செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 1/3
(தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா. 4/4 தொடர்ச்சி)
செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் 1/3
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் நாட்டின் பங்கு குறிப்பிடத் தகுந்ததாகும். அதிலும் செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் பங்கு அளவிடற்கரியதாகும். அன்னிய ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்ததோடல்லாமல் அமைதியாகத் தமிழ் இலக்கியப் பணியினையும் ஆற்றிய பெருமை அவரைச் சாரும். தமிழார்வத்தில் தலைப்பட்டு நின்ற அவர் கடலில் கலம் செலுத்த நினைத்ததோடு நிலையான தமிழ்த் தொண்டினையும் ஆற்ற முனைந்தார். அந்நல்லுள்ளத்தின் பயனாகச் சில நற்பேறுகள் தமிழிற்கு வாய்த்தன எனலாம்.
வாழ்வு
பாண்டிநாட்டுச் சீமையில் ‘திக்கெலாம் புகழும் திருநெல்வேலி’ மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் என்றோர் அமைதியான சிற்றூரில் வாழ்ந்தவர் கவிஞர் சிதம்பரம் (பிள்ளை) ஆவர். அவர் தம் பேரனாரே நம் பாராட்டிற் குரிய சிதம்பரனார் ஆவர். சிதம்பரனாரின் பெற்றோர் உலகநாத பிள்ளையும் பரமாயி அம்மையாரும் ஆவர். இவர் பிறந்தது 5-9-1872இல் ஆகும். இவருக்குத் திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியராக வீரப்பெருமாள் அண்ணாவியாரும், பள்ளியாசிரியராக அறம் வளர்த்த நாத பிள்ளையும் அமைந்தனர். தூத்துக்குடி புனிதசவேரியார் உயர் பள்ளியிலும் காலுடுவெல் கல்லூரியிலும் கல்வி கற்று 1891ஆம் ஆண்டு ‘மெட்ரிகுலேசன்’ தேர்வில் வெற்றி பெற்று. ஒட்டப்பிடாரம் தாலுக்கா அலுவலக எழுத்தர் பணியினைச் சில திங்கட் காலம் வரை பார்த்தார்.
1894ஆம் ஆண்டில் இவருக்குத் திருமணம் நடை பெற்றது. மனைவியார் பெயர் வள்ளியம்மை என்பதாகும். அதற்கு அடுத்த ஆண்டில் திருச்சியில் கணபதி (ஐயர்), அரிகர (ஐயர்) ஆகிய இருவரிடமும் சட்டக்கல்வி பயின்று, அத்துறையில் தேர்ச்சி பெற்று, தம் சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்தில் வழக்குரைஞர் தொழில் செய்தார். பின்னர் 1900ஆம் ஆண்டு தூத்துக்குடி சென்று அப்பணியைத் தொடர்ந்து ஆற்றினார்.
சிதம்பரம் (பிள்ளை) அரசியல் துறைக்குத் தம் வாழ்வை நேரடியாகத் தீவிரமாகப் பயன்படுத்திய ஆண்டுகள் ஏறத்தாழ இரண்டே ஆண்டுகள் எனலாம். 1906ஆம் ஆண்டு சுதேசிக் கப்பல் கம்பெனி ஒன்றைத் தொடங்கினார். வ.உ.சி. 1907ஆம் ஆண்டில் சூரத்து நகரில் கூடிய காங்கிரசில் இவர் கலந்து கொண்டார். (உ)லோகமானிய திலகர் வ.உ.சி யின் அரசியல் குரு ஆவர். இவர் ஒரு தீவிரவாதி. எனவே, 1908ஆம் ஆண்டில் திருநெல்வேலியில் ‘தேசாபிமான சங்கம்’ வ.உ.சி.யின் முயற்சியால் நிறுவப்பெற்றது. சுப்பிரமணிய சிவா என்னும் பிறிதொரு தேசபக்தரோடு சேர்ந்து கொண்டு தம் சீரிய வீரப்பேச்சால் நாட்டுப் பற்றினை மக்கள் மனத்தில் கிளர்ந்தெழச் செய்த வ.உ.சி. 1908ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 12ஆம் நாள் திருநெல்வேலி கலெக்டர் விஞ்சு துரையால் சிறைப்படுத்தப்பட்டார். அந்த ஆண்டு சூலைத் திங்கள் 7ஆம் நாள் நீதிபதி பின்ஃகே வ. உ. சி.யின் பேரில் அரசநிந்தனைக் குற்றத்திற்காக இருபது ஆண்டு ஆயுள் தண்டனையும், சுப்பிரமணிய சிவாவிற்கு உடந்தையாக இருந்ததற்காக இருபது ஆண்டு ஆயுள் தண்டனையும் விதித்து, இரண்டு தண்டனைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக நாற்பது ஆண்டுகள் அனுபவிக்க வேண்டுமெனக் கூறினார். சென்னை உயர்நீதி மன்றத்தில் இத்தண்டனை ஆறாண்டுக் காலமாகக் குறைக்கப்பட்டது. பிரிவி கவுன்சிலுக்கு அவர் நண்பர்கள் விண்ணப்பித்தபோது அந்தமான் சிறைவாசத் தண்டனை ஆறு ஆண்டுக் கடுங்காவல் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
பின்ஃகே அளித்த தீர்ப்பில், “பிள்ளை பெரிய இராசத் துரோகி; அவரது எலும்புக்கூடு கூட இராச விசுவாசத்திற்கு விரோதமானது” என்ற குறிப்புக் காணப்படுகின்றது. மேலும் அவர், “பிள்ளையின் பேச்சையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால், செத்த பிணம் உயிர்த்தெழும்; அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்; புரட்சி ஓங்கியெழும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளையர் என்றால் விதிர் விதிர்த்துப் பயந்து நடுங்கிய காலத்தில் வ.உ. சி. நாட்டுப் பற்றில் தலை சிறந்த தலைமகனாய்த் தம் வாழ்வையே பணயம் வைத்துச் செக்கிழுத்துச் சிந்தை நொந்து வாடிய ஆண்டுகள்-கோயமுத்தூர்ச் சிறையிலும் கண்ணனுார்ச் சிறையிலுமாகச் சேர்ந்து துன்பப் பட்ட ஆண்டுகள்-நான்கரை ஆண்டுகள்தாம். எனினும் கூட, அவர் ‘கப்பலோட்டிய தமிழர்’ என்றும், ‘செக்கிழுத்த செம்மல்’ என்றும் தமிழ் மக்களால் போற்றப்படுகின்றார். சிறையிலே தொடங்கிய அவர் தாய்மொழிப் பணி அவர் இறக்குந்தருவாயிலும் அதாவது 1936ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ இருபத்தெட்டு ஆண்டுகள் தொடர்ந்து நடை பெற்றது.
வ. உ. சி. யின் அரசியல் தொண்டுகள் நாட்டு மக்களால் நினைவு கூரப்படுகின்ற அளவிற்கு அவர்தம் செந்தமிழ்ப் பணிகள் மக்களால் அறியப்பட முடியாமல் உள்ளது. காரணம். அவர்தம் செந்தமிழ்ப் பணியினையும் மீறி அவர்தம் நாட்டுப் பணி ஒளிமிகுந்ததாய் உளது எனலாம். மேலும் பாரதியார்,
“மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் கோவதுவுங் காண்கிலையோ”
என்றும் பாடியுள்ளமை கொண்டு, வ. உ. சி.யைப் பற்றி எண்ணும்பொழுது பாரதியாருக்கு முதலில் நினைவிற்கு வருவது அவர்தம் அரசியல் தொண்டே எனலாம். இதனையே அவர் பிறிதோர் இடத்தில்,
‘வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார்
மன்னென மீண்டான்’ என்றே
கேளாத கதைவிரைவிற் கேட்பாய்நீ
வருந்தலைஎன் கேண்மைக் கோவே!
தாளாண்மை சிறிதுகொலோ யாம்புரிவேம்
நீ இறைக்குத் தவங்கள் ஆற்றி
வாளாண்மை நின்துணைவர் பெறுகெனவே
வாழ்த்துதிநீ வாழ்தி! வாழ்தி!’
(பாரதியார் கவிதைகள் வ.உ. சிக்கு வாழ்த்து: பக். 82)
என்றும் பாடியுள்ளார்.
ஆயினுங்கூட அவராற்றிய செந்தமிழ்ப் பணிகள் நம் சிந்தை குடிகொள்ளத்தக்க சீரிய பணிகளேயாம் என்பது பின்வரும் சான்றுகளால் விளங்கும். வ.உ.சி. பிறந்த திருநெல்வேலிச் சீமை, இயல்பாகவே நாட்டுப் பற்றிற்கும் மொழிப்பற்றிற்கும் பிறப்பிடமாக என்றென்றும் விளங்கி வருவதோரிடமாகும். எனவே, தமிழ் மொழியினை விருப்போடும் ஆழமாகவும் இளமை தொட்டே பயின்ற செம்மல் சிதம்பரனார், ஆரவார அரசியல் வாழ்க்கையில் அவர் பெற்ற சிறைவாசத்தின்போது, செந்தமிழ்ப் பணியில் தலைப்படலானார்.
அவர்தம் செந்தமிழ்ப் பணிகளை நான்கு வகைப்படுத்திக் காணலாம். 1. மொழிபெயர்ப்புப் பணி; 2, படைப்பிலக்கியப்பணி; 3. உரையாசிரியப் பணி; 4. பதிப்பாசிரியப் பணி.
முதலாவது மொழி பெயர்ப்புப் பணியினைக் காண்போம்:
(தொடரும்)
சான்றோர் தமிழ்
சி. பாலசுப்பிரமணியன்
Leave a Reply