சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் – செ.வை. சண்முகம்
மையக்கருத்துரை
- முன்னுரை
சங்க இலக்கியத்தில் சூழ் என்ற வினை சூழ்ந்திருத்தல் (surrounding), படர்தல் (spreading), ஆராய்தல் (deliberation), கருதுதல் (intention), ஆலோசித்தல் (consultation) என்று ஒருசொல்பலபொருளாகப் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளது (அகநானூறு , பார்க்க, சுப்பிரமணியன் 1972 ) . சூழல் என்ற தொழில்பெயர் பரிபாடலில் (‘புடை வரு சூழல்’ 19. 20 ௦) பயின்றுள்ளது. ‘சுற்றமாச் சூழ்ந்துவிடும்’ ( 475) என்பது திருக்குறள் வழக்கு. இங்குச் சூழ்ந்திருத்தல் என்ற பொருளே பொருந்தும். அது பல பொருள் ஒரு சொல்லாக இருப்பதால், சுற்றுச்சூழல் என்று புதிதாக ஒரு தொடர் இந்த நூற்றாண்டில் உண்டாக்கப்பட்டுள்ளது.
மனித வாழ்வு பிறரையும் பிற பொருள்களையும் சூழ்ந்த வாழ்வாக அமைந்துள்ளது என்பது ஒரு உண்மை. அந்தச் சூழலை இரண்டு பெரும் பிரிவாகப் பகுக்கலாம்:1. குடும்பச் சூழல், சமூகச் சூழல், நாட்டுச் சூழல், வரலாற்றுச் சூழல், அரசியல் -பண்பாட்டுச் சூழல் என்றவைகளும் மனித வாழ்வைப் பாதிக்கும். 2. இயற்கைச் சூழல் – கடல், மலை, காடு, ஆகியவை சிலருக்கு நேரடியாக அதாவது விருப்பக் கூறுகளாக அமைய; நிலம், நீர் ஆகிய இரண்டும் எல்லோருக்கு உரிய அடிப்படைக் கூறுகளாக அமையும். மேலும் நிலத்தோடு தொடர்புடையது மரம், செடி கொடி, விலங்கு, பறவை முதலியனவும் அடிப்படைக் கூறுகளே. அவை எப்படியெல்லாம் மனித வாழ்வுக்கு உதவுகின்றன, மனித வாழ்வைப் பாதிக்கின்றன என்ற புதிய ஆய்வுத் துறையே சுற்றுச்சூழலியல் (Ecology) என்று அழைக்கப்படுகிறது.
ஆனாலும் மனித வாழ்வு தொடக்கக் காலத்திலிருந்தே சுற்றுச் சூழலின் இன்றியமையாமையை உணர்ந்துள்ளதை இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. திருவள்ளுவர் நீரின் முக்கியத்துவத்தை வற்புறுத்தும் வகையாகக் ‘கடவுள் வாழ்த்து’க்குப் பின்னர் இரண்டாவது அதிகாரமாக ‘வான்சிறப்பு’ என்பதை வைத்துள்ளதோடு மனிதன், சக மனிதர்களோடு சேர்ந்து வாழ்வதோடு, பிறருக்கு உதவி செய்தும் வாழ வேண்டும் என்பதற்கு ‘ஒப்புரவு அறிதல்’ என்ற அதிகாரம் அமைத்து, அதில் ‘ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்’ (214) என்று கூறியது ஒத்த மனிதனுக்கு மட்டும் அல்லாமல் உயிரினங்கள், இயற்கைக் சூழல் பொருளுக்கும் பொருந்தும். அதனால் அந்த அதிகாரத்தில் மனிதனுக்கு, மரத்தின் பற்றி ‘பயன் மரம் உள்ளூர் பழுத்தற்றால்’ ( ஊரின் நடுவே மரம் பழுத்து பயன் தருவது போல், 216), என்றும், ‘மருந்தாகித் தப்பா மரத்தற்றால்’ (மருந்தாய் உதவும் மரங்கள் போல, 217) என்றும் இரண்டு பலனை உவமையாகக் கையாண்டுள்ளார். விலங்கினங்களையும் பறவைகளையும் உவமையாகப் பயன்படுத்தியுள்ளார்.
2. சுற்றுச் சூழல் திறனாய்வு
இருபதாம் நூற்றாண்டில் தொழில் நுட்ப காரணமாக உலகம் மாசு அடைவது வருங்காலத்துக்குப் பெரிய தீமை உண்டாக்கும் என்று கவலைப்பட்டு மலை, கடல், காடு ஆகியவை காப்பாற்றவும், தட்ப வெப்ப மாறுபாடுகளைத் தடுக்கவும் உலகளாவிய நிலையில் இயக்கம் ஏற்பட்டுச் சுற்றுச் சூழலியல் ஆய்வு என்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அறிவார்ந்த சுற்றுச்சூழல் கல்வி, இலக்கியப் பகுப்பாய்வுக்கு இடம் அளிப்பதால் , அது இலக்கியத் தளத்திலும் எதிரொலித்து சுற்றுச் சூழல் திறனாய்வு (Eco criticism) அல்லது பசுமைத் திறனாய்வு (Green criticism) என்று பெயரிட்டு ஆராயப்படுகிறது. அது,இலக்கியத்தில் உள்ள இயற்கையை ஆராயாமல், இயற்கை சார்ந்த உலகப் பார்வைளை விளக்கும். அதாவது இயற்கை சார்ந்த கோட்பாடுகளைப் பயன்படுத்துவது ஆகும். மேலை நாட்டில் சுற்றுச் சூழல் திறனாய்வைச் செரியல் கிளோட் ஃபெல்டி என்பார்ஆராய்ந்துள்ளதாகப் பஞ்சாங்கமும் (2013) , வையாபுரியும் (2014) குறிப்பிட்டு, அவருடைய கருத்துகளாகச் சிலவற்றைக் கொடுத்துள்ளார்களே தவிர, மூல நூலைக் குறிப்பிட வில்லை. மேலும் பஞ்சாங்கம் ‘தமிழில் தொல்காப்பியம், சங்க இலக்கியம் ஆகியவற்றில் அமைந்துள்ள முதற்பொருள், கருப்பொருள் சிந்தனைகள் இன்றைய சுற்றுச் சூழல் திறனாய்விற்குப் பெரிதும் பயன்படலாம்’ (மேலது.ப. 849) என்றும் குறிப்பிட்டுள்ளார். விசயராணியின் (2014 ) ‘சூழலியல் நோக்கில் ஐங்குறுறூறு’ என்ற கட்டுரையும் குறிப்பிடத்தகுந்தது.
பஞ்சாங்கம் ( மேலது. ப.849) சுற்றுச்சூழல் இலக்கிய திறனாய்வு தொடர்பான சில கருத்துகளைத் தொகுத்துக் கொடுத்துள்ளது அறியத் தகுந்தது.
1. ‘இலக்கியம்எவ்வாறு இயற்கையை ஓர் அழகியல்பண்டமாகப் புனைந்து வந்துள்ளது என்கிற வரலாற்றை எடுத்துரைப்பதன் மூலம் விழிப்புணர்வை மேற்கொள்ளத் தூண்டுகிறது. எவ்வாறு பெண்ணியம் பாலின அணுகுமுறை மூலம் இந்த உலகத்தைப் புரிய முயலுகிறதோ அதுபோல, இத்திறனாய்வு, பூமியின்இயற்கைச் சூழலின் நிலைப்பாட்டிலிருந்து இலக்கியத்தையும் பண்பாட்டையும் புரிந்துகொள்ள முயலுகிறது’ என்பார். அதாவது முன்னது இலக்கியத்திலிருந்து சுற்றுச் சூழலையும் பின்னது சுற்றுச் சூழலிருந்து இலக்கியத்தையும் பண்பாட்டையும் புரிந்துகொள்ள உதவுவது ஆகும். மேலும் சுற்றுச் சூழல் திறனாய்வாளர்கள் எழுப்பும் வினாக்களை அவர் தொகுத்து கொடுத்துள்ளார். அவற்றுள்
1. ஒரு கவிதையில் இயற்கை எவ்வாறு முன் மொழியப்படுகிறது?
2. கதைப் பின்னலில் எவ்வாறு இயற்கைப் பொருட்கள் வினைபுரிகின்றன?
3. நிலம் குறித்த நம்முடைய உருவகங்கள் இலக்கியச் செயல்பாட்டிற்கு எவ்வாறு உதவுகின்றன? என்பவை நம்முடைய ஆய்வுக்கு முக்கியமானதாகத் தோன்றுகின்றன.
தமிழ் இலக்கிய நோக்கில் சங்க இலக்கியத்தில் 1. முதல், கரு என்ற முறையில் இயற்கை முன்மொழியப்பட்டுள்ளது. 2. கதைப் பின்னலில் இயற்கைப் பொருட்கள் தொல்காப்பியர் கருத்துப்படி உள்ளுறை உவமமாகவும், ஏனை உவமமாகவும், இறைச்சியாகவும் வினைபுரிகின்றன என்றும் கொள்ளலாம். இந்த அடிப்படையில் சங்க இலக்கியத்தில் சுற்றுக் சூழல் ஆய்வை மேற்கொள்ளலாம். 3. நிலத்தைப் பொறுமையின் சின்னமாகவும் ( ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை/ இகழ்வாரைப் பொறுத்தல் தலை’ ( திருக்குறள். 158) , சுற்றுச் சூழல் மனிதனைப் பாதிக்கும் என்பதை ‘நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தார்க்கு/ இனத்தியல்பான் ஆகும் அறிவு’ ( குறள், 452) என்றும், உவமைப்படுத்தியதோடு ‘மனத்து ளதுபோல் காட்டி ஒருவற்கு/ இனத்துள தாகும் அறிவு (குறள்,454) என்றும் வள்ளுவர் கூறும் போது இனம் என்பதில் சுற்று சூழலும் அடங்குவதாகக் கொள்வதில் தவறு இல்லை.
3. சங்க இலக்கிய சுற்றுச் சூழல் இலக்கியத் திறனாய்வு
சங்க இலக்கியம் என்று பொதுவாக அழைக்கப்படும்எட்டுத் தொகை, பத்துப்பாட்டு என்ற இரண்டிலும் இயற்கை வருணனை மிகுந்துள்ளதை தனியநாயக அடிகள் (Landscape and poetry – A study of Nature in Classical Tamil poetry), வரதராசன் ( சங்க இலக்கித்தில் இயற்கை ) போன்ற இக்கால அறிஞர்கள் பலரும் எடுத்துக்காட்டியுள்ளார்கள். அதாவது அவர்கள் இலக்கியத்தில் உள்ள இயற்கையை ஆராய்ந்துள்ளார்களே தவிர இயற்கை சார்ந்த உலகப் பார்வையை ஆராயவில்லை. அதனால்தான் உள்ளுறை, இறைச்சி என்று இரண்டு கருத்தமைவுகள் அவர்கள் ஆய்வில் உரிய இடம் பெறவில்லை.
பொதுவாகச் சங்க இலக்கியத்தில் உள்ள இயற்கை வருணனை அ) வாழ்வியல் உணர்வு, ஆ) கருத்தாடல் உணர்வு, இ) உளவியல் உணர்வு, ஈ) அழகியல் உணர்வு என்று நாலு நிலையில் அமைந்துள்ளதாகத் தோன்றுகிறது. அவை சுற்றுச் சூழலோடு தொடர்பு உடையதாக அமைந்துள்ளதைச் சங்க இலக்கியம் புலப்படுத்துகிறது. அதற்கு மேலாகச் சங்க இலக்கியத்தைக் கோட்பாட்டு நோக்கில் விளக்கும் தொல்காப்பியக் கருத்துகள் சுற்றுச் சூழல் ஆய்வோடு நேரடியாகத் தொடர்புள்ளதாக அமைந்துள்ளதால் அவை முதலில் எடுத்துக்காட்டப்படும்.
முனைவர் செ.வை. சண்முகம்
திருவேரகம்
194. மாரியப்பாநகர்,
அண்ணாமலை நகர் அஞ்சல்
சிதம்பரம் 608 002
அலைபேசி 98651 96476
மின்வரி: svs.anr2@gmail.com
(தொடரும்)
Leave a Reply