சிறந்தவாழ்க்கை01 : siranthavaazhkkai01 சிறந்தவாழ்க்கை02 :siranthavaazhkkai02

சிறந்த வாழ்க்கை வாழுங்கள் !

  சிறந்த வாழ்க்கை சொல்லும் பொழுது எவ்வளவு அழகாக இருக்கிறது. நாக்கின் நுனி மேல் அண்ணத்தில் பட்டு ழகரத்தைச் சொல்லும்பொழுது அப்பப்பா அந்த தமிழ்ச் சுவைக்கு ஈடு இணை ஏதுமில்லை. நீங்களும் ஒரு முறை சிறந்த வாழ்க்கைஎன்று சொல்லித்தான் பாருங்களேன், தற்காலிக இன்பத்தைத் தமிழால் துய்த்து மகிழலாம். அதெல்லாம் சரிதான் அதென்ன சிறந்த வாழ்க்கை? அப்பொழுது சிறப்பில்லாத வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறதா? என்று நீங்கள் தற்சமயம் சிந்தனைக் குதிரையைத் தட்டிப் பறக்க விட்டிருப்பீர்கள். சரி, அதை இழுத்துப் பிடித்துக் கட்டி வையுங்கள், நேராக பொருட்சுவைக்குள் அமிழ்வோம்.

  சிறந்த வாழ்க்கை என்பது இப்பொழுது நீங்களும் நானும் வாழ்ந்து கொண்டிருப்பதுதான் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?, வேறு வழியில்லையே நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். இதேபோலத்தான் சிறப்பில்லாத வாழ்க்கை என்பதையும் நாம் தான் வாழ்ந்து வருகிறோம் என்பதையும் ஐயத்திற்கு இடம் கொடுக்காமல் மூக்கின் மீது விரல் வைக்காமல் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். அதெப்படி, குழப்பமாக இருக்கிறது என்கிறீர்களா? வாருங்கள் நம்மை நாமே ஆராய்வோம்.

  சிறப்பான வாழ்க்கை என்பது மன மகிழ்வுடன் இருப்பது இவ்வளவுதான். சிறப்பில்லாதது என்பது நீங்கள் உங்கள் சிறப்பான வாழ்க்கையை ஏதோவொரு சிறு காரணத்தால் தள்ளிவைப்பது. சில நேரங்களில் நாம் கேள்விப்பட்டிருப்பது உண்டு, “உனக்கென்ன அரச வாழ்க்கை வாழ்கிறாய்! வாழ்ந்தால் உன் னை மாதிரி வாழ்க்கை இருக்க வேண்டும்.” என்று. ஆனால் நாம் என்ன வாழ்க்கை இதென்ற முடிவிற்கு வந்திருப்போம். இதே போல நாம் சில நேரங்களில் பிறர் வாழ்க்கையை மிகைப்படுத்தி அவர்கள் இடத்தில் நம்மை வைத்துப் பார்த்து பல முறை ஏங்கியதுண்டு. ஒன்றை மட்டும் நினைவிற் கொள்ளுங்கள் நீங்கள் வேண்டா விருப்பாக இருக்கும் இதே வாழ்க்கையைத்தான் இன்னொருவர் அற்புதம், மகத்துவம் என்றெல்லாம் சொல்கிறார். இது தான் வாழ்வின் சூட்சமமும்.

  இப்படித்தான் நாம் நமது வாழ்க்கையின் அருமையே தெரியாமல் இருக்கும் மகிழ்ச்சியை அறவே தவிர்த்து, அருகில் இருப்பவருடன் இறுக்க மன நிலையைக் கையாண்டு எதையோ தேடிக்கொண்டு யாரைப்போலவோ வாழவேண்டுமென்று சுயம் தொலைத்து துன்பத்தில் உழன்று உழன்று உங்கள் சிறப்பான வாழ்கையைச் சிறப்பில்லாத வாழ்க்கையாக அழகுற மாற்றிவிட்டு ஆபத்தைத் தேடிச் செல்கிறீர்கள். அதே போல ஒவ்வொருவருக்கும் அவரின் நிலைக்கேற்ப ஆசைகளும், வெறுப்புகளும், இருக்கின்றன.. இதைப் பட்டென்று சொல்லவேண்டும் என்றால் “வீட்டுக்கு வீடு வாசற்படி“ என்று சுருங்கச் சொல்லிவிடலாம். ஆனால் பிறரைப் போல வாழவேண்டும் எனும்பொழுது அவர்கள் வாழ்வில் இருக்கும் துன்பத்தையும் சேர்த்தா நினைக்கிறோம்? இல்லைதானே! அதை நீங்கள் இப்பொழுதே உங்கள் வாழ்வில் செய்யலாமே!. உங்களைப்போல் நீங்கள் வாழ விழையுங்கள், துன்பத்தைத் தூக்கி எறியுங்கள். சிறப்பான வாழ்க்கை நீங்கள் வாழ்வதற்கு எவையெல்லாம் தடை என்று சிந்திக்க யாரும் உங்களுக்குச் சொல்லித் தரத்தேவையில்லை. ஏனென்றால் இதுவரையில் நீங்கள் அதை அழகாகச் செய்துள்ளீர்கள்.

சிறப்பாக வாழ்வோம் வாருங்கள் !

முத்திரை-சிறகு :muthirai_chiraku_siragu