(பேரறிவாளன் குறிப்பேடு! பாகம் – 04 தொடர்ச்சி)

தலைப்பு-பேரறிவாளன்,தொடரும்வலி 05 : thalaippu_perarivalan_thodarumvali_paakam5

ப.சீ.த. (‘தடா’) சட்டத்தின் கொடுமை! பேரறிவாளன்  குறிப்பேடு

– தொடரும் வலி! பாகம் – 05

[வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!]

  ஆடி 16, 1971 / 1940, சூலை 31 – இந்திய விடுதலைப் போர் வரலாற்றில் மறக்க முடியாத நாள். அன்றுதான் இங்கிலாந்து சிறையொன்றில் விடுதலைப் போராட்ட வீரர் ஒருவர் கொலைக் குற்றத்துக்காகத் தூக்கிலிடப்பட்டார்.

  அன்று கொல்லப்பட்ட மனிதரின் பெயர் உத்தம் சிங்கு. கொலையுண்டவர் பெயர்  தளபதி(செனரல்) மைக்கேல் ஓ.டயர்*(பின் குறிப்பு காண்க.). மரணத்தண்டனை நிறைவேற்றும் முன் உத்தம் சிங்கு, ‘‘இதற்காக நான் பெருமைப்படுகிறேன். எனது நாட்டுக்காக, அதன் விடுதலைக்காகச் சாவதில் வருத்தம் ஒன்றுமில்லை என்றார். மார்கழி 17, 1930 / 26-12-1899 அன்று பிறந்த உத்தம் சிங்கு, தனது 41 ஆவது  அகவையில் சாவைத் தேடிக்கொள்ளக் காரணம் என்ன?

  இந்தியாவை அடிமைகொண்டிருந்த ஆங்கில அரசு தனது ஆட்சியதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள 1915 ஆம் ஆண்டு  இந்தியப் பாதுகாப்புச்சட்டம் என்ற ஆட்தூக்கிச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது.

  எந்தவிதக் கேள்வியுமின்றி எவரையும் சதிக் குற்றவாளி எனக் கூறிச் சிறையில் தள்ளும் அதிகாரம் தந்தது அந்தச் சட்டம்.

  அதனால் பெரும் எதிர்ப்புகளை எதிர்கொண்ட நிலையில், 1919- ஆம் ஆண்டு  ஒழுங்கற்ற-புரட்சிகரக் குற்றங்கள் சட்டம், 1919 (The Anarchical and Revolutionary Crimes Act, 1919) என்ற சட்டத்தை அறிமுகம் செய்கிறது ஆங்கில அரசு. இதுவே நம் அனைவராலும் நன்கு அறியப்பட்ட ‘இரௌலட்டு’ (Rowlatt Act)சட்டம் ஆகும்.

  அந்தச் சட்டமும் முந்தைய சட்டத்தைக் காட்டிலும் எந்த வகையிலும் கடுமை குறைந்ததாகக் காணப் படவில்லை. மக்களின் பெருத்த  திறனாய்வுக்கு உள்ளானது.

  இந்த நிலையில், சீக்கியர்கள் ஒன்றுகூடும் வைகாசி நாளான 13-04-1919 அன்று  சாலியன் வாலாபாக்கு என்ற இடத்தில் கூடிய சீக்கியர்கள் அனைவரும் ‘இரௌலட்டு’ சட்டத்துக்கு எதிரான தமது  மக்கள்நாயக வழி எதிர் கருத்துகளை முன்வைத்தனர்.

  அந்த மக்கள் உணர்வுகளை ஒடுக்கவே, அழிக்கவே ஆங்கில அரசின் உத்தரவுக்கு இணங்கத் துப்பாக்கி, பீரங்கிகள் கொண்ட ஆங்கிலப் படையினர்  தளபதி(செனரல்) ஓ.டயர் தலைமையில் அப்பாவி இந்திய மக்களைக் கொன்று தீர்த்தனர்.

  அதன் எதிர்வினையாகவே 21 ஆண்டுகள் கழித்து 13-03-1940 அன்று ஓ.டயர் கொல்லப்படுகிறார். மரணதண்டனை நிறைவேற்றும் முன் உத்தம் சிங்கு, ‘‘ரௌலட் சட்டத்தின் கொடூரமே தன்னை அந்த முடிவுக்குத் தள்ளியது” எனத் தெளிவான வாக்குமூலம் அளித்தார்.

அது அடிமை இந்தியாவில் நிகழ்ந்துவிட்ட கொடூரம். விடுதலை இந்தியாவில் – 1985- ஆம் ஆண்டு – ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் பெயர் பயங்கரவாத- சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (Terrorist and Disruptive Activities (Prevention) Act 1985) சுருக்கமாகத் ‘தடா’ சட்டம்.

  1985 காலக்கட்டத்தில்  தில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புகளைக் காரணம் காட்டியே மத்திய அரசு அதனை அறிமுகம் செய்தது. பின்னர் சில திருத்தங்களுடன் 1987- ஆம் ஆண்டு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது.

 முதன்முதலில் 1985- இல் சட்டம் கொண்டுவரப்பட்டபோது இரண்டு ஆண்டுகள் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என உறுதி கூறப்பட்டது. ஒரு சட்டம் கொண்டுவரும் போது அதனோடு அதற்கான விதிகள் (Rules) கொண்டு வரப்படுவதே சட்ட மரபு.

  ஆனால், இந்திய வரலாற்றில் அதற்கு முன்பும் பின்பும் எடுத்துக்காட்டுகள் இல்லாத வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டு 18 மாதங்கள் கழித்து நவம்பர் 1986- இல் அதற்கான விதிகள் வகுக்கப்பட்டன.

  தொடக்கத்திலேயே குளறுபடியாகக் கொண்டு வரப்பட்ட ப.சீ.த.(தடா) சட்டம் 1987, 1989, 1991, 1993 என இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடாளுமன்றத்தில் நீட்டிப்பைப் பெற்றது.

  1991- ஆம் ஆண்டு தவிர்த்து, பிற அனைத்து ஆண்டுகளிலும் குரல் வாக்கைக் கொண்டே சட்டம் நீட்டிப்பைப் பெற்றது. 1991-ஆம் ஆண்டு மட்டும் மொத்தம் உள்ள 542 உறுப்பினர்களில் 250 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்றனர். அவர்களில் 134 பேர் நீட்டிப்புக்கு ஆதரவாகவும் 116 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

  மற்றபடி ஒவ்வொரு முறை நீட்டிப்பு  வரைவு(மசோதா) முன்வைக்கப்பட்டபோதும் வெறும் ஒரு  வரைவுடன் சேர்த்து  வைத்துவிட்டு ப.சீ.த.(‘தடா’) மீதான விவாதத்தைத் திட்டமிட்டுத் தவிர்த்தனர்.

  முதலில் இரண்டு மாநிலங்களில் மட்டுமே  நடைமுறையில் இருந்த இந்தச் சட்டம் 1993- ஆம் ஆண்டுபோல் ஏறத்தாழ 25 மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

  மிக மோசமான மனித உரிமை மீறலுக்கு அடையாளமாகக் கருதப்பட்ட, இந்திய, உலகளாவிய மனித உரிமை அமைப்புகளாலும் கற்றறிந்தோராலும் மிகுந்த  தாக்குதலுக்கு உள்ளானதுமான ப.சீ.த.(தடா) சட்டத்தின் கொடூர முகம் பரவலான மக்கள் கவனத்தை எப்போது ஈர்த்தது தெரியுமா?

  1993- ஆம் ஆண்டு அன்றைய பம்பாய் நகரை உலுக்கிய, 257 அப்பாவி உயிர்களைப் பலிகொண்ட தொடர் குண்டுவெடிப்பில் மூளையாக இருந்து செயல்பட்டார் என அரசு தரப்பால் குற்றம் சாட்டப்பட்டவர் சோட்டா சகீல்.

  அவரின்  ஏகே 566 இயந்திர துப்பாக்கி மற்றும் ஒரு கைத்துப்பாக்கி ஆகியவற்றை வைத்திருந்த குற்றத்துக்காகப் பாலிவுட்டுத்திரை நட்சத்திரமான சஞ்சய் தத்து கைதுசெய்யப்பட்ட போதுதான் பெருத்த கவனத்தையும் கண்டனத்தையும் இந்தச் சட்டம் பெறத் தொடங்கியது.

 தேசிய மனித உரிமை ஆணையத் தலைவரான முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே ப.சீ.த.(‘தடா’)வுக்கு எதிராக சஞ்சய் தத்துக்கு ஆதரவு தெரிவித்து களமிறங்கிப் போராடினார். ‘

 ப.சீ.த.(‘தடா’) சட்டப்படி உயர் நீதிமன்றத்தில் பிணை (Bail) கோர முடியாது என்றாலும் பம்பாய் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் திரு.வியாசு மற்றும் திரு.பி.என்.நாய்க் ஆகியோர் கொண்ட அமர்வு தலையிட்டு சஞ்சய் தத்து மீதான  உசாவல் தொடங்காத நிலையிலேயே ப.சீ.த.(‘தடா’)  குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் ஏதுமில்லை எனக் கூறி அவரை பிணையில் விடுவித்தது.

ப.சீ.த.(‘தடா’) சட்டத்தின் கொடூரக்கரங்களுக்கு சஞ்சய் தத்து மட்டும் இரையாகவில்லை. கலைஞர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள், அரசு ஊழியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மட்டுமல்ல வழக்குரைஞர்கள், நீதிபதிகளும் எனச் சமூகத்தின் அத்தனை மனிதர்களையும் ஓர் அரக்கனைப்போல் ஆட்டிப்படைத்தது

ப.சீ.த.(‘தடா’) சட்டம். பஞ்சாப் – அரியானா உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. அசித்துசிங்கு பெயின்சு அவர்கள் 03-04-1992 அன்று ப.சீ.த.(‘தடா’) சட்டப் பிரிவுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டு கைவிலங்கிடப்பட்டு காவலர்களால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்.

  அவர் செய்த குற்றமெல்லாம், காலிசுதான் ஆதரவுக் குரல் எழுப்பப்பட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டார் என்பது மட்டுமே. நீதிபதி அவ்வாறு எந்தக் கருத்தையும் கூறவில்லை. இன்னும் சொல்லப்போனால் முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயரும்கூட இருக்கவில்லை.

  இருப்பினும், அவரைக் கைதுசெய்து கைவிலங்கிட்டு சித்திதிரவதை செய்யவும் 2 நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைத்திருக்கவுமான துணிச்சலைப் ப.சீ.த.(‘தடா’) சட்டமே காவல் துறைக்கு வழங்கி இருந்தது.

  இவற்றையெல்லாம் விடுங்கள். வட மாநிலம் ஒன்றில் ஒரு தள்ளுவண்டிக்காரர் காவல் துறைக்கு  நாளூட்டு(மாமூல்) தரவில்லை என்பதற்காக வெல்லாம் அவரைப் ‘பயங்கரவாதி’ எனக் கூறிப் ப.சீ.த.(‘தடா’) சட்டத்தின் கீழ் கைதுசெய்த கொடுமைகள் நிகழ்ந்தன.

  தமிழ்நாட்டில் சுவரொட்டி ஒட்டியவர்கள்கூடப் ப.சீ.த.(‘தடா’) சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டனர். அந்த அளவுக்குக் கேள்வி கேட்பாரே இன்றி எவரையும் கைதுசெய்யும் அதிகாரத்தைப் ப.சீ.த.(‘தடா’) சட்டம் காவல் துறைக்கு வழங்கியிருந்தது.

  சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்களையே பதம் பார்த்துவிட்ட ப.சீ.த.(‘தடா’) சட்டம் உலகமே உற்றுநோக்கும்  இராசீவு காந்தி என்ற செல்வாக்கு மிக்க மனிதரின் கொலை வழக்கில் மாட்டிக்கொண்ட சாமானியர்களை என்ன பாடுபடுத்தியிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

 உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்,  இராசீவு கொலை வழக்கின் புலனாய்வுக்குத் தலைமை வகித்த திரு.கார்த்திகேயன் ஆங்கிலக்காலமுறை இதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்தபோது சொன்னார், ‘‘ப.சீ.த.(‘தடா’)  சட்டம் இல்லையென்றால், எங்களால் இராசீவு கொலை வழக்கில் ஒருவருக்குக்கூட தண்டனை பெற்றுத் தந்திருக்க முடியாது.

 எனில்,  சாலியன் வாலாபாக்குப்  படுகொலைக்குக் காரணமான ‘இரௌலட்டு’ சட்டத்தைக் காட்டிலும் ‘தடா’ சட்டத்தின்  பிரிவுக்கள் எத்தனைக் கொடூரமானவை?

அந்தச் சட்டம் தமிழகத்தில் எப்போது, எந்தச் சூழலில் பயன்படுத்தப்பட்டது?

அந்தச் சட்டத்தின் ஆயுட்காலம் எதுவரை நீடித்தது?

அதன் பாதிப்புகளை இன்றுவரை நாங்கள் எவ்வாறு சுமக்கிறோம்?

  ப.சீ.த.(‘தடா’) சட்டத்துக்கு எதிரான தமிழகம் தழுவிய போராட்டங்களில் நாங்கள் மட்டும் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டோம் என்பதையெல்லாம் தாண்டி அந்தச் சட்டத்தினை எதிர்த்துப் போடப்பட்ட சர்தார்சிங்கு வழக்கின் தீர்ப்பு எங்கள் எதிர்காலத்தை எப்படித் தீர்மானித்தது என்பது குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

(வலிகள் தொடரும்)

–பேரறிவாளன்

இளைய விகடன்

அட்டை-சூ.வி.,இளையவிகடன்சூலை10 :attai_ju.vi._july10_perarivalan_kurippedu05

*பின் குறிப்பு  : படு கொலைகளுக்குக் காரணமானவன் (இ)ரெசினால்டு எட்வர்டு ஆரி (இ)டையர்(Reginald Edward Harry Dyer)  என்னும் தளபதி. இவன் 23.07.1927 அன்றே இறந்துவிட்டான்

கொலைகார (இ)டையரின் செயல் சரியானதே எனச் சான்றளித்த பஞ்சாப் துணை ஆளுநர்  பெயர். மைக்கேல் ஓ துவையர்(Michael O’Dwyer). இவனைத்தான் உத்தம்சிங்கு  இங்கிலாந்தில் கொன்றார். 

எட்வர்டு தையர் : edward harry dyer மைக்கேல் துவையர்ூ michale 0 dwyer

 – ஆசிரியர், அகரமுதல