செம்பு உருட்டு (சுடெருலைட்டு) தொழிலகம் மூடலுக்குப் பாராட்டு!

உறுதியாய் நிற்க வேண்டுகோள்!

 பதின்மூவருக்குக் குறையாத உயிர்ப்பலிக்கும் நூற்றுக்கணக்கானவர்களின் படுகாயங்களுக்கும் பிறகு தமிழ்நாடு முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி செம்பு உருட்டு (சுடெருலைட்டு) தொழிலகத்தை மூட ஆணை பிறப்பித்துள்ளார்.  சுற்றுச்சூழல் வனத்துறை அரசாணை (பல்வகை) எண் 72 நாள் வைகாசி 14, 2049 /  மே 28, 2048 இனபடி அரசு இதனை நிலையாக மூட ஆணை பிறப்பித்துள்ளது.

 துணை முதல்வர்  பன்னீர் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் செயக்குமார், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் இராசு, ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் இராசலட்சுமி,  தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் ஆகியோர் திங்களன்று (மே 28) தூத்துக்குடி  மருத்துவமனைக்குச் செனறனர்; தூத்துக்குடி போராட்டக் களத்தில் படுகாயமுற்று மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டவர்களையும் அவர்களின் உறவினர்களையும் உயிர் பறிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து வந்துள்ளனர். அதன் பின்னர் முதல்வர் பழனிச்சாமியிடம் விவரம் தெரிவித்து அதன் தொடர்ச்சியாக அமைச்சரவை கூடி இவ்வுருட்டாலைத் தொழிலகத்தை மூட முடிவெடுத்து ஆணையாகப் பிறப்பித்துள்ளனர்.

இதனால், தொழிலகம்   தொடங்கப்பட்டதில் இருந்து வந்த எதிர்ப்புப் போராட்டமும் விரிவாக்கப்பணியை எதிர்த்து  100  நாளைத் தாண்டி நடைபெறும் போராட்டமும் முடிவிற்கு வந்துள்ளது.

அரசு இதற்கு மேலும் காலந்தாழ்த்தாமல்  நிலையாக மூட ஆணை பிறப்பித்தமைக்குப் பாராட்டுகள்! இதற்கு முன்பே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நாம் வினா தொடுத்துக்கொண்டு இருப்பதை விட எவ்வகையிலும் இத் தொழிலகம் திறக்கப்படாமல் இருக்க வழி வகை காண அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

  முதல்வருக்கும் பிற அமைச்சர்களுக்கும்  தெரிந்த செய்தி முன்னரும் மூன்று முறை மூடப்பட்டுத் திறக்கப்பட்ட தொழிலகம்தான் இஃது என்பது. மக்களும் இஃதை அறிவார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும். தமிழ்நாட்டில் பாசகவின்  சார்பு ஆட்சியில்லாமல் வேறு ஆட்சி இருந்தது எனில் பாசக நிலைப்பாடே வேறு மாதிரி இருந்திருக்கும். இப்பொழுது அமைதி காக்கிறது அக்கட்சி. தலைமையமைச்சர் நரேந்திர(மோடி) இத்தொழிலகத்தை( ) நடத்தும் வேதாந்த வள வரையறு நிறுவனத்தின் (Vedanta Resources plc,) தலைவர் அனில் அம்பாடியின் நெருங்கிய நண்பர். எனவே இத்தொழிலகம் திறக்கப்பட என்ன வேண்டுமென்றாலும் செய்வார்.

இதற்கு முதலில் தடை விதிக்கப் பரிந்துரைத்த தேசியச் சுற்றுச்சூழலுக்கான பொறியியல் ஆராய்ச்சி மையமே( National Environmental Engineering Research Institute)  மறுமுறையீட்டின்பொழுது இரண்டுமாதத்தில் பாதிப்பு குறைந்து  விட்டதாகக் கூறி இயங்கப் பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் உயர்நீதிமன்றமும் தடையை நீக்கியது. இவ்வாறு தீர்ப்பைத் திருத்தி வாங்கும் செல்வாக்கு பெற்ற நிறுவனம் இப்பொழுதும் என்ன செய்தேனும் இதனை மீளவும் திறக்க முயற்சிகள் மேற்கொள்ளும். இதன் உரிமையாளர், நரேந்திர(மோடியின்) நண்பர், அனில் அகர்வாலும் எப்படியும் உரிய இசைவுபெற்று இது மீண்டும் இயங்கும் எனச் சொல்லியுள்ளார். எனவே அரசு மீளத்திறப்பதற்கான எல்லா வாயி்ல்களையும் அடைத்து   இனி என்றென்றும் இங்கோ தமிழ் நாட்டில்  வேறு எங்குமோ உருட்டாலைத் தொழிலகம் திறக்கப்படாமல் செய்ய  வேண்டும்.

  இதில் வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு மறு வேலைவாய்ப்புகளுக்கு ஏற்பாடு செய்யாவிடடால் அவர்களைக் கொண்டே கலவரம் உண்டாக்கவும் நிறுவனம் முயற்சி மேற்கொள்ளும். எனவே அவர்களின் நலத்திலும் அரசு கருத்து செலுத்த வேண்டும்.

உயிர் பறிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கும் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் அரசு முழுமையான உதவிகளை விரைவாகச் செய்ய வேண்டும்.

அண்மையில் எந்தத் துப்பாக்கிச் சூட்டிலும் முறைப்படி காவல்துறை நடந்துகொள்ளவில்லை. இத் துப்பாக்கிச் சூட்டில் எச்சரிக்கை முறையில  அல்லாமல் குறிபார்த்துக் கொல்லும் முறையில் காவல் துறை நடந்து கொண்டுள்ளது. எனவே தொடர்புடைய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்து இதுபோன்ற அறமற்றநிகழ்வு இனி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  மாவட்ட ஆட்சியர் அல்லது  உரிய நீதிபதியின் ஆணைக்கிணங்கவே துப்பாக்கிச் சூடு நடைபெற வேண்டும். அப்பொழுதும் காவல கண்காணிப்பாளர நிலையிலான  காவல் அதிகாரிதான் அதனை நிறைவேற்ற ஆணையிடுவார். ஆனால் சில நாள சென்ற பின்னர் தனிததுணை வடடாட்சியர் இருவர் என்று முதலிலும் பின்னர் மேலும் ஒருவருமாக இளநிலை அதிகாரிகள் முறையீட்டின்படி துப்பாக்கிச் சூடுநடைபெற்றதாகக் கூறுவது பொருந்துவதாக இல்லை. முதல் தகவல் அறிக்கையைப் பார்க்கும் பொழுது உண்மைக்கு மாறாகத் துப்பாக்கிச் சூட்டினைச்  சரி எனச் சொல்லும் வகையில்  நம்பச்செய்வதற்காகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன போல் தெரிகின்றன. மாவட்டத்தலைநகரில் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆணையிட இவர்களுக்கு ஏது அதிகாரம்?  உயர் அதிகாரிகளைக்காப்பாற்றவும் உண்மையை மறைக்கவுமே இந்த நாடகம் என்று மக்கண் எண்ணுகின்றனர்.எனவே இது குறித்து அரசு முறையான உசாவல் மேற்கொண்டு  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடங்குளம் முதலான மக்களுக்கு எதிரான அனைத்துத் திட்டங்களையும் அரசு ஆய்ந்து மூடவேண்டியவற்றை மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திட்டச் செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் இருந்தால் அவர்கள் உணர்வை மதித்து மறு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மக்களின் அச்சம் தவறானது எனில் அதனைப் போக்கிய பின்னரே எந்த ஒரு திட்டத்தையும் தொடங்க வேண்டும். மக்களின் கவலை சரியானது எனில், உடனடியாக அப்படிப்பட்ட திட்டத்தை நிறுத்த வேண்டும்.

தூத்துக்குடி  போராட்டத்தை மக்கள் போராட்டமாக மதித்து இதிலிருந்து அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இனி எக்காரணம் கொண்டும்  மக்களுக்கு எதிரான திட்டத்தைச் செயற்படுத்தவோ மக்கள் போராட்டங்களைக் கொச்சைப்படுத்திப் புறக்கணிக்கவோ கூடாது என்பதை ஆள்வோர்களும் ஆளத்துடிப்பவர்களும் உணர வேண்டும்.

உருட்டாலையை மூட ஆணை பிறப்பித்ததும் தங்கள் கடமை முடிந்து விட்டதாக ஆள்வோர் எண்ணக்கூடாது. தாங்கள் பிறப்பித்த ஆணையை நிலைக்கச் செய்வதே  உண்மையான பணி என்பதை உணர்ந்து ஆவன செய்ய வேண்டும்.

போராட்டக் களத்தில உயிர் இழந்தவர்களுக்கு  அஞ்சலி தெரிவிக்கிறோம்.

போராட்டத்திற்கு இடைக்கால முடிவு வரும்வகையில் இறந்தவர்கள் உடல்களைப் பெறமாட்டோம் என உறுதியாக நின்ற குடும்பத்தினருக்கும் நம் பாராட்டுகள்

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு

தாழ்ச்சியுள் தங்குதல் தீது.(திருவள்ளுவர், திருக்குறள் 671)

ஆதலின் எச்சூழலிலும் துணிந்து முடிவெடுத்திடுக!

எடுத்த முடிவைக் காலத் தாழ்ச்சியின்றி நிறைவேற்றிடுக!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை  அகரமுதல  வைகாசி 13-19, 2049 /மே 27-சூன்2,2018