(சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 4 இன் தொடர்ச்சி)

சங்கக்காலச் சான்றோர்கள் 5

கபிலர் – தொடர்ச்சி

மீகானற்ற மரக்கலமும்-பால் நிலவற்ற காரிருள் வானமும்-உயிரற்ற உடலும் ஆயிற்று வேள் பாரியின் விழுமிய நாடு. விண்ணும் மண்ணும் அழுதன. ஆரமும் வேங்கையும், அணிநெடுங்குன்றும், கறங்கு வெள்ளருவியும் அழுதன. மானும் மயிலும், ஆவும் கன்றும் கதறிக் கலங்கின. புள்ளும் மாவும், முல்லையும் முழுநிலவும் புலம் பித் தேம்பின. இந்நிலையில் வள்ளல் பாரியின் மக்களும் அவன் ஆருயிர்த் தோழர் கபிலரும் அழாமல் இருப்பரோ! பேச்சின்றி மூச்செறிந்து பொருமி அழுதன பிற உயிர்களெல்லாம். வாய் திறந்து, நெஞ்செரிந்து கதறி யாற்றினர் புலவர் கோவும் பொற்றொடி மங்கையரும். அஞ்சா நெஞ்சம் படைத்த புலவர் பெருமானும் அரிவை நல்லாரும் பச்சிளங்குழந்தைகள் போலப் பதைபதைத்து அழுதனர். ஒப்பற்ற தந்தையாரின் அருகா அன்பில் வாழ்நாள் முழுதும் ஆடித் திளேத்து மகிழ்ந்திருந்த அந்த இளநங்கையர் இப்போது இதயம் துடித்து விம்மி விம்மி அழுதனர்.

மூவேந்தரும்முற்றுகையிட்டிருந்த அற்றைத் திங்களில் அவ்வெள்ளிய நிலாவின் கண் எம்முடைத் தந்தையும் உடையேம்; எம் குன்றையும் பிறர் கொள்ள வில்லை. ஆனால், ஐயோ! இற்றைத் திங்களில் இவ்வெள்ளிய நிலவின்கண் வென்றறைந்த முரசினையுடைய வேந்தர் எம்மலையும் கொண்டார்; எம் தந்தையையும் இழந்தோம் !’ எனும் வேதனை மிக்க கருத்தமைந்த

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்

எத்தையும் உடையேமெங் குன்றும் பிறர்கொளார்;

இற்றைத் திங்க ளிவ்வெண் ணிலவின்

வென்றெறி முரசின் வேந்தரெம்

குன்றும் கொண்டார்;யாம் எந்தையும் இலமே!’

(புறம், 119) என்ற பாடலைக் கூறி மண்ணாண்ட வேள் பாரி முழுமதி யாகி வஞ்சகர் வாழாத விண்ணாளச் சென்றான் போலக் கார் வானத்து வெளிக்கிளம்பிய வெண்ணிலாவைக் கண்டதும் கண்பொத்திக் கதறியழுதனர் அக்கோமான் செல்வியர்.

கபிலர் பெருமானாரது நிலையைச் சொல்லவும் வேண்டுமோ! ஆடி விழும் அருவியிலும் அண்ணல் பாரியின் அழகுச் சாயலைப் பார்த்தவர் அவர்; மாவண் பாரிக்குத் தம் மனத்தையே அரண்மனையாக்கிக் கொடுத்தவர்; தாமுறையும் கோயிலாகப் பாரியின் நெஞ்சு இருப்பது கண்டு பெருமையும் பூரிப்பும் கொண்டவர். அண்ணல் பாரியின் புகழ் நினையாத நாளே அவர் வாழ்நாள் கண்டதில்லை. விண்ணும் மண்ணும், காடும் மலையும், அருவியும் சுனையும் எல்லாம் தம் ஆருயிர்த் தலைவன் பாரியின் புகழாகவே அவர் கண்கட்கு விளங்கின. அத்தகு காட்சியில் தோய்ந்திருந்த கபிலர் பெருமானார், உணர்வு வெள்ளம் நுரையிட்டுப் பாய, எத்தனை அருமையான கவிதைகளை அவன் புகழ் தெரித்துப் பாடினர்! ஆம் ! கால வெள்ளத்தில் கரைந்தோடியது போக, எஞ்சியுள்ள பாடல்களிலேயே ‘இருநிலம் பிளக்க வீழ்க்கும்’ வேரனைய அவர்களுடைய நட்பு எத்துணை அழகுடையதாய் இருந்தது என்பது புலனாகின்றதன்றோ! வையகம் உள்ளவரை பாரியின் புகழ் அழியா வண்ணம் கபிலர் பாடி யுள்ள பாடல்கள் எத்துணைச் சிறப்பின! கலையிலும் கருணையிலும் கொடையிலும் குணத்திலும் சிறந்தவனல்லனோ பாரி! அவன்பால் சென்ற பாணரும் விறலியரும் பெறாத பொன்னும் பொருளும் உண்டோ? வழியிற்கண்ட விறலியை,

சேயிழை பெறுகுவை வாணுதல் விறலி!

…    …     …   

பாரி வேள்பாற் பாடினை செலினே.’ (புறம். 105)

என்று செந்தமிழ்ப் புலவர் ஆற்றுப்படுத்தும் அளவிற்கு அவன் கொடை வளம் சிறந்திருந்தது. அத்தேர் வீசு இருக்கை நெடியோன், பரிசிலர் இரப்பின், ‘தாரேன்’ என்னாது, அவர்க்குத் தன்னையும் அளிக்கும் தகைமையனாய் விளங்கினான். அம்மட்டோ! அழுக்காறு படைத்த இகல் வேந்த ர்க்கு அவன் இன்னான் ஆயினும், இரவலர்க்கு எஞ்ஞான்றும் இனியனாய் விளங்கினான் எனவும், வீரத்தில் எவருக்கும் இளைக்காத அவ்வேளிர் குலத் தலைவன் உயிர் குடிக்கத் தேடிவரும் வேலுக்கு அரியன் ஆயினும், உயிர் உருகப் பாடி வரும் கிணை மகளின் கலை விழிகட்கு என்றும் எளியன் எனவும் அன்றோ கபிலர் ‘பெருமானார் போற்றிப் புகழ்கின்றார்? இரவலர்க்கு ‘இல்லை’ என்னாது ஈயும் அத்தகைய வள்ளியோன் இறந்துபடக் கபிலர் இதயம் பொறுக்குமோ? கைவண் பாரி, மாவண்பாரி, தேர்வண்பாரி, நெடுமாப்பாரி என்றெல்லாம் பொய்யா நாவினராகிய அவர் போற்றிப் புகழ்ந்த பறம்பின் கோமான் பொன்னுடலம் மூச்சின்றிப் பேச்சற்று வீழ்ந்து கிடக்க ஒருப்படுவரோ? ‘பாரியின் புகழ்க்கு உலகின் கண்ணேறு வருமோ!’ என அஞ்சியவர் போல, “பாரி பாரி  எனப்பல ஏத்தி, ஒருவர்ப் புகழ்வர் செந்நாப்புலவர்; உலகீர், பாரி ஒருவனும் அல்லன் ; மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பது, எனக் கூறிக் கண்ணேறு கழித்த பெருமானார், இன்று அக்கருணை மாரி வறங்கூர்ந்து போக இசைவரோ?

(தொடரும்)

முனைவர் . சஞ்சீவி

சங்கக்காலச் சான்றோர்கள்