சுந்தரச் சிலேடைகள் 11 : கண்ணும் கத்தியும்
சுந்தரமூர்த்தி கவிதைகள்
சிலேடை அணி 11
கண்ணும் கத்தியும்
ஒளிர்ந்திடும், காப்படையும் , நீர்காணும், ஒப்பில்
பளிங்கொக்கும் ,போர்செய்யும் , பாயும்- தெளிந்தோரே
நல்லுலகம் கண்ட நடைமாதர் கண்களுக்கு
வல்லோரின் கூர்வாளே ஒப்பு .
கண்
பெண்களின் கண்கள் ஒளி வீசும்
இமை என்னும் உறைக்குள் பாதுகாப்பாய் இருக்கும் .
சோகத்திலோ , மகிழ்ச்சியான நேரத்திலோ கண்களிலிருந்து நீர் வரும் .
பளிங்கை ஒத்து வெண்ணிறம் கொண்டிருக்கும் .
கண்கள் காதலனுடன் அடிக்கடி போர் புரியும் .
ஆடவர் ஆழ்மனம் வரை ஊடுருவிப் பாய்ந்து எப்படிப்பட்டவன் என்பதை அளவிடும் .
தெளிவுற்ற சான்றோரே, இக் காரணங்களால் , நல்ல இவ்வுலகத்தில் பெண்ணின் கண்கள் கூர்மையான கத்தியுடன் ஒத்துப் போகின்றன.
கத்தி
தீட்டினால் பளபளப்பாய் ஒளிரும் .
உறைக்குள் பாதுகாப்பாக இருக்கும் .
கத்தியானது உடலுள் சென்றால் செந்நீர்(இரத்தம் ) வெளிவரும் .
நிறமானது பளிங்கை யொத்து இருக்கும் ,
போர் செய்யும் படையில் பங்காற்றும் .
எதிரியின் உடல் பாய்ந்து உயிரெடுக்கும் .
தெளிவுற்ற சான்றோரே, இக் காரணங்களால் , நல்ல இவ்வுலகத்தில் பெண்ணின் கண்கள் கூர்மையான கத்தியுடன் ஒத்துப் போகின்றன.
Leave a Reply