(1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 3 : தொடர்ச்சி)

ஈ.வெ.இரா.உரை, நிறைவேறிய மாநாட்டுத் தீர்மானங்கள் குறித்தது 11ஆம் கட்டுரை.

இநதி எதிர்ப்புப் போராட்டத்தில் முதல்முறையாகப் பெண்கள் கைது என்பது குறித்து 12 ஆம் கட்டுரை கூறுகிறது.

எண்மர் கைது குறித்தது 13 ஆம் கட்டுரை. நவம்பர் 14 அன்று ஐந்து பெண்கள் கைதானதற்குப் பிறகு நவம்பர் 21 அன்று எட்டுத்தாய்மார்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டுச் சிறைக்கு அனுப்பப் பட்டனர்.

பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை நிரப்பிக் கொண்டிருந்தனர். இதற்குக் காரணமான பெரியார் மீது நடவடிக்கை என்பது குறித்தது 14 ஆம் கட்டுரை.

பெண்கள் கைதைஒட்டிய பிற போராட்டங்கள் கைதான பெண்கள் சிறுகச் சிறுக விடுதலை என்பன குறித்துப் பதினைந்தாம் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

 புதுவை சிவம் கைதான பெண்களுக்குப் பாராட்டு வழங்கிய பாடலுடன் கட்டுரை தொடங்குகிறது. தமிழர்  நலங்காக்கத் தன்மதிப்பு காக்க சிறை சென்றதாகப் பாராட்டியுள்ளார். சென்றது சிறைச்சாலைக்கு அல்ல தீமையெல்லாம் வீழ்த்த அறச்சாலைதான் ஏகியதாகக் குறிப்பிடுகிறார் கவிஞர்.

தமிழ்நாட்டின் முதல் ஒடுக்கப்பட்ட இனப் பெண் போராளி மேரி செளந்தரியம்மாள் வேண்டுகோளை முதலில் தந்துள்ளார். பெண்கள் கைதுகளை எதிர்த்துத் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கண்டன ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் தகவல்களை நமக்கு அளித்துள்ளார். சிறைசென்ற தாய்மார்களின் படங்களையும் தந்துள்ளார். இந்தி எதிர்ப்பில் முதன்முதலில் கைதான பெண்கள் விடுதலையான செய்தியையும் தந்துள்ளார். திசம்பர் 23, ஞாயிற்றுக்கிழமையை இந்தி எதிர்ப்பு நாளாகக் கொண்டாட வேண்டிய அறிவிப்பு, அவ்வாறு தமிழ்நாடு முழுவதும் நிகழ்த்திய நிகழ்வுகளையும் அளித்துள்ளார்.

அடுத்த பதினாறாவது கட்டுரையில் வேலூர் பெண்கள் முதலாவது சென்னை மாநிலத் தமிழ்ப்பெண்கள் மாநாடு குறித்த விவரங்களை விளக்கியுள்ளார்.   பண்டிதை நாராயணி அம்மாள் தலைமையுரையில்   இந்தித் திணிப்பு, இந்தியால் ஒற்றுமை உண்டாகுமா?, இனி செய்ய வேண்டுவன, நமக்கு முதலில், இரண்டாவதாக, மூன்றாவதாக, நான்காவதாக, ஐந்தாவதாக, ஆறாவதாக இருக்க வேண்டியன குறித்துத் தெரிவித்தனவற்றை எடுத்துரைத்துள்ளார். தோழர் பச்சம்மாள் வரவேற்புரையையும்    சிறைசென்ற பெண்களுக்கு வழங்கிய பாராட்டையும் தெரிவித்துள்ளார். மாநாட்டு நடவடிக்கையையும் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய தாமரைக்கண்ணி அம்மையானர் உரையையும் தந்துள்ளார். இந்தி எதிர்ப்பு என்னும் பன்முறைப் போரின் ஒரு பகுதியான தாழ்த்தப்பட்டவர் மாநாடு குறித்தும் நமக்குத் தந்துள்ளார்.