சுந்தரச் சிலேடைகள் 6 : பைந்தமிழும் தாய்மையும்
சுந்தரமூர்த்தி கவிதைகள்
சிலேடை அணி 6
பைந்தமிழும் தாய்மையும்
சொல்ல இனிமைதரும் சோதிக்கக் கன்னலதாம்
வல்ல ஒலியெழுப்ப வாய்திறக்கும்-பொல்லாங்
கொழிக்கும், பொதுமையாய் ஓங்கித் திளைக்கும்
எழிற்றமிழைத் தாய்மையெனச் சாற்று.
பொருள் :
1)தாயைப் பற்றியும் தமிழ்மொழியைப் பற்றியும் சொல்லும்போதே இனிமையாக இருக்கும் .
2)தாயின் தாலாட்டுப் பொருள் வலிமையானதாக இருக்கும், அதுபோலத் தமிழ்ச் சொற்களும் ஆக்கமுடையதாக இருக்கும்.
3)வருந்துயரமெல்லாம் தாய் தாங்கிப் பிள்ளைகளை மகிழ்வுடன் வளர்ப்பதுபோல், தமிழ்மொழியும் தன்னைப் பிழையறக் கற்றவருக்குப் பெருமையைத் தருகிறாள். தடுமாற்றத் துயரைப் போக்குகிறாள்.
4) எத்தனை குழந்தைகள் பெற்றாலும் பாகுபாடற்றுப் பொதுமையாய்த் தாய் திகழ்வதுபோல் தமிழாளும் தமிழர் அனைவருக்கும் பொதுவாய்த் திகழ்ந்து மகிழ்வளிக்கிறாள்.
இவ்வாறான காரணங்களில் ஒப்புமையொடு காணப்படுவதால் தாயும் தமிழ்மொழியும் ஒன்றாகும்.
Leave a Reply