சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சாலிக்குத் தென்கிழக்காசிய இலக்கிய விருது

 சிங்கப்பூர் வாழ் தமிழ் எழுத்தாளரான சமாலுதீன் முகமது சாலி  [(Jamaludeen Mohamed Sali /ச.மு.சாலி/ J.M.Sali) (76 : பங்குனி 28, தி.பி. 1970 ஏப்பிரல் 10, 1939)],   இந்த ஆண்டிற்கான மதிப்புமிக்க தென்கிழக்கு ஆசியாவின் இலக்கிய விருதுக்குத் தேர்வாகியுள்ளார். இதனைத், தேசியப் புத்தக மேம்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

 

  இவ்விருது, தெற்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பில் (ஆசியான்) இடம்பெற்றுள்ள நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு கடந்த 1979 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

 வரும் திங்கட்கிழமை கார்த்திகை 28, 2046 / 14.12.2015 தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள மாண்டரின் ஓரியண்டல் உறைவகத்தில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் திரு சாலி இந்த விருதைப் பெறுவார்.

 

 சாலி,  “இந்த விருது எனக்கான அறிந்தேற்பு என்று நான் கருதவில்லை. இது சிங்கப்பூருக்கான அறிந்தேற்பு என்று கருதுகிறேன். எழுத்தாளர்களின் தாய்மொழியில் மேலும் எழுதுவற்கு எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் நாம் மேலும் பல விருதுகளைத் தொடர்ந்து வழங்க முடியும் என்று நம்புகிறேன்” என்று இந்த விருது குறித்துக் கூறியுள்ளார்.

  படைப்பாளர் சாலி, சிங்கப்பூர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர், பன்னூலாசிரியர், இதழாளர், சிறுகதையாசிரியர், தொடர்கதையாசிரியர், கட்டுரையாளர் எனப் பன்முகச் சிற்பபு மிக்கவர். இசுலாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் வெளிநாட்டுத் தொடர்பாளருமாவார்.

  57 புத்தகங்கள், 80 நாடகங்கள், 400-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இவர் எழுதிய வெள்ளைக் கோடுகள், அலைகள் பேசுகின்றன, கனாக் கண்டேன் தோழி, விலங்கு, தமிழகத்துத் தர்க்காக்கள், மாநபி கண்ட மருத்துவம், குத்துச் சண்டை வீரர் முகம்மது அலி, புரூசுலி, நோன்பு முதலான சிறுகதைகளும் நூல்களும் குறிப்பிடத்தகுந்தவையாகும். தற்போது சிங்கப்பூர்- இந்தியன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கிய மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகிறார்.

  இவர் இலக்கியத்திற்காகப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். கண்ணன் சிறுவர் இதழ் நடத்திய புதினப் போட்டிப் பரிசு, தமிழக அரசின் பரிசு (இருமுறை), காரைக்காலில் நடைபெற்ற 3 ஆம் ஆண்டு இலக்கியப் பெருவிழாவில் பாராட்டு விருது ஆகியன இவரைச் சிறப்பித்தனவாகும். 2001ஆம் ஆண்டில் சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் இவரது இலக்கியப்பணியைப் பாராட்டித் ‘தமிழவேள் விருது’ வழங்கிச் சிறப்பித்தது. 2012ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் உயரிய பண்பாட்டு விருது(Cultural Medallion) இவருக்கு வழங்கப்பட்டது.

  1939-ஆம் ஆண்டு சென்னையில் வெற்றிலை வணிகருக்கு மகனாகப் பிறந்த சாலி, 25 அகவையில் தமிழ் முரசு நாளிதழில் துணை ஆசிரியராகப் பணிபுரிவதற்காக சிங்கப்பூர் சென்றார். பின்னர் சிங்கப்பூரில் உள்ள உள்ளூர் தொலைகாட்சி நிறுவனத்திலும் பணியாற்றினார்.

  கடந்த 2000 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற பின்னர் முழு நேர எழுத்துப் பணியில் கவனம் செலுத்தி வருகிறார் சாலி மனைவி மற்றும் 28 அகவை மகனுடன் சிங்கப்பூரில் வாழ்ந்து வருகிறார்.சாலி. “இந்தியாவில் உள்ள இதழ்கள் தொடர்ந்து எழுதுமாறு என்னை வலியுறுத்தி வருகின்றன. அவர்கள் போதும் என்று சொல்லும் வரை நான் தொடர்ந்து எழுதுவேன்” எனச் சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் சாலி.

  சாலியின் அண்ணன் உசைன் அவர்களும் மிகவும் சிறந்த எழுத்தாளர்.

  விருதாளர் சாலிக்கு அகரமுதல மின்னிதழ் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து மகிழ்கிறது.

 – நன்றி : மாலைமலர், இந்து,  தமிழ் முரசு (சிங்கப்பூர்), விக்கிபீடியா

(படங்களை அழுத்தினால் பெரிதாகக் காணலாம்.)