முனைவர் எல்.கைலாசம்

கைலாசத்தின் சிந்து இளவரசி – முன்னுரை

 

 முனைவர் கைலாசம் ‘சிந்து இளவரசி’ என்ற அதிஅற்புதமான சிறிய  வரலாற்றுப் புதினத்தில் பாண்டிய நாட்டையும். சிந்துப் பேரரசையும் இணைத்துஅவற்றிலிருக்கும் ஒற்றுமைகளை அருமையாக குறிப்பிட்டுள்ளார்.

  இந்தப் புதினத்தில் குறிப்பிட்டவை ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு எழுதப்பட்டிருக்கிறது என்பதிலும், அவை தொல்பொருள் ஆராய்ச்சிக்கு உதவும்என்பதிலும் எந்த  ஐயமும் இல்லை.

 ‘திராவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே’ என்ற கருத்தினைத் தெரிவித்தவர்கள் தேவநேயப் பாவாணரும் மற்ற மதிப்புக்குரிய தமிழறிஞர்களும். அவர்கள் சொன்னது உண்மையாகவே இருக்க வேண்டும். இந்தக் கருத்தினை மனத்தில் கொண்டு முனைவர் கைலாசம் ‘சிந்து இளவரசி’யைத் தீட்டியுள்ளார்.

  மிகச் செழுமையுடனும், வலிமையுடனும் இருந்த பாண்டிய நாட்டிலிருந்து   இளைஞன் ஒருவன் தொல்பொருள் ஆராய்ச்சிக்காக இன்றைய பாக்கித்தானில் இருக்கும் மொகஞ்சோதராவிற்குச் செல்கிறான். பாண்டியநாட்டு அரசர் அவனுக்கு தாமிரபரணியிலிருது எடுக்கப்பட்ட ஈமத்தாழியில் இருந்த இறந்தவனைப்பற்றித் தெரிந்துகொண்டு வரச் சொல்கிறார். சிந்துநதிக்கரைக்குச் செல்லும் தீரனின் துணிவுகளைச் சொல்லும் புதினமே சிந்து இளவரசி.

 முனைவர் கைலாசத்துக்கு நான் அன்று குற்றவியலைச் சொல்லி கொடுத்ததன் முழுப்பலனை இன்று என்னால் உணர முடிகிறது. அவர் தனது ஒவ்வொரு வரலாற்றுப்ப்புதினத்திலும் ‘குற்றவியல்’அல்லது ‘பாதிக்கப்பட்டோரியலின்’நுணுக்கத்தைப் படிப்பவர் மனதில் பதியும்படி செய்கிறார்.

 இந்தப் புதினத்திலும் குற்றவியலின் அடிப்படையாக, கொள்கையான ‘குற்ற எண்ணம்இல்லாத செயல் குற்றமாகாது’ என்பதைச் சொல்லித் தருகிறார் சிறந்த புதினஆசிரியராக.

   ‘சிந்து இளவரசி’, முனைவர் கைலாசத்தின் பத்தாவது வரலாற்றுப் புதினம் என்று நினைக்கிறேன். அவரின் முதல் புதினமான ‘மலர்ச்சோலை மங்கை’யிலிருந்து சென்றவருடம் வெளியாகி மிகுந்த புகழ் பெற்ற அவரின் ‘இராசாளி’வரை அவரது எல்லாப்புதினங்களும் வெற்றி பெற்றிருக்கின்றன.

  வரலாற்றுப் புதினத்தின் நட்சத்திர எழுத்தரசனான முனைவர் எல். கைலாசத்தின் ‘சிந்துஇளவரசி’ மிகப் பெரிய வெற்றி பெற அவர் வணங்கும் தெய்வமும், வாசகர்களும் துணை புரியட்டும்.

  

 

பேரா.முனைவர் மாதவ சோமசுந்தரம்

இயக்குநர், திட்டம்-மேம்பாட்டு மையம்,

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

திருநெல்வேலி