(தமிழ் வளர்த்த நகரங்கள் 9 – அ. க. நவநீத கிருட்டிணன்: நாயக்கர் அணிசெய்த மதுரை – தொடர்ச்சி)

6. தமிழ் வளர்த்த மதுரை கடைச்சங்கம்

பைந்தமிழை வளர்த்தற்காகப் பாண்டியர் அமைத்த சங்கங்களில் மூன்றாம் சங்கமாகிய கடைச் சங்கம் இன்றைய மதுரையிலேயே இருந்தது. “தமிழ் நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை” எனவரும் சிறுபாணாற்றுப்படை அடிகளால் இச்செய்தி வலியுறுவதாகும். இங்குத் ‘தமிழ் நிலை’ யென்று வரும் தொடர் தமிழ் நிலையமாகிய தமிழ்ச் சங்கத்தையே குறிப்பதாகும். இறையனர் களவியல் உரைப் பாயிரத்தால் கடைச்சங்கத்தைப் பற்றிய செய்திகள் விளக்கமாகத் தெரிகின்றன.

இன்றைய மதுரைமாநகரில் முடத்திருமாறன் என்னும் பாண்டியன் கடைச்சங்கத்தை நிறுவினன். இதன்கண் மதுரைக் கணக்காயனர் மகனார் நக்கீரனார் முதலாக நாற்பத்தொன்பது புலவர்கள் இருந்து தமிழை ஆராய்ந்தனர். அவரை உள்ளிட்டு நானுாற்று நாற்பத்தொன்பது புலவர்கள் அச் சங்கத்தில் இருந்து தமிழை வளர்த்தனர். கடைச்சங்கத்தின் இறுதிக்காலத்தில் உக்கிரப்பெருவழுதி என்னும் பாண்டியன் விளங்கினான். அவன் புவியரசாகவும் கவியரசாகவும் திகழ்ந்தான். இச் சங்கத்தில் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித் தொகை, பரிபாடல் ஆகிய தொகை நூல்கள் எட்டும் தோன்றின. பத்துப்பாட்டும் பதினெண்கீழ்க்கணக்கும் இச்சங்கத்தில்தான் எழுந்தன.

நாலடியார் தோன்றிய நலம்

இத்தகைய கடைச்சங்கத்திற்குப் பின்னர்ப் பன்னூறு ஆண்டுகளாக மதுரைமாநகரில் தமிழ்ச்சங்கம் நிலவாதொழிந்தது. உக்கிரப்பெருவழுதியின் காலத்திற்குப் பின்னர் வந்த பாண்டிய மன்னர்கள் சங்கம் நிறுவித் தமிழை வளர்க்காது போயினர். ஐந்தாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் புகுந்த சமணரும் பெளத்தரும் தத்தம் சமயச் சார்புடைய சங்கங்களை மதுரை மாநகரில் தோற்றுவித்தனர். அவற்றின் வாயிலாகப் பல நூல்க ளை ஆக்கித் தமிழை வளர்த்தனர். ஏழாம் நூற்றாண்டில் மதுரை மாநகரைச் சூழ்ந்து வாழ்ந்து வந்த எண்ணாயிரம் சமணர்கள் பாண்டியன் ஆதரவில் இருந்தனர். அவர்கள் அனைவரும் தமிழ்வல்ல புலவராய் விளங்கினர். அவர்கள் வடநாட்டிலிருந்து வற்கடம் காரணமாகத் தென்னாடு புகுந்தவர். அவர்கள் தம் நாட்டில் மழைவளம் பொழிந்து செழித்ததும் மீண்டும் ஆங்குச் செல்லப் பாண்டியனிடம் விடை வேண்டினர்.
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்”

என்பார் திருவள்ளுவர் . கற்றவராகிய சமணர்களைப் பிரிவதற்கு மன்னன் பெரிதும் வருந்தினான். அவனது துயரத்தைக் கண்ட சமணர்கள் அவன்பால் சொல்லிக் கொள்ளாமலே நள்ளிருளில் தம் நாடுநோக்கி நடந்தனர். அவர்கள். மதுரைமாநகரை விட்டுப் புறப்படுங்கால் தாம் தங்கிய இடத்தில் தனித்தனியே ஒரு நாலடிப் பாடலை ஏட்டில் எழுதிவைத்து மறைந்தனர். மறுநாட் காலையில் செய்தியறிந்த மன்னன் அவர்கள் இருந்த இடத்தை நேரில் சென்று கண்டான். ஆங்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடலை எழுதிவைத்திருப்பதைக் கண்டு எடுத்து நோக்கினான். அவை ஒன்றோடொன்று தொடர்பில்லாதனவாய் இருத்தலைக் கண்டான். அவற்றையெல்லாம் எடுத்து வையையாற்று வெள்ளத்தில் வீசுமாறு பணித்தான். அங்ஙனமே ஏவலாளர் செய்தனர். ஆற்றில் எறிந்த ஏடுகளில் நானூறு ஏடுகள் மட்டும் வெள்ளத்தை எதிர்த்துக் கரை சேர்ந்தன. அவற்றை ஏவலாளர் ஒருங்குசேர்த்துப் பாண்டியனிடம் கொண்டுவந்து கொடுத்தனர். அவற்றை நோக்கிய போது அவை ஒன்றோடொன்று தொடர்பு கொண்டன வாய்த் தோன்றின. உடனே பதுமனார் என்னும் பைந்தமிழ்ப் புலவரைக் கொண்டு அந் நானூறு பாடல்களையும் வகைப்படுத்துத் தொகுத்தான். அதுவே நாலடி நானூறு என்றும் நாலடியார் என்றும் பெயர் பெற்றது. இந் நிகழ்ச்சி உக்கிரப்பெருவழுதியின் காலத்தே நிகழ்ந்தது என்று உரைப்பாரும் உளர். இதனை விளக்கும் பழைய பாடல் ஒன்று உள்ளது.
மன்னன் வழுதியர்கோன் வையைப்பேர் ஆற்றின்
எண்ணி யிருநான்கோ டாயிரவர்-உன்னி
எழுதியிடும் எட்டில் எதிரே நடந்த
பழுதிலா காலடியைப் பார்.”

நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகச் சேர்க்கப்படினும் அது பிற்காலத்து எழுந்ததே. அது திருக்குறளுக்கு ஒப்பாக வைத்து மதிக்கப்பெறும் நீதிநூலாகும். அதனாலேயே திருக்குறளையும் நாலடியாரையும் சேர்த்துப் பாராட்டும் பழமொழிகள் எழலாயின. ‘ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி,’ ‘பழகுதமிழ்ச் சொல் லருமை நாலிரண்டில்’ என்னும் பழமொழிகள் அவ் உண்மையை நன்கு விளக்கும். இதனை, ‘வேளாண் வேதம்’ என்றும் ஒதுவர். இந்நூல் மதுரைமாநகரில் எழுந்த மாண்புடையதே.

இறையனார் வளர்த்த இன்றமிழ்

இனி மதுரைமாநகரில் எழுந்தருளிய சோம சுந்தரப்பெருமான் தன்னை வழிபட்ட தொண்டர் இருவர்க்குத் தண்டமிழ்ப் பாடல்கள் எழுதிக்கொடுத்தான். தருமி என்னும் அந்தணாளனுக்குப் பாண்டியன் சங்க மண்டபத்தில் தொங்கவிட்ட பொற்கிழியைப் பரிசாகப் பெறுதற்குரிய அரிய தமிழ்ப் பாடல் ஒன்றைப் பாடிக்கொடுத்தான். அது குறுந்தொகை என்னும் பழந்தமிழ் நூலில் இடம்பெற்றுள்ளது. கற்புடைய மகளிரின் கருங்கூந்தலுக்கு இயற்கையாகவே நறுமணமுண்டு என்று வலியுறுத்தும் அப் பாடல் ‘நலம் பாராட்டல்’ என்னும் அகத்துறையில் அமைந்த அழகிய பாடலாகும்.
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற்(று) அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீஅறியும் பூவே ?”

இறைவன் அருளிய இப் பாடலில் கடைச்சங்கத் தலைமைப் புலவராகிய நக்கீரர் பொருட் குற்றங் கண்டார். புலவனாக வந்த இறைவனிடம் நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே என்று சொல்லி அஞ்சாது வாது செய்தார்.

மதுரைத் திருக்கோவிலில் நாளும் யாழிசையால் பண்ணமையப் பாடிப் பரவிய பாணபத்திரன் என்னும் யாழ்வல்ல தொண்டரின் வறுமையைப் போக்கப் பெருமான் திருவுளங் கொண்டான். அந்நாளில் சேர நாட்டை யாண்ட சிவபத்தனாகிய சேரமான் பெருமாள் என்னும் மன்னர்பெருமானுக்குத் திருமுகம் கொடுத்தனுப்பினான். ஒலையைத் திருமுகம் என்றுரைத்தல் மரபு. அத் திருமுகத்தில் எழுதப்பெற்ற பாடல் திருமுகப்பாசுரம் எனப்படும். இதனைப் பிற்காலத்தவர் சீட்டுக்கவி என்பர். இது சைவத் திருமுறைகளுள் ஒன்றாகிய பதினேராம் திருமுறையில் முதற் பாடலாக விளங்குகிறது.

பொருள் இலக்கணம் வல்ல புலவரைக் காணோமே என்று கலங்கிய பாண்டியனது கலக்கத்தை யகற்றக் களவியல் இலக்கணத்தை மூன்று செப்பிதழகத்து எழுதிக்கொடுத்தான் ஆலவாய்க் கடவுள். அதுவே இறையனர் களவியல் என வழங்குவது.

குமரகுருபரர் வளர்த்த தமிழ்

முந்நூறு ஆண்டுகட்கு முன்னர்த் தென்பாண்டி நாட்டிலுள்ள திருவைகுண்டம் என்னும் பதியில் தோன்றியருளிய அருட் கவிஞராகிய குமரகுருபரர், மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சிபுரிந்த காலத்தில் இக் நகருக்கு எழுந்தருளினார். அவர் மதுரையின் தென்பால் அமைந்த திருப்பரங்குன்றில் எழுந்தருளிய செவ்வேளைப் பணிந்து ஆங்கிருக்கும்போது மதுரை மீனாட்சியம்மைமீது பிள்ளைத் தமிழ் நூலொன்று பாடினர். அதனை உணர்ந்த, மீனாட்சியம்மை, நாயக்க மன்னர் கனவில் தோன்றிக் குமரகுருபரரை அழைத்து வந்து பிள்ளைத்தமிழைத் தம் சந்நிதியில் அரங்கேற்று மாறு பணித்தருளினார்.

அவ்வாறே மறுநாட் காலையில் திருமலை நாயக்கர் பல்லக்கு ஒன்றை யனுப்பித் திருப்பரங்குன்றில் தங்கி யிருக்கும் அருட் கவிஞராகிய குமரகுருபரரை அழைத்து வருமாறு ஏவலரைப் பணித்தார். அவரை அன்புடன் வரவேற்று மீனாட்சியம்மையின் திருமுன்பு பிள்ளைத் தமிழ்நூலை அரங்கேற்றுமாறு பணிவுடன் வேண்டினார். பிள்ளைத்தமிழ் அரங்கேற்றம் நடைபெற்றது. அந்நூலின் வருகைப் பருவத்துப் பாடல்களைக் குமர குருபரர் அகங்குழையப் பாடிப் பொருள் விரித்த பொழுது, மீனாட்சியம்மை ஒரு பெண் குழந்தையாக நாயக்க மன்னர் மடியில் வந்தமர்ந்து மகிழ்வுடன் கேட்டருளினர். அப் பருவத்தின் ஒன்பதாவது பாடலாகிய ‘தொடுக்குங் கடவுட் பழம்பாடல்’ என்று தொடங்கும் பாடலை அவர் இனிமையாக மனமுருகப் பாடிப் பொருள் விரித்து முடிந்ததும், மீனாட்சியம்மை மன்னர் கழுத்தில் அணிந்திருந்த முத்தாரத்தைக் கழற்றிக் குமரகுருபரர் கழுத்தில் அணிந்து அருள்செய்து மறைத்தார். இந்த அற்புதத்தைக் கண்டு மன்னரும் மக்களும் பெருவியப்புற்றனர்.

(தொடரும்)
அ. க. நவநீத கிருட்டிணன்
தமிழ் வளர்த்த நகரங்கள்