(சனாதனம் – பொய்யும் மெய்யும்பதிப்புரை – தொடர்ச்சி)

    சனாதனம் என்பது நிலையானதுதானா?

    • உலகில் நிலையானது என்று ஒன்றுமே இல்லை. எனவேதான் மாற்றம் ஒன்றே மாறாதது என்கின்றனர் அறிஞர்கள்.

    நில்லாத வற்றை நிலையின என்று உணரும்

    புல்லறிவு ஆண்மை, கடை.

    என்கிறார் திருவள்ளுவர்(திருக்குறள் 331)

    இதன் மூலம், “நிலைத்திருத்தல் அல்லாதனவாகிய பொருள்களை, நிலைத்து இருப்பன என்று நினைக்கின்ற அற்ப அறிவைக் கொண்டு இருத்தல் இழிநிலை” என்கிறார் திருவள்ளுவர்.

    இத் திருக்குறளுக்கு விளக்கமாக,  மாதவச் சிவஞான யோகிகள் பாடிய, “சோமேசர் முதுமொழி வெண்பா” என்னும் நூலில்  இத்திருக்குறளை விளக்கிப் பின்வரும் பாடல் வருகிறது.

    ஆக்கையும் ஆயிரத்துஎட்டு அண்டங்களும் நிலையாத்

    தூக்கி அழிந்தான்சூரன், சோமேசா! – நோக்கியிடில்

    நில்லாதவற்றை நிலையின என்றுஉணரும்

    புல்லறி வாண்மை கடை.

    இதன் பொருள்:        

    சூரபன்மன்(சூரபத்துமன்),  தன் உடம்பும்,  தன் அரசாட்சிக்குரித்ததாக ஆணை செலுத்திய ஆயிரத்தெட்டு அண்டங்களும், நிலையாத் தூக்கி – நிலையுடையவெனக் கருதி அழிந்தொழிந்தான் ஆகலான்.  ஆராய்ந்து பார்த்தால், நிலைத்த தன்மை இலவாகிய பொருள்களை நிலையாகக் கருதுகின்ற புல்லிய அறினை  உடையது இழிந்த தன்மையாகும் என அறியலாம்.

    நின்றும், சென்றும், வாழ்வன

     யாவும் நிலையாவால்; பொன்றும்

    என்கிறார் கம்பர்(கம்பராமாயணம், மாரீசன் வதைப் படலம்.) அசையாப் பொருள், அசையும் பொருள்(தாவர சங்கமம்) என்று சொல்லப்படும் நிலையியல் இயங்கியல் பொருள்கள் எவையும்  நிலைத்து நிற்கமாட்டா  அழிந்தே தீரும் என்கிறார். 

    அநித்தியத்தை நித்தியம் என்று ஆதரிக்கும் பொல்லா மனிதர் என்கிறது சிவபோகசாரம். அஃதாவது நிலையில்லாதவற்றை நிலையானவை என்று ஆதரிப்போரைப் பொல்லா மனிதர் என்கிறது. எனவே சனாதனம் நிலையானது என்போர் பொல்லா மனிதராவார்.

    நில்லாப் பொருளை நினையாதே நின்னை உள்ளோர்

    சொல்லாப் பொருள் திரளைச் சொல்லாதே”

     என்கிறார் தாயுமானார்.

    நிலையற்ற மாயப் பொருள்களைச் சிறிதும் நினைக்காதே.  உன்னைத் தமக்கு உட்படுத்திக் கொண்டு உன்னோடு உள்ளவர்கள் சொல்லத் தகாத பொருள் கூட்டங்களைப் பேசாதே என்கிறார். எனவே, நிலையில்லாத சனாதனத்தை நிலை என எண்ணவும் கூடாது. சனாதனத்தை நம்மோடு உட்படுத்தி இது குறித்து இல்லாச் சிறப்புகளைக் கூறுவோர் பற்றிப் பேசக் கூடாது.

    பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்,

    தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்,

    பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்,

    உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்,

    புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்

    என்று பட்டினத்தடிகள் கூறுகிறார். எனவே தோன்றிய யாவுமே மறையும். எதற்கும் நிலைத்த தன்மை கிடையாது. சனாதனம் என்னும் தீய நெறியும் அழியும்.

    பின்னும் [சு]மிருதிகள் செய்தார்அவை

    பேணும் மனிதர் உலகினில் இல்லை;

    மன்னும் இயல்பின் வல்லஇவை

    மாறிப் பயிலும் இயல்பின ஆகும்

    எனப் பாரதியாரும்  சனாதனம் மாறாத் தன்மையுடையன அல்ல; மாறும் இயல்பின என்கிறார்.

    2.    நிலையானதாகவும், மாற்ற முடியாததாகவும் இருப்பதன் அருத்தமே சனாதனம் என்கிறார்களே!

    • நிலையானதாகச் சொல்வது தவறு என முதலில் பார்த்தோம். அதுபோல் மாற்றமில்லாதது என்பதும் தவறு.

    சனாதனம் மக்களிடையே பாகுபடுத்தியும் ஒரு சாராரை உயர்த்தியும் மறுசாராரை இழித்தும் கூறுகிறது. இதில் யாரும் மாற்றம் செய்யக் கூடாது என்பதற்காக மாற்றமில்லாதது என்கிறார்கள். அஃதாவது அவர்களைப் பொறுத்தவரை பிராமணர்களை உயர்த்திக் கூறுவதும் பிறரை இழித்துக் கூறுவதும் நிலையானதாகவும் மாற்றமில்லாததாகவும் இருக்க வேண்டும். எனவே, இஃது ஒன்றும் உயர்ந்த மெய்யியலன்று.

    “இரிக்கு வேதக் காலம் முதல் வெளிவந்துள்ள கடவுள் சிந்தனைகளைப் பார்த்தால், அவை, காலம் தோறும் மாறி மாறி வந்துள்ளன; திரிந்து வந்துள்ளன; இணைந்து வந்துள்ளன; பிரிந்து வந்துள்ளன; சிறுகி வந்துள்ளன; பெருகி வந்துள்ளன; பலவாய் வந்துள்ளன; ஒன்றாய் வந்துள்ளது. இந்நிலையில் கடவுள் பற்றிய சிந்தனை நிலையானதும் அன்று, மாறாததும் அன்று என்றாகிறது” என உலகத் திருக்குறள் மையத் தலைவர் முனைவர் கு. மோகனராசு விளக்கம் தந்துள்ளதை அறிக.

    இலக்குவனார் திருவள்ளுவன், சனாதனம் பொய்யும் மெய்யும் பக்.23-25