சசிகலாவிற்கு இழைக்கப்படும் நயக்கேடுகள் /அநீதிகள்

 அஇஅதிமுகவின் பொதுச்செயலர் சசிகலா குற்றமற்றவரா அல்லது குற்றவாளியா என்பதுபற்றி இங்கே  ஆராயவில்லை. அவர் குற்றவாளியாக இருந்தால் பிற குற்றவாளிகளுக்கு வழங்கப்பெறும் உரிமைகளும் வாய்ப்பு நலன்களும் அவருக்கும் வழங்கப்பெற வேண்டும். அவர் குற்றமற்றவராக இருந்தால் பிற குற்றமற்றவர்களுக்கு வழங்கப்பெறும்   நயன்மைநிலை / நீதி  நிலைவாய்ப்பு அவருக்கும் வழங்கப்பெற வேண்டும் என்பதே நம் கருத்து.

  ஒருவர் செல்வாக்கு உள்ளவராக இருந்தாலும் அவர் அரசின்  ஆதரவாளர் என்றால் ஒரு வகையாகவும் இல்லை எனில் மற்றொரு வகையாகவும் சட்டம் கையாளப்படுவது நம் நாட்டு வழக்கமாகி விட்டது. அரசின் ஆதரவற்ற செல்வாக்கினரே படாதபாடு பட்டால் செல்வாக்கற்றவர் எந்நிலைக்கு ஆளாவார் என்பது நன்கு புரியும்.

 செயலலிதா மறைந்ததும் எதிர்பார்த்தபடி அதிமுக உடையாததால், அதனைக் கட்டுப்படுத்திய சசிகலாவை  ஓரங்கட்ட வைத்து அக்கட்சியைச் சிதைக்கும் முயற்சிகளை அதிகார எந்திரத்தை இயக்கும் பாசக மேற்கொண்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததுதான். அவருடன் நெருக்கத்தில் இருந்தவர்களையும் படிப்படியாக எதிராகப்பேச வைத்ததிலும் செயல்பட வைத்ததிலும் பாசக வெற்றி கண்டு வருகிறது. ஆனால், இவ்வெற்றி நிலைக்காது என்பதுதான் அதற்குப் புரியவில்லை.

  சசிகலாவிற்கு எதிரான பரப்புரைகள் மூலம் அவர் பிம்பத்தை உடைக்கும் முயற்சியில்  ஈடுபடும் உடைப்புக்கட்சி, அவருக்கு வழங்கியுள்ள  காப்பு விடுப்பிலும் (பரோலிலும்) தன் கைவரிசையைக் காட்டத் தவறவில்லை.

  சசிகலாவிற்கு விதிமுறை மீறிக் காப்பு விடுப்பு வழங்கப்பட்டுள்ளதுபோல் பேசியும் எழுதியும், எதையும் அறிந்து கொள்ள ஆர்வமற்றவர்கள் தத்தம் அறியாமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

   காப்பு விடுப்பு 10 நாள் வழங்கலாம் என்பதால்தான் சிறை அதிகாரிகள் 10 நாள் விடுப்பிற்கு விண்ணப்பிக்கச் சொல்லியிருந்தனர். ஆனால், 5 நாள்தான் வழங்கியுள்ளனர். இவருக்கு வழங்கியுள்ளது அவரச விடுப்பு. அவசர விடுப்பு 15 நாள் வழங்கப் பெறலாம். ஆனால் அவ்வாறு வழங்காமல் விதிமுறை மீறல்போல் சித்திரித்துவிட்டுக் குறைவான நாள் வழங்கி அதிலும் முறைகேடு உள்ளதுபோல் தோற்றத்தைக் காட்ட முற்படுவது இன்னும் பாசகவிற்குச்  சசிகலா மீதான அச்சம் போகவில்லை என்பதையே காட்டுகிறது.

  இவ்வாறு, காப்பு விடுப்பினை முறைகேடாக வழங்கியதுபோல்  சித்திரிப்பதும் சிறைவாசிக்கு இழைக்கப்படும் அறக்கேடுதான்

 சசிகலா  சிறை வைக்கப்பட்டுள்ள பார்ப்பன அக்கிரகாரத்தில் உள்ள பெங்களூரு மையச்சிறையில் விடுப்பில் அனுப்பப்பட்டோர் விவரம் வருமாறு(கருநாடகச் சிறைத்துறையின் இணையத்தளம்):

ஆண்டு இயல்பு விடுப்பு அவசர விடுப்பு
2007 187 464
2008 221 509
2009 332 778
2010 249 505
2011 401 535
2012 387 397

 பொதுவாக இயல்பு விடுப்பை விட அவசர விடுப்பு மிகுதியாக உள்ள உண்மையை உணர வேண்டும். ஏனெனில்,  இயல்பு விடுப்பிற்கு உள்ள நிபந்தனைகள் அவசர விடுப்பிற்கு இல்லை. இதனாலேயே அவசர விடுப்பு மிகுதியாக அமைகின்றது. (காப்பு விடுப்பு/பரோல் போன்ற சிறப்பு விடுப்பான பருலா/furlough என்பது  நம் நாட்டில் மிகக் குறைவாகவே வழங்கப்படுகிறது. படைத்துறையில் இருப்போர் இத்தகைய விடுப்பைப் பெறுவர்.)

 சட்டம் குற்றவாளியைத் திருத்தவே என்னும் அடிப்படையிலும் உச்சமன்ற  நயனாளர்கள் / நீதிபதிகள் காப்பு விடுப்பில் கடுமையைக் குறைக்க வலியுறுத்தி வருவதாலும் இந்நிலை. முன்பு விடுப்பிற்கு இருவர் பிணை தரவேண்டு்ம். இப்பொழுது ஒருவர் தநதால் போதும். முன்பு  பிணைத்தொகை உரூபாய் 6,000 இப்பொழுது உரூபாய் 1000 மட்டுமே1

  சசிகலா வன்முறை புரிந்தவர் என்ற அடிப்படையிலோ தீவிரவாத உரையின் அடிப்படையிலோ சிறைவாசியாக இல்லை. அவர் செய்ததாகச் சொல்லப்படுவது பொருளாதாரக் குற்றம். அவ்வாறிருக்க, யாரையும் சந்திக்கக்கூடாது எனச் சந்திப்பு தொடர்பான விதிகளும் / நிபந்தனைகளும் அறமற்றவையே! ஒரு கட்சியின் பொதுச்செயலர் தன் கட்சி உறுப்பினர்களைச் சந்திப்பது அவரின்  கடமையாகும். கட்சியினர் அவரைச்சந்திக்க விரும்புவதும் அவர்களின் உரிமையாகும். ஆனால் கட்சியினரின் தனி மனித உரிமையில் தலையிட்டுத்தான் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

 தனி மனித உரிமைகளுக்கு எதிராகக் கருநாடகச்சிறைத்துறையினர் தாமாக  நடந்துகொள்ள வில்லை என்பது ஊடகச் செய்திகள் மூலம் புரிகிறது.  பின்னர் இவை பிற சிறைவாசிகளுக்கும் கெடுவிதிக்கும் தவறான முன்னோடியாக அமையும் இடர்ப்பாடு உள்ளது.

 சசிகலாவிற்கு  இழைக்கப்படும் நயக்கேடுகள் குறித்து நிறைய கூறலாம். எனினும் மேலும் ஒன்றை மட்டும் பார்ப்போம். சிறைத்துறைத்துணைத்தலைவர் உரூபா என்னும்அதிகாரி இவருக்கு விதிமுறை மீறிக்கட்டுப்பாடற்றுச்சிறைக்குள் இருக்க வாய்ப்புகள் ஏற்படுத்தித்தந்ததாகக் கூறிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமையை அறிவோம். கண்டிப்பான அதிகாரி எனப் பெயர் பெற்ற அவர் உண்மையிலேயே எங்கும் நேர்மை நிலவ வேண்டும் எனக் கருதியிருந்தால், இவ்வாறு கட்டுப்பாடற்றுத்திரியும் அனைவரைப்பற்றியும் அறிக்கை தந்திருக்க வேண்டும். அந்த அறிக்கையும் துறையில்தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஊடகத்தில் அல்ல! அல்லது 16 ஆண்டுகள் பணியாற்றியிருப்பினும் அவருக்கு நடைமுறை அறிவு குறைவு என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 இத்தகைய நடைமுறை சிறைகளில் காலங்காலமாக இருந்து வருகிறது. அவ்வாறு இருப்பதாலேயே அவற்றைச் சரி என்று கூறவில்லை. ஆனால், பொதுவாகத் தொடர்புடைய அனைவர் மீதும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையை ஒருவர் மீது மட்டும் சார்த்திக் கூறுவதும் முறையற்றதுதானே!

 கோவை  மையச்சிறையில் கிருட்டிணன் என்பான்   கள்ளப்பணம் அடித்ததை முந்தைய தலைமுறையினர் அறிவர். சிறையில் இருப்பதாகக் காட்டிக்கொண்டு வெளியே வந்து கொள்ளை, கொலைகளில் ஈடுபட்டவர்களும் உள்ளனர். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக, அரசால், தேர்தல் காலங்களில் சிறைவாசிகள் (சிறையில் இருப்பதுபோல் கணக்கு காட்டி,) வெளியே விடப்பட்டு முறைகேடான செயல்களில் ஈடுபடவைத்துள்ளதாகப் பல செய்திகள் வந்துள்ளன.

 மதிப்பிற்குரிய நடிகவேள் செ.இரா.(எம்.ஆர்.)இராதாவிற்குச் சிறையில் மருத்துவமனையிலேயே தங்க வைப்பதுபோன்ற  வாய்ப்புகளைத் தந்ததால் சிறையில் திமுகவினர் கடும் வன்முறைகளால் தாக்கப்பட்டது தொடர்பான இசுமாயில் ஆணைய உசாவலில் / விசாரணையில் துன்புறுத்தியவர்களுக்குச் சார்பாகச் சான்றுரைத்தார் என்று அப்பொழுதே கூறப்பட்டுள்ளது.

 இவ்வாறு பரவலாக உள்ள  முறைகேட்டை ஒருவர் மீதுமட்டும் சுமத்திப்  பழியுரைப்பதும் அறமற்ற  செயல்தானே! அவ்வாறு அவருக்கு எத்தனி உரிமையும் / சலுகையும் வழங்கப்பெறவில்லை எனில், இத்தகைய பழிப்புரைகள் மிகவும் அறமுறையற்ற  கெடுசெயல் அல்லவா?

  இவ்வாறு கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டவரை ஒதுக்க வைக்கும் முயற்சிகளில் இருந்து வஞ்சகத்தாலும் சூழ்ச்சியாலும் ஆட்சி அதிகாரத்தாலும் சசிகலாவிற்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தும் அவருக்கு இழைக்கப்படும் அறக்கேடுகளே! இயல்பாக விட்டிருந்தால் காணாமல் போயிருக்கக்கூடிய ஒருவரை இழுத்துவந்து வலிமையாக்கிய பாசக அதற்கான விலையைக் கொடுக்கத்தான் போகிறது.

 இதன் காரணமாகத் தமிழக அரசியல் நிலையற்ற தன்மைக்குச் சென்று நாட்டிற்கும் கேடு தருகின்றது.

  சசிகலா, கட்சி்யைக் கைப்பற்றுகிறாரோ, கட்சி அவரைக்  கை கழுவி விடுகிறதோ இவையாவும் அவருடைய அல்லது அவருடைய கட்சியுடைய கவலைகள். நமக்கு ஒன்றுமில்லை. ஆனால், தனி ஒருவருக்கு எதிரான செயல்பாடுகள் என்றில்லாமல், அதன் மூலம் பாசகவின் மறைமுக ஆட்சிக்கு இடம் தந்து கொண்டிருப்பதால் தமிழ்நாட்டின் நலன் விரும்புவோர் அனைவரும் இவை போன்ற அரசின் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் குரல் கொடுக்க வேண்டும்.

 கட்சியில் வளரும் உட்பகை, அனைத்துத் தரப்பாருக்கும் துன்பங்களையே விளைவிக்கும் என்பதை அதிமுகவினரும் உணர்ந்து ஒற்றுமையாகச் செயல்படு வதன் மூலம், தமிழ்நலனுக்கு எதிரான கட்சியின் வலையில் இருந்து விடுபட வேண்டும்.

   உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்

   ஏதம் பலவும் தரும். (திருவள்ளுவர், திருக்குறள் 885)

குடியாட்சி முறை ஓங்குக!

தமிழ்த்தேசிய  நலன் நாடுவோர் ஆட்சி மலர்ந்திடுக!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை அகரமுதல 207,  புரட்டாசி 22 – 28,   2048 /  அட்டோபர் 8 – 15,  2017