குமுக வளர்ச்சி 2 – முனைவர் இராம.கி.
முனைவர் இராம.கி.
குமிந்துகூடிச் சேர்ந்துவாழும் மக்கள்கூட்டத்தையே குமுகமென்று சொல்கிறோம். குமுகமென்பதை வடமொழி உச்சரிப்போடு சமூகமென்று சொல்லியே நாமெல்லாம் பழகிவிட்டோம். ஆங்கிலத்தில் இதை society என்பார். “People bound by neighborhood and intercourse aware of living together in an ordered community” ஆகக் குமுகமென்பது வெறுங் கும்பலல்ல. பல்வேறு வகைப்பட்ட மக்கள் ஓரிடத்திற் சேர்ந்து குடியிருந்து, கட்டொழுங்கோடு வாழும் அமைப்பாகி, ஒருவருக்கொருவர் இணங்கி, எல்லோருக்கும் நலனும் வளர்ச்சியும் ஏற்படும்வகையில் உறவாடிக் கொள்வதே குமுகமாகும். இக் குமுக உறுப்பினருக்குத் தனிப்பொறுப்புகளும், குடும்பப் பொறுப்புகளும், குழுப்பொறுப்புகளும் இருப்பது போலவே குமுகப் பொறுப்புகளும் உண்டு.
நம் ஊர்கள் பாலைத்திணையைச் சேர்ந்தவை. (உங்களுக்குத் தெற்கே கண்டனூருக்கு வடக்கேயுள்ளது பாலையப்பட்டியாகும்.) ஏதோ சவுதி அரேபியாபோல் எங்கு பார்க்கினும் மணலும், மணல்சார்ந்த விளையுளும் இருப்பதே பாலையென்று எண்ணிவிடக்கூடாது. பாலை நிலத்திற்கு சிலம்பின் ஆசிரியர் ஒரு வரையறை சொல்வார்.
முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்த்ப்
பாலை என்பதோர் வடிவம் கொள்ளும்
– சிலப்பதிகாரம் 11: 60-7
பாலை என்பது முல்லைநிலமும் குறிஞ்சிநிலமும் தம் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்கவைக்கும் துயருறுத்துவதாய் வடிவங்கொள்ளும். அதற்குப் பெயரே பாலையாகும். அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்து நிலங்களெல்லாம் முல்லை நிலங்களே. காடும் காடுசார்ந்த நிலமும் முல்லையென்பர். மழைவாராது வெந்துபோனால் இம்முல்லைநிலங்கள் பாலையாகும். எங்கள் வையைக்காடுபற்றிச் சொன்ன காரணம் இப்பொழுது புரிகிறதா? உங்கள் ஊரிலும் அப்படியோர் காடு உறுதியாய் இருந்திருக்கும். அது எங்கே போனதென்று ஓர்ந்துபார்த்தீர்களா?
நான் சொல்லப்போகும் பழஞ்செய்தியை எத்தனை இளையர் அறிவரென்று தெரியவில்லை. 1954 இல் பெரும்புயலொன்று தமிழ்நாட்டைத் தாக்கியது. பழைய இராமநாதபுரஞ் சேர்ந்த பல மாவட்டங்களையும் அது சேதப்படுத்தியது. கண்மாய்கள், வயல்கள், நிலபுலன்கள், சாலைகள், வரப்புகள், வீடுகள், மரங்கள் எனவேற்பட்ட சேதம் கணக்கற்றது. அப் புயலுக்கப்புறம் ஓரிரண்டு ஆண்டுகள் கோடை வாட்டிவறுத்தி, நிலம் முற்றிலும் வரண்டுபோனது. நீர்வளங் குறைந்ததால் நிலத்தடிநீரை எப்படி மேலே கொண்டுவருவதென அரசியலாரும் அரசதிகாரிகளும் எண்ணினர். அன்றிருந்த முதலமைச்சர் காமராசருக்கு யாரோ தவறான கருத்துகளை அவக்கரத்திற் சொல்லியிருக்கிறார். மேற்கு ஆசுத்திரேலியாவிலிருந்து (இ)யூலிஃப்ளோரா கன்றுகளையும் (இ)யூகலிப்டசு கன்றுகளையும் கொண்டுவந்து இங்குநட்டால் அவை மரமாய்வளர்ந்து நிலத்தடிநீரை மேலே கொண்டுவந்துவிடுமெனச் சொல்லியிருக்கிறார். ”படித்த அறிவாளிகள் சொல்கிறார்கள்; உண்மையாய்த்தானிருக்கும்; செய்துபார்ப்போமே?” என்று படிக்காதமேதையும் நம்பினார். விளைந்தது நாட்பட்ட ”விபரீதம்”. இந்தியாவெங்கும் இரு மரங்களும் ”அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த மூர்த்தியாகிப்” பரவி வேறெந்த மரங்களையும் வளரவிடாது விரவிக் கிடக்கின்றன. நம் இயற்கை வளத்தை ஒட்டுமொத்தமாய் அழித்ததில் இவ்விரு மரங்களுக்கும் பெரும்பங்குண்டு. (நம்மூர்க் கருவேலத்திற்கு மாறுபட்டு, சீமைக்கருவேலம், வேலிக்கருவை, வேலிகாத்தான் என்றெல்லாம் அழைக்கப்படும் இம்மரத்தின் ஆங்கிலப்பெயர்கேட்டு மயங்கிவிடுவோம். (இ)யூலிஃப்ளோரா.)
என்னவொரு கொடுமை தெரியுமோ? இம்மரத்தின் வேர் நிலத்தடிநீரை உறிஞ்சும்; ஆனால் தனக்கு மட்டுமே உறிஞ்சும். இம்மரம் விளையுமிடத்தில் வேறொன்றையும் வளரவிடாது. அதே போலத்தான் (இ)யூகலிப்டசு மரமும். (நம் பக்கம் இதை ஆர்.எசு.பதி மரம் என்பார்). நம்மூரின் இயல்மரங்களான அரசு, அழிஞ்சில், ஆச்சா, ஆத்தி, ஆல், இலந்தை, இலவு, இலுப்பை, ஏழிலைப்பாலை, ஒதியம், கருங்காலி, கல்யாணமுருக்கு, கொன்றை, கோங்கு, சந்தனம், சீதா, செஞ்சந்தனம், தில்லை, தேக்கு, தேற்றான்கொட்டை, நாவல், நுணா, நெல்லி, நொச்சி, பவளமல்லி, பாதிரி, புங்கம், புளி, புன்னை, பூவரசு, மகிழம், மரா, முள்முருக்கு, வன்னி, வாகை, வில்வம், வெள்நாகு, வேங்கை போன்ற எத்தனையோ மரங்கள் அருகிவிட்டன இல்லெனில் அழிந்துவிட்டன. நம் சிறாரும் இவற்றைப் பார்த்ததுமில்லை; அறிந்ததுமில்லை. நம் இயற்கை தெரியாமல் வளர்கிறார். அவருக்குப் பள்ளிக்கூடத்தில் பைன், செடார் என்று ஏதேதோ வேற்றுநாட்டு மரங்களைப் பற்றிச் சொல்லிக்கொடுக்கிறோம். இங்கோ எங்குபார்த்தாலும் வேலிக்கருவையும், (இ)யூகலிப்டசும் நீக்கமற நிறைந்து கிடக்கின்றன. நாட்டின் அழகைச் சிதைப்பது மட்டுமல்லாது நம் இயற்கை வளங்களும் இவற்றால் அழிகின்றன.
இதேநிலை இனியுந் தொடர்ந்தால், நம் நாடு நிலத்தடி நீர்வளத்தை வெகுசீக்கிரம் இழக்கும்.
முல்லையும் மருதமும் முறைமையில் திரிந்து
சரளையும் மேடும் மணலொடு புணர்ந்து
வேலிக் கருவை கோரைப் புல்லோடுப்
போலிகை நிலமாய் புறத்தினிற் காட்டி
எங்கு பார்த்தாலும் மணல் பாய்ந்துகிடக்கும் மேற்கு ஆசுத்திரேலியா போல நம் நாடு ஆகும் நிலை வெகுதொலைவிலில்லை.
(தொடரும்)
Leave a Reply