சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் – செ.வை. சண்முகம்
மையக்கருத்துரை
கார்த்திகை 7, 2045 / நவம்பர் 23, 2014 இதழின் தொடர்ச்சி
4.1.1.முதலும் கருவும்
‘ஞாயிறுபட்ட அகல்வாய் வானத்து
அளியதாமே கொடுஞ் சிறைப் பறவை
இறையுற வாங்கிய நெறியயல் மராஅத்து
பிள்ளை உள்வாய்ச் செரீஅய
இரைகொண்ட மையின் விரையுமாற் செலவே’ ( குறுந். 92).
இங்கு முதலும் ( முதலடி) கருவும் ( ஏனைய அடிகள்) மட்டுமே அமைந்துள்ளன. புலவர் தாமோதரனார். காமமிக்கக் கழிபடர் கிளவியாற் பொழுது கண்டு சொல்லியது என்பது பிற்குறிப்பு. ‘சூரியன் மறைந்த ஆகாயத்தில் பறவைகள் உயர்ந்த வழியில், தான் தங்கியுள்ள கடம்ப மரத்தில் கட்டிய கூட்டில் உள்ள குஞ்சுகளுக்கு உணவுக் கொடுப்பதற்காக விரையும்’ என்பது பாட்டின் திரள் பொருள். உ.வே.சா (1937: 214) ‘ மாலைக் காலம் வந்தது. இனிக் காமநோயை ஆற்றேன்’ என்பது கருத்து என்று குறிப்பிட்டுள்ளார். வள்ளுவரும் ‘பொழுது கண்டிரங்கல்’ என்று ஒரு அதிகாரமே (123) அமைத்து, ‘ மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்/ வேலைநீ வாழி பொழுது’ ( 1221 ) என்று விளக்கியுள்ளார். அப்படியானால் முதல் பொருள் அடிப்படையில் நெய்தல் என்று ஆகும். பசுபதி ( 2010 : 317) நெய்தல் திணைப் பாடலாகக் குறிப்பிட்டுள்ளார். மாறாகக் கருப்பொருளில் தாயின் அன்பே புலப்படுத்தப்படுள்ளது. அதனால் சோமசுந்தரன் (1955 : 136 ) ‘ அன்பின் வழியே இப்பறவைகள் இயங்குதலால் அவை இரங்கத்தக்கன என்னும்முகத்தால், அன்பின்றித் தன்னை மறந்துறையும் வன்கண்மையுடைய தலைவர் இவ்வன்பு தானும் அறிகிலேரே என்று கருதி இரங்கியவாறாம் ’ என்று ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அதில் ‘அவை (பறவை) இரங்கத்தக்கன’ என்பதும் ‘அன்பின்றித் தன்னை மறந்துறையும் வன்கண்மையுடைய தலைவர் இவ்வன்பு தானும் அறிகிலேரே என்று கருதி இரங்கிவாறாம் ’ என்ற இரண்டும் விளக்கமும் விவாதத்துக்கு உரியவை. அவை பாட்டின் பிற்குறிப்பை நியாயப்படுத்த கொடுத்த விளக்கங்களாகவே கருதத் தகுந்தவை. மாறாக அளியதாமே என்று இருப்பது உரிப்பொருளாக்க்ச கொண்டு முதல், கரு,உரி ஆகிய இருப்பதாகக் கொள்கிற கருத்தும் உண்டு.
பறவைகளை பணம் ஈட்டி வரும் தலைவனாகவும், குஞ்சுகளைக் குழந்தைகளாகவும் பறவைக் கூடு குழந்தைகளைப் பெற்ற தாயாகத் தலைவியை உள்ளடக்கியதாகவும் கொண்டு சுட்டு உள்ளுறை என்ற ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது ( சண்முகம், 2012 : 195).அப்படியானால் கருப்பொருள் கருத்தாடல் நோக்கில் குறியீட்டியல்படி ஒப்பானாகவும் ( Icon = image ), சுற்றுச் சூழல் நோக்கில் குறியீடாக மனித வாழ்க்கையை உணர்த்துவதாவும் அமையும். சுட்டு உள்ளுறைபாடல்கள் முதல் பொருளும் கருப்பொருளும் மட்டும் அடையாளம் காணப்பட்டு விளக்கப்பட்டுள்ளன ( சண்முகம், மேலது. ப. 189 – 202) .
4.1.2. கருவும் உரியும்
கருவும் உரியும் உடைய பாடல்கள் பெரும்பான்மையாக உள்ளன.
‘ எற்றோ வாழி தோழி முற்றுபு
கறிவளர் அடுக்கத்து இரவின் முழுங்கிய
மங்குல் மாமழை வீழ்ந்தெனப் பொங்குமயிர்க்
கலைதொட விழுக்கிய பூநாறு பலவுக் கனி
வரையிழி அருவி உண்டுறைத் தரூஉம்
குன்ற நாடன் கேண்மை
மென்றோள் சாய்த்துஞ் சால்பீன் றன்றே’ ( குறுந். 90).
( மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன் / வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகட்குத் சிறைப் புறமாகத் தோழி கூறியது.
இதன் திரள் பொருள்: மிளகுக் கொடி வளர்கின்ற மலைப் பக்கத்தில் இரவு நேரத்தில் மேக முழக்கத்துடன் மழை பெய்தது. ஆண் குரங்கு தீண்டியதனால் விழுந்த பலாப் பழம் அருவியால் நீர்த் துறைக்கு வந்து சேரும் மலைநாடனின் நட்பு உன்னுடைய மெல்லிய தோள்களை மெலிவடையச் செய்து அமைதியைத் தந்த காரியம் எப்படிப்பட்டது.
இதில் முதல் அடியும் கடைசி இரண்டு அடியும் உரிப்பொருள், ஏனையவை ( 2 – 5அடிகள்) கருப்பொருள். தலைவன் பிரிவால் உடல் இளைத்தும் தலைவி அமைதியாக இருந்ததைத் தோழி கண்டு வியப்படைகிறாள் என்ற உரிப்பொருள் இருத்தல் என்று கருதும்படி உள்ளது. ஆனால் கருப்பொருள் குறிஞ்சி திணைக்கு உரியது. அதனால் பசுபதி ( 2010 : 317). உ.வே.சா (1937:209) விளக்கம் வருமாறு: ‘1.இதனால் தலைவியின் மெலிவையும் அவளது அன்பின் உறுதியையும் தலைவனுக்கு அறிவித்து விரைவில் வரைந்துகொள்ள வேண்டியதன் இன்றியமை யாமையைப் புலப்படுத்திளாள் ஆயிற்று. 2. மலையுச்சியில் கலையால் விரும்பப் பட்ட பழத்தை அதன் கைப்படாதபடிஅருவியானது பலரும் அறியத் தான் பயன்படும் துறையின்கண் சேர்த்து அப்பழத்தையும் பயன்பட வைத்தது போல, பிறரால் வரைந்து கோடற்கு உரிய நிலையிலுள்ள தலைவியை அவர் பெறாமல் செய்து தான் மணந்து தான் பிறர்க்கு உதவி செய்து வாழும் தனது இல்லத்தின்கண் அவளையும் விருத்தோம்பல் முதலிய அறம் செய்வித்தக்குரியன் என்பது குறிப்பு’ என்பது. பொதுவாக உ.வே.சா உள்ளுறை, இறைச்சி, எச்சம் எனறு வேறுபடுத்தாமல் குறிப்பு என்ற பொதுப்பெயரால் குறிப்பிடுவது அவருடைய உரை மரபு இன்று புலனாகியுள்ளது. சோமசுந்தரன் (1955 : 132) விளக்கம் கொஞ்சம் மாறுபட்டாலும் உள்ளுறை உவமம் என்று அடையாளப்படுத்தியுள்ளார் அறியலாம். உ.வே.சா. வின் முதல் கருத்து பாட்டில் இல்லாதது. ஆனால் அது உள்ளுறையால் பெறப்படுகிறது. உள்ளுறை என்பது கருத்தாடல் நோக்கு. ஒவ்வொரு நாட்டுக்கும் ஊருக்கும் சில சிறப்புப் பண்புகள் இருப்பதாக உலகு எங்கும் பரவலாகப் பேசப்படும் கருத்து அடிப்பைடையில் தலைவன் அவன் நாட்டு வருண்ணையில் அமைந்துள்ள வருணனையில் அமைந்துள்ள பெற்றவன் ஆகிறான். மனிதனின் சில பண்புகள் சுற்றுச்சூழலால் நிர்ணயிக்கப்படுகிறது என்ற கருத்தை விளக்குவதாகக் கொள்ளலாம்.
4.1.3. முதலும் கருவும் உரியும்
‘கருங்கண் தாக்கலை பெரும்பிறி(து) உற்றெனக்
கைம்மைஉய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
சாரல் நாட நடுநாள்
வாரல் வாழியோ வருந்ததும் யாமே’ ( குறுந். 69).
(புலவர் கடுந்தோட் கரவீரனார். துறை தோழி இரவுக் குறி மறுத்தது.
திரள் பொருள். ஆண் குரங்கு இறந்ததால் பெண்குரங்கு தன் குட்டிகளை உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு மலை உச்சியில் ஏறி உயிர் விடும் நாடனே!நள்ளிரவில் வராதே. நாம் மிகவும் வருத்தப்படுவோம்.
இங்கு முதல் 4 அடி கருப்பொருள், 5வது அடியில் முதல் இரண்டு சீரும் கடைசி அடியும் உரிப்பொருள். 5வது அடியில்கடைசி சீர் முதல் ( சிறு பொழுது). உ. வே. சா. ( மேலது. ப.162 ) கருத்து என்ற பகுதியில்1. ‘நீ இரவில் வருதலை ஒழி …….2. கலை இறந்ததாக மந்தியும் உயிர் செகுக்கும் நாட என்றது பெண் விலங்கு இனங்களும் தம் துணைக்குத் துன்பம் நேர்ந்த காலத்தில் உயிர் தரியாமையை நின்னாட்டில் அறிந்தனை ஆதலின் நினக்கு ஏதம் வருமேல் இவள் வாழ்தல் இன்மையும் அரிது என்பது உணர்த்தியவாறு’ என்று விளக்கியுள்ளார். இங்கு இரண்டாவது கருத்துக்கு எந்தப் பெயரும் இடாததுகவனிக்கத் தகுந்தது. சோமசுந்தரனாரும் ( மேலது ப. 100 ) ‘இந்நிலை மகளிர்க்குப் பெரிதும் இன்னாமை உடையதாகலின் மந்திஅதனைப் பொறுத்து உய்யாதாயிற்று என்க’ என்று பொதுவாகவே விளக்கியுள்ளார்.
உரிப்பொருளில் உள்ள ‘வருந்துதும்’ என்பதை எப்படி வருந்துதும் என்பது கருப்பொருளில் உவமை மூலம் விளக்கப்பட்டிருப்பதால் இது உவமை உள்ளுறையாகக் கருத வேண்டும். இது கருத்தாடல் நோக்கு. சுற்றுச் சூழல் நோக்கில் கருப்பொருளும் உரிப்பொருளும் அதாவது மனிதனும் ஒத்த வாழ்வு உணர்வு உடையவை என்பதைப் புலப்படுத்துகிறது. எனவே மனிதனைப் போல கருப்பொருளும் பாதுகாத்தற்கு உரியது என்ற கருத்தும் பெறப்படுகிறது.
கவிதையியல் நோக்கில் இரண்டு செய்திகள் சுட்டிக்காட்டத்தகுந்தவை: 1.கவிதை அளவு அதாவது இடம் நிரப்புதல் மாறுபாடு. 6 அடிப் பாடலில் கருப்பொருள் 4 அடி, முதல் பொருள் ⅓ அடி( அதாவது மூன்று சீர் அடியில் ஒரு சீர்). உரிப்பொருள் 1⅔ அடி (அதாவது மூன்று சீர் அடியில் ஒரு சீர். அதாவது கவிதைக் கட்டமைப்பு கருப்பொருளுக்கு அதாவது சுற்றுச் சூழலுக்கு கூடுதல் முக்கியத்துவம். 2. சொல் தேர்வு – கருப்பொருளில் மந்தி, தன் இறப்பை நேரடியாக ‘உயிர் செகுக்கும்’ என்று கூறிவிட்டு தன்னுடைய துணைவன் (தாக்கலை) இறப்பை இடக்கரடக்கலாகப் ‘பெரும் பிறிது உறுதல்’ என்ற தொடரைக் கையாண்டது நாகரிகம் கருதியது அல்ல, அச்சம் கருதியது. அது கவிஞர் மொழி, தோழிக் கூற்றாக அமைந்தாலும் அந்த இடக்கரடக்கல் மந்தியின் உணர்வை- நேரடியாகக் கூறக்கூற அஞ்சுகிற இயல்பைப் பிரதிபலிப்பதாக அதைக் கொள்ளலாம். தலைவி ‘வருந்ததும்’ என்று பொதுவாகக் கூறினாலும் அதுவும் ஒரு வகையில் இடக்கரடக்கலே. அது உ.வே.சா.‘இவள் உயிர் வாழ்தல் இன்மை’ என்று விளக்குவதால் அறியலாம். தலைவி அதிக அச்சம் உடையவள் காரண வினையால் ( வருந்ததுதல்) காரியத்தைக் ( சாவு) குறிப்பிட்டுள்ளார் என்று ஆகும்.
செ.வை. சண்முகம்
திருவேரகம்
194. மாரியப்பாநகர்,
அண்ணாமலை நகர் அஞ்சல்
சிதம்பரம் 608 002
அலைபேசி 98651 96476
E Mail: svs.anr2@gmail.com
(தொடரும்)
Leave a Reply