(சட்டச் சொற்கள் விளக்கம் 551-560 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

561. Acquitas sequitur legem / legmசமன்மை சட்டத்தின் வழியதாகும்.  

சமன்மை அல்லது சமன்நெறி அல்லது நடுவுநிலைமை என்பது சட்டத்தைப் பின்பற்றியதாகும்.  இதன் மூலம் சட்டத்தின் வழி நடுவுநிலைமையைப் பேண வேண்டும் எனலாம்.   இஃது இலத்தீன் தொடர்.

சமன்மை நெறியே சட்ட நெறி என்று சொல்வது சிறப்பாக இருக்கும். அதுவே தமிழர் நெறி. நடுவுநிலைமை எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவனர் தனி ஓர் அதிகாரத்தையே தந்துள்ளமை இதன் சிறப்பை உணர்த்தும்.
562. Acquittedவிடுவித்தல்

விடுவிக்கப்பெற்றவர்
  குற்றமற்றவர் எனக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தல்.
563. Acquittal  குற்ற விடுவிப்பு
  அஃதாவது குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துக் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளித்தல்.  

குற்றமற்றவன், களிம்பற்றவன், தப்பிலி, துகளிலி எனத் தமிழில் குறிப்பிடுகின்றனர்.    நிரபராதி, நிருமலன் எனச் சொல்லப்படுவன தமிழல்ல.  

குற்றச்சாட்டிலிருந்து அல்லது குற்றச் சாட்டுகளிலிருந்து விடுவிப்பது.

ஒருவர் தண்டனை முடிந்து சிறையிலிருந்து விடுவிப்பு பெறுவதை விடுதலை என்று சொல்கிறோம். அதனைச் சிறைவீடு  என்றுதான் சொல்ல வேண்டும்.   சிறைசெய் கென்றதுஞ் சிறைவீடு செய்ததும் (மணிமேகலை, 80) என மணிமேகலையை முதலில் சிறைசெய்யச் சொன்னதும் பின்னர் சிறையிலிருந்து விடுதலை செய்யச் சொன்னதும் குறிக்கப் பெற்றுள்ளது. ஆனால், இன்றைய வழக்கில் சிறைவீடு என்றால் சிறையாகிய வீடு என்பதுபோல் தவறாகக் கருதுவர். எனவே, தண்டனை முடிந்து அனுப்புவதை விடுதலை என்றே சொல்வோம். ஆனால், குற்றத்திலிருந்து விடுவித்து விடுதலை செய்வதைக் குற்ற விடுவிப்பு என்போம்.

சிறையில் இல்லாத போதும் குற்றத்திலிருந்து விடுவிப்பு பெறலாம். எனவே குற்ற விடுவிப்பு என்பதே சரியாக இருக்கும்.
564. Acquittal orderவிடுவிப்பாணை  

நீதிபதி அல்லது விசாரணை அதிகாரி, குற்றம் சாட்டப்பட்டவரைக் குற்றச்சாட்டிலிருந்து குற்றம் புரியவில்லை என அறிவிக்கும் விடுவிப்பாணை.
565. Acquittance  செல்லுச்சீட்டு  

பற்றொப்பம்

கடன் தீர்வு ஆவணம்

செல்லெழுத்து, கடன் தீர்த்தல், பெறுகைச் சீட்டு, பற்றொப்புச் சீட்டு எனப் பலவாறாகச் சொல்லப்படுகின்றது.  

இரசீது எனப்படுவது தமிழ்ச் சொல்லல்ல.

  சம்பளப் பணம் முதலியன பெற்றதற்கான சீட்டு என்பதுடன் கடன் தொகையைத் திரும்பப் பெற்றதற்கான ஆவணச்சீட்டாகவும் கருதப்படுகிறது. எனவே, பொதுவாகச் சட்டத்தில் கடன் தீர்வு ஆவணமாகக் குறிக்கப் பெறுகிறது.  

தீர்வு செய்தல் என்னும் பொருளையும் குறிப்பதால், வழக்கினைத் தீர்வு செய்து, குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்து விடுவிப்பதையும் குறிக்கிறது.
566. Acquittance registerபற்றொப்பப் பதிவேடு  

சம்பளம் முதலிய பணங்கள் சில்லறைச்செலவு முதலிய செலவுத் தொகை, பயணப்படி முதலிய படிகள் முதலியவற்றைப் பெற்றுக் கொண்டு அவ்வாறு பெற்றமையைத் தெரிவிக்கும் ஒப்புதல் கையொப்பப் பதிவேடு.
567. Acquittance rollபற்றொப்பப் பட்டியல்

(சம்பளச்) செல்லுப்பட்டி  

யார் யாருக்கு, எது எதற்காக? எவ்வெவ்வளவுத் தொகை கொடுக்கப்பட்டது என்பதை நிரல்படக் குறிப்பிடும் பதிவேடு. பணம் பெற்றதற்கான ஒப்புகையும் இப்பதிவேட்டில் இடம் பெறும்.
568. Acreகுறுக்கம்  
¾ காணி, 43,560 சஅ (ஏக்கர்)  

ஏக்கர் என ஒலிபெயர்ப்புச் சொல்லாகப் பயன்படுத்துகிறோம்.   காணி என்றும் குறிக்கின்றனர். ஆனால், காணி என்பது நில அளவையும் குறிப்பதால் குறுக்கம் என இப்போது கூறுகின்றனர்.
569. Acreageநிலப்பரப்பு,  
குறுக்கம் / காணி(ஏக்கர்) அளவிலான நிலப்பரப்பளவு
570. Acrimoniousகடுமையான

எரிச்சலான  

சினம், வாக்குவாதங்கள், மோசமான உணர்வுகள் வெளிப்பாடு முதலியன நிறைந்த கடுந் தகராறு.