வஞ்சினமாலை எழுப்பும் சிந்தனைகள் 1/3

தலைப்பு-வஞ்சினமாலை, இராம.கி. -thalaippu_vanjinamaalai

2/3

  இக்கதையை 2 மாற்றங்களோடு நின்றசீர் நெடுமாறன் காலத்தில் திருவிளையாடற் புராணங்கள் பயிலும். (இப்புராணங்கள் அமைப்பிலும் கதைவிவரிப்பிலும் முரண்படும். இராமாயணத்தில் எத்தனையோ வேற்றங்கள் – versions – உண்டல்லவா? அவைபோல இவற்றைக் கொள்ளலாம்.) திருவிளையாடற்புராணங்களில் மடைப்பள்ளி கிணறாகவும், மணம்நடத்திவைத்தது சம்பந்தரென்றும் ஏரணத்தால் முரணாகும். 7 ஆம் நூற்றாண்டில் சம்பந்தர் மணம் நடத்தியிருந்தால் அவரையே புகார்ப்பெண் சான்றாக்கியிருக்கலாமே? சொல்லவில்லையே? சம்பந்தர் ஞானப்பால் குடித்தது 3 வயதிலெனில், அவர் வரலாற்றைப் பார்க்கையில், புறம்பியம் போனது 7/8 வயதெனலாம். அவ்வயதில் மங்கைக்கு அவர் மணம் நடத்திவைத்திருப்பாராவென்பது ஐயமே. அப்படி ஒரு நிகழ்வு நடந்ததெனில், சம்பந்தர்வாழ்வு நிகழ்ச்சிகளையும் பாடல்களையும் தொகுக்கும் சேக்கிழார் ஏனதைச் சொல்லவில்லை? சிலவாண்டு கழித்து 13/14 வயதில் சம்பந்தர் மதுரை வருகிறாரே? வணிகப்பிள்ளை விளையாட்டில் வழக்கு வந்தது பெரும்பாலும் இதே பருவந்தானே? மேலே சிலம்புவரிகளில் இலிங்கச்சான்று சொல்லவில்லையே?

  தவிர, சம்பந்தர் வாழ்க்கையில் அரவுதீண்டிய வணிகனை உயிர்ப்பித்தது நாகையிலிருந்து நன்னிலம் செல்லும்வழியில் திருமருகலில் நடந்ததாகும். மருகலுக்கருகே வைப்பூரில் தாமன் எனும் வணிகனுக்கு 7 பெண்களிருந்தார்கள். மூத்தபெண்ணை மருமகனுக்கு மணமுடிக்க உறுதியளித்த தாமன் அதைச்செய்யாது முறைதவறி வேறொருவருக்குக் கட்டிக்கொடுப்பான். இப்படி அடுத்தடுத்து 5 பெண்களையும் தட்டிக்கழித்து மருமகனிடம் சொல்பிறழ்வான். குடும்பத்தாரும், ஊராரும் இச்செயலுக்கு வருந்துவர். “முறைமாப்பிள்ளையைத் தான் கட்டிக்கொள்வதே நடந்ததவற்றிற்கு ஈடென்று” கடைசிப்பெண் முடிவு செய்து, மாப்பிள்ளையோடு உடன்போக்காகி, திருமருகல் கோயிலுக்கருகில் வந்துதங்குவாள். மாமன்மகன் அரவுதீண்டி இறந்துபோவான். அங்குவந்த ஞானசம்பந்தரிடம் பெண் அழுது புலம்பியதால், அவளுக்காக அவரிறைஞ்சி தேவாரம் இரண்டாம் திருமுறை, 154 ஆம் பதிகத்தைப் பாடுவார்.

 

சடையாயெனுமால் சரண்நீயெனுமால்

விடையாயெனுமால் வெருவாவிழுமால்

மடையார்குவளை மலரும்மருகல்

உடையாய்தகுமோ இவளுள்மெலிவே”. .            

 

என்றுதொடங்கி அப்பதிகம் நடந்ததைத் தெரிவிக்கும். இறைவனருளால் நஞ்சுநீங்கி வணிகன் உயிர்பெறுவான். சம்பந்தரின் முன்முனைப்பில் திருமணம் திருமருகலிலே நடைபெறும். இந்நிகழ்ச்சியின்போது சம்பந்தருக்கு 12 வயதிருக்கும். பெரியபுராணமும் இச்செய்தியைப் பதியும். (ஆனால் திருவிளையாடற்புராணங்கள் பதியாது.) பெரும்பாலும் புறம்பயம், மருகலென்ற இருவூர் நிகழ்ச்சிகளைக் குழம்பிப் புரிந்துகொண்டு திருவிளையாடற்புராணங்கள் சொல்கின்றன என்றே எண்ணவேண்டியிருக்கிறது. சம்பந்தர்வாழ்வில் இருமுறை இந்நிகழ்ச்சி நடைபெறவாய்ப்பில்லை. நடந்தால், சேக்கிழார் பதிந்திருப்பார். சம்பந்தரின் திருப்புறம்பயம் பாட்டிலே கூட இது வெளிப்பட்டிருக்கும். அப்படிப் பதிவாகவில்லை. அடுத்தது மங்கைப்பருவத்தில் ஆற்றுமணலிற் பாவைசெய்து விளையாடிய மங்கை பற்றியது.

 

  1. ………………………………………..- பொன்னிக்

  கரையின் மணற்பாவை நின்கணவ னாமென்று

  உரைசெய்த மாதரொடும் போகாள் – திரைவந்து

  அழியாது சூழ்போக ஆங்குந்தி நின்ற

  (———-           ????       ———-)

  (———-           ????       ———-)

   வரியார் அகலல்குல் மாதர் ………..

  (இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், 2.21 வஞ்சினமாலை 6 – 10)

 

  பொன்னியாற்றின் கரையில் மணற்பாவைசெய்து விளையாடுகையில், “நீ செய்த பாவையே உன்கணவனாவானெ”னத் தோழியர் விளையாட்டாய்ச்சொல்ல, அதை மெய்யெனக் கற்பித்துக் கொண்ட பெண் ஒருத்தி மாலையிற் பெண்களோடு வீடுதிரும்பாமல், ஆற்றின் ஓதத்தில் திரையெழுந்து பாவையழியாது காத்துநின்றாளாம். “ஏதோமாயத்தால் பாவைக்கு உயிர்வரும்” என்ற கற்பனை அவளுக்கிருந்தது போலும். கற்பு, கற்பிதம், கற்பனை போன்ற சொற்களின் தொடர்பும், பொருள்வேற்றுமையும் இங்குபுரிகிறதா? ஏதோவொன்றை மனம் கற்பித்துக்கொண்டால் அதையே பிடித்துத்தொங்குவது மங்கையின் பிடிவாதமோ? இவ்வரிகளின் ஊடே பாட்டில் அழிந்துபோன ஈரடிகளில் என்ன புதுச்செய்தியிருந்ததோ, தெரியாது. ஓலைச்சிதைவு பல செய்திகளைக் குழப்பிவிட்டிருக்கிறது.

  இன்னொன்றையும் இங்கேசொல்லவேண்டும். அல்குலென்பதை இக்காலத்திற் பலரும் தவிர்ப்பதோடன்றித் தப்பாகவும் புரிந்துகொள்கிறோம். பல அகரமுதலிகளிலும் தப்பானபொருள் கொடுத்திருக்கிறார். உடற்கூறியல் தெரிந்தவர் தவறாய்ச் சொல்லமாட்டார். சங்கக்காலத்தில் இதைப்பயில யாரும் தயங்காது, இயல்பாகவே கையாளுவார். மாந்தவுடம்பில் ஒக்கல் (hip) என்றும், இடுப்பு (waist) என்றும் இடங்களுண்டு. இடுப்பிற்கும் வயிற்றுக்கும் கீழே முக்கோணம்போல் ஆனது அல்குலாகும். இதிலிருந்து தான் 2 தொடைகளும் வெளிவந்து நீள்கின்றன. அல்குற் சினை ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது. இதன் முன்பகுதியும், புட்டமெனும் பின்பகுதியும் மேடானவையே. அடுத்தது ஆற்றையொட்டிப்படருங் கதை. அக்காலத்திற் பலருக்குந்தெரிந்த அரச வீட்டுக்கதை. பல அகத்துறைப் பாட்டுக்கள் இதைவிளக்கும். .

  .

  1. …………………………………………-.உரைசான்ற

  மன்னன் கரிகால் வளவன்கள் வஞ்சிக்கோன்

  தன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் – பின்சென்று

  கல்நவில் தோளாயோ என்னக் கடல்வந்து

   (———-           ????       ———-)

  முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக்கொண்டு – தளைதட்டு

  பொன்னங் கோடிபோலப் போதந்தாள்

 (இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், 2.21 வஞ்சினமாலை 10-15)

  கரிகால்வளவன் (இவன் முதலாங் கரிகாலனா, இரண்டாமவனா தெரியாது.) மகளான ஆதிமந்தி, சேரன் ஆட்டனத்தியை விரும்பி மணஞ்செய்து, விழாநாளில் கரிகால்வளவன் முன்னே, ஆற்றுப்புனலில் விளையாடியபோது, வெள்ளம்வருகிறது. அத்தி நீச்சலறிந்தவனா, இல்லையா? தெரியாது. ஆற்றிலடித்துச் செல்லும் ஆட்டனத்தியை விடாது அழைத்தபடி சங்குமுகம் வரைக்கும் ஆதிமந்தி அலைவாள். நெடும்பொழுது கழித்து, “இனி உயிர்பிழையான்” என நம்பிக்கை தளர்ந்து எல்லாரும் முடிவு செய்கையில், ஆதிமந்தியின் நெஞ்சுறுதி ஆட்டனத்தியை முன்னிறுத்திக் காட்டும். மருதியெனும் இன்னொரு பெண்ணுதவியும் இதனூடே சேரும். கற்புள்ள பெண்ணின் அசையாவுறுதிக்கு ஆதிமந்தியைக் காட்டாக்குவது காலகாலமாய்த் தமிழர் பழக்கம்.இங்கே “முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக்கொண்டு” எனும் அடியில் தளைதட்டுகிறது. இதற்குமுன் ஓரடி இருந்திருக்குமோவென ஐயுறுகிறோம்.

  அடுத்தது ஆற்றின் சங்குமுகமொட்டிய வேறொரு கதை. இன்றைக்கும் மீனவரிடையே குறிப்பாகக் காவிரிக்கடற்கரை தொடங்கி தென்பாண்டிபோய், பின் சேரநாட்டிலும் விரிவாகக் கொள்ளப்படும் தொன்மம் பற்றியதாகும். கண்ணகியின் கணவன் ஏற்றுமதி இறக்குமதித் தொழில்புரிந்தவன். உள்நாட்டுவணிகத்திற் பழக்கமில்லாதவன். பரதருக்கும் (விலை பரையும் விற்பனையாளர் பரதர்- merchants.) பரதவருக்கும் (கடலில் பரந்து வலைவீசுகிறவர் பரதவர் – fishermen who spread nets) மிகுந்த நெருக்கமுண்டு.  .

4……………………………………………………….. – மன்னி

  மணல்மலி பூங்கானல் வருகலன்கள் நோக்கிக்

  கணவன் வரக் கல்லுருவம் நீத்தாள் –

(இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், 2.21 வஞ்சினமாலை 15-17)

  கடலில் மீன்பிடிக்கப்போன கலங்கள் திரும்பிவரும்வரை கலத்திற் போனவரின் பெண்மக்கள் கல்லெனச் சமைந்து போவார் என்பர். இந்தத் தொன்மமும் நாட்பட்ட ஒன்றாகும். மலையாளத்தில் தகழி சிவசங்கரன்பிள்ளை எழுதிய பேர்பெற்ற புதினமும் இராமு காரியட்டின் திரைப்படமுமான ”செம்மீனின்” அடிக்கருத்தே இதுதான். அதில் ”பெண்ணாளே பெண்ணாளே கரிமீன் கண்ணாளே கண்ணாளே” என்று தொடங்கும் பாட்டில், 2 ஆம் தாழிசையில் இப்படி வரும்.

பண்டொரு முக்குவன் முத்தினு போயி

படிஞாறன் காற்றத்து முங்கிப் போயி

அரையத்தி பெண்ணு தபசிருந்நு.

அவனைக் கடலம்ம கொண்டுவந்நு

அரையன் தோணியில் போயாலெ,

அவனு காவலு நீயாணே

 

പണ്ടൊരു മുക്കുവന്‍ മുത്തിന് പോയി

പടിഞ്ഞാറന്‍ കാറ്റത്ത് മുങ്ങിപ്പോയി

അരയത്തിപ്പെണ്ണ് തപസ്സിരുന്ന്(2)

അവനെ കടലമ്മ കൊണ്ടുവന്ന്(2)

അരയന്‍ തോണിയില്‍ പോയാലെ

അവന് കാവല് നീയാണേ

  இந்தத் தவமிருத்தல்தான் கல்லாய்ச் சமைந்திருத்தலாகும். சிலப்பதிகாரத் தொன்மம் இன்றுவரை வழக்கிலுள்ளது வியப்பல்லவா? 3 ஆம் தாழிசை இதன் எதிர்நிலையைச் சொல்லும்.

பண்டொரு முக்குவன் முத்தினு போயி

படிஞாறன் காற்றத்து முங்கிப் போயி

அரையத்தி பெண்ணு பெழச்சிப் போயி.

அவனைக் கடலம்ம கொண்டு போயி

கணவன் தோணியில் போயாலு,

கரையில் காவலு நீவேணம்


പണ്ടൊരു മുക്കുവന്‍ മുത്തിന് പോയി

പടിഞ്ഞാറന്‍ കാറ്റത്ത്‌ മുങ്ങിപ്പോയി

അരയത്തിപ്പെണ്ണ് പെഴച്ചു പോയി

അവനെ കടലമ്മ കൊണ്ടുപോയി

കണവന്‍ തോണിയില്‍ പോയാല്

കരയില്‍ കാവല് നീ വേണം

 

(தொடரும்)

இராம.கி.

(வஞ்சினமாலை எழுப்பும் சிந்தனைகள் 3/3)

transliteration_raamki22

முத்திரை-வளவு :muthirai_valavu