சிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக!

 

தமிழ்நலம் தொடர்பான அரசாணை வெளியிடுவதாகச் செய்தி வந்தது என்றால் ஆராயாமல் ஆரவாரத்துடன் தமிழ் அன்பர்கள் வரவேற்பர். தமிழில் படித்தோருக்கான வேலைவாய்ப்பு முன்னுரிமை ஆணை குறித்த உண்மை நிலை புரியாமல் அதைத் தலையில் வைத்துக் கொண்டாடினர். இப்பொழுது ஊர்ப்பெயர்களை ஆங்கிலத்தில் ஒலிக்கவேண்டிய முறை குறித்த அரசாணை குறித்த செய்தி வந்ததும் தலைகால் புரியாமல் குதித்து வரவேற்கின்றனர்.

“தமிழ் நாட்டிலுள்ள ஊர்ப்பெயர்களைத் தமிழ் உச்சரிப்பைப்போன்றே ஆங்கிலத்திலும் அமைத்தல் என்ற அறிவிப்பினைச் செயல்படுத்தல்பற்றிய அறிவிக்கை என அரசாணை (நிலை) எண் 36 தமிழ் வளர்ச்சி செய்தி(த.வ.1.1.)த்துறை 27, பிப்பிரவரி / மாசி 15, 2051 இல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் தமிழ்வளர்ச்சித்துறைக்கான நல்கைக்கோரிக்கையின் பொழுது துறை யமைச்சர் அறிவித்ததற்கிணங்க இவ்வாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.” இவ்வாணையில் 1018 ஊர்களுக்கான ஆங்கில எழுத்துக்கூட்டலைத் தெரிவித்துள்ளனர். இதனை முதற்கட்டம் எனக் கூறியுள்ளதால் தொடர்ந்து அவ்வப்பொழுது ஆணைகள் வரும் என எதிர் பார்க்கலாம்.

1994 இல் வெளிவந்த கையேடு

இவ்வாறு ஊர்ப்பெயர்களுக்கான ஆங்கில ஒலிப்பெழுத்திற்கான ஆணை பிறப்பிப்பது இது முதல் முறையல்ல. அவ்வப்பொழுது நடைபெறுவதுதான். ‘தமிழ் ஆட்சிமொழித் திட்டம் – வரலாறும் செயற்பாடும்(1994)’ என்னும் கையேட்டிலேயே இது பின்வருமாறு குறிக்கப்பெற்றுள்ளது.

 

நிலவியல் பெயர்களுக்கு எழுத்துக்கூட்டல் வழங்கல்:

அந்நியர் ஆட்சி ஆதிக்கத்துடன் அந்நிய மொழிகளின் ஆதிக்கமும் தொடர்ந்து பரவி, வட்டார மொழிகளைச் சிதைத்ததன் காரணமாக நிலவியல் பெயர்கள் (Geographical Names)பல உருக்குலைந்தன. அவற்றைத் திருத்தியமைக்கும் வகையில் சரியான தமிழ் எழுத்துக் கூட்டலை வழங்கும் பணி தமிழ்வளர்ச்சித்துறையைச் சார்ந்து அமைந்துள்ளது. அஞ்சல் நிலையங்களுக்கும் இருப்பூர்தி நிலையங்களுக்குமான பெயர்களுக்குமான எழுத்துக் கூட்டல்களும் இவ்வியக்ககத்தால் அளிக்கப்பட்டு வருகின்றன.” அவ்வாறு திருத்தமான ஒலி பெயர்ப்பு வழங்கப்பெற்ற எட்டு ஊர்களின் பெயர்களும் எடுத்துக்காட்டாகக் குறிக்கப்பெற்றுள்ளன. அவை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், பரங்கிப்பேட்டை, செங்கற்பட்டு, மாமல்லபுரம், திருநின்றவூர், கோடிக்கரை, கொள்ளிடம் ஆகியனவாகும். ஆனால் இவற்றில் ஆகாரத்திற்கு ஆங்கிலத்தில் ஓர் ஏ(A) தான் குறிக்கப்பெற்றுள்ளன. இப்போது ஆகார நெடிலைக்குறிக்க இரண்டு ஏ (AA) பயன்படுத்தப்பெற்றுள்ளன.

 

பாராட்டுக்குரியது எனினும் திரும்பப் பெற வேண்டும்!

எனினும் இப்போதைய ஆணை பாராட்டிற்குரியது. ஏனெனில், திரளான ஊர்ப்பெயர்த் தொகுதியை, 1018 சொற்களுக்கான ஒலி பெயர்ப்பை, ஒருசேர அளித்து மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளனர். ஒவ்வொருவரும் தத்தம் ஊர்ப்பெயர் பட்டியலில் உள்ளதா எனத் தேட முயல்வதும், இல்லாவிடில் எப்பொழுது அதற்கான ஆணை வரும் என்று எதிர்பார்ப்பதுமான உணர்ச்சியை இவ்வாணை உண்டாக்கியுள்ளது.

பாராட்டிற்குரிய ஆணையைத் திரும்பப்பெறச்சொல்வது ஏன் என்கிறீர்களா? இதில் சீர்மை இல்லை. இதுவே இவ்வாணையின் குளறுபடியைத் தெளிவாக்குகிறது.

ஆகாரத்திற்கு இரண்டு ஏ (AA) என வரையறுத்துப் பயன்படுத்தி இருந்தாலும் பல ஊர்ப்பெயர்களில் ஆகாரத்திற்கு ஓர் (A) மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. சான்றுக்குப் பின்வருவனவற்றைக் காண்போம். ஆணையில் உள்ளதை உள்ளவாறு தர வேண்டும் என்பதற்காகக் கிரந்த எழுத்து இடம் பெற்றுள்ளது. அரசு கிரந்த எழுத்து நீக்கிய ஊர்ப்பெயரை ஏற்று அறிவிக்க வேண்டும். எண்கள் அரசாணையில் குறிக்கப்பெற்றுள்ள ஊர் வரிசை எண்கள்.

36 திருவான்மியூர் – THIRUVANMIYOOR

102 வத்தராயன் தெத்து – VATTHARAYAN TETTHU

103 கிளாவடி நத்தம் – KILAVADINATTHAM

105 சீயப்பாடி – SEEYAPPADI

923 இராணிப்பேட்டை – RANIPETTAI

925 ஆற்காடு – AARKADU

934 ஜி.பாப்பாங்குளம் குரூப் – KA. PAPPANKULAM

971 மு.வாடிப்பட்டி – MU. VADIPATTI

207 அதியமான் கோட்டை – ATHIYAMAN KOTTAI

28 சிந்தாதறிபேட்டை – CHINTHADHARIPETTAI

முதலில் குறிப்பிட்டுள்ள கையேட்டில் கல்லார் – கல்லாறு, அடையார் – அடையாறு எனச் செம்மையாக மாற்றியிருப்பதாகக் குறிப்பிட்டிருப்பர். அவைபோல் இப்பொழுதும் செய்திருக்கலாம். சான்றாகச் சிந்தாதறிபேட்டை என்பதன் சரியான பெயர் சின்னதறிப்பேட்டை. முகப்பேறு என்பதன் சரியான பெயர் முகப்பேரி. இவ்வாறு தமிழிலும் பெயர்ச்செம்மைக்கு வழி வகுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

ஓகார நெடிலுக்கும் ஓகாரக் குறிலுக்கும் ஒரே ஓர் (O)மட்டும் பயன்படுத்தப்பெற்றுள்ளதும் மற்றொரு குளறுபடியாகும். எனவே, அதியமான் கோட்டை என்பது அதியமன்கொட்டை என்றாகிறது. இரண்டு ஓ (OO) ஊகாரத்தைக் குறிக்கப் பயன்படுத்துவதால் குழப்பம் வரும் என்றால் தக்க அறிஞர்களைக் கலந்து பேசியிருக்க வேண்டும்.

ஒரே ஊர்ப்பெயரிலேயே ஓர் ஆகாரத்திற்கு ஓர் (A) யும் மற்றோர் ஆகாரத்திற்கு இரண்டு (AA) யும் பயன்படுத்தும் குழப்பங்களும் உள்ளன. சான்று காண்க:

359 தாராபுரம் வடக்கு – THARAAPURAM VADAKKU (ஆங்கில ஒலிப்பில் ‘தா’ குறில், ‘ரா’ நெடில்)

361 தாராபுரம் தெற்கு – THARAAPURAM THERKU (ஆங்கில ஒலிப்பில் ‘தா’ குறில், ‘ரா’ நெடில்)

376 மாம்பாடி – MAAMBADI (ஆங்கில ஒலிப்பில் ‘மா’ நெடில் ‘பா’ குறில்,)

368 சேனாபதி பாளையம் – SENAPATHI PAALAYAM (ஆங்கில ஒலிப்பில் ‘னா’ குறில், ‘பா’ நெடில்)

இப்பொழுது இவ்வூர் SENATHIPATHYPALAYAM என ஆங்கிலத்தில் திருத்தமாகக் குறிக்கப் பெறுகிறது. அதையே தமிழிலும் பின்பற்றி அதற்கேற்ப எழுத்துக் கூட்டலை அறிவித்து இருக்கலாம்.

மடிப்பாக்கம் என்பதற்கு மடிப்பாக்கம் என இரண்டு ஏ (AA) பயன்படுத்தி MADIPPAAKKAM என மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்துள்ளார். ஆனால், மடிப்பக்கம் என்பதுபோல் ஓர் ஏ(A) மட்டும்குறித்து – MADIPPAKKAM (வ.எண். 46) என ஆணை வழங்கியுள்ளனர்.

இடையிலே ஒற்றெழுத்து சேர்க்கப்படாமல் சில ஊர்ப்பெயர்கள் உள்ளன. அவற்றைத் திருத்தமாகக் குறிக்கவும் ஆணை பிறப்பித்திருக்க வேண்டும். சான்றுக்குச் சில வருமாறு:

389 கீழ்பிடகை அப்பன்கோயில்

395 கீழ தூத்துக்குழி

396 மேல தூத்துக்குழி

398 கீழ செக்காரக்குடி

இன மெய்யெழுத்துடன் உயிர்மெய்வரும்போது உரிய எழுத்தை இரட்டிப்பாகக் குறித்துள்ளனர். சான்றாகக் கிழக்கு என்றால் KIZHAKKU, கீழ செக்காரக்குடி என்றால் KEEZHA SEKKAARAKKUDI, பேட்டை என்றால் PETTAI என்பனபோல். ஆனால் பல ஊர்களின் பெயர்கள் அவ்வாறு குறிக்கப் பெறவில்லை.

  1. KEEZHA THOOTHUKUZHI

396 . MELA THOOTHUKUZHI

என்பன போல் இன மெய்யெழுத்திற்கான ஒலி பெயர்ப்பு இல்லை.

தெருப்பெயர்களில் சாதிவாலை அறுத்துவிட்டோம் என்றார்கள். ( சில இடங்களில் இன்னும் சாதிவால் ஒட்டிக்கொண்டுதான் உள்ளது.) ஆனால், ஊர்ப்பெயர்களில் உள்ள சாதிப்பட்டத்தை நீக்கவில்லை.

181 அ.ரெட்டி அள்ளி

196 நாயக்கன் அள்ளி

957 ரெட்டியார் சத்திரம்

என்பன சான்றாகும். நாங்கள் எழுத்துக்கூட்டலில்தான் கருத்து செலுத்தினோம். இதில் இல்லை என்பது பொருந்தாது. எல்லா இடங்களிலும் அரசாணை பின்பற்றப்படுகிறதா எனப் பார்க்க வேண்டும். அதன்படி ஊர்ப்பெயர் மாற்றங்களை அறிவித்து அவற்றுக்கேற்ப ஆங்கில எழுத்துக் கூட்டலைஅறிவித்திருக்க வேண்டும்.

எகரத்திற்கும் ஏகாரத்திற்கும் ஒகரத்திற்கும் ஓகாரத்திற்கும் எவ்வேறுபாடும் இல்லாமல்தான்

24 கோயம்பேடு – KOYAMBEDU

  1. செஞ்சேரி – SENJERI

என்பனபோல் ஊர்ப்பெயர்களைக் குறித்துள்ளனர். ஆனால் வேலூர் என்பதற்கு மட்டும்

921 வேலூர் – VEELOOR

எனக் குறித்துள்ளனர். ஆனால்

937 மேலூர் – Meloor போன்ற பிற ஏகார எழுத்திற்கு இவ்வாறு குறிக்கவில்லை.

அதே நேரம் இரண்டு ஈ (EE) என்பது ஈகாரமாகவே

392 மீனவர் குடியிருப்பு MEENAVAR KUDIYIRUPPU என்பதுபோல் குறிக்கப்பெற்றுள்ளது.

வேலூருக்கான ஒலிப்பு சரி யென்றால் மீனவர் என்பது மேனவர் ஆகிறது. மீனவருக்கான ஒலிப்பு சரியென்றால் வேலூர் என்பது வீலூர் ஆகிறது.

ருமபுரியில் தமிழா?

தருமபுரி மாவட்டத்தில் பல ஊர்ப்பெயர்கள் கன்னடச் சொற்களால் குறிக்கப்பெறுகின்றன. அவற்றைத் தமிழ்ப்பெயர்களாக மாற்ற வேண்டும் என்பது தருமபுரி மக்கள் அவா. அதற்கேற்ப அம்மாவட்ட ஆட்சியர் ஊர்ப்பெயர் ஒலிப்பு எழுத்துகளைக் குறிப்பிட்டுள்ளார்.

சான்றாக அளே என்னும் கன்னடச் சொல்லுக்குப் பழைய என்று பொருள்.

எனவே,

180 அளே தருமபுரி -PAZHAYA THARUMAPURI

எனப் பரிந்துரைத்துள்ளார். தமிழ் வளர்ச்சித்துறையினரோ தமிழுக்கு எப்படி மாற்றம் செய்யலாம் எனக் கருதி HALE THARUMAPURI என்று வரையறுத்துள்ளனர்.

அள்ளி என்னும் கன்னடச்சொல்லுக்குச் சிற்றூர் எனப் பொருள். வாடிப்பட்டி, ஆண்டிப்பட்டி என்பதுபோல் பட்டி என்று ஊர்ப்பெயர்கள் முடிவடைவதைப் பின்பற்றிப் பொருத்தமாக

181 அ.ரெட்டி அள்ளி – A. REDDIPPAATTI (PAATTI எனக் குறித்திருப்பது தட்டச்சுப்பிழையாக இருக்கும்.)

182 அ.நடுஅள்ளி – K.NADUPPATTI

204 பூதன அள்ளி – POOTHANA PATTI

205 அ.ஜெட்டி அள்ளி – A.JETTIPATTI

எனப் பரிந்துரைத்துள்ளனர். இருக்கின்ற பெயருக்கான எழுத்துக் கூட்டலைக் கேட்டால் தமிழ் உணர்வுடன் முந்தைய தமிழ்ப்பெயரைச் சூட்டுவது எப்படி ஏற்றதாகும் எனத் தமிழ்வளர்ச்சித் துறை முறையே A. REDDI HALLI, K.NADU HALLI, POOTHANA HALLI, A.JETTI HALLI என்றே வரையறுத்து ஆணை யிட்டுள்ளது.

மேலும் ஊர்ப்பெயரை அள்ளி எனத் தமிழில் குறிப்பிடுவதற்கேற்ப ALLI என்று பரிந்துரைத்தாலும் ஃகள்ளி எனக் கன்னட ஒலிப்பிற்கேற்பவே ஆங்கிலத்தில் HALLI எனத் திருத்தி ஆணை பிறப்பித்துள்ளது.

அமைந்த கரை என்பது இப்போது அமிஞ்சிக்கரை எனச் சொல்லப்படுகிறது. அமஞ்சி அல்லது அமிஞ்சி என்பது கூலி பெறாமல் உழைப்புத்தானம் வழங்குவது. ஒரு காலத்தில் மக்கள் இணைந்து கூலி எதுவும் பெறாமல் எழுப்பிய கரையை அமஞ்சிக்கரை என்று அழைத்துள்ளனர். அதுவே அமிஞ்சிக்கரை என்றானது. இதைத் தவறு எனக் கருதி21. அமைந்தகரை என்பதுபோல் ஆணை பிறப்பித்துள்ளனர்.

26&27 எழும்பூர், 29&30 திருவல்லிக்கேணி முதலியவற்றிற்குத் தமிழ்க்குடிமகன் அமைச்சராக இருந்தபொழுது ஆணை பிறப்பிக்கப்பட்டதாக நினைவு. என்றாலும் இப்போதுபோல் EZHUMBOOR என்று இல்லாமல் EZHUMBOR என்றுதான் இருந்திருக்கும். அந்த வகையில் இந்த ஆணை சரியே.

இதுபோல் நாம் பலவற்றைக் குறிப்பிட முடியும். அப்படியானால் தமிழ்வளர்ச்சித்துறை எதற்கு? அவர்கள் கூர்ந்து நோக்கிச் செவ்வைப்படுத்த வேண்டும்.

ஆணையில், 14.12.2001 ஆம் நாளிட்ட நகராட்சி நி.கு.நீ.வ.து ஆணை பார்வையில் குறிக்கப்பெற்றுள்ளது. விவரம் ஆணையில் இல்லை. ஒருவேளை இந்த ஆணை இதற்கு முந்தைய ஒலிபெயர்ப்பு குறித்தது எனில் அவற்றையும் கோடிட்டுக் காட்டியிருக்கலாம்.

மக்கள் கையிலும் பொறுப்புண்டு

அரசு ஆணைகள் செயற்பாடு மக்கள் கைகளிலும் உள்ளது. மக்கள் இவற்றை உணர்வடன் ஏற்றுச் செயற்படுத்த வேண்டும். ஆனால் செயல்படுத்துவது இல்லை. ஒவ்வொன்றுக்கும் முதல்வரோ அமைச்சரோ வந்து எழுதிக் கொண்டிருக்க முடியாது. எனவே, திருத்தம் வேண்டிய இடங்களில் அரசிடம் தெரிவித்து மற்றவற்றை ஏற்றுப் பயன்படுத்த வேண்டும். அரசு இதற்கு முன்னரே. சிரீ எனத் தொடங்கும் ஊர்ப்பெயர்களைத் திரு எனத் தமிழில் குறிக்க ஆணை பிறப்பித்தது. இதன்படி சிரீவில்லிபுத்தூர் – திருவில்லி புத்தூர், சிரீரங்கம் – திருவரங்கம் என்பன போன்று பெயர் மாற்ற ஆணையும் பிறப்பித்தது. ஆனால், இன்றைக்கு அங்கெல்லாம் தமிழ்த் திரு தொலைந்துவிட்டது. ஆரிய சிரீயே இருக்கிறது. இறைவனின் பெயர்களில் தமிழ் முன்பே தொலைக்கப்பட்டது. ஆனால், இக்காலத்திலும் தமிழ்க்கடவுளான திருமுருகனை அறநிலையத்துறையினரே பாலசுப்பிரமணியன் என்று குறிக்கின்றனர். குமரி மாவட்டத்தில் பகவதி அம்மன் கோயில் எனத் தனிக்கோயில் இருப்பினும் தமிழர்க்கே உரித்த குமரி அம்மனையும் பகவதி அம்மன் என்கின்றனர். இதுபோன்ற இழிநிலைகளை எல்லாம் துடிப்பான அமைச்சர் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1978 ஆம் ஆண்டிலேயே திருமலவாடியைத் திருமழபாடி என்றும் செய்யார் என்பதைச் செய்யாறு என்றும் இன்னும் பல ஊர்களின் பெயர்களையும் திருத்தமாக எழுத வருவாய்த்துறை ஆணையிட்டது. ஆனால் இருவகையாகவும் இன்று பயன்படுத்துகின்றனர். அரசாணையைப் பொருட்படுத்துவதே இல்லை. எனவே, ஆணை பிறப்பித்தால் மட்டும் போதாது. அதன் சரியான செயல்பாட்டையும் கண்காணிக்க வேண்டும். அரசாணைக்கிணங்க ஊர்ப்பெயர்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் குறிப்பிடாத ஊடகங்களுக்கு விளம்பரம் தரக்கூடாது.

அரசு இந்த ஆணையைப் பிறப்பிக்கும் முன்னர் இணையத்தளங்கள், ஊடகங்கள் வாயிலாக மக்கள் கருத்தைக் கேட்டிருக்கலாம்.

தமிழுக்கான ஆங்கில ஒலிபெயர்ப்பு தரப்படுத்தும் குழு ஒன்றை அமைத்து, அக்குழு பட்டறிவு மிக்க, மொழிபெயர்ப்பில் ஈடுபாடு கொண்ட தமிழறிஞர்கள் கருத்துகளைக் கேட்டறிந்து பரிந்துரைப்பதன் அடிப்படையில் அரசே தக்க ஆணை பிறப்பிக்க வேண்டும் எனத் தமிழ்க்காப்புக்கழகம் 18.03.2014இல் அரசிற்குத் தெரிவித்தது. 06.04.2014இல் சென்னையில் தமிழ்க்காப்புக்கழகமும் சென்னை மாநிலக்கல்லூரித் தமிழ்த்துறையும் தமிழ் அமைப்புகளும் இணைந்து தமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலி பெயர்ப்பு வரையறைக் கலந்துரையாடலை நிகழ்த்தியது. என் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் முனைவர் க.ப.அறவாணன், முனைவர் ப.மகாலிங்கம், பேராசிரியர் முனைவர் ந.தெய்வசுந்தரம், முனைவர் கு.பாலசுப்பிரமணியன், முனைவர் மு.முத்துவேலு, முனைவர் மா.பூங்குன்றன், முனைவர் மு.கண்ணன், முனைவர் இராமகி, பொறிஞர் நாக.இளங்கோவன், முனைவர் இரா.சேது, அன்றில் இறையெழிலன் ஆகியோர் கருத்துரையாற்றினர். வந்திருந்த தமிழ் அறிஞர்களும் தத்தம் கருத்தைத் தெரிவித்தனர். 26.08.2014 இல் மீண்டும் இதுகுறித்து மடல் அனுப்பப்பட்டது. நேரிலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தகவல் தொழில்நுட்பத்துறை ஆர்வம் காட்டியதே தவிர அப்போதைய தமிழ்வளர்ச்சி இயக்ககம் ஆர்வம் காட்டவில்லை.

எனவே, ஒலிபெயர்ப்பிற்கான சீரானவரைமுறையை முதலில் வகுத்து அதன் பின்னரே அதற்கிணங்க ஊர்ப்பெயர்களின் ஒலி பெயர்ப்பு குறித்து ஆணை பிறப்பிக்க வேண்டும். இப்போதைய ஆணையில் நூற்றுக்கணக்கான முரண்பாடுகள் மலிந்து உள்ளமையால் இதனை நிறுத்தி வைக்க வேண்டும். எனவே, செம்மையான ஆணைகளை எதிர்பார்க்கிறோம். அதே நேரம் உலகத்தமிழ் மக்கள் டமில்நடு எப்பொழுது ஆங்கிலத்தில் தமிழ்நாடு ஆகும் என எதிர்பார்க்கின்றனர். அதற்கு விரைவில் விடை தருமா தமிழக அரசு?

இலக்குவனார் திருவள்ளுவன்

மின்னம்பலம் 13.06.2020