(பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி! பாகம் – 05 தொடர்ச்சி)

தலைப்பு-பேரறிவாளன்குறிபபேடு 06 : thalaippu_perarivalan_kurippedu_paakam06 காவல்கொடுமை-நீதிபதிகளிடம் இராம்செத்துமலானி : police_torture_ramjethmalani02

சிறைக்குள் வைத்தே பல நாட்கள் உசாவல்!

பேரறிவாளன்  குறிப்பேடு

– தொடரும் வலி!- பாகம் – 06

(வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!)

  1980-களின் இறுதியில் தமிழகத்தை உலுக்கிய பெயர், ‘பாண்டியம்மாள்’. காணாமல்போன தனது மனைவியைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல்துறையிடம் கணவர் முறையிட, அடையாளம் தெரியாத ஒரு பிணத்தை வைத்துக்கொண்டு கணவனையே கொலைகாரனாக்கி ஒப்புதல் வாக்குமூலம் பெற்றது காவல் துறை.

  அந்தப் பொய்யை உண்மையாக்கச் சாட்சிகள் சோடிக்கப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், நீதிமன்றத்தில் உயிருடன் தோன்றினார் பாண்டியம்மாள்.

  இந்தியச்சான்றுரை சட்டப்படி (Indian Evidence Act) காவல்துறை அதிகாரி முன்பு தரும் வாக்குமூலம் ஒருவரைத் தண்டிக்கச்  சான்றாகக் கொள்ள முடியாது என்ற நிலையில், ஒரு குற்றமற்ற மனிதனின் வாழ்வைப் புரட்டிப் போட்டுவிட்டது.

  அந்த வழக்கின் இறுதியில் உண்மை வெளிப்பட்டபோது, அது இந்திய நீதித் துறையின் மனச்சான்றை உலுக்கியது. காவல் துறை ஒரு மனிதனிடம் எங்ஙனம் ஒப்புதல் வாக்குமூலம் பெறுகிறது என்பதற்கான ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

  காவல் நிலையக் கொடுமைகள் குறித்து – சற்றுச் சிந்திக்கத் தெரிந்த அனைவருமே இதுகுறித்து நன்கு அறிவர்.  இஃது, இந்தியாவில் மட்டுமே நிகழ்ந்து வருகிற கொடுமை அன்று. நீடித்து நிலைபெற்று விட்ட உலகளாவியச் சிக்கல்.

  அதற்குத் தீர்வு காணவே மேலை நாடுகள் புலனாய்வு முறை, ஆதாரங்கள் திரட்டுதல், தண்டனை பெற்றுத் தருதல் என்பனவற்றில் பல்வேறு நவீன முறைகளை, நாகரிக வழிகளைக் கண்டறிந்து கையாண்டு வருகின்றன.

  இந்தியாவிலோ, காவல் சீர்திருத்தங்கள்(Police Reformation) குறித்து உச்ச நீதிமன்றம் தொடந்து தீர்ப்புகள் வழங்கிய பின்னரும் இன்னமும் உறுதியான, ஆக்கபூர்வமான முன்னெடுப்புகள் ஏதும் இல்லை என்பதே வருத்தம் தரும் நிலையாக உள்ளது.

 இன்னமும் அடித்து உதைப்பதிலும், மூன்றாம்தர முறை விசாரணை முறைகளிலும் நம்பிக்கையோடு இயங்கும் காவல் துறையாகவே நீடிக்கிறது.

  இவ்வாறான காவல் துறையின் கண்காணிப்பாளர் பதவிக்குக்(Superintendent of police) குறையாத ஒருவர் குற்றம்சாட்டப்பட்டவரிடம் பெறும் ஒப்புதல் வாக்குமூலம் என்ற ஆவணத்தை ஏற்று அதையே  மெய்யுறுதிச் சான்று(Substantive Evidence) என எடுத்துக்கொண்டு தண்டிக்கலாம் என்கிறது ப.சீ.த.(தடா) சட்டப் பிரிவு 15.

  இந்தியக் குற்றவியல் சட்டங்களுக்கு முற்றிலும் முரணான எதிரான நிலைப்பாடு மட்டுமல்லாமல் ஒருவர் தரும் ஒப்புதல் வாக்கு மூலத்தை அதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிறருக்கு எதிராகவும்  சான்றாகப் பயன்படுத்தலாம் என  இசைவுதருகிறது, ப.சீ.த.(தடா) சட்டம்.

  இது பெரும் கொடுமை அல்லவா! எனது ஒப்புதல் வாக்குமூலம் என்ற ஆவணத்தைப் பதிவுசெய்த அதிகாரி திரு.தியாகராசன்  இ.கா.ப. பின்னாளில் என்ன சொன்னார் என்பதைப் பின்னர் சொல்கிறேன்.

  சித்திரை 28, 2030 /   11.05.1999 அன்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் எனக்குத் தூக்குத் தண்டனை உறுதிசெய்யப்பட்ட பின்பு, நான் அடைக்கப்பட்டிருந்த சேலம் நடுவண் சிறையைச் சுற்றிப் பார்க்க வந்த பயிற்சி இந்தியக் காவல் பணி (ஐ.பி.எஸ்) அதிகாரி ஒருவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் குறித்து நான் சொன்னபோது, ‘‘நாங்கள் துன்புறுத்திப் பெறும் வாக்குமூலங்களை நம்பியா உங்களுக்குத் தண்டனை!” என வியப்புடன் கேட்டு வருத்தப்பட்டார்.

  ஒரு பயிற்சிக் காவல் அதிகாரிக்குத் தெரிந்த உண்மை, பண்பட்ட நீதிபதிகளுக்குத் தெரியாதா என்ன? “கனம் நீதிபதி அவர்களே! ஒரே ஒரு நாள் நமது காவல் துறையின் சித்திரவதையை எதிர்கொண்டால் நீங்களும் எந்தக் குற்றத்தையும் ஒப்புக்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் தந்துவிடுவீர்கள்” எனக் கருதார்(சிங்கு) வழக்கில் ஐந்து நீதிபதிகள் அரசியல் அமர்வின் முன்பு வாதிட்டார், இந்தியாவின் மூத்த வழக்குரைஞரும் மனித உரிமைப் போராளியுமான திரு. இராம்செத்துமலானி.

  அதைவிடக்  காவல் துறை பதிவுசெய்யும் ஒப்புதல் வாக்குமூலத்தின் கொடூரத்தன்மை குறித்து எந்த வகையிலும் எடுத்துக்காட்டிவிட முடியாது. ப.சீ.த.(தடா) சட்டம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகமெங்கும் எதிர்ப்புகளைப் பெற அடிப்படைக் காரணமே இந்த ஒப்புதல் வாக்குமூலப் பிரிவுதான்.

  எங்கள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேரில் 17 பேரிடம் ஒப்புதல் வாக்குமூலம் என்ற ஆவணத்தில் கையெழுத்து பெறப்பட்டது. அந்த 17 வாக்குமூலங்களையும் பதிவுசெய்தவர் ஒருவரே! அவர், திரு.தியாகராசன்  இ.கா.ப. அவர்கள்.

  அனைவருமே, தமது 60 நாள் ம.பு.க.(சி.பி.ஐ.) காவல் துறையின் விசாரணைக் காலம் முடியும் நாளுக்கு முந்தைய நாள், அஃதாவது 59- ஆவது நாள், ஒப்புதல் வாக்குமூல ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளனர் [எனில், 58 நாட்களின்  ம.பு.க.(சி.பி.ஐ.) சித்திரவதைகளைப் புரிந்துகொள்ளுங்கள்].

  எங்கள் வழக்கில் மொத்தம் 288  சான்றுரைஞர்கள் நீதிமன்றத்தில்  உசாவப்பட்டனர். அவர்களில் திரு.தியாகராசன்  இ.கா.ப. அவர்கள் 52-ஆவது  சான்றுரைஞராக உசாவப்பட்டார். அவர் மூலம் அரசுத் தரப்புச் சான்று ஆவணங்களாகக் குறிக்கப்பட்ட 17 வாக்குமூலங்களைக் கொண்டே, அதனை நம்பியே வழக்குக் கட்டியமைக்கப்பட்டது.

  உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பத்தி 666- இல், “திரு. இராசீவு காந்தியைக் கொலை செய்யச் சதி புரிந்த குற்றச்சாட்டை நிறுவுவதற்கு எதிரிகள் அளித்த 17 ஒப்புதல் வாக்குமூலங்களையே  முதுன்மையாக நம்பியுள்ளனர்.

  இந்த வாக்குமூலங்கள் ப.சீ.த.(தடா) சட்டத்தின் 15(1) பிரிவின்படி பதிவுசெய்யப் பட்டவையாகும்” என நீதிபதிகள் கூறியுள்ளதில் இருந்து அதன்  முதன்மையைப் புரிந்து கொள்ளலாம்.

  ப.சீ.த.(தடா) சட்டத்தின் அடுத்த மோசமான  பிரிவு எதுவெனில், சட்டப்படியான ஒரு மேல்முறையீட்டு வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பிரிவு 19 ஆகும்.

  இயல்பாக, ஒரு கொலை வழக்கைக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் (C.R.P.C.) மாவட்ட அமர்வு நீதிபதி அல்லது கூடுதல் நீதிபதி பதவி வகிப்பவர்  உசாவிவிட்டு இந்தியத் தண்டனைச் சட்டத்தின்(IPC)படி ஆயுள் அல்லது தூக்குத் தண்டனை எனத் தீர்ப்பளிக்கிறார்.

  தூக்குத் தண்டனை அளித்துவிட்டால் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 366- இன் கீழ் இரண்டு நீதிபதிகள் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு அதனை உறுதிசெய்த பின்பே தண்டனையை நிறைவேற்ற முடியும். இந்த எல்லா அடிப்படை உரிமைகளையும் மறுத்து விடுகிறது ப.சீ.த.(தடா) சட்டம்.

  இறுதித் தீர்ப்பு மட்டுமல்ல, ப.சீ.த.(தடா) நீதிமன்றம் அளித்திடும் எந்த உத்தரவை எதிர்த்தும் உயர் நீதிமன்றத்தை அணுகிவிட முடியாது. உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும்.

  ப.சீ.த.(தடா) சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கும் உரிமை, அதற்கான நீதிபதியைத் தேர்வு செய்யும் உரிமை நீதித்துறைக்குக் கிடையாது.

  நடுவண், மாநில அரசுகளுக்கு மட்டுமே உண்டு என்கிறது ப.சீ.த.(தடா) சட்டம், (பிரிவு 9). நடுவண், மாநில அரசுகளுக்குள் இணக்கமான கருத்து ஏற்படாச் சூழலில் நடுவண் அரசின் முடிவே இறுதியானது என்கிறது சட்டம். அந்தத் ப.சீ.த.(தடா) நீதிமன்றம் எந்த இடத்திலும் தனது  உசாவலை வைத்துக்கொள்ளலாம் (பிரிவு 10).

  முறையாக அறிவிக்கப்பட்ட கட்டடத்தில் இயங்க வேண்டிய  தேவை இல்லை. எங்கள் வழக்கில் சிறைக்குள்வைத்தே பல நாட்கள் விசாரணை நடைபெற்றது. அரசால் நியமிக்கப்படுகிற அந்த நீதிபதி தனது பணி ஓய்வுக்காலத்துக்குப் பிறகும் பணியில் நீடிக்கலாம்.

 குற்றம் சாட்டப்பட்டவரும் அவரது வழக்குரைஞரும் இல்லையென்றாலும் வழக்கை நடத்தலாம் (பிரிவு 14(5)). என்ன வேடிக்கை, அரசே எங்கள் மீது குற்றம் சுமத்துகிறது. அரசே – உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ அல்ல – அந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க நீதிமன்றத்தை அமைக்கிறது. நீதிபதியை நியமிக்கிறது. பின்னர் தீர்ப்புக் கிடைக்கிறது எனில், அந்தத் தீர்ப்பை எதிர்த்து எங்களால் உயர் நீதிமன்றம் செல்ல முடியாது.

  எங்கள் 26 பேரில் 19 பேரை விடுதலை செய்து வழங்கிய தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியிருந்தால் எங்கள் எழுவருக்கும் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு வாய்ப்பில் விடுதலை கிடைத்திருக்கும் என்ற உண்மை ஒருபுறம் இருக்க, எல்லா மேல்முறை யீட்டுக்கும் டெல்லி செல்ல ஏழைகளால் முடியுமா?

  சஞ்சய் தத்து போன்ற  மிகு செல்வாக்கு கொண்டவர்கள் தவிர்த்துப், ப.சீ.த.(தடா) சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்ட வேறு எவரது பிணை வழக்கையும் உயர் நீதிமன்றம் எடுத்துக்கொண்டதில்லை. எங்கள் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 26 பேரில் ஒருவர்கூட உசாவல் காலம் முழுமைக்கும் பிணையில் செல்ல முடியவில்லை.

  அதற்கான காரணத்தை ஒருமுறை என்னைச் சந்திக்க வந்த திரைப்பட இயக்குநர் அண்ணன் சனநாதனிடம் கூறினேன். அதைக்கேட்டு  மென்மையாக அதிர்ந்த அவர், “இது எனக்குப் புதிய தகவலாக உள்ளது. இந்தத் தகவல் மிகுந்த வருத்தத்தைத் தருகிறது” என்றார்.

(வலிகள் தொடரும்)

–பேரறிவாளன்

  • இளைய(சூனியர்) விகடன் – 13, சூலை, 2016

அட்டை-சூனியர்விகடன்,சூலை13,2016 : attai_ju.vi._july13_perarivalan_kurippedu06