சென்னையில் திருவையாறு – தமிழ்க்கடலில் கலக்கும் நஞ்சாறு : இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னையில் திருவையாறு
தமிழ்க்கடலில் கலக்கும் நஞ்சாறு
இலக்குவனார் திருவள்ளுவன்
அமிழ்தினும்இனிய தமிழ்க் கடலில்நஞ்சு ஆறாகப் பெருகிக் கலந்தால்அழிவுதானே நமக்கு!ஆனால், நாம் அதைப்பற்றிக் கவலைப்படாமல் அழிப்போருக்குஉதவுகிறோம். அல்லதுகண்டும் காணாமல்இருப்பதன் மூலம் மறைமுகமாகத்துணைபுரிகிறோம்.திசம்பர்த் திங்களுக்கு உரிய பெருமைகளுள் ஒன்று, ‘சொல்லில்உயர்வு தமிழ்ச்சொல்லே’ என்பதை உணர்த்தி அதனைத் தொழுது படித்திடச் சொன்னபாரதியார்பிறந்த திங்கள் என்பது. இந்தத் திங்களில்தான் சென்னையில் சிலஆண்டுகளாகநஞ்சு கலக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
திருவையாறு தமிழிசைப் பரம்பரைக்குரிய ஊர்தான். என்றாலும் நமக்கு என்னநினைவிற்கு வர வேண்டும்? தமிழ்நாட்டில் தமிழர்களின் பொருளால் தமிழர்களால்கட்டப்பட்ட மேடையில் தமிழ்ப்பாட்டுப் பாடப்பட்டதால் தீட்டு என்று சொல்லிஅதைக் கழுவிவிட்டபின்புதான் பாடுவேன் என்று அடம்பிடித்து வெற்றிக் கொடிநாட்டிய அவலம் தான் நினைவிற்கு வரவேண்டும். எனவே, இன்றைக்குத் திருவையாறு என்றால் தமிழிசைக்கு எதிரான ஒரு குறியீடாகத்தான் கருத வேண்டும். தமிழ்உணர்வாளர்களால் திருவையாற்றிலே பிற மொழிப் பாடல்களுக்கான எதிர்ப்பு வலுத்துவருவதால் சில ஆண்டுகளாகச் சென்னையில் அதனைச் சென்னையில் திருவையாறு என்று நடத்துகின்றார்கள். தமிழ் மக்களில் பெரும்பான்மையர் வெட்கம், மானம், சூடு, சொரணை அற்றவர்கள் என்று எண்ணி இசை வணிகர்கள் சிலர் இதில் ஈடுபட்டுவருகின்றனர்.
பொறுத்தது போதும் என நாம் எதிர்ப்பைக் காட்டினால்தான் கலைவணிகர்கள் நிலைதடுமாறிப்புறமுதுகிட்டு ஓடுவர்.
இசைக்குத்தான் மொழி வேறுபாடு கிடையாதே! என்ன மொழியில் பாடினால் என்ன என்று சொல்கிறார்களே! அப்படியாயின் தமிழில் பாடலாமே! தெலுங்கு, சமசுகிருதம், கன்னட மொழிகளில் தமிழ்மண்ணில் பாடுவது ஏன்? தமிழிசை என்பது நம் மண்ணிற்கானது. உயர் பண்ணிற்கானது. அதை மண்ணோடு மண்ணாக அழிக்க எண்ணுபவர்களை நாம் புறக்கணிக்க வேண்டாவா?
சாதிவேறுபாடு இல்லாமல் அனைத்துச் சாதியைச் சேர்ந்தவர்களும் தமிழிசைக்காகக்குரல் கொடுத்து வந்துள்ளனர்; வருகின்றனர். ஆனால், சாதிமாயையில் சிக்கியசிலர் பிறரையும் அம்மாய வலையில் விழச் செய்வதற்காகத் தியாகராசர் (தியாகையர்) போர்வையில் அழிப்பு வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
தோல்காது உள்ள தேசங்களில் இந்தத் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள் என்றும் இரும்புக்காதுகள் நமக்கு உள்ளதால்தான் நாம் பொறுத்துக் கொண்டிருப்பதாகவும் பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதியார் அன்றே கவலைப்பட்டாரே! பாரதி பெயரால் தமிழ் வளர்ப்போர்கள் இனியும் பொறுக்கலாமா? “பாடுகிறவர்கள் தமிழர்கள்; கேட்பவர்களும் தமிழர்கள்; ஆனால், தமிழ்ப்பாட்டுமட்டும் பாடுவது கிடையாது. என்ன வெட்கக்ககேடு! எவ்வளவுகாலம் தமிழர்கள் இதனைச் சகித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்” என அன்றே கேட்டாரேஅறிஞர் வெ.சாமிநாதசர்மா.இன்னும் நாம் பொறுமை காக்கின்றோமே!
பிடில் சீனிவாசையர், “தமிழிசைதான் தென்னிந்தியாவின்இசை. அது சூரியனைப் போன்றது. மற்ற இசைகளுக்கும் மற்ற மொழிகளுக்கும் இடம் கொடுக்கும் பண்பு தமிழிசைக்குஉண்டு. அதனாலேயே தமிழிசை கேடுற்றது. பயிரைக் கெடுக்கவந்த களைகளைப் பிடுங்கி எறிய வேண்டுமா? அவற்றோடு உறவு கொண்டாட வேண்டுமா?” என வேதனையில் வெடித்தாரே! நாம் தொடர்ந்து எத்தனைக் காலம்தான் களைகளை வளர்த்துத் தமிழ்ப்பயிரை அழித்துக் கொண்டிருக்கப் போகிறோம்?
தமிழைப் புறக்கணிக்கின்றவர்களுக்குத் தமிழ்நாட்டில் இடம் இல்லை என்ற நிலை என்று உருவாகும்? யாரால் உருவாகும்? நாம் நினைத்தால் அந்த நிலை இன்றேஉருவாகும்.அது நம்மால்தான் உருவாக வேண்டும்! எனவே, முதலில் நாம் இந்தநிகழ்ச்சியைப் புறக்கணிக்க வேண்டும். ஆனால், நாம் இந்த நிகழ்ச்சியை மட்டும்புறக்கணித்தால் தமிழ்த்தாய் மகிழ மாட்டாள்.
தமிழ்க்கடலில் நஞ்சு கலக்கும்இசை நிகழ்ச்சியை நடத்துபவர்கள், பங்கேற்பவர்கள், விளம்பரதாரர்கள், என அனைத்துத் தரப்பாரின் பிற நிகழ்ச்சிகளையும் அவர்கள் தொடர்பான பொருள்களையும் நாம் புறக்கணிக்கவேண்டும்.
தமிழ்ப்பாட்டு பாடு
தமிழ்ப்பாட்டிற்கு ஆடு
இல்லையேல் ஓடு
என்பதை நாம் ஒவ்வொருவருக்கும் உணர்த்த வேண்டும். ஊர்கள் தோறும் நஞ்சாறு ஓடும்முன் நாம் சென்னையிலேயே அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
உலகஇசைகளி்ல் எல்லாம் தொன்மையும் நுண்மையும் மிக்கத் தமிழிசையைக் காக்கவேண்டும் எனில் காவலுக்கு இடையூறு தருபவர்களை இடறி விழச் செய்ய வேண்டும்.
எங்களிடம் பணம் இருக்கின்றது. எனவே, நஞ்சு கலக்கும் நிகழ்ச்சிக்குப்பணம் அளிக்கப்போகிறோம் என்கிறீர்களா? சற்று நில்லுங்கள். தாய் மண் காக்க தென்தமிழகத்தில் போராடுகிறார்களே! அவர்களுக்கு அந்தத் தொகையை வழங்குங்கள்! முத்தமிட வரும் கயிற்றை அறுத்தெறிய மூவர் துடிக்கின்றார்களே! அவர்களுக்கு உதவி செய்யுங்கள்! சொந்த மண்ணில் அறியாமையால் இடம் கொடுத்து அயலானை உயர்த்தி அவனால் அழிந்து எஞ்சியோர் வதைக்கூடங்களில் வாழ்கிறார்களே! அவர்களுக்கு உதவுங்கள். பொழுதுபோக்கு என்ற பெயரிலோ வேறு பெயரிலோதிருவையாற்று நிகழ்ச்சிக்கு உதவாதீர்கள்!
அயலிசை ஆதிக்கத்தினை நிலை நிறுத்தாதீர்கள்!
தமிழிசை நலிவிற்குத் துணை நிற்காதீர்கள்!
தமிழ்த்தாயை வாழ விடுங்கள்! ஆம்! நாம் நீடு வாழத் தமிழ்த்தாய் வாழ வேண்டும்! தமிழ்த்தாய் வாழத் தமிழசை முழங்க வேண்டும்.
http://thiru2050.blogspot.in/2011/12/thiruvaiyaaru-poison-in-chennai.html
நன்றி நட்பு : இணைய இதழ்
மீண்டும் கவிக்கொண்டல்
Leave a Reply