சசிபெருமாள் மறைவும் மதுவிலக்கும்
மதுவிலக்குப்போராளி சசிபெருமாள் மறைவும்
முழுமையான மதுவிலக்கும்
அழிவந்த உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர் (திருவள்ளுவர், திருக்குறள் 927)
தமிழ்நாட்டில் முழுமையான மது விலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனப் போராடி வந்தவர் காந்தியவாதி செ.க.சசிபெருமாள். பலமுறை உண்ணாநோன்புப் போராட்டங்களையும் நடத்தியுள்ளார். கடந்த (தி.பி.2045 / கி.பி. 2014ஆம்) ஆண்டில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், முழு மதுவிலக்கினை வலியுறுத்தி 36 நாள் உண்ணாநோன்பு இருந்துள்ளார். இவர் விளம்பரத்திற்காக இத்தகைய போராட்டத்தில் ஈடுபடவில்லை. கட்சி அரசியல் நோக்கிலும் இதனைச் செய்ய வில்லை. வாணாளெல்லாம் தொடர்ந்து மதுவிலக்கை நடைமுறைப்படுத்தத் தொடர்ந்து போராடிய போராளியே இவர்.
இதுபோல், ஆடி 15 / சூலை 31 இல் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடை என்ற சிற்றூரில் கோயில், பள்ளி இருக்கும் பகுதியில் உள்ள அரசு மதுக்கடை(டாசுமாக்)யை அகற்றக்கோரி அந்த ஊர் மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அரசு மதுக்கடை அருகே உள்ள இருநூறு அடி உயர அலைபேசிக் கோபுரத்தின் உச்சிமீது ஏறிப் போராடியுள்ளார். அப்பொழுது அவருடன் உண்ணாமலை பேரூராட்சித் தலைவர் செயசீலனும் போராட்டத்தில் ஈடுபட்டுக்கோபுரத்தில் ஏறிச் சென்றுள்ளார். ஆனால், செகதீசன் இடையிலேயே திரும்பி வந்துள்ளார். தொடர்புடைய துறைகள் உடனடி நடவடிக்கை எடுத்து, சசிபெருமாளை இறங்கச் செய்திருந்தால் இறக்காதிருந்திருப்பார். ஆனால், உச்சியில் மயங்கிய நிலையில் பல மணிநேரம் இருந்த பின்னரே கீழே இறக்கியுள்ளனர். மேலேயே இறந்து விட்டாரா அல்லது கீழே இறக்கும் பொழுது கம்பி குத்தியதால் குருதி வெளியேறி இறந்துவிட்டாரா? என அவர் இறப்பு மருமமாகத்தான் உள்ளது. எப்படியிருந்தாலும் அப்பகுதிக்குரிய அதிகாரிகளின் உரிய நடவடிக்கையின்மையே அவர் இறப்பிற்குக்காரணம் என்பதில் ஐயமில்லை. தம் மனைவி மக்களை மட்டுமன்றி மனித நேயர்களுக்கும் அதிர்ச்சி யளிக்கும் வகையில் அவர் இறப்பு நிகழ்ந்து விட்டது. அவரை அரசு ஒருமுறையேனும் அழைத்துப் பேசியிருந்தால் இந்த நிலை நேர்ந்திருக்காது என அவரது ஆதரவாளர்கள் கூறுவதை அரசு சிந்தித்து இதுபோன்ற சூழல்களில் இணக்கமான போக்கை இனியாவது பின்பற்ற வேண்டும்.
அவருக்கு நம் அஞ்சலியைச் செலுத்துவதுடன் பிரிவால்வாடும் மனைவி திருவாட்டி மகிழம் அம்மாள், பிள்ளைகள், சுற்றத்தார்க்கு நம் இரங்கலையும் தெரிவிக்கிறோம்.
இதே நேரம், தமிழக அரசின் மதுவிலக்குக் கொள்கை குறித்துக் குறிப்பிட வேண்டியுள்ளது.
எந்தக் கட்சிக்கும் மது தொடர்பிலான உறுதியான கொள்கை இல்லை என்றுதான் கூற வேண்டியுள்ளது. இன்றைய ஆளும் கட்சி எதிரக்கட்சியாக இருந்தால், மதுவிலக்கிற்கான தீவிரமான போராட்டங்களை நடத்தியிருக்கும். அதுபோல் முன்னர் ஆளும் கட்சியாக இருந்து இன்று எதிர்க்கட்சியாக இருப்பவை, ஆளும் கட்சியாக இருந்தால், மக்கள் நலத்திட்டங்களுக்கான வருவாய்க்காக மது விற்பதாகக் கூறியிருக்கும். பல மாநிலங்களில் இன்றைய ஆளும் கட்சியாகவும் நேற்றைய எதிர்க்கட்சியாகவும் உள்ள காங்கிரசும் பா.ச.க.வும் மதுவிற்கு எதிரான போராட்டங்கள் நடத்துவது நாடகமே! இத்தகைய கட்சிகள் பிற மாநிலங்கள் அனைத்திலும் மது விலக்கை அறிமுகப்படுத்தும் முன்னர் இங்கே போராடத் தடை விதிக்க வேண்டும்.
ம.தி.மு.க. தலைவர் வைகோவும் பா.ம.க.தலைவர் மரு.இராமதாசும் மதுவிற்கு எதிரான நிலைப்பாட்டையே தொடர்ந்து கூறி வருகிறார்கள். எனினும் அவர்களால் தத்தம் கட்சியில் மது அருந்தாதவர்களுக்கே பதவி எனக் கூறல் இயலாது; ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பொழுது கட்சியினர் மதுக்கடைகளில் சூழ்வதைத் தடுக்க இயலாது. மதுவிலக்கிற்காகப் போராடுவோர் குருதியை ஆய்ந்து பார்த்தால் அவர்களின் குருதியிலும் மது கலந்திருக்கும். மது அருந்தாதவர்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபடலாம் என அரசு அறிவித்தால் போராடும் பலர் காணாமல் போய்விடுவார்கள். நல்ல நாள், துயர நாள், வெற்றி நாள், வெற்றி யிழந்த நாள், நண்பர்கள் சந்திப்பு, எனப் பல்வேறு சூழல்களில் மதுக்குப்பிகளும் கையுமாக இருப்பதே இன்றயை ஒழுகலாறாக மாறிவிட்டது. இப்பொழுது இருபால் மாணாக்கர்களும் குடிக்கு அடிமையாவது பெருகி வருகிறது.
உலக மக்களில் பெரும்பாலோர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக உள்ளனர். ஆனால், நம்நாட்டில்தான் மதுவிற்கு அடிமையாகி, மது அருந்துவதைவிட வேறு வேலை என எண்ணுவோரும் மது மயக்கத்தால் பொது இடங்களில் பிறருக்கு இன்னல் விளைவிப்போரும் மது அருந்துவதற்காக வீட்டிலுள்ள பொருள்களை அடகு வைப்போர் அல்லது விற்போரும் மதுநோயால் குடும்பத்தினரை வாட்டுவோரும், நோய்களுக்காளாகி, இளம் மனைவி, மக்களைத் தவிக்கவிட்டுச் செல்வோரும் மிகுதியாக உள்ளனர்.
அரசு மது விற்பதால் கிடைக்கும் வருவாயால் மக்களுக்கு நலத்திட்டங்களை நிறைவேற்ற முடிகிறது என்றும் இல்லையேல் கோடிக்கணக்கான வருவாய் தனியாரிடம்தான் சென்று சேர்ந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. அரசிற்கே மது விற்பதால் 30,000 கோடி உரூபாய் ஆதாயம் கிடைக்கிறது என்றால், அரசிற்கு மது விற்பனை செய்யும் முதலாளிகளுக்கு இவற்றைவிட மிகுதியாக அல்லவா வருவாய் கிடைத்து வரும். யாருக்கு ஆதாயம் என்றாலும் இழப்பு மக்களுக்குத்தான் என்பதை உணர வேண்டும். எல்லா நிலையிலும் எல்லார்க்கும் இலவசக் கல்வியும் இலவச தொடக்கநிலை மருத்துவ வசதியும் குறைந்த கட்டணத்தில் உயர் மருத்துவ வசதியும் அளிப்பதை மட்டும் அரசு நோக்கமாகக் கொண்டு பிற இலவசத்திட்டங்களை நிறுத்தி விட வேண்டும். எனவே, இவற்றைக் காரணம் காட்டி மது இருப்பை ஏற்பதை ஏற்க இயலாது. இலவசங்களால் மக்கள் அடையும் ஆதாயங்களை விட மதுவால் மக்கள்அடையும் இழப்புகள் மிகுதி என்பதை அரசும் மக்களும் உணர வேண்டும்.
1970 இல் கள்ளச்சாராயம் உட்கொண்டவர்களின் எண்ணிக்கை 3,72,472 பேர் எனத் தெரிவித்துத்தான் தி.மு.க. மதுவிலக்கை நீக்கியது. எனவே, குடிக்குப் பெரும்பான்மையர் அடிமையாகிய இன்றைய நிலையில் மது விலக்கு நடைமுறைக்கு வந்தால், கள்ளச்சாராயம் உட்கொள்வோர் எண்ணிக்கை கோடிக்கணக்கில் இருக்கும் என்பதில் ஐயமில்லை. இருந்தாலும், காவல்துறை நேர்மையாகச் செயல்பட்டால் இதற்கான வாய்ப்பு இருக்காது. (காவல் துறை நேர்மையாகச் செயல்பட வாய்ப்பின்மையால், கள்ளச்சாராயம் இல்லாமலிருக்கவும் வாய்ப்பு இல்லை என்கிறீர்களா?)
முழுமையான மது விலக்கு என்னும் இலக்கை நோக்கி அரசு இயங்க வேண்டும். அதற்கு முதற்படியாக மது அடிமைத்தனத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பொது ஊர்தியாக இருந்தாலும் தனிப்பட்ட ஊர்தியாக இருந்தாலும் குடித்து விட்டுப் பயணம் மேற்கொள்வோருக்குத் தண்டனை. அஃதாவது, ஓட்டுநருக்கு மட்டுமல்லாமல் பயணிகளுக்கும் தண்டனை.
- பொது இடங்களுக்குக் குடித்துவிட்டு வருவோருக்குத் தண்டனை.
- பேருந்து நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள் ஆகியவற்றில் அன்றாடம் ஆய்வு செய்து மது அருந்தி வருவோருக்குத் தண்டனை.
- திருமண மண்டபங்கள், விழா நிகழ்ச்சிகளில் மதுஅருந்தி இருப்போருக்குத் தண்டனை.
- இறப்பு நிகழ்வுகளின் பொழுதும் குடித்திருந்தால் தண்டனை.
- ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் முதலான இடங்களில் பங்கேற்கும் மது அருந்தியுள்ளோருக்குத் தண்டனை
வீட்டிலே மது அருந்திவிட்டு வீட்டிலேயே இருப்பவர்களுக்கு மட்டும் தண்டனை இல்லை. இதனால், மது அருந்தகங்களை மூடிவிடலாம். நட்சத்திர உணவகங்களில் கடவுச்சீட்டு உள்ள அயல்நாட்டினருக்கு மட்டும் குறிப்பிட்டஅளவு மது விற்பனை செய்யலாம்.
மதுஅடிமைத்தனத்தை ஒழிப்பதற்குப் பாடநூல்களில் மதுவின் தீமைகளை விளக்கும் பாடங்கள் இடம் பெற வேண்டும்.
மதுவிலக்குப் பரப்புரைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். கட்சி சார்பற்ற முறையில் இது செயல்படும் வகையில் இதன்அமைப்பு இருக்க வேண்டும்.
மது விலக்கைத் தளர்த்திய பொழுது மக்கள் திலகம் ம.கோ.இராமச்சந்திரனுக்கு (எம்ஞ்சியாருக்கு) இப்பொறுப்பு வழங்கப்பட்டது. அதனால், பெரும்பயன் விளைந்ததாகத் தெரியவில்லை. தம் படங்கள் மூலம் மது விலக்கையே அவர் உணர்த்தி வந்தார். ஆனால், அ.தி.மு-க. தொடங்கிய பொழுது கட்சி மேடைகளிலேயே அவரது அன்பர்கள் குடித்துவிட்டு வந்தனர். எனவே, வெறும் பரப்புரையால் பயனில்லை. மாற்று நடவடிக்கையும் எடுக்க வேண்டும். பெரும்பான்மையருக்கு ஒரு பழக்கத்தை மற்றொரு பழக்கத்தால்தான் அகற்ற முடியும். உடல்நலதிற்கு உகந்த இயற்கை முறையிலான பானங்களை உருவாக்கிப் பெருமளவு விற்பனை செய்வதாலும் மலிவு விலையில் இளநீர் கிடைக்கச் செய்வதாலும் குடிப்பழக்கத்தை மட்டுப்படுத்தலாம்.
இன்றைய சூழலில் மது விலக்கை வலியுறுத்தும் அனைத்துக் கட்சியினரும் அரசும் தத்தம் அளவில் குடிப்பழக்தகத்தை மட்டுப்படுத்துவதாலும் இல்லாமல் ஆக்குவதாலும் மதுவின் தீமைகளைக் குறைக்க இயலும்.
உயிரிழந்த மதுவிலக்குப் போராளி சசிபெருமாளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலாவது அரசு இவற்றில் கருத்து செலுத்த வேண்டும்.
மதுவில்லா நாட்டை உருவாக்குவோம்!
நலமான வாழ்வை எய்துவோம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
அகரமுதல 91 ஆடி 24, 2046 / ஆக.09, 2015 : இதழுரை
பயனுள்ள பரிந்துரைகள்! ஆனால், அரசுக்கு இவற்றில் ஆர்வம் கிடையாது. இதோ, மதுவிலக்குக்காகப் போராடியவர்கள் எல்லாரையும் எதிர்காலமே சிதைந்து போகும் அளவுக்கு அடித்து நொறுக்கிச் சிறையில் தள்ளிவிட்டு, மதுவிலக்குக்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் காணிக்கையாக்கியவர் என்று கூறி ஒருவருக்கு ‘ஔவை விருது’ வழங்கிச் சிறப்பித்துள்ளது அரசு. பிள்ளையையும் கிள்ளி விட்டுத் தொட்டிலையும் ஆட்டுபவர்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பிள்ளையைக் கொன்று விட்டுத் தொட்டில் வாங்கித் தருபவர்கள் இவர்கள். உண்மையான மக்கள் நலச் சிந்தனையாளர் ஒருவர் ஆட்சிக்கு வரும் வரை இந்தக் கொடுமைகளும் இழிநிலைகளும் மாறப் போவதில்லை ஐயா!
– இ.பு.ஞானப்பிரகாசன்