(சனாதனம் பொய்யும் மெய்யும்: 22-23 * தொடர்ச்சி)

“பெண் தன் விருப்பப்படி வாழக்கூடாது. சிறு வயதில் தந்தைக் கட்டுப்பாட்டிலும், பருவ வயதில் கணவன் கட்டுப்பாட்டிலும், கணவன் இறந்தபின் பிள்ளைகள் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும். எப்போதும் தன் விருப்பத்தில் அவள் வாழக்கூடாது” (மனு 5. 148).

கணவன் மோசமானவனாய், கொடியவனாய் இருந்தாலும், பிற பெண்களோடு உறவு கொண்டு அலைபவனாயினும், நன்னடத்தை, நற்குணம் இல்லாதவனாயினும், பத்தினிப் பெண் என்பவள் அக்கணவனையே தெய்வமாக வழிபட்டு வாழவேண்டும்!” (மனு 5.154)

கடவுளாகச் சொல்லப்படும் இராமன், பெண்களை நம்பக் கூடாது, மனைவியிடம் கமுக்கங்களை(இரகசியங்களை)ப் பேசக் கூடாது (வால்மீகி இராமாயணம் அயோத்தியா காண்டம், அத்தியாயம் 100) என்கிறான்.

தமிழன் நினைத்தும் பார்க்க முடியாத ஆரிய மனுதருமம்  பெண்களைச் சிறுமைப்படுத்தும் வகையில் எழுதவே கூசும் செயலைக் குறிக்கிறது. எட்டு வயதிற்குள் திருமணம் பெண்ணிற்கு செய்து கொடுக்கா விட்டால்,மாதம் ஒரு முறை பெண்களுக்கு ஏற்படும் இரத்தப்போக்கை எடுத்துத் தந்தை குடிக்க வேண்டும் என்கிறது அது.(அக்கினிஃகோத்திரம் இராமானுச தாத்தாச்சாரியார், இந்து மதம் எங்கே போகிறது?)  இது சனாதனத்தின் சிறுமையா? பெருமையா?

மாதர்க்குப் பிறவியைத் தூய்மையாக்கும் சடங்குகள்(சமசுகாரங்கள்), மந்திரப்பூர்வமாகச் செய்வித்தல் யாதுமின்று. இவர்களுக்கு வெள்ளை யுள்ளமும் இல்லை. பாவம் நீக்கும் மந்திர அறிவுரையும்(உபதேசமும்) கிடையாது. எனவே பொய்யைப் போல் மாசு வடிவினராக மாதர் இயன்றிருக்கின்றனர் (மனு 9 : 180)

பெண்மையையும் இழந்து கொண்டு தீய ஆசைகளைப் பெருக்கிக் கொண்டு வேலைக்குச் செல்கின்றனர் பெண்கள். வீட்டில் அடைபட்டில்லை என்று அலுவலகத்திற்குப் போவதால் எத்தனை தப்புக்களுக்கு இடம் கொடுத்துப் போகிறது? ‘பெண் விடுதலை’ என்று பெரியதாகச் சொன்னாலும் ஆலுவலகத்தில் எத்தனை பேருக்கு அடங்கிப் பதில் சொல்லும்படி இருக்கிறது? இப்படி- யிருப்பதில் வாழ்க்கையில்தான் நிம்மதி உண்டா? நிம்மதியாகச் சமைத்துப் போட்டுச் சாப்பிடுவது; குழந்தை குட்டிகளின் அன்புணர்வை(வாத்சல்யத்தை) பூரணமாகத் துய்ப்பது(அநுபவிப்பது) என்பதெல்லாம் இந்த ‘விடுதலை’ யில் உண்டா?” எனப் பணிக்குச் செல்லும் பெண்கள் மீது பரிவு காட்டுவது போல்  பெண்களை இழிவுபடுத்துகிறார் சந்திரசேகர சரசுவதி(தெய்வத்தின் குரல் -இரண்டாம் பகுதி)

பெண்கள் வீட்டுக்குள்ளேயே வேலை செய்து குடும்பத்தை பார்த்துக் கொள்வதற்காகவே உருவாக்கப்பட்டவர்கள் என்று சனாதனத்தின் அடிப்படையில் உத்தரப் பிரதேச முதல்வராக இருந்த பாசக தலைவர் ஒருவர சொல்கிறார்.

பெண்களை இழிவு படுத்தும் இவையெல்லாம் பெண் அடிமைத்தனம் அல்லாமல் வேறு என்னவாம்?

பெண்களுக்கான உரிமைகளை ஆண்களுக்கான உரிமைக்குச் சமமாகக் கூறும்  இந்திய அரசியல் யாப்பிற்கு எதிரான சனாதனத்தை – சனாதனத்தைக் கூறும் நூல்களை – சனாதனப் படைப்புகளை தடை செய்வதுதானே முறை.

காண்க : விடை எண் 30

பிராமணன் சந்தேகமின்றித் சூத்திரரிடத்தினின்று பொருளை வலிமையாலும் எடுத்துக் கொள்ளலாம். யசமானன் எடுத்துக் கொள்ளத்தக்க பொருளையுடைய அந்தச் சூத்திரர் தன்பொருளுக்குக் கொஞ்சமுஞ் சொந்தக்காரரல்லர். (மனு 8.417)

இத்தகைய உயர்வு தாழ்வைக் கற்பிக்கும் சனாதனத்தை எங்ஙனம் உயர்வாகக் கருத இயலும்?

சட்டத்தின் முன் யாவரும் சமம் என்று சொல்லாமல், பிராமணனுக்கு ஏற்பச் சட்டத்தை வளைக்கிறது சனாதனம்.

சூத்திரன் அகந்தையால் பிராமணன் மேல் உமிழ்ந்தால் அவன் உதடுகளிரண்டையும் அரசன் வெட்டியெறியும் படிச் செய்ய வேண்டும்(மனு.அத். 8.282). ஆனால், பிராமணன் என்ன குற்றம் செய்தாலும் தண்டனை கிடையாது.

கொலைத் தொழில் புரிந்த மற்ற சாதிக்காரர்களைத் தூக்கில் போட வேண்டும், பிராமணன் கொலைக் குற்றம் செய்வானேயானால், அவனது தலை மயிரை மொட்டை யடித்தலே தண்டனையாகும் (மனு 8.379).

இவ்வாறு பிராமணனை மட்டும் உயர்வாகச் சனாதனம் கூறுகையில் எங்ஙனம் உயர்வு தாழ்விற்கு இடமில்லை எனப் பொய்யுரை கூறுகிறார்கள்?

‘தெய்வத்தின் குரலின்’ முதல் பகுதியில் “வருண தருமம்” என்ற கட்டுரையில், “சனாதன தருமத்தின் முக்கிய அம்சமே வருண தருமம்தான்” என்கிறார் மகாப் பெரியவர் என்று சொல்லப்படும் சந்திரசேகர சரசுவதி. மனிதர்களிடையே சாதிப்பாகுபாடுகளைத் திணித்து உயர்வு தாழ்வுகளைக் கற்பிக்கும் வருணசிரமம் ஆகிய சனாதனம் எங்ஙனம் உயர்வு தாழ்விற்கு இடந் தராததாய் இருக்க இயலும்?

சனாதன தருமத்தை ஊதி ஊதி எல்லாரிடமும் பரவச் செய்யலாம் என்பது என்னுடைய பேராசை. அதனால்தான் இதையெல்லாம் சொல்கிறேன். நம்முடைய சனாதன மதத்தில் மற்ற மதங்கள் எதிலுமே இல்லாத வருண தருமம் இருப்பதால், இஃது அவசியமில்லை என்று எடுத்துப் போட்டுவிட்டு நம் மதத்தையும் மற்றவை மாதிரி ஆக்கிவிடவேண்டும் என்று சீர்திருத்தக்காரர்கள் சொல்கிறார்கள்.” எனவும் சந்திரசேகர சரசுவதி கூறுகிறார்.

“நம்முடைய சனாதன மதத்தில் மற்ற மதங்கள் எதிலுமே இல்லாத வருண தருமம்” இருப்பதாகக் கூறுவதால்,  இதனைப் பிற மதங்களுடன் ஒப்பிடுவது தவறு என்றும் எல்லா மதங்களுக்கும்  பொதுவானதாகச் சிலர் கூறுவதும் தவறு என்றும் உணரலாம்.

“மற்ற தேசங்களிலும் சரி, நம் தேசத்திலும் சரி, மற்ற மதங்கள் போய்விட்ட போதிலும் இது மட்டும்  பதினாயிரம் ஆண்டுகளாகப் போகாமல் இருக்கிறது என்றால், அவற்றில் இல்லாத எதுவோ இதில் இருக்கிறது என்று தானே அருத்தம்? அது என்ன என்று பார்த்தால், வருண தருமம்தான் நமக்கு மட்டும் பிரத்தியேகமாக இருக்கிறது. ஆகையால் வருண தருமம் சமூக சீர்குலைவிற்கே காரணம் என்று புது நாகரிகக்காரர்கள் சொன்னாலும், இது இருக்கிற நம் சமூகம்தான் சீர்குலையாமல் இருந்து வருகிறது“.   என்றும் சந்திரசேகர சரசுவதி கூறுகிறார்.

வழக்கம்போல் அப்பட்டமான பொய்களை அவிழ்த்து விடுகிறார் காஞ்சி சங்கராச்சாரி எனப்படும் சந்திரசேகர சரசுவதி. பதினாயிரம் ஆண்டுகளாக இந்துமதம் உள்ளதாக அதன் தொன்மையைக் கூறுவது முதல் பொய். மற்ற மதங்கள் போய்விட்ட போதிலும் இந்துமதம் மட்டும் இருக்கிறது என்பதும் அடுத்த பொய். கிறித்துவம், இசுலாம், புத்தம் முதலான் பிற மதங்கள் இருக்கத்தான் செய்கின்றன. மறைந்து விடவில்லை. எனவே, வருண தருமம் இருப்பதால்தான் சமூகம் சீர்குலையாமல் இருப்பதாகக் கூறுவதும் பொய்யே. வருணப் பாகுபாட்டால்தான் மக்களிடையே குழப்பங்களும் சீர்குலைவுகளும் ஏற்பட்டு வருகின்றன.

தனக்குக் கீழாக ஒரு சாரார் இருப்பதாகக் கூறுவதைப் பெருமையாகக் கருதி வருண வேறுபாட்டிற்கு இரையாகிச் சிலர் மக்களிடையே உயர்வு தாழ்வைக் கற்பித்து வருகின்றனர். சனாதன நெறி ஒழிந்தால்தான் பாகுபாட்டு முறை ஒழியும்.

(தொடரும்)

– இலக்குவனார் திருவள்ளுவன், சனாதனம் பொய்யும் மெய்யும் பக்.46-48