[சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை:1/3 தொடர்ச்சி]

சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 2/3

மேலும் கலித்தொகை தரும் பாடல் வரிகள் பொதிந்துள்ள பல நூறு பாடல்களின் ஒரு பாடலில் ‘அரக்கு’பற்றிய செய்தி உள்ளது. அரக்கு பற்றிய செய்தியில் மகாபாரதம் தோன்றிய காலத்தில் அரக்குமாளிகை இருந்ததாக வரும் தகவலின் தொன்மை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்திய மண்ணில் உலவி வருகின்றது. எனினும் மனித வாழ்வுக்கு நற்பயன் தரும் பூச்சிகளில் (தேனீ, பட்டுப்பூச்சி போன்றவை) அரக்குப் பூச்சியும் ஒன்று. 1787 இல் சான்கேர் என்ற பிரெஞ்சு தேசத்து பூச்சியியல் அறிஞர் கண்டு பிடித்து அதன் வாழ்க்கைச் சுழற்சியை உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. ‘காக்சிடே’ என்ற பூச்சிக் குடும்பத்தை சேர்ந்த அரக்குப் பூச்சியின் விலங்கியல் பெயர் இலேக்கிபர் இலேக்கா என்பதாகும். 

ஆனால் அரக்கு பற்றிய சங்கப்பாடல்களில் குறிப்பாக கலித்தொகையில் “பாலைக்கலி” பகுதியில் இடம் பெற்றுள்ள.

‘‘வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்
ஐவர் என்று உலகேத்தும் அரசர்கள் அகத்தராக்
கைபுனை அரக்கு இல்லை கதழ்எரி சூழ்ந்தாங்கு
களிதிகழ் கடாஅத்த கடுங்களிறு அகத்தவா
முளிகழை உயர்மலை முற்றிய முழங்கு அழல்
ஒள்ளுரு அரக்கு இல்லை வளிமகன் உடைத்துத்தன்
எழு. . . . . . கவினே

என்ற பாடலில் அரக்கு பற்றிய விவரம் விரவியுள்ளன. இதில் அரக்கு மாளிகையை நெருப்பு சூழ்ந்துகொண்டபோது பாண்டவர்கள் எப்படி வெளியேறினார்களோ அது மதங்கொண்ட யானை உள்ளே அகப்பட்டுக்கொள்ள அதிலிருந்து அது எப்படி மீண்டதோ அதுபோல் உளது என்றும் யானை தன் கூட்டத்தைக் காப்பாற்ற அத்தீயை மிதித்து அழித்து வெளியேறியது ஒருங்கிணைத்து பாடியுள்ளமை வியப்புக்குரியது எனில் அதுமிகையில்லை.

நெருப்பு போன்ற வெப்பத்தை உமிழும் காடு துடிபோலும் வடிவுடைய கால்களைக் கொண்ட கன்று கலக்கி சேறாக்கி சிறிது நீரையும் காதல் துணையென விளங்கும் பிடிக்கு முன்னே ஊட்டிவிட்டு அதன்பிறகே தான் உண்ணும் களிறும் உளது என்ற காட்சியினையும் தன் அன்பைக் கவர்ந்து கொண்ட மெல்லிய மென்புறா கோடையின் வெப்பத்தில் தளர்ந்து வருந்தும்பொது தனது மெல்லிய சிறகை விரித்து நிழல் அளித்து வெப்பத்தின் தீமையை அதன் தாக்கத்தால் ஏற்பட்ட வருத்தத்தை போக்கும் ஆண்புறாவும் உளது என்ற காட்சியினையும் மலைமேல் வளரும் மூங்கில பட்டுப் போய்விடும் அளவில் கதிரவனின் திரண்ட கதிர்கள் காய்வதால் காட்டுவழியில் செல்லும் போக்கு இயலாது போகும் கொடுமையான தன்மையுடைத்து என்று நினைத்து நிழல் தரும் மரம் இல்லாமையால் வருந்தும் மடப்பம் மிக்க பெண்மானை வெயில் படாமல் தன் உடல் நிழலைக்கொடுத்து பாதுகாக்கும் கலைமானும் உளது என்ற நிகழ்வையும் ஒரே பாட்டில் படம் பிடித்துக் காட்டும் பாங்கு எண்ணி மகிழத்தக்கது. என்பதில் உள்ள நுட்பம் சார்ந்த வனவியலில் தொக்கிநிற்கும உள்ளீட்டு பாத்திர நுணுக்கம் என்பது வாழ்வியல் மேன்மை என்பதே. அதாவது தலைவனின் மேலான பண்பினால் தலைவியின் துன்பம் நீங்கும் என்ற மறைபொருள் நமக்கு முருகியல் நோக்கில் காட்டும் பாடம் என்பதை உணர்த்தத்தான்.

. . . . . . . .
அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையால்
கடியவே. . . . . . . .
பிடியூட்டி பின் உண்ணும் களிறு
என்றும்
‘‘இன்பத்தின் இகந்து ஒரீஇ இலைதீந்த உவமையால்
துன்புறூஉம் தகையவே. . . . . . . .
. . . . . .
மென்சிறகரால் ஆற்றும் புறவு எனவும் உரத்தனரே!
என்றும் கூறப்பட்டுள்ளன.

‘‘கன்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலால்
துன்னரும் தகயைவே காடு. . . . . . . . . . . . .
தன் நிழல் கொடுத்தளிக்கும் கலை எனவும் உரைத்தனரே!

என்ற பாடலில் புறா, யானை, மான் (கடமான்) என்ற மூன்றையும் ஒருங்கிணைத்து காட்டில் வாழ்கின்ற உயிரினத்தின் பாசப்பிணைப்பை வனவியலோடு வாழ்வியலை கலந்து அறிதல் உணர்வாக அன்பின் செழுமையை பாடியமை நமக்கான பண்பாட்டு தடம் ஆகும்.

உயர்ந்த மரங்கள் நிறைந்த வனம். அதில் புலியுடன் மோதிய யானை தன் வலியால் அதனை வென்று தளர்ச்சியோடு மலைச்சாரலில் படுத்துறங்கும்போது கனவிலும் அது நிகழக்கண்டு வெகுண்டெழுந்து தன்முன்னே மலர்ந்து நிற்கும் வேங்கை மரத்தை அந்த புலியாகவே கருதி அதன்மீது சாடிப் பாய்ந்து, அந்த மரத்தை மோதி அழித்து விட்டுச் சினம் குறைந்த பின்னர்த் தன்னுடைய அறியாமையால் வந்த ஆணவத்தால் அழிந்த மரத்தைக்கண்டு அந்த யானை நாணியதாக ஒரு நெகிழ்ச்சியான சித்திரத்தைக் காணும்போது மெய்சிலிர்க்கிறது. அதனை,

‘‘கொடு வரி தாக்கி வென்ற வருத்தமொடு
நெடுவரை மருங்கில் . . . . . கனவில் கண்டு கதும் என வெரீஇய. .

எனும் பாட்டு வரிகளின் மூலம் உணர்த்தும் போக்கு புலவனின் கற்பனைத் திறத்தின் உச்சம் எனலாம்.

முல்லைக் கலியின் முத்தான பாடல் ஒன்றில் கொன்றை, காயா, வெட்சி, பிடவு, முல்லை, கஞ்சாங்குல்லை, குருந்தம். காந்தள், பாங்கர் என்று மலையிலும் மரம் செறிந்த காட்டிலும் மலர்ந்த பல்வகை மலர்களால் ஆன கண்ணியைச் சூடி இளைஞர்கள் கொல்லேறு தழுவுதல் காட்சி நடைபெற்றதை விவரித்த புலவர் பெருந்தகை அதன் பிற்பட்ட பாடலில் வளைந்து வெண்கோடுகளைக் கொண்ட சிவந்த எருதுபோன்ற வீருகொண்டு போரிடவல்ல காளைகள் புகுந்த சிங்கமும் குதிரையும், களிறும், முதலையும் கலந்து போரிடும் மலைச்சாரல் என்று அதனைக் காட்சிப்படுத்தியதை,

‘‘வளையுபு மலிந்த கோடணி சேயும் ….. போலும்”
என்று பாடுவதன் மூலம் மனநிறைவைத் தருகின்றார்.

இதன் முற்பகுதியில் குறிக்கப்பட்டுள்ள மலர்வகையிலும் குறிஞ்சிப்பாட்டின் குறிக்கப்பட்டுள்ள மலர்வகையிலும் ‘‘கஞ்சாங் குல்லை” என்ற மலர் குறிக்கப்பட்டுள்ளதை நாம் நுணுகி பார்த்தால் தற்போதைய அரசியல் சட்டப்படி இநத தாவரம் சட்டவிரோதமாக பயிரிடப்படும் தாவரவகையில் பட்டியலிடப்பட்டுள்ள முதன்மைவகை சட்டவிரோத மனமயக்க மற்றும் போதை பயிர் வகையாக சுட்டப்பட்டுள்ளகஞ்சா’ என்ற செடிவகை தான் இது என்பதை உணரலாம்.

சங்கக் காலத்தில் மகளிர்கள் கூந்தலில் அணியும் மலராகவும் ஆடவர்கள் கழுத்தில் அணியும் மலராகவும் வடிவமைக்கப்பட்டு பட்டியலிடப்பட்ட இத்தாவரம் காலத்தின் அடிச்சுவட்டின் தொன்மை மறந்த காலத்தில் நலம்கெடுக்கும் பூவாக ஒதுக்கப்பட்டு இன்று இத்தாவரம் உலகிலே எங்கும் பயிரிடப்பட்டாலும் அது அனைத்துலக நாடுகளின் போதைத் தடுப்புச் சட்டத்தின் கடும்பிடிக்குள் சிக்கிவிடும் என்பதே இன்றைய வரலாறு நமக்குக் காட்டும் உண்மை என்பதை உணர வேண்டும்.
காதலன் விரைந்து வந்து வரைந்து கொள்ளாது வெளிநாடு சென்று விட்டதால் பெண்ணிய பண்புகளை இழந்து ஓயாது புலம்பிய ஒரு நங்கை காதலன் வரக் கண்டதும் பண்டுபோல் ஆகிவிட்டாள் . இஃதை ஊரார் பார்த்துப் பாராட்டியதை,

‘‘அகலாங் கண் இருள் நீக்கி அணிநிலாத் திகழ்ந்தபின் ……நீத்தான்

என்ற பாடலின் மூலம் வெளிப்படும் கருத்தினை நெஞ்சகத்தில் ஏற்றிப் பார்த்தால் வஞ்ச எண்ணம் கொண்டு நான் வாசித்த யாழ் ஓசை கேட்ட அசுணப்பறவையின் மீது அன்பு காட்டாது அதன் உயிர்போகும் படி பறையறைந்து ஒலி எழுப்பினாற்போல் ஒருவன் முன்னே இன்பம் அளித்து பின்னர் அந்த இன்பத்தோடு என்னுடைய உயிரையும் பொக்கும் படி என்னைக் கைவிட்டான் . . . என்ற செய்திதனை உணர முடிகிறது. இப்பாடலில் வரும் ‘இசையறிபுள்’ என்ற அசுணமா (அசுணம்) என்ற பறவையை எண்ணுகிறபோது ஏறக்குறைய பதிமூன்றாம நூற்றாண்டிலேயே உலகிலிருந்து மறைந்துபோன பறவையின் வரலாற்றை அறியவேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது.

(தொடரும்)

அரவரசன்வனச் சரக அலுவலர்(ப.நி.)தேவக்கோட்டை

– சிறகு, பிப்., 23.02.2019