சல்லிக்கட்டிற்கான போராட்டம் தமிழர் நலனுக்கான குறியீடே! – இலக்குவனார் திருவள்ளுவன்
சல்லிக்கட்டிற்கான போராட்டம்
தமிழர் நலனுக்கான குறியீடே!
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். (திருவள்ளுவர், திருக்குறள் 487)
சல்லிக்கட்டுத்தடையை எதிர்த்து மார்கழி24/சனவரி 8இல் சென்னையில் தொடங்கிய போராட்டம் பிற இடங்களில் நடந்த கிளர்ச்சிகளுடன்சேர்ந்து இன்று நாடு முழுவதுமான அறப்போராட்டமாக மாறியுள்ளது.
அலங்காநல்லூர், சென்னை, மதுரை என அனைத்து நகர்களிலும், ஆண், பெண் என்ற வேறுபாடின்றி, மாணாக்கர்கள், இளைஞர்கள் பொறுப்புணர்வுடனும் கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்வதாக அனைத்துத் தரப்பாரும் பாராட்டி வருகின்றனர். கட்சிக் கொத்தடிமைகளையே பார்த்து வந்த நாட்டில் முதல்முறையாகக் கட்சிக்கு அப்பாற்பட்டு, அமைதியாகக் கூடியுள்ள கூட்டம்; சாதி, சமய வேறுபாடின்றிப் பொதுநலன் கருதி அடக்கத்துடன் கூடியுள்ள கூட்டம்; தலைவர்களை நம்பியதுபோதும், நம் நலனுக்காக, நம் நாட்டு நலனுக்காக நாமே துணிந்து எழுவோம் என எழுச்சியுடன் கூடியுள்ள கூட்டம்; கட்சிக்காரர்களுக்காகவும் அதிகாரிகளுக்காகவும் பொறுத்ததுபோதும் நாமே பொங்கி எழுவோம் எனப் பொங்கிக் கூடியுள்ள கூட்டம்.
பொதுவாகத் தமிழ்நாட்டுச் சிக்கல் என்றால் தமிழ்நாட்டில் வாழும் பிற மாநிலத்தவர்கள் கண்டுகொள்வதில்லை. ஆனால், தமிழ்நாட்டிலுள்ள பிற மொழியாளர் மட்டுமல்ல, கேரளா முதலான தென் மாநிலங்கள் மட்டுமல்லாமல், குசராத்து, தில்லி என வடமாநிலங்களிலும் தமிழர்களின் சல்லிக்கட்டிற்கு ஆதரவான போராட்டத்திற்கு ஆதரவு நல்கியுள்ளனர். இங்குமட்டுமல்ல, ஈழம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பிரான்சு, அமெரிக்கா, கனடா, என்று சொல்லிக்கொண்டே போகும்அளவிற்கு உலக நாடுகளில் சல்லிக்கட்டுத் தடையை நீக்க எழுச்சியுடன் போராட்டம்.
நடிகநடிகையர் பின்னால் இளைஞர் பட்டாளம் என்ற நிலையை மாற்றி, இளைஞர்கள் பட்டாளத்திடம் நடிக நடிகையரை வரவழைத்ததிலிருந்தே இக்கூட்டம் மயங்குகிற கூட்டமன்று! தமிழ்ப்பகையைக் கலங்கடிக்கிற கூட்டம் என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர்.
இது வெறும் சல்லிக்கட்டுத்தடையை நீக்குவதற்கான போராட்டம் அல்ல! தமிழ், தமிழர் பகைச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் மத்திய அரசின் அறமுறையற்ற போக்கிற்கு எதிரான போராட்டமும் கூட! மத்தியில் ஆட்சியில் இணைந்திருந்தாலும் தன் வீட்டு நலனில் கருத்து செலுத்திவிட்டுத் தமிழ்நாட்டு நலனில் கருத்து செலுத்தாத கட்சியாளர்களுக்கு எச்சரிக்கை தரும்போராட்டமும்கூட!
ஏறுதழுவல் என்பது தமிழர்களின் சிந்துவெளிநாகரிகக் காலத்திலிருந்தே இருக்கும் அன்பின் அடிப்படையிலான வீர விளையாட்டு.
தொடக்கக்காலத்தில் முல்லை நில மக்களின் பண்பாட்டுக் கூறாக இருந்திருக்கலாம். ஆநி்ரை கவர்தல், ஆநிரை மீட்டல் ஆகிய போர்முறைகளால் எல்லா நிலத்தவரும் பின்பற்றும் வீர விளையாட்டாக மாறியுள்ளது.
காளையை அடக்குதல் என்று சொல்லாமல் ஏறு தழுவுதல் என்று சொல்வதிலிருந்தே காளைகளைத் துன்புறுத்தும்கொடுமைகளுக்கு இடமின்றி, அன்பின் அணைப்பிற்கே இடம் தந்துள்ளமை புரியும்.
அண்மைக்காலங்களில் வெற்றியைக் கருதிச் சிலர் காளைகளுக்குப் போதை நீர் தருதல் போன்ற வஞ்சக முறைகளைப் பயன்படுத்தி இருக்கலாம் .அது வஞ்சகர்களின் செயல்பாடே அன்றி ஏறுதழுவலின் குறைபாடன்று.
எதற்கெடுத்தாலும் சாதியை இழுத்து ஆதாயம் அமைடயும் சிலர், இதனைச் சாதி விளையாட்டாகச் சொல்வதும் தவறு. ஏறுதழுவல் அறிமுகமான காலக்கட்டத்தில் சாதிப்பாகுபாடே இல்லை.
பின்னரும் மணமுடிப்பிற்காகக் கன்னியின் கரம் பிடிக்கத் துடிக்கும் காளையர் காளைகளை அடக்க வரும் பொழுது, பெரும்பாலும், மாமன்மகன், அத்தை மகன் என முறைப்பையன்களாகத்தான் இருந்திருப்பர். உறவிலே காதல் வருவதை எப்படிச் சாதிக்கண்ணோட்டமாகக் கூற முடியும்?
அண்மைக்காலங்களில் நடைபெறும் ஏறு தழுவல் அல்லது சல்லிக்கட்டு என்பது மணம் முடிப்பதற்கான தேர்வு அல்ல. வீரத்தின் அடையாளமாக ஆடப்படுவதாகும். இங்கே எங்கே சாதி வந்தது?
பட்டியல்வகுப்பினர் முதலான எல்லா வகுப்பினரும் வீரத்தின் அடிப்படையில் பங்கேற்கும் வீர விளையாட்டு விழாவாகத்தான் உள்ளது.
எங்கேனும் சாதிப்பாகுபாடும் தீண்டாமையும் தாண்டவ மாடியிருந்தால் உடனே அப்போக்கு தடைசெய்யப்பட வேண்டியதும் தண்டிக்கப்பட வேண்டியதுமாகும். அத்தகைய மனித நேயத்திற்கு மாறான, இயற்கை அறத்திற்குப் புறம்பான செயல்களைத் தடை செய்வதைவிட்டுவிட்டு இவ்விளையாட்டையே தடை செய்ய வேண்டும் என்பது மிகப்பெரும் அறியாமையே.
ஆனால், இத்தகைய சாதிக் கண்ணோட்டங்களுக்கு இடம் கொடுக்காமல் அறப்போராட்டத்தினர் ‘ஒன்றே நாம்’ என இணைந்து போராடுவது பாராட்டிற்குரியது.
போரில் ஆநிரைகளைக் கவரும்பொழுதுகூட அவற்றைத் துன்புறுத்தாமல் பார்த்துக்கொள்வதே தமிழர் நெறி என்பதைத் தொல்காப்பியர் “நோயின்றி உய்த்தல்” எனக் குறிப்பிட்டுள்ளார். போரில்கூடக் காலநடைகளைத் துன்புறுத்தக்கூடாது என்னும் கொள்கை உடையவர் ஏறு தழுவுதலின் பொழுது துன்பம் இழைக்க எண்ணுவரா? என்பதைப் புரிந்துகொள்ளாதவர்களால்தான் சல்லிக்கட்டிற்கு எதிர்ப்பு வருகிறது.
சல்லிக்கட்டிற்கு ஆதரவான போராட்டம் என்பது ஒரு குறியீடே என்பதை மத்திய மாநில அரசுகளும் கட்சித்லைவர்களும் உணர்ந்துள்ளனர். காவிரி, முல்லை-பெரியாறு முதலான பல சிக்கல்களில் தண்ணீர் தர மறுக்கும் அண்டை மாநிலத்தைத் தட்டிக்கேட்காத மத்திய அரசு; நெய்வேலியைத்தாரை வார்க்கும் மத்திய அரசு; சமற்கிரும், இந்தி என மொழித்திணிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வரும் மத்திய அரசு; 176.00,00 ஈழத் தமிழர்கள் கொடுமையான முறையில் கொல்லப்படக் காரணமான மத்திய அரசு; இனப்படுகொலைக்குப் பின்னரும் தொடர் கொடுமைகளை அரங்கேற்றும் சிங்கள அரசிற்குத் துணை நிற்கும் மத்திய அரசு; தமிழகச்சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும் படுகொலையாளிகளைக் கூண்டில் ஏற்றத் துணைநிற்காமல் தப்பிக்க உதவும் மத்திய அரசு; என மத்திய அரசின் மீதான கடுஞ்சினம் சேர்ந்து இப்பொழுது வெடித்துள்ளது.
இதுபோன்று ஈழத்தமிழர்படுகொலையின்பொழுது திரண்டிருந்தால், அவர்களைக் காப்பாற்றியிருக்கலாமே எனப் பலருக்கும் தோன்றுகிறது. அப்பொழுது கு.முத்துக்குமார் உயிர்க் கொடை கொடுத்தபின்னரும் உடலாயுதத்தைப் பயன்படுத்தவிடாமல் கட்சித்தலைவர்கள் போராட்டத்தைச் சிதைத்துவிட்டனர். அதில் கற்ற பாடம்தான் இப்பொழுது அவர்களை உள்ளே விடவில்லை. இது தொடக்கம்தான். இனி இதுபோன்ற நேர்வுகளில் என்னஆகும் என்ற அச்சம் தன்னலக் கட்சித்தலைவர்களுக்கு எழாமல் இருக்காது. எனவே இப்போதைய போராட்டம் ஒரு குறியீடு என்பதை அனைவரும் நன்கு புரிந்துள்ளனர்.
போராட்டத்தின்பொழுது நரேந்திர(மோடிக்கு) எதிரான முழக்கங்கள் ஏற்பட்டதாகவும் தனிநாடு தொடர்பான கருத்தோட்டங்கள் வந்ததாகவும் போராட்டம் திசை மாறிப் போய்விட்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.
ஆட்சியில் அமருவதற்காகத் தவறான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியவர் அவர்தானே! சல்லிக்கட்டு தொடர்பிலும் தவறான நம்பிக்கை தந்து ஏமாற்றிவருபவர் அதுதானே! மயிலே மயிலே இறகு போடு என்பதுபோல் மூடத்தனமாகக் கெஞ்ச வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா? வாழ்த்துப்பா பாட வேண்டும் என்று விரும்புகிறார்களா? பேராயிரக்(மில்லியன்)கணக்கில் திரண்டுள்ள கூட்டத்தில் உணர்ச்சிஅலைகள் கொப்புளித்து வருவது இயற்கைதான். இதில் குற்றம் சொல்ல ஒன்றுமில்லை. இதனைப் புரிந்து கொண்டு ஆட்சியாளர்கள்தாம் தம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
அவசரச்சட்டம் இயற்றிய பின்னரும் கலையாமல் தொடருகிறார்களே என்றும் சொல்கிறார்கள். அந்த அளவிற்கு அரசின்மேல் நம்பிக்கை! முதல்வர் பன்னீர்செல்வம் பெருமுயற்சி எடுத்து அவசரச்சட்டம் பிறப்பிக்கச் செய்தது பாராட்டிற்குரியதுதான். ஆனால், இதே சட்டத்தை இதற்கு முன்னர் ஏன் கொண்டுவரவில்லை. மோடி, தன்னளவில் கை விரித்துவிட்டுத் தமிழகஅரசு அவசரச்சட்டம் பிறப்பிக்க உதவுவதாகக் கூறுவதில் என்ன நாடகம் உள்ளதோ? அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொந்தக்காரணங்களுக்காகத் தலைமையமைச்சரைச் சந்திக்க நேரம் கேட்கவில்லை. தமிழ்நாட்டின் உணர்வை எதிரொலிக்கவே பொதுநலன் கருதி தலைமையரைச் சந்திக்க விரும்பினர். அங்கிங்கெனாதபடி எங்கும்சுற்றும் நரே்நதிர(மோடி) இவர்களைச்சந்திக்க மறுத்தது தமிழ்நாட்டை அவமானப்படுத்தும் செயல். அப்படியிருக்க அவரின் பேச்சை எவ்வாறு போராடும் இளைஞர்கள் ஏற்பர்?
குடியரசுத்தலைவர் ஒப்புதலின்றியே அவசரச்சட்டம் பிறப்பிக்கலாம் எனில், இதற்கு முன்பு ஏன் அவ்வாறு சட்டம் பிறப்பிக்கவில்லை? குடியரசு நாள்கொண்டாட்டத்திற்காக ஒரு வார நாடகம் ஆடிவிட்டுப் பின்னர் “பழைய குருடி கதவைத் திறடி” என்பதுபோல் ஆனால் என்னாவது என்ற தயக்கம். சூடுபட்ட பூனையாய்மக்கள் இருக்கும் பொழுது இதுபோன்ற நிலைப்பாடு இயற்கையே! எனவே காட்சிப்பொருளில் இருந்து காளையை நீக்கவும் விலங்குகளின் நற்பேணுகைக்கான மக்கள்(People for the Ethical Treatment of Animals) அமைப்பைத் தடை செய்யவும் தடை யின்றி ஏறுதழுவலாகிய சல்லிக்கட்டு எப்பொழுதும் நடைபெறவும் சட்டப்படியான வழிவகைசெய்தால் போராட்டம் தானாக முற்றாகிவிடும் அல்லவா? எனவே, போராட்டக்காரர்களைக் கலைக்க முயலாமல் அதற்கான காரணங்களை நீக்குவதில் மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்தட்டும்!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
(பாரதிதாசன்)
என்பதை நனவாக்கிய போராட்டத் தோழர்களுக்கும் தோழியருக்கும் உற்றுழி உதவிய மக்களுக்கும் பாராட்டுகள்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 170, தை 09, 2048 / சனவரி 22, 2017
Leave a Reply