சித்திரை முழுமதி நாளில்

தொல்காப்பியர் நாள்

கோவிலூர் திருமடமும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து  2010இல் நடத்திய தொல்காப்பியர் கால ஆராய்ச்சிக் கருத்தரங்கத்தில் தொல்காப்பியர் காலம் கி.மு.711 என்றும் சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியத்தை அரங்கேற்றினார் என்றும் அந்நாளையே தொல்காப்பியர் பிறந்த நாளாகக் கொள்ள வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இதனை அரசிற்குத் தெரிவித்து அப்பொழுது நடைபெற இருந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அறிவிக்கும்படியும் அரசிற்கு வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால், திருவள்ளுவர் ஆண்டிற்கும் இதற்கும் குழப்பம் வந்து விடுமோ என்ற ஐயத்தில் இருந்த அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி தமிழறிஞர்கள் எதிர்பார்த்தவாறு அதனை அறிவிக்க வில்லை.

எனினும் எனினும் இப்பொழுது சித்திரை முழுமதிநாளில் தொல்காப்பியர் நாளைச் சிறப்பிக்க அரசு ஆணையிட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது. முதல்வருக்கும் தமிழக அரசிற்கும் நம் பாராட்டுகள்!

அரசாணை த.வ.செ.(த.வ.12)து.  நிலை எண் 148 நாள் 15.11.2019 இல்  சித்திரை முழுமதி நாளில் – இவ்வாண்டு சித்திரை 24, 2051 – 07.05.2020 அன்று – சென்னை கடற்கரைச்சாலையில் உள்ள சென்னைப் பல்கலைக்கழக வளாகத்திலும் குமரி மாவட்டம் காப்பி(ய)க்காட்டிலும் உள்ள தொல்காப்பியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி சிறப்பிக்க அரசு ஆணை இட்டுள்ளது.

ஆனால், இதற்கு முந்தைய தொல்காப்பியர் சிலைகளையும் சிறப்பிப்பதே முறையாகும். இவற்றையும் உள்ளடக்கி அரசு மற்றோர் ஆணை பிறப்பிக்க வேண்டும்.

தொல்காப்பியரைப் போற்றுவதற்கு அரசிடம் திட்டம் ஏற்கப்பட்டும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. தொல்காப்பியர் புகழரங்கம் முதலான ஐந்து புகழரங்கங்கள் நிறுவுவதாகச் சட்ட மன்றத்தில் அப்போதைய கல்வி அமைச்சர் தம்பிதுரை கலைபண்பாட்டுத் துறை,  கொள்கை விளக்கக்குறிப்பு 2001-2002 கோரிக்கை எண் 51இல்  அறிவித்தார்.  அதற்கான இடம் தேடுதல் தொடர்பான தொடக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் எதுவும் அமைக்கப்படவில்லை.

  “தொல்காப்பியர் புகழரங்கம் சென்னையிலும், இளங்கோவடிகள் புகழரங்கம் கோயம்புத்தூரிலும் சைவக் குரவர்களுக்கான புகழரங்கம் மதுரையிலும் ஊரகக் கலை வல்லுநர்களுக்கான புகழரங்கம் திருநெல்வேலியிலும் பரதநாட்டியக்கலை வல்லுநர்களுக்கான புகழரங்கம் தஞ்சாவூரிலும் அமைக்கப்படும்” என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்த அரசிற்குப்பல முறை முறையீடு செய்தோம்.

அரசு போற்றும் புரட்சித்தலைவி செ.செயலலிதா முதல்வராக இருந்த பொழுது வெளியிட்ட அறிவிப்பைச் செயல்படுத்தாமல் புதிய அறிவிப்பாகத் தொல்காப்பியர் சிலை  சென்னையில் நிறுவப்படும் என 2018 நிதி நிலை அறிக்கையில் அறிவித்தனர். இதன்படி மார்ச்சு 2019இல் தொல்காப்பியர் சிலை திறந்து வைக்கப்பட்டது. (எனினும் தொல்காப்பியர் புகழரங்கம் நிறுவ அரசிற்குத் தொடர்ந்து முறையீடு அனுப்பப்படும். அல்லது சட்டமன்றத்தில்  உறுப்பினர்கள் கேட்டு உறுதி மொழி வாங்கப்படும்.) தலைநகரத்தமிழ்ச்சங்கம் சார்பில் தொல்காப்பியர்சிலை சென்னையில் நிறுவ இசைவும் இடமும் வேண்டித் தமிழ்க்காப்புக்கழகமும் அரசிடம் முறையிட்டது. அரசே தொல்காப்பியர் சிலை நிறுவியதில் மகிழ்ச்சி.

அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை சார்பில் தலைநகரத் தமிழ்ச்சங்கம் முதலான தமிழ் அமைப்புகளின் முன்னெடுப்புடன் கன்னியாகுமரி மாவட்டம் காப்பிக்காட்டில், தொல்காப்பியர் படிமம் கால்கோள் விழா சித்திரை 20, 2046 / மே 03, 2015 அன்று நடைபெற்றது. ஆனி 26, 2047 /10.07.2016  அன்று தொல்காப்பியர் சிலை நிறுவப்பட்டது. அண்மையில் நிறுவப்பட்ட முதல் தொல்காப்பியர் சிலை இதுதான்.

1981 ஆம் ஆண்டு மதுரையில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற பொழுது க.க.நகரில் (இப்போது நீதிமன்றம் எதிர்ப்புறம் உள்ள சாலைப்பிரிவில் தோரணவாயில் முன்னால், தொல்காப்பியர் சிலை அமைக்கப்பட்டது.

செம்மொழி காத்த செம்மல் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார் ஆவணி 25, 1942 / செப்.10, 1911 அன்று குன்னூரில் நூலகம் அமைத்து அங்கே தொல்காப்பியர் சிலையை நிறுவியுள்ளா்(தினஇதழ் நாள் மாசி 07, 2046 வியாழன் 19.02.15 பக்கம் 15). அதன் நிலை என்ன என்று தெரியவில்லை.

இத் தொல்காப்பியர் சிலையை அறிந்து தூய்மைப்படுத்தி நன்கு பேணுவதற்கு நடவடிக்கை எடுத்து அதையும் திருத்தப்படும் ஆணையில் சேர்க்க வேண்டும்.

சென்னை, குமரி மாவட்ட ஆட்சியர்களுக்கு மகுடைச் சூழலில் தமிழன்பர்களை வரவழைப்பதற்கு வாய்ப்பின்மையால், தொல்காப்பிய நூற்பாக்கள் சிலவற்றை ஓதச் செய்யலாம் எனத்தெரிவித்து மின்னஞ்சல்கள் அனுப்பியுள்ளோம். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தொல்காப்பிய ஒலிப்பேழைகளை வெளியிட்டுள்ளது. அவற்றை அங்கிருந்து பெறலாம். அதற்கு வாய்ப்பில்லையேல் அந்நிறுவனத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தோம். இருவரையும் தொடர்பு கொள்ள முயன்ற பொழுது சென்னை ஆட்சியர், ஆட்சியகத் தொலைபேசிகள் இணைப்பு கிடைக்கவில்லை.

குமரி மாவட்ட ஆட்சியர் தவறாமல் மாலை அணிவித்துச் சிறப்பிப்பதாகத் தெரிவித்தார். மூவாப்புகழ் தொல்காப்பியரை நினைந்து போற்றும் அன்று தொல்காப்பியம் அரங்கேறிய பொழுது புலவர் அவைத்தலைவராக இருந்த அதங்கோட்டாசான் சிலை கேட்பாரற்று இருப்பது சிறப்பாக இருக்காது. எனவே, அதங்கோட்டில் உள்ள அதங்கோட்டாசான் சிலையைத் தூய்மை செய்யும் அப்பகுதி அதிகாரி மூலம் மாலை அணிவிக்கவும் ஏற்பாடு  செய்யுமாறும் வேண்டினேன். மின்னஞ்சலைப்பார்த்து உரியவாறு செய்கிறேன் என்றார். அன்புடன் செவிமடுத்த குமரி மாவட்ட ஆட்சியர் திரு பிரசாந்து எம்.வாடுநெர் இ.ஆ.ப. (Prashant M. Wadnere I.A.S.)அவர்களுக்குப் பாராட்டுகள்!

ஆட்சியருக்கு நினைவூட்டுமாறு தெரிவித்த தலைநகரத் தமிழ்ச்சங்க நிறுவனர் புலவர் த.சுந்தரராசனிடம் சிலைக்கு மாலை அணிவிக்கும் பொழுது தொல்காப்பிய நூற்பாக்கள் ஐந்து ஓதுமாறும் தெரிவித்துள்ளேன்.

தொல்காப்பியர் நாளில் மதுரையில் உள்ள தொல்காப்பியர் சிலைக்கும் மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் சிறப்பிக்க வேண்டும். எனவே, இது குறித்து மதுரை ஆட்சியருக்கும் மின்னஞ்சல் அனுப்பினோம். அவருடன் தொடர்பு கொள்ள முயன்ற பொழுது அவர் வெளிப்பணிகளுக்குச் சென்றிருந்தமையால் அணுக்க உதவியாளரிடம்தான் பேச முடிந்தது. அவரிடம் விவரத்தைத் தெரிவித்தேன்.

மேலும் தொல்காப்பியர் சிலை சிறப்பிக்கப்படுகையில் மதுரையில் உள்ள பிற புலவர்களின் சிலைகளுக்கும் அந்தப்பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் மூலம் மாலை அணிவிக்க ஏற்பாடு செய்வது தமிழ்ப்புலவர்களைப் போற்றுவதாகும்.

இவைபோல்  தமுக்கம் திடலின் முன்புறம் சங்கப்புலவர் நினைவுத் தூண் உள்ளது. தமிழன்னைச் சிலையைப் போற்ற ஆணை பிறப்பித்த அரசு இதனைக் கவனிக்காமல் விட்டுள்ளது. (இடைச்)சங்கப்புலவரான தொல்காப்பியர் சிலையைச் சிறப்பிக்கும் பொழுது சங்கப்புலவர்களின் நினைவுத்தூணைப் புறக்கணிப்பது முறையில்லை யல்லவா? ஆதலின் சங்கப்புலவர் நினைவுத்தூணில் மலர் தூவிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

அரசின் ஒதுக்கீடு இல்லை என்றாலும் சிறப்பிக்க முடியும். அரசாணை இல்லாமல் எப்படி ஆட்சியர் சிறப்பிப்பார் என எண்ணக் கூடாது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அருந்தமிழ்ப்புலவரைப்  போற்றுவதற்கு அரசாணை தேவை என்பதில்லை. முன்நிகழ்வுகள் நினைவை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

மதுரையில் நான் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநராக இருந்த பொழுது 1991இல் சித்திரைப் பொருட்காட்சியின் தொடக்க விழாவன்று தமிழன்னை சிலைக்கும் சங்கப்புலவர் நினைவுத்தூணுக்கும் மின்னொளி ஏற்பாடு செய்து பேரவைத்தலைவர் சேடப்பட்டி இரா.முத்தையா, அமைச்சர்  பெருமக்கள் முதலானோரால் மாலை அணிவிக்கச் செய்தேன். தமிழன்னை சிலையைவாவது கேள்விப்பட்டுள்ளோம். சங்கப்புலவர் நினைவுத் தூண் இருப்பதை  இப்பொழுதுதான் அறிய வருகிறோம் என்றனர். அந்த அளவிற்கு மக்களால் மறக்கப்பட்டிருந்தது. 

ஆனால் அதன் பின்னர், மக்கள் தொடர்பு அலுவலகம் மூலம் தமுக்கம் திடலில் எந்நிகழ்ச்சி நடந்தாலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால், இருண்டு கிடக்கும் தமிழன்னை சிலையையும் சங்கப்புலவர் நினைவுத்தூணையும் மின்னொளியால் அழகு செய்து ஒளியூட்ட நடவடிக்கை எடுத்தேன். அவர்கள் ஒத்துழைப்பால் இதுவரை இவை புறக்கணிக்கப்படாமல் உள்ளது.

அதுபோல் மாவட்ட ஆட்சியகம் முன்புறம் சாலைப்பிரிவின் நடுவில் உள்ள திருவள்ளுவர் சிலை யாராலும் அறியப்படாமல் கட்சிக்கொடிகளைக் கட்டும் இடமாகவும் சுவரொட்டி ஒட்டும் பீடமாகவும்தான் இருந்தது. 1991 தை 2 அன்று தமிழ் அமைப்புகளின் ஒத்துழைப்புடன் மாலை அணிவித்ததும்தான் பொதுமக்கள் திருவள்ளுவர் சிலை இருப்பதையே அறிந்தார்கள்.

மதுரையில் உள்ள புலவர்கள் சிலைகளை மதுரை மாநகராட்சியினர் என் வேண்டுகோளை ஏற்று, திங்கள்தோறும் தூய்மைப்படுத்தினர். இவற்றை நினைவுகூர்வதன் மூலம் அரசின் செலவினத்தை எதிர்நோக்காமல் மாவட்ட ஆட்சியகமும் மாநகராட்சியும அப்பொழுது பணியாற்றியதுபோல் இப்போதும் இயலும் என்ற நம்பிக்கை உள்ளது.

“தொல்காப்பியரின் காலத்தை அறிவிக்க வேண்டும்!”  என என் செவ்வி(பேட்டி)க் கட்டுரையில் “மதுரையில் 1981 தமிழ்மாநாட்டின்போது வைக்கப்பட்ட தொல்காப்பியர் சிலை வேப்பமரம் மூடியபடி இருக்கிறது இன்று!” எனக் குறிப்பிட்டிருந்தேன்(ஆரா, தமிழக அரசியல் தொகுப்பு 6: இதழ்29 நாள் 19.02.2014). அதனடிப்படையில் நான் மாவட்ட ஆட்சியருக்கும் உலகத்தமிழ்ச்சங்கம்/தமிழ்வளர்ச்சித்துறைக்கும் மடல் அனுப்பினேன். உலகத்தமிழ்ச்சங்கத் தனி அலுவலர் முனைவர் பசும்பொன், தானே உரிய ஏற்பாடு செய்துதருவதாகக் கூறி மூடப்பட்ட மரக்கிளைகளை அகற்றி மக்கள் பார்க்கும்படி மாற்றினார். 

ஆதலின் மதுரையில் தொல்காப்பியர் சிலைக்கு மாலை அணிவிப்பதுடன் அச்சிலை தொடர்ந்து பேணப்படவும், தமிழ்ப்புலவர்கள், சங்கப்புலவர் நினைவுத் தூண் ஆகியவற்றில் மாலை அணிவிக்கவும் ஆவன செய்வது சிறப்பாக இருக்கும்..

சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் பொழுது கட்சிகளுக்குச் சிலைகளை ஒதுக்குவதுபோல் அல்லாமல் எல்லாத் தொல்காப்பியர் சிலைகளும் மதிக்கப்பட வேண்டும்.

ஒல்காப்புகழ் தொல்காப்பியர் புகழ்பாடி ஒண்டமிழ் வளர்ப்போம்!

 

இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை-அகரமுதல நாள் சித்திரை 24, 2051 – 07.05.2020