கொள்ளை போகும் வக்பு வாரிய நிலங்கள்

மீட்டெடுக்கப் பல்வேறு அமைப்புகள் போராட்டம்

  உலகிலேயே அதிகமாக வக்பு சொத்துகள் உள்ள நாடுகளில் இந்தியாதான் முதலிடம் வகிக்கிறது. அதே வேளையில் ஊழலிலும் முதலிடம் வகிப்பது இந்தியாதான்.

 வக்பு என்ற அரபிச் சொல்லுக்கு அருப்பணித்தல் என்று பொருளாகும். இந்தியாவை ஆண்ட சுல்தான்களால்   இம்முறை உண்டாக்கப்பட்டு முறையாகப் பேணப்பட்டு வந்தது. இந்தியாவில் கட்டப்பட்ட பள்ளிவாசல்களைப்   பேணவும் முசுலிம்களின் அடக்க மனைகளை உருவாக்கிடவும், ஈத்கா மைதானம்(வருடத்திற்கு ஒருமுறை தொழுகும் இடம்) உருவாக்கிடவும் ஏழை எளிய மக்கள் பயன்படுத்திட ஆதரவற்றோர் காப்பகம் மற்றும் மதரசாக்கள் தொடங்கி நடத்திடவும் சுல்தான்களாலும், முகலாய மன்னர்களாலும், இராசபுத்திர மன்னர்களாலும், திப்புசுல்தான், சேதுபதி மன்னர்கள், பாளையக்காரர்கள், செல்வந்தர்கள் என அனைத்துத் தரப்பினராலும்   பாகுபாடின்றி நன்கொடையாகக் குளம், கண்மாய், நன்செய் நிலங்கள் முதலானவை கொடுக்கப்பட்டன.

  இந்தச் சொத்துக்களை முறையாகப் பேண முத்தவல்லிகள் என்ற மேற்பார்வையாளர்கள் தில்லியை ஆண்ட சுல்தான்களால் நியமிக்கப்பட்டனர். முத்தவல்லி என்பது மேலாளர் என்று பொருள்படும். பண்டைய காலத்தில் முத்தவல்லிகள் ஊழலில் ஈடுபட்டு தண்டனையும் பெற்றிருக்கிறார்கள். சுல்தான் அலாவுதீன் கில்சி ஆண்ட 12 ஆம் நூற்றாண்டில் முத்தவல்லிகள் பலர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முகலாய மன்னர் அக்பர் ஆண்ட 16 ஆம் நூற்றாண்டில் சேக் உசேன் என்ற முத்தவல்லி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன் பின்னர் 1857 ஆம் ஆண்டு வெள்ளையர்கள் ஆட்சிக்கு வந்த பின்பு வக்பு சொத்துகளுக்கு கடுமையான வரிவிதிப்பு விதிக்கப்பட்டது. இதனால் பல செல்வந்தர்கள் தங்களது சொத்துகளைப் பாதுகாக்க ஆங்கில அரசு ஒப்புதலுடன் வக்பு-அல்-அவுலாத் என்ற வழித்தோன்றல்கள் குறிப்பிட்ட பெயருக்குச் சொத்துகளை ஒப்படைத்தனர்.

  1906 ஆம் ஆண்டு அகில இந்திய முசுலிம் லீக்கின் உருவாக்கத்திற்குப் பிறகு வக்பு சொத்துக்களைக் காப்பாற்ற முசுலிம்கள், முசுலிம் லீக்கிலும் காங்கிரசிலும் தஞ்சமடைந்தனர். அதன் பின்னர் இந்தியா, பாகித்தான் என நாடு பிரிக்கப்பட்டபோது வக்பு சொத்துகள் சூறையாடப்பட்டன.  இதனால் 800 ஆண்டு காலத் தொன்மையான சொத்துகள் சூறையாடப்பட்டன. அதன் பின்னர் 1954 ஆம் ஆண்டு மத்திய வக்பு வாரியம் தொடங்கப்பட்டது. ஆனாலும் வக்பு சொத்துகளைப் பாதுகாக்கமுடியவில்லை.

அரசின் ஆக்கிரமிப்பில் வக்பு சொத்துகள்

  மத்திய அரசு, தில்லி மேம்பாட்டு அதிகாரமுகமை, தொல்பொருள் ஆய்வு நிறுவனம், அரியனா நகர மேம்பாட்டு ஆணையம் என அரசின் நிறுவனங்கள் முக்கால்வாசி வக்பு சொத்துக்களை முறைகேடாகக் கவர்நதன. இதனைக் கருத்தில் கொண்டு தில்லி வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் வி.சி. இராசுபிராச்சார அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டார். தில்லியில் பதிவு செய்யப்பட்ட பல சொத்துகள் பறிக்கப்பட்டன(ஆக்கிரமிக்கப்பட்டன) என்றும் தில்லி குழிப்பந்தாட்ட மன்றம், சவகர்லால் நேரு விளையாட்டு அரங்கம், மத்தியப் புலனாய்வு அமைப்பின் தலைமை அலுவலகம், ஓபராய் நட்சத்திர உறைவகம் முதலானவற்றின் பிடியில் சொத்துகள் உள்ளதாகவும் தெரிவித்தார். இதே போல மும்பையில் பொது மக்கள் நெருங்கமுடியாத இடமாக உள்ள ஆல்டா மலைப் பகுதியில் 4,532 சதுரஅடி நிலத்தை உரூபாய் 16 இலட்சத்திற்கு முகேசு அம்பானிக்கு மகாராட்டிரா வக்பு வாரியம் விற்பனை செய்துள்ளது.

  அதே போல பரீதாபாத்தில் 5 காணி நிலத்தை மாதம் வெறும் 500 உரூபாய்க்குப் பல ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்து அதில் தொழிற்சாலையும் உருவாக்கியுள்ளார்கள்.

  பெங்களுரில் வின்ட்சர் மானர் என்ற நட்சத்திர விடுதிக்கு 500 கோடி மதிப்புள்ள 5 காணி நிலத்தை  மிகவும் குறைந்த அளவிற்கு – மாதம் 12 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு விட்டுள்ளனர்.

 நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரியில் உள்ள நவாப் சாமிஆ பள்ளிவாசல் 1862 ஆம் ஆண்டு அன்றைய நவாபுகளால் கட்டப்பட்டது. நவாபுசாமி பள்ளிவாசலுக்கு வருமானத்திற்காகத் திட்டச்சேரியைச் சேர்ந்த வணிகர்கள், செல்வந்தர்கள் பலகோடி மதிப்புள்ள நிலங்களையும், கட்டடங்களையும் நல்கையாகவும், கொடையாகவும் கொடுத்துள்ளனர். இதனைப் பேணுவதற்காக 1923 ஆம் ஆண்டு திட்டச்சேரி முசுலிம் ஊர் உறவின்முறை வக்பு நிருவாக சபை அமைத்துள்ளார்கள். அதற்கு முன்பே நடுத்தெருவில் 1908 ஆம் ஆண்டு உம்மத்தியா சங்கம் என்றும் தொடங்கப்பட்டுள்ளது. திட்டச்சேரி சமாஅத்திற்குச் சொந்தமான நிலங்கள் குத்தாலம், மரைக்கான்சாவடி, ப.கொந்தகை, புறா கிராமம் முதலான பகுதிகளில் பலகோடி மதிப்புகளில் உள்ளன.

  மரக்கான் சாவடி என்ற இடத்தில் ஆர்டிஎசு என்ற ரெடிமிக்சு நிறுவனத்திற்குப் பலகோடி மதிப்புள்ள வக்பு வாரிய சொத்தை தாரை வார்த்துவிட்டாரகள். இதன் தொடர்பாகத் திட்டச்சேரியைச்சேர்ந்த சபியுதீன் என்பவர் கூறுகையில்,   “மரக்கான்சாவடியில் உள்ள பல இலட்சம் மதிப்புள்ள சொத்தை வெறும் உரூ.15,000 க்கு நீண்ட கால ஒப்பந்தத்திற்குத் தாரை வார்த்துவிட்டார்கள். இதே போல பல சொத்துகளைத் தனியர்கள் பறித்து உள்ளனர். இதே நிலைமைதான் தமிழகம் முழுவதும்.” என்றார்.

  இதற்காகப் பல அமைப்புகள் போராடி வருகின்றன. அரசு மட்டும் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டும் போதாது. ஊர்மக்களும் போராடி இழந்த வக்பு சொத்துக்களை மீட்கவேண்டும். இல்லையெனில் வருங்காலத் தலைமுறையினருக்கு வக்பு என்ற பெயர்மட்டும்தான் தெரிந்து இருக்கும்.

71vaigainaneesu