகள். துடிப்பான இளைஞரும், தொழில்முனைப்பாளரும் (industrialist) ஆன அருண் கூப்பிட்டும் இங்கு வராமல் இருக்கலாமா? அதனால் வந்தேன். நான் மேடைப் பேச்சாளன் அல்லன். ஏதோ எனக்குத் தோன்றிய சில கருத்துகளை உங்கள்முன் சொல்ல முயல்கிறேன்.

  இந்த அரங்கில் ”குமுகவளர்ச்சி” பற்றிப் பேசுவதாக விழா ஏற்பாட்டாளரிடஞ் சொல்லியிருந்தேன். என்னை அறிமுகப்படுத்தியவர் என் தொழில்முறை விவரங்களையும், ஓய்வுநேரத் தமிழ்ப் பணிகளையும் எடுத்துரைத்தார். அது ஒருபக்கம் இருக்கட்டும். அடிப்படையில் நான் உங்களுக்குத் தெற்கேயுள்ள பக்கத்தூர்க்காரன். கண்டனூரான். கண்டனென்பது சோழ அரசர்குலத்தின் பட்டப்பெயர். சோழன் இராசராசனின் பெரியதகப்பன் கண்டராதித்தன் சாக்கோட்டைக் காடுகளுக்கு வேட்டையாட வந்தபோது அருள்மிகு வீரசேகரர் திருமேனியைக் கண்டெடுத்தான். அதன்பின் ஒப்பற்ற கோயிலையும் அங்குக் கட்டினான். நம் பக்கத்திற் சாக்கோட்டைக் கோயிலே மிகுந்த பழமைவாய்ந்ததும் பெயர்பெற்றதுமாகும். சிவகங்கைத்தனியரசுக்  கோயிலுங் கூட. கண்டராதித்த சோழனின் வேட்டைப் படைகள் தண்டுகொண்டு தாவளித்த இடந்தான் கண்டன் ஊராயிற்று.

  கிட்டத்தட்ட கி.பி. 600களில் சோழநாட்டிலிருந்து பெயர்ந்து இளையாற்றங்குடிக்கு வந்த நகரத்தார் பாண்டிய அரசாணையால் 9 ஊர்களிற் குடியேறிக் கொஞ்சங் கொஞ்சமாய் வளர்ந்து பரந்து விரிந்த 96 ஊர்களிற் கணிசமான புள்ளிகளைக் கொண்ட கண்டனூரும் ஒன்றாகும். காலவளர்ச்சியில் பல்வேறு உச்சங்களை எங்களூர் கண்டிருக்கிறது. “இமயத்தின் எல்லைகண்ட எந்தமிழ் என்றும்வாழ்க” என்ற சொலவத்தைச் சுற்றுப்பக்கமெல்லாம் ஆரவாரத்தோடு பரப்பியவூர் கண்டனூராகும். தைமாசம் பழனியாத்திரை போவோருக்குக் கண்டனூர்ப்பெருமையும் முகன்மையும் நன்றாகத் தெரியும். கண்டனூர்க் கோயிற்சிறப்பென்றால் அதன் கட்டுமானத்தையும், கார்த்திகை மாசக் கடைசிச் சோமவாரத்தையும், தெய்வானை கல்யாணத்தையும், விசயதசமிக்கு அம்புபோடும் கோலாகலத்தையும், செல்லாயி அம்மன் தேர்த்திருவிழாவையும் சொல்லலாம். கூடவே எங்கள் வையைக்காடுபற்றிச் சொல்லலாம். மருதுபாண்டியரைப் பிடிப்பதற்காக ஆங்கிலேயக் கிழக்கிந்திய கும்பணிக் கர்னல் அக்னியூ காளையார்கோயிலிருந்து எங்களூர்வரை பரந்துகிடந்த பெருங்காட்டை அழித்தபோது. அங்குமிங்கும் மிஞ்சிய சில காட்டுப்பகுதிகளில் ஒருபகுதிதான் எங்கள் வையைக்காடு. கண்டனூருக்கும் காட்டிற்கும் அப்படியோர் ஆழ்ந்த உறவுண்டு.

  உங்கள் பள்ளத்தூர் எங்கள் ஊரைவிடப் பெரியது. சென்ற 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பின் ஏறத்தாழ 10,000 பேருக்குமேல் இங்கிருக்கிறீர்கள். நாங்கள் 8,000 க்கு அருகிற்றான் இருப்போம். இரண்டு ஊர்களிலுமே பெண்கள் ஆண்களை விடச் சற்றுக் கூடுதற் தொகையிலிருக்கிறார்கள். பள்ளத்தூரென்றாலே, சமதளமன்றிச் சாய்ந்துகிடக்கும் புவிமட்டமும், (ஆங்கிலத்திற் சொல்வாரே terraced என்பது போல்) பாத்திகட்டித் தளம்போட்டு, ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் சரிந்துசெல்லும் வீதிகளும், சோலையாண்டவர் கோயிலும், ஆண்பெண் இருவரிற் கணிசமானவர்க்கு அமையும் சோலையெனும் பெயரும், சீதையாச்சி மகளிர் கல்லூரியின் சிறப்பும், திரைப்பட நகைச்சுவை நடிகை மனோரமாவின் பின்புலமும், சூரியத் தொலைக்காட்சியின் நாதசுவர நெடுந்தொடரின் உருவாக்கமும் எனப் பல நினைவுகள் எழும்.  எனக்குத் தெரியாத, இன்னுஞ்சில விதப்பான பெருமைகளும் சிறப்புக்களும் உங்களூருக்கு இருக்கும். அவற்றை எல்லாம் தெரிந்துகொள்வது முகன்மையெனினும் இந்தவூர் மக்களின் உன்னத உழைப்பிற்கும் குமுக வளர்ச்சிக்கும் கட்டியங்கூறும்படி சென்றவாண்டு நடந்த வேளாண் செய்தியொன்றை இங்கு சொல்வதே சிறப்பென்று தோன்றுகிறது. அதற்கு முன்னால் சிவகங்கை மாவட்டத்து இயற்கைச் சூழலையும், ஒரு வரலாற்றைச் செய்தியையும் சொல்லவேண்டும்.

(தொடரும்)

transliteration_raamki23