perarivalan_and_six01சஞ்சய் தத்து - sanjay-dutt

சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி; ஏழு தமிழருக்கு ஒரு நீதியா?

  தேர்தல் நாள் அறிவிப்பதற்கு இரு நாட்களுக்கு முன்புதான் தமிழக அரசுக்குத் திடீர் ‘அறிவுப்புலர்ச்சி’ வந்தது. இராசீவு கொலை வழக்கில் 24 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் ஏழு தமிழர்களை விடுவிப்பது குறித்து மீண்டும் மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டது. நவம்பர் 2ஆம் நாள் உச்சநீதிமன்றம் இது குறித்துத் தீர்ப்பளித்த பிறகு, மூன்று மாதக் காலம் உறங்கிக் கிடந்தது தமிழக அரசு. எதிர்பார்த்தபடியே, அடுத்த நாளே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர், பேராயக் (காங்கிரசு) கட்சியைச் சார்ந்த மல்லிகார்ச்சுனன், இந்த ஏழு தமிழர்களை விடுதலை செய்யவே கூடாது; அவர்கள் நாட்டுப் பகைவர்கள் என்று சோனியா சொல்லிக் கொடுத்த மொழிகளில் பா.ச.க ஆட்சியை மிரட்டி விட்டார். உள்துறை அமைச்சர் இராசநாத சிங்கும் (Rajnath Singh) உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகச் செயல்பட மாட்டோம் என்று கூறி விட்டார்.

  இந்த ஏழு தமிழர்களும், இராசீவு கொலையில் நேரடித் தொடர்புடையவர்கள் அல்லர்; தடா சட்டத்தின் கீழ் மிரட்டி, சித்திரவதை செய்து பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தையே அவர்களுக்கு எதிரான சான்றுகளாக மாற்றிய அவலம் இந்த வழக்கில் அரங்கேறியது.

 தடா சட்டம் இந்த வழக்கிற்குப் பொருந்தாது என்று கூறிய உச்சநீதிமன்றம், அதே தடா சட்டத்தின் கீழ்ப் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் ஏற்றுக் கொண்டது. அதிலும் கூடப் பேரறிவாளன் கூறிய ஒப்புதல் வாக்குமூலத்தைத் தாம் திருத்தித் தவறாக எழுதியதாக, ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற்ற நடுவண் புலனாய்வுத்துறை அலுவலர் தியாகராசன் என்பவரே நீதிமன்றத்தில் எழுத்தளவில் விண்ணப்பத்தை அளித்தார்.

  24 ஆண்டுக்காலம் சிறையில் கழித்தவர்களை விடுதலை செய்வதற்கு அவர்கள் சிறையில் கழித்த காலமும் நன்னடத்தையுமே போதுமானவை. குற்றத்தின் தன்மைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவையே இல்லை. ஆனால், இராசீவு காந்திக்காக மட்டும் நாட்டில் ஏதோ தனியான ஒரு சட்டம் இருப்பது போலவும், அது எல்லாவற்றையும் விட மேலானது என்பது போலவும் பம்மாத்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

  இதே பா.ச.க ஆட்சி மகாராட்டிரத்தில் நடிகர் சஞ்சய் தத்துக்குத் தண்டனைக் குறைப்புச் செய்து கடந்த பிப்பிரவரி மாதம் எரவாடாச் சிறையிலிருந்து விடுதலை செய்திருக்கிறது. ஐந்து ஆண்டுச் சிறைத் தண்டனை அளிக்கப்பட்ட திரைப்பட நடிகர் சஞ்சய்தத்து சிறையில் இருந்தது 42 மாதங்கள் மட்டுமே. அவரது தண்டனைக் காலம் நவம்பரில்தான் முடிகிறது என்றாலும், பிப்பிரவரியிலேயே விடுதலை செய்யப்பட்டு விட்டார்.

 இவர் மீதான வழக்கு இராசீவு கொலை வழக்கை விட மிகவும் கொடூரமானது. இந்தியாவின் தொழில் தலைநகரமாகக் கருதப்படும் மும்பையை அழித்தொழிப்பதற்காக 1993ஆம் ஆண்டு மார்ச்சு 12ஆம் நாள் தொடர் வெடிகுண்டுகள் வெடித்த வழக்கு.

 இந்தத் தாக்குதலில் ஒரே நாளில் இறந்தவர்கள் 257 பேர். படுகாயமடைந்தவர்கள் 717 பேர். (உண்மையில் இறந்தது 317 பேர் என்றும், காயமடைந்தவர்கள் 1400 பேர் என்றும் வேறு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன).

  சங்பரிவார் கும்பல் பாபர் பள்ளிவாசலை இடித்ததற்கு எதிர்வினையாகப் புகழ் பெற்ற நிழல் உலக தாதா தாவூது இபிராகிம், தனது ஆட்களான தைகர் மேமன், யாகூப்பு மேமன் ஆகியோர் வழியாகத் திட்டம் தீட்டி அரங்கேற்றப்பட்ட தாக்குதல்.

  சூழ்ச்சித் திட்டம் தீட்டியவர்களில் ஒருவராகக் குற்றம் சாட்டப்பட்டவர் நடிகர் சஞ்சய் தத்து. அவரது வீட்டில் ஏ.கே 56 வகைத் துப்பாக்கி, 9 கீழ்க்கோல் (மி.மீ) துப்பாக்கி, 650 வெடி மருந்துப் பொருட்களை வைத்திருந்தார் என்பது குற்றச்சாட்டு. இவை கொடிய ஆயுதங்கள்; தற்காப்புக்கான ஆயுதங்கள் அல்ல. தாவூது இபிராகிமின் வன்கொடுமைக் (பயங்கரவாத) குழு சஞ்சய் தத் வீட்டில் இந்த ஆயுதங்களைப் பாதுகாத்து, அவர் வழியாக வன்கொடுமையாளர்களுக்குத் (தீவிரவாதிகளுக்கு) தேவைப்படும் பொழுது கமுக்கமாகக் (இரகசியமாக) கடத்தத் திட்டமிட்டார்கள் என்பது குற்றச்சாட்டு.

  சஞ்சய் தத்து புகழ் பெற்ற திரைப்பட நடிகர்; செல்வாக்கு மிக்கவர் என்பதற்காக இவருக்குத் தாராளமாகச் சலுகைகள் காட்டப்பட்டன.

  • 1993ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் (28ஆம் நாள்) ‘தடா’வில் கைது செய்யப்பட்ட சஞ்சய் தத்துக்கு ஒரு வாரத்திலேயே (மே 5) மும்பாய் உயர்நீதிமன்றம் பிணை (bail) வழங்கியது.

  • இரண்டு மாதங்களுக்குப் பிறகு உசாவல் (விசாரணை) நீதிமன்றம் (1994, சூலை 4) பிணையைத் தள்ளுபடி செய்தது. முதலில் குற்றத்தை ஒப்புக் கொண்ட சஞ்சய் தத்து, பிறகு அதற்கு நேர்மாறாகக் குற்றத்தை மறுத்தார்.

  • சிறையிலிருந்தபடியே, தனக்குப் பிணை வழங்குமாறு சஞ்சய் தத்து உச்சநீதிமன்றத்துக்கு மடல் எழுதினார். உடனே உச்சநீதிமன்றம் பிணை வழங்கியது. (1995, அத்தோபர்).

  • தொடர்ந்து, அவர் மீதான தடா சட்டம் விலக்கிக் கொள்ளப்படுகிறது. ஆயுதங்கள் தடைச் சட்டத்தின் கீழ் மட்டும் வழக்கு பதிவாகிறது. அதனடிப்படையில் ஆறுஆண்டுச் சிறைத் தண்டனை அளிக்கப்படுகிறது. (2007, சூலை).

  • தனது தண்டனையை எதிர்த்து சஞ்சய் தத்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார். உடனே உச்சநீதிமன்றம் பிணை வழங்குகிறது. (நவம்பர், 2007).

  • வழக்கு உசாவல் (விசாரணை) உச்சநீதிமன்றம் வருகிறது. தண்டனையை ஐந்து ஆண்டுகளாகக் குறைக்கும் உச்சநீதிமன்றம், நீதிமன்றத்தில் தஞ்சம் (சரண்) அடைய 14 நாட்கள் காலவாய்ப்பும் வழங்குகிறது. (அத்தோபர், 2015).

  • சிறைக்குப் போன 6 மாதத்துக்குள் 14 நாள் காப்புப் பிணையில் (parole) விடுதலை செய்யப்படுகிறார். தனக்குக் கால்வலி என்று கூறி மேலும் 14 நாள் காப்புப் பிணை (பரோல்) கேட்கிறார். உடனே கிடைத்து விடுகிறது. (அத்தோபர், 2013).

  • அடுத்த இரண்டு மாதங்களில் தனது மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்று கேட்டு 28 நாள் காப்புப் பிணையில் விடுதலையாகிறார். இது மேலும் 28 நாட்களுக்கு நீடிக்க ஒப்புதல் கோருகிறார்; உடனே நீட்டிக்கப்படுகிறது.

  • அடுத்த 8 மாதத்தில் தன் மகளுக்கு மூக்கில் அறுவைப் பண்டுவம் (சிகிச்சை) நடப்பதாகக் கூறி 30 நாள் காப்புப் பிணை விடுதலை பெற்றுக் கொள்கிறார். (ஆகத்து, 2015).

  • இடையில் காப்புப் பிணையில் விடுதலையானபொழுது, 2015 சனவரியில் உரிய நேரத்தில் சிறைக்குத் திரும்பவில்லை. சிறை நெறிமுறைகளின்படி, இப்படி ஒழுங்கு மீறி நடப்போருக்குத் தண்டனைக் குறைப்பு வழங்க முடியாது. இதிலும் சஞ்சய் தத்தைக் காப்பாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சிறை மேலாண்மை (நிருவாகம்) உசாவல் (விசாரணை) குழுவைப் பெயரளவுக்கு அமர்த்தி, சிறை மேலாண்மை தகவல் தருவதில் ஏற்படுத்திய குழப்பத்தால்சஞ்சய் தத்து சிறைக்கு உரிய நாளில் திரும்ப முடியவில்லை என்றும், தவறு சிறை மேலாண்மையின் மீதுதானே ஒழிய சஞ்சய் தத்து மீது இல்லை என்றும் அறிக்கை பெறப்பட்டது. முதல் ஓராண்டுக் காலச் சிறையிலேயே 118 நாட்கள் காப்புப் பிணையில் வெளியே இருக்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறார் சஞ்சய் தத்து.

  • இவ்வளவுக்கும் பிறகு மகாராட்டிரத்தில் பார்ப்பன முதல்வர் தலைமையில் நடக்கும் பா.ச.க ஆட்சி, தண்டனைக் காலத்தைக் குறைத்து ஆணையிட்டுள்ளது. பிப்பிரவரி 25, 2016இல் சஞ்சய் தத்து விடுதலையாகி விட்டார். பேராயக் (காங்கிரசு) கட்சியும் சஞ்சய் தத்துக்குக் காட்டப்பட்ட சலுகைகளை எதிர்க்க முன்வரவில்லை.

  257 பேர் ஒரே நாளில் கொல்லப்பட்ட வழக்கில் வன்கொடுமையாளர்களுக்கு (தீவிரவாதிகளுக்கு) ஆயுதம் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு, அவர் செல்வாக்குப் பெற்ற நடிகர் என்பதால், முறைகேடாகக் காப்புப் பிணைகளையும் (பரோல்களையும்), தண்டனைக் குறைப்புகளையும் வழங்கிய இதே பார்ப்பன நாடுதான் 24 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் ஏழு தமிழர்களுக்கு நீதி வழங்க மறுக்கிறது.

  பேரறிவாளன் ஒருமுறை கூடக் காப்புப் பிணை கேட்டதில்லை. கடைசியாக, தன் தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் காப்புப் பிணை கேட்ட நிலையிலும் அரசிடமிருந்து இசைவான (சாதகமான) மறுமொழி இல்லை. இத்தனைக்கும் சிறை அலுவலர்களின் பாராட்டுகளைப் பெற்ற நன்னடத்தையாளர்கள் இவர்கள். ஏன் இந்தப் பாகுபாடு? ஏன் இந்த நீதியின்மை? பார்ப்பன இந்தியாவின் நீதிமன்றங்களும் அரசுகளும் மனுநீதிப் பார்வையோடு செயல்படுவதால்தானே!

  இராசீவு காந்தி அனுப்பி வைத்த அமைதிப்படை பல்லாயிரம் தமிழர்களை, போராளிகளைக் கொன்று குவித்ததே; பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதே; மறுக்க முடியுமா?

  இறுதிக் கட்ட இனப்படுகொலையில் பல நூறாயிரக்கணக்கான (இலட்சம்) தமிழர் இனப்படுகொலைக்குத் திட்டமிட்டுக் கொடுத்ததே சோனியாவின் உளவுப் படைதானே! இவை எல்லாம் மனித உயிர்கள் இல்லையா? இன்னும் எத்தனை உகத்துக்கு ‘இராசீவு காந்தி’யின் பெயரைக் கூறிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? இராசீவு கொலை இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல் என்றால், இராசீவு இறந்ததோடு இந்த இறையாண்மையும் சேர்ந்து மடிந்திருக்க வேண்டுமே; மடிந்து விட்டதா? விடை கூறுங்கள்!

விடுதலை இராசேந்திரன் - viduthalairasenthiran

– விடுதலை இராசேந்திரன்

நன்றி: பெரியார் முழக்கம், கீற்று.

 

 

+++