(சட்டச் சொற்கள் விளக்கம் 811-820 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

821. Adopted Childமகற்கோடல்  குழந்தை  

மகற்கோடல்  என்பது உணர்ச்சி சார்ந்த மன்பதை, சட்டபூர்வச் செயல்முறையாகும்.   இதன் மூலம், பெற்றெடுத்த பெற்றோரால் வளர்க்கப்படாத குழந்தைகள் மற்றொரு குடும்பத்தின் முழுமையான நிலையான சட்ட உறுப்பினர்களாக மாறுகிறார்கள். அஃதாவது மகற்கோடல்  குழந்தையின் அனைத்து உரிமைகளும் பொறுப்புகளும் மகற்கோடல்  பெற்றோருக்கு நிலையாக மாறும்.

மகற் கோடல் என்பது மகவைக் கொண்ட என்றும் மகவாகக் கொள்ளப்பட்ட என்றும் இரு பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

காண்க: Adoption
822. Adoption    கோடல்  

மகற்கோடல்  

மகவேற்பு  

மற்றொருவருக்குரியதைத் தனதாகக் கொள்ளுதல் கோடல் ஆகும்.  

கோடல் என்பது உரிமையாகக் கொள்தைக் குறிப்பதால் இயல்பான ஏற்பு என்பதை விட ஏற்ற சொல்லாகக் கருதப்படுகிறது.

ஒருவர், பெரும்பாலும் ஒரு குழந்தை, புதிய குடும்பமொன்றின் சட்டபூர்வமான அங்கத்தவராக ஏற்றுக்கொள்ளப்படும் நடைமுறை மகற்கோடல் ஆகும்.

கோடல் முடிவு செய்யப்பட்டதன் பின்னர் அக்குழந்தை மகற்கோடிய / மகற்கோடல் பெற்றோரின் சட்டபூர்வமான குழந்தையாவார்.  அந்தவேளை உயிரியற்/இயற்கையான பெற்றோரின் பெற்றோருக்குரிய உரிமைகள் முடிவிற்கு வரும்.  

தத்து என்பது திசைச்சொல்லா எனத் தெரியவில்லை. கோடல் என்றால் கொள்ளுதல் எனப் பொருள். இன்னொருவரின் வழி முறையினராக அவரின் உரிமையராக இருந்த ஒரு குழந்தையை மற்றொருவர் மகன் அல்லத மகளாக ஏற்றுத் தனது உரிமையாகக் கொள்ளுதல். மகற்கோடல் எனலாம்.
823. Adoptive Fatherமகற்கோடல்  தந்தை  

ஓர் உயிரியல் தந்தைக்கு மாற்றாகச் சட்டமுறைப்படி ஒரு குழந்தையைத் தன் உரிமையாகக் கொள்ளும் ஆண்.  

Adoption என்பதை மகவேற்பு என்றும் சொல்வதால், ஏற்புத்தந்தை என்றும் குறிப்பிடுகின்றனர்.  

காண்க: Adoption; Adoptive Mother
824. Adoptive Motherமகற்கோடல்  தாய்  

ஓர் உயிரியல் தாய்க்கு மாற்றாகச் சட்டமுறைப்படி ஒரு குழந்தையைத் தன் உரிமையாகக் கொள்ளும்  பெண்.

Adoption என்பதை மகவேற்பு என்றும் சொல்வதால், ஏற்புத்தாய் என்றும் குறிப்பிடுகின்றனர்.  

காண்க: Adoption; Adoptive Father
825. Adult  அகவை முதிர்ந்தோர்,

உரிமை அகவையர்,

பருவமெய்தியவர்,

முதியோர்  

இடத்திற்கேற்றாற்போல் முதிர் உயிரி, முழு வளர்ச்சியடைந்த பூச்சி என்றும் சொல்லப்படும்.  

பரத்தை/வேசி என்னும் பொருளுமுண்டு.  

பெரும்பாலான நாடுகளில் 18 அகவை எட்டியவர்கள் அகவை/வயது வந்தோர் (Major) எனக் குறிக்கப்படுகின்றனர். பிற நாடுகளில் 14 முதல் 21 வரை இவ்வரம்பு மாறுபடுகிறது.
826. Adulterantகலப்படப் பொருள்

கலப்படம்  

உணவுப் பொருட்கள், மருந்து, ஒப்பனைப் பொருட்கள், அல்லது பிற பொருட்களில் சேர்க்க வேண்டிய உரிய மூலப் பொருள் அல்லது பொருட்களுக்கு மாற்றாக ஈடு செய்யும் வகையில் சேர்க்கப்படும் வேறு பொருளாகும்.  

சேர்க்கை தேவையில்லா விட்டாலும் பாலுடன் தண்ணீர் கலப்பதுபோல், வேறு பொருளைக் கலப்பதும் கலப்படமே.

இது சட்டப்படிக் குற்றச் செயலாகும்.
827. Adulterous Intercourseபிறன்மனை புணர்தல்  

பிறன்மனை புணர்தல் அல்லது முறைபிறழ்புணர்ச்சி (adultery) என்பது திருமணமானவர் அவரின் இணையில்லாத மற்றொருவருடன் கொள்ளும் பாலுறவு ஆகும்.

கூடா ஒழுக்கம், கூடா நடத்தை, கள்ள நடத்தை, கூடாப்பாலுறவு, பிறன்மனை சேரல், பிறன்மனை நயத்தல், பிறன்மனை நாடல், பிறன் மனை விழைதல், பிறன் இல் விழைதல்,  பிறர்மனை உறவு எனப் பலவகையாக இது கூறப்படுகிறது.  

மேற்கு நாடுகளில் திருமணமானவர் மட்டுமே முறை தவறி உறவு கொண்டதாகக் கருதப்படுவர்.

சில நாடுகள் ஒரு மணமான பெண் முறை தவறி உறவு கொண்டால் மட்டுமே முறைபிறழ்புணர்ச்சி என்கின்றனர். இங்கு ஆணுக்கு அவ்வாறான கட்டுப்பாடு எதுவும் இல்லை.    

பிறன் இல் விழையாமையைத் தமிழர் அறநெறியாகக் கருதிப்போற்றினர். திருவள்ளுவர், திருக்குறளில் இதற்கெனத்தனி ஓர் அதிகாரமே(எண் 15) அமைத்துள்ளார். எனவே, ஆடவர்களுக்கான கற்புநெறியையும் தமிழர்கள் போற்றி வந்துள்ளனர் என அறியலாம்.  

கிறித்தவச் சமயத்தின் பத்துக் கட்டளைகளுள் “பிறர் மனைவியை விரும்பாதிருப்பாயாக” என ஏழாவது கட்டளை கூறுகிறது. இதை மீறியவர்களுக்கு மரணத்தண்டனை என்று விவிலியம்(பைபிள்) கூறுகிறது. இங்கும் ஆடவர் கற்பு வலியுறுத்தப்படுகிறது. இங்குத் திருமணமான பெண்ணோடு உடலுறவு கொண்டால் மட்டுமே தண்டனைக்கு உரிய குற்றம். மாற்றாக ஆண் பரந்தமையுடன் அல்லது திருமணமாகாத பெண்ணுடன் உடலுறவு கொண்டால் அது குற்றம் அல்ல.  

இந்தியாவில்  பரத்தமைத் தடுப்புச்சட்டடத்தில் பெண்கள் தண்டிக்கப்படும் அளவிற்கு ஆண்கள் தண்டிக்கப்படுவதில்லை.

மருத்துவர்கள் முறை தவறி நடப்பது மன்னிக்க முடியாத தொழில்முறைக் குற்றம் ஆகும்.  

இசுலாமிய சமயத்தில் முறைபிறழ் புணர்ச்சி தடை செய்யப்பட்டுள்ளது. திருமணமானவர் அல்லது திருமணமாகாத ஒருவர் இவ்வாறான புணர்ச்சியில் ஈடுபடுவது குற்றச் செயலாகும். திருமணமானவர் இப்புணரச்சியில் ஈடுபட்டால். இசுலாமியத் தண்டனையின்படி கல்லால் அடித்துக் கொலை செய்யப்படுவார், திருமணமாகாதவர் இதில் ஈடுபட்டால் அவர், நூறு கசையடிகள்  வழங்கப்பட வேண்டும்.
828. Adulteryபிறன்மனை சேரல்  

மேலே பிறன்மனை புணர்தலில்(adulterous intercourse) கூறியதைக் காண்க.
829. Advanceமுன்பணம்,

மேம்படுத்து  

முன்பணம் என்பது உரிய நாளுக்கு முன்கூட்டியே தரப்படும் ஒரு வகையான கடன் அல்லது பணம் செலுத்துதல் ஆகும்.   ஒருவருக்கு அவருடைய சம்பளத்திலிருந்து ஒரு பகுதியை அல்லது முழுப்பகுதியை முன்னதாக அளிப்பது, பயணத்திற்கு எதிர்நோக்கும் செலவினத்திலிருந்து ஒரு பகுதியை முன்னதாக வழங்குதல், பொருட்களை வாங்கிவிட்டு அதற்கு உரிய தொகையில் ஒரு பகுதியை முன்னதாக வழங்கிவிட்டு எஞ்சியதைப் பின்னர் முழுமையாக அல்லது தவணை முறையில் அளித்தல்;

மனை, நில விற்பனை முதலியவற்றில் சட்ட முறையான பதிவிற்கு முன்னரே ஒரு பகுதியை அளித்தல்;  

முன்பணம் பெறும் தரப்பினர் உரிய காலத்தில் திருப்பிச் செலுத்துவார் அல்லது கணக்கினைச் சரி செய்வார் என்ற நம்பிக்கையில் அளிப்பது.  

அறிவிக்கப்பட்ட வழக்கு/கேட்பு நாளுக்கு முன்னதாகவே வழக்கை எடுத்துக் கொள்வது(advance hearing).  

படை முன்னேறிச் செல்வதையும் குறிக்கும்.
830. Advance Taxமுன் வரி
 
முற்செலுத்தும் வரி/ முன்செலுத்தும் வரி என்பனவற்றின் சுருக்கமே முன்வரி என்பது.
 
ஆண்டு இறுதியில் மொத்தமாகச் செலுத்த வேண்டிய வருமான வரியைக் கணக்கிட்டு அதனை முன்னதாகச் செலுத்துதல். வருமான வரித்துறையால் முடிவெடுக்கப்படும் வரித்தொகையை முன்னதாகத் தவணை முறையில் செலுத்துவது வழக்கம்.
 
வீட்டுவரி, சொத்துவரி, தொழில் வரி முதலான பிற வரிகளையும் – பெரும்பாலும் இணைய வழியில் – முன்னதாகச் செலுத்துவது.
 
முன்கூட்டிச் செலுத்தப்படும் தொகை செலுத்த வேண்டிய தொகையைவிடக் கூடுதலாகப்போனால், இத்தொகை கணக்கில் சரி செய்யப்படும் அல்லது திருப்பித் தரப்படும்.