சிங்கார வேலர் விருது : நோக்கத்தைத் தெளிவு படுத்துக!

அறிஞர்களையும் ஆன்றோர்களையும் அரசு மதிக்க வேண்டும். அதன் அடையாளமாகத்தான் தமிழக அரசு விருதுகள் பலவற்றை வழங்கி வருகிறது; திருவள்ளுவர் திருநாள் விருதுகள் எனவும் சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகள் எனவும் இரு நிலைகளில் வழங்குகிறது.

அவ்வப்பொழுது புதிய விருதுகளை அறிவிப்பதுபோல் இவ்வாண்டு புதியதாகவும் சில விருதுகளை அறிமுகப்படுத்துகிறது.

 1. திருவள்ளுவர் விருது (1986 முதல்)
 2. மகாகவி பாரதியார் விருது (1997 முதல்)
 3. பாவேந்தர் பாரதிதாசன் விருது (1978 முதல்)
 4. தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது (1979 முதல்)
 5. கி.ஆ.பெ. விசுவநாதம் விருது (2000 முதல்)
 6. பெருந்தலைவர் காமராசர் விருது (2006 முதல்)
 7. பேரறிஞர் அண்ணா விருது (2006 முதல்)

ஆகியன திருவள்ளுவர் திருநாளன்று வழங்கப்பெறும் விருதுகளாகும்.

 

 1. தமிழ்த்தாய் விருது (2012 முதல் தமிழ் அமைப்புகளுக்கு வழங்கப்படும் விருது)
 2. கபிலர் விருது (2012 முதல்)
 3. உ.வே.சா விருது (2012 முதல்)
 4. கம்பர் விருது (2013 முதல்)

5.சொல்லின் செல்வர் விருது (2013 முதல்)

 1. உமறுப் புலவர் விருது (2014 முதல்)

7 சி.யு.போப்பு விருது (2014 முதல்)

 1. இளங்கோவடிகள் விருது (2015 முதல்)
 2. முதலமைச்சர் கணினித் தமிழ் விருது (2013 முதல்)
 3. அம்மா இலக்கிய விருது (2015 முதல்)
 4. சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது (2015 முதல்)
 5. சிங்காரவேலர் விருது (2018 முதல்)
 6. தமிழ்ச்செம்மல் விருது (2015 முதல்)(விருதுகள் மாவட்டந்தோறும் வழங்கப்பெறுவன)
 7. அயோத்திதாசர்பண்டிதர் விருது (2019 முதல்)
 8. மறைமலை அடிகளார் விருது (2019 முதல்)

ஆகியன சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு வழங்கப்பெறுவன.

விருதுகள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ப்பணியாற்றுநர், தமிழ் அமைப்புகள், ஆன்றோர்கள் என்ற வகைகளில் வழங்கப்பெறுகின்றன. இவற்றுக்கான தகுதி வரையறைகளையும் அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், புதியதாக அறிமுகப்படுத்தி இவ்வாண்டு முதல் வழங்கப்பெற உள்ள சிங்கார வேலர் விருதிற்கான வரையறை  தொடர்பற்று உள்ளது.

“தமிழில் அறிவியல் கருத்துக்களை நூலாக எழுதுபவர்களிலும், சமுதாய முன்னேற்றத்திற்காகவும், சமத்துவ கொள்கைக்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும் போராடுபவர்களிலும் சிறந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் சிங்காரவேலர் விருது என்ற புதிய விருது வழங்கப்படும். (விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)” என்பது அரசின் அறிவிப்பு.

அறிவியல் கருத்துகள் அடிப்படை என்பது புலமை சார்ந்தது.

மன்பதை நலன் சார்ந்த செயல்பாட்டு அடிப்படையில் வழங்கப்பெறுவது போராட்டம் சார்ந்தது.

இரண்டையும் இணைப்பது முரணல்லவா?

அறிவியல் தமிழுக்கான விருது என்றால் சிங்கார வேலர் அறிவியல் தமிழ் விருது என்று அறிவித்து வழங்க வேண்டும்.  இல்லையேல் போராட்டச் செயற்பாட்டாளர்களுக்கான விருது என்றால் பொதுவாகவே வழங்கலாம். ஆனால், இவ்வாறு இரண்டையும் இணைப்பதால், பொதுவாக அரசியல்வாதிகளுக்கே இவ்விருது வழங்கப்பெறும் சூழல் ஏற்படும். அறிவியல் தமிழ் புறக்கணிக்கப்படும். அறிவியல் தமிழுக்காக உழைப்பவர்களைப் புறக்கணிப்பது தவறாகும்.  ஒருவேளை அறிவியல் தமிழ்ப் படைப்புகள் அடிப்படையில் வழங்கப்பட்டால், போராட்டச் செயற்பாட்டாளர்கள் புறக்கணிக்கப்பட்டவர்களாவர்.

சமத்துவம், பொதுவுடைமை, தமிழியல் ஆகிவற்றில் தனக்கென தனிமுத்திரைப் பதித்த தகைமையாளர் தமிழறிஞர் அயோத்திதாசப் பண்டிதர் பெயரில் அவர்தம் இலட்சிய நோக்கோடு செயன்மையாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் அயோத்திதாசப் பண்டிதர் விருது வழங்குவதாகவும்” அறிவித்து உள்ளார்கள். இப்புதிய விருது செயற்பாட்டாளர்களுக்கான விருதாகக் கருதிக் கொள்ளலாம்.

எனவே, சிங்காரவேலர் விருது என்பதை அறிவியல் தமிழ் படைப்புகளுக்கான விருதாக மட்டும் வரையறுத்துக் கொள்ளலாம். இல்லையேல் சிங்காரவேலர் பெயரில் இருவகை விருதுகள் வழங்கப் பெற வேண்டும். ஒருவர் பெயரில் மட்டும் ஒரே துறை சார்பில் இருவகை விருதுகள் வழங்குவது சரியாகாது. எனவே, இதனை எண்ணிப்பார்க்கக் கூடாது.

முந்தைய முதல்வர் புரட்சித்தலைவி செ.செயலலிதா,  அறிவியல் தமிழை வகுப்பு தோறும் அறிமுகப்படுத்தினார். (என்றாலும் கல்வித்துறையின் ஈடுபாடின்மையால் இது செயல்படவில்லை.) அறிவியல் தமிழைக் கட்டுரை மூலமும் முழக்கம் மூலமும் மக்களிடையே கொண்டு சென்றார்.  தி.மு.க. ஆட்சியில் முதல்வர் கலைஞர் கருணாநிதி ‘அறிவியல் தமிழ் மன்றம்’ எனத் தனி அமைப்பையே ஏற்படுத்தினார். (வழக்கமான கட்சி அரசியலில் இதன் செயல்பாடு நிறுத்தப்பட்டது.) இவ்வாறு இப்போதைய ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் அறிவியல் தமிழில் ஆர்வம் காட்டும் பொழுது அறிவியல் தமிழைச் சிறப்பிக்கும் வகையில் விருது அமைவதுதான் சிறப்பாகும். அறிவியல் தமிழில் அரசு தனிக் கருத்து செலுத்துவதே, அறிவியல் வளர்ச்சிக்குப் பெரிதும் துணை நிற்கும்.

அதே நேரம் பலரும் அறிவியல் கட்டுரைகளைப் பிற மொழிச் சொற்கள் கலந்தே எழுதி வருகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி இட வேண்டும். எனவே, அறிவியலை நற்றமிழில் படைப்போர்களை முதன்மைப்படுத்தும் வகையில் விருது அமைவதே சிறப்பாகும்.

எனவே, சிங்கார வேலர் விருது அறிவியல் தமிழ்ப் படைப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில் அமையும் என அரசு திருத்த அறிவிப்பை வெளியிட வேண்டுகிறோம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல