சட்டச் சொற்கள் விளக்கம் 751-760 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 741-750 : தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 751-760
751. Address, Special | தனிப் பேருரை ஒரு பொருண்மை குறித்துச் சிறப்பு அழைப்பாளரால் அல்லது சிறப்பு நிலையில் அளிக்கப்பெறும் சொற்பொழிவு. |
752. Addressing Evidence | ஆதாரங்களை அணுகுதல் ஒன்றை வெற்றிகரமாக முடிப்பதற்கு, அடிப்படை ஆதாரங்களைத் துணைக் கொள்ளல். |
753. Addressing The Court | நீதிமன்ற விளி சொல் நீதிமன்றத்தாரை விளிக்கும் மதிப்பிற்குரிய சொல்லாட்சி. வழக்கினை நீதி மன்றத்தில் எடுத்துரைக்கும் பாங்கு. |
754. Adduce Evidence | சான்று / சான்றியம் நல்கு சான்று கொணர் சான்றியம் கொணர் ஒரு வாதுரைக்கு ஆதரவாக அல்லது அதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் ஓர் உண்மையை அல்லது சான்றியத்தை நல்குதல். ஒரு தருக்கத்தில் அல்லது பகுப்பாய்வில் கோட்பாட்டினை நிறுவுவதற்காக வழங்கப்படும் ஆதாரம். நீதி மன்ற நடவடிக்கைகளில் நீதி மன்றத்தின் கருதுகைக்காகச் சான்றியத்தை அல்லது வாதத்தை முன் வைத்தல். |
755. Ademption Of Legacies | விருப்புறுதிக் கொடைகளை வறிதாக்குதல் விருப்புறுதியில் எழுதப்பட்ட சொத்து விருப்புறுதியாளர் இறக்கும் பொழுது அவருக்கு உரியதாக இல்லாமல் இருந்தால் அல்லது வேறுவகைச் சொத்தாக மாற்றப்பட்டிருந்தால், செயல்பாட்டிற்கு வராமல் வறிதாகும். வறிது என்றால் சிறிது என்றும் பொருள். “வறிது சிறிதாகும்” என்கிறார் தொல்காப்பியர்(தொல். 879). மிகச்சிறிது அற்பமாகக் கருதப்படுகிறது. அற்பமான ஒன்று பயனின்மையாகக் கருதப் படுகிறது. இங்கே பயனின்மையைக் குறிக்கிறது. சில அகராதிகளில் “வரிது” எனத் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது. உயிலழிச் செயல் என்பர் சிலர். Will என்பதன் பொருள் விருப்பம். இச்சொல்லின் ஒலிபெயர்ப்புச் சொல்லே உயில் என்பது. தனக்குப்பின் தன்னுடைமைகள் யாருக்குச் சேர வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவிப்பதால் Will என்றனர். |
756. Adequacy | போதியது நிலைமையிலும் தன்மையிலும் போதுமான அளவில் உள்ளது. |
757. Adequate | போதிய சட்டப்படியும் முறைப்படியும் போதுமானது. குறிப்பிட்ட மாற்றீட்டுச்சட்டம்பரிவு 8 ஆ. (Sec.8.b. Specific Relif Act), குறைமக் கூலிகள் சட்டம் பிரிவு 30,2.9.உ (S,30(2)9e Minimum Wages Act ) ஆகியவற்றில் இது குறிக்கப் பெறுகிறது. |
758. Adequate and special reasons | போதிய தனிக் காரணங்கள் மணக்கொடை தடுப்புச் சட்டம் 1961, பிரிவு 3.1. விலக்குரை (S. 3(1)(Proviso) DPA, 1961) இல், தீர்ப்புரையில் பதிவதற்குரிய போதிய சிறப்புக் காரணங்கள் இருப்பின், ஐந்தாண்டிற்குக் குறைவான சிறைத்தண்டனை வழங்கலாம் என்னும் பொழுது இத் தொடரைப் பயன்படுத்தியுள்ளது. |
759. Adequate Compensation | போதிய இழப்பீடு அரசு பெற்றுக்கொண்ட சொத்திற்குக் கொடுக்கும் நியாயமான கொடுவை (கொடுக்கப்பட வேண்டிய தொகை). போதுமான/போதிய இழப்பீடாகச் செலுத்தப்படும் தொகையானது சொத்தின் நயன்மையான(fair) சந்தை மதிப்பாகும். எனவேதான், போதுமான இழப்பீடு என்பது உரிய இழப்பீடு என்றும் உரித்தான இழப்பீடு என்றும் சொல்லப்படுகின்றது. |
760. Adequate Consideration | போதிய கைம்மாறு போதிய / போதுமான கைம்மாறு என்பது சொத்து வழங்கப்படுவதற்காகத் தக்க பொருட்களையோ ஊழியத்தையோ அளித்தல். Consideration என்பது கருதிப்பார்ப்பதைக் குறிக்கிறது. சொத்துக் கொடையின் பொழுது மறு பொருளாக அல்லது பணி மை(ஊழியம்/service) வடிவில் பயன்கருதி வழங்கப்படுவதால் கைம்மாறு எனப்படுகிறது. |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply