செம்மொழி விருது – தமிழ்ப்புலமையாளர்களைத் தேர்ந்தெடுக்கத் தமிழறிவு தேவையில்லையா? – இலக்குவனார் திருவள்ளுவன்
செம்மொழி விருது – தமிழ்ப்புலமையாளர்களைத் தேர்ந்தெடுக்கத் தமிழறிவு தேவையில்லையா?
தமிழ் தொடர்பான துறைகள், பதவிகள், அமைப்புகள், குழுக்கள் ஆகியவற்றின் பொறுப்பிற்கான முதல் தகுதி தமிழறிவு இல்லாதவராக இருக்க வேண்டும். தமிழராக இல்லாமல் இருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும். இதுதான் தமிழ்நாட்டின் எழுதப்படாத விதி. இந்திய அளவிலும் மத்திய அரசு இந்த விதியைக் கடைப்பிடிக்கத் தவறுவதில்லை. எனவே, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பெறும் தமிழ்ப்புலமையாளர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் உள்ள உறுப்பினர்கள் குறித்து நாம் ஒன்றும் கூறுவதற்கில்லை.
இக்குழுவில் 4 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். எப்படியோ தவறுதலாகத் தமிழறிஞர் பேரூராதீனத்தின் இளைய பட்டமாம் தவத்திரு. முனைவர் மருதாசல அடிகளார் இதில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் வணிகவியல், கூட்டுறவு ஆகிய கல்வித்துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்; தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்; தமிழுணர்வுடன் நல்ல தமிழில் பேசுபவர்; தவத்திரு ஆறுமுக அடிகள் தாய்த்தமிழ் மழலையர்- தொடக்கப்பள்ளி, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் மேல்நிலைப் பள்ளி, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களைப் பேரூர் மடம் சார்பில் நடத்தி வருகிறார். தமிழ்க்கல்லூரியின் முதல்வராகவும் உள்ளார். தமிழ் வழிபாட்டைப் பரப்பி வரும் தமிழ் இறையாளர். தமிழறிஞரான இவர் ஒருவர்தான் விருதாளர் குழுவில் தகுதியானவராக உள்ளார்.
பிற மூவர் முறையே முனைவர் நாகசாமி, திரு கோபாலசாமி, திரு நரசய்யா ஆகியோர்.
திரு கோபாலசாமி, குசராத்து மாநிலத்தில் 25 ஆண்டுகள் இ.ஆ.ப. அலுவலராகப் பல நிலைகளில் பணியாற்றியவர். அதன் பின் மத்திய அரசின் பணிகளுக்கு மாறியவர். 15 ஆவது தேர்தல் ஆணையராக இருந்து பலராலும் அறியப்பெற்றவர். சென்னையிலும் அதைச் சுற்றிலும் பள்ளிகள் நடத்தும் விவேகானந்தா கல்விக்கழகத்தின் தலைவராக இப்போது இருக்கிறார். நாட்டியக்கல்வி அமைப்பான கலாச்சேத்திராவின் தலைவராகவும் ( 22.10.2014 முதல் 5 ஆண்டுகள்) உள்ளார். இவரது முயற்சியால் ஐ.நா.வின் கல்விஅறிவியல்-பண்பாட்டு(UNESCO) அமைப்பு வேதங்களையும் இந்து சிற்பங்களையும் பாதுகாக்க 5 கோடி உரூபாய் நல்கை அளித்துள்ளது. முடியக்கூடியவற்றை உடன் முடிப்பதில் வல்லவர்தான். ஏனெனில் மத்திய அரசின் பண்பாட்டுத்துறைச் செயலகத்தில் பணியாற்றிய பொழுது இவரைச் சந்தித்துள்ளேன். மத்திய அரசு நல்கை வேண்டுவோர் பற்றிய விவரங்களைக் கேட்பதெல்லாம் அங்கும் இங்கும் சுற்றி இறுதி நாள் முடிந்த பின்னரே வந்து சேர்கின்றன. தொடக்க நிலையிலேயே நேரடியாகக் கேட்டால் விவரமறிந்து அரசு வழி அனுப்ப இயலும் என்றேன். உடன் நடவடிக்கை எடுத்தார். அப்பொழுது இது தொடர்பான தன்னார்வத் தொண்டு நிறுவனத்திடம் கேட்கும் நிதியுதவி தொடர்பான விளம்பரம் எதுவும் தமிழ்நாட்டு இதழ்களில் வருவதில்லை. தமிழ்நாட்டிலும் விளம்பரம் கொடுத்தால் பயனடைவோர் பரவலாக இருப்பர் என்றேன்.உடனே தொடர்புடைய அதிகாரியைக் கூப்பிட்டு அனைத்து விளம்பரங்களையும் தென்னகப் பதிப்புகளிலும் அளிக்க வேண்டும் என்று கட்டளை யிட்டார். உடன் செயல்பாட்டிற்கு வந்தது.
ஒரு முறை கலாச்சேத்திரா அமைப்பைப் பார்வையிடச் சென்னைக்கு வந்திருந்தார்; நானும் உடன் சென்றிருந்தேன். அப்பொழுது துறைசார்பான கோரிக்கைகள் சிலவற்றைத் தெரிவித்ததும் உடன் ஏற்றார். உ.வே.சா.நூலகத்தின் தனித்தன்மையைக் காக்கவேண்டுவது தொடர்பான கோரிக்கையையும் செவிமடுத்துத் தில்லி சென்று நடவடிக்கை எடுத்தார். செயல் திறன் மிக்க அதிகாரிதான்.
அண்மையில் செம்மொழித்தமிழாய்வு மத்தியநிறுவனத்தின் செயல்பாடு குறித்து மத்தியஅரசு கேட்டதற்கு இணங்க அறிக்கை அளித்துள்ளார். துறை தொடர்பான செயல்பாடுகளில் அவரது கருத்தைப் பெறுவதோ தொடர்பான குழுக்களில் இடம் பெறச் செய்வதோ தவறில்லை. எனினும், திறமையான நிருவாகியாக இருப்பதால் தமிழறிஞராக ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் தமிழ்ப்புலமையாளர் தொடர்பில் கருத்து கேட்பது பொருந்தாது அல்லவா?
மற்றொருவர் ஒரிசாவில் பிறந்து தொடக்கக்கல்வியைத் தமிழ்நாட்டில் பெற்ற தமிழ் எழுத்தாளர் காவூரி இராமலிங்கம் அப்பல நரசய்யா. தொடக்கத்தில் 1949 ஆண்டு முதல் கப்பல் படையில் பத்தாண்டுகள் பணியாற்றியுள்ளார். 1965 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத் துறைமுகத்தில் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றினார். வங்கத் தேச விடுதலைப் போரிலும் பங்கேற்று 1991இல் ஓய்வு பெற்றவர். நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார்.அவை மூன்று தொகுதிகளாகவும் வந்துள்ளன. இவரின் மதராசப்பட்டினம் (2006) சென்னையைப் பற்றிய சிறந்த ஆவணமாக அமைந்து இவருக்கு மேலும் புகழ் சேர்த்தது.
இந்திய துறைமுகச் சங்கத்தின் அறிவுரைஞராக இருந்த பொழுது நரசய்யா உலக வங்கியின் அழைப்பின் பேரில் 1994 ஆம் ஆண்டு – 1996 வரை கம்போடிய அவசர மறுவாழ்வுத் திட்டப் பணிக்குழுவில் இடம் பெற்றார். இதன் பின்னர் இவர் சென்னையில்தான் வசிக்கிறார். கடலோடியாகப் புகழ் பெற்றுக் ‘கடலோடி’ என்று நூலும் எழுதியுள்ளார். ஆனால், கடல் சார்ந்த அல்லது துறைமுகம் சார்ந்த பணிகளில் இவரின் கருத்தைக் கேட்பது பொருத்தமாக இருக்கும். ஆனால், தமிழ் ஆய்வறிஞர்களைத் தேர்ந்தெடுக்க இவரைப் பயன்படுத்துவது எங்ஙனம் பொருந்தும்?
முனைவர் இரா.நாகசாமி இந்திய வரலாறு, தொல்லியல்-கல்வெட்டு எழுத்துக் குறிப்பு ஆய்வாளர் என்ற போர்வையில் வாய்ப்பு உள்ளபொழுதெல்லாம் தமிழுக்கு எதிரான கருத்துகளைப் பதிபவர். தமிழ் நாடு தொல்லியல் துறையில் பணியாற்றி முதல் இயக்குநராக (1966-1988) உயர்ந்தவர். தமிழ்ப் பகைமையைப் பாராட்டும் மத்திய அரசு இவருக்குத் தாமரை அணி(பத்ம பூசண்) விருதை வழங்கியது(2018).
திருக்குறள் குறித்த திரிக்கப்பட்ட கருத்துகள் அடங்கிய திருக்குறள் – சாத்திரங்களின் பிழிவு (Tirukkural – An Abridgement of Shaastras) என்னும் ஆங்கிலப் புரட்டு நூலை எழுதியுள்ளார்.
ஆரியக் கருத்துகளுக்கு எதிரான புரட்சி நூலை எழுதிய திருவள்ளுவரை ஆரியத்தைப் பின்பற்றி எழுதியுள்ளதாக இழிவுபடுத்தி உள்ளார். இந்தத் தகுதியின் அடிப்படையில்தான் இவரைச் செம்மொழி விருதுகள் தெரிவுக் குழுவில் உறுப்பினராக மத்திய அரசு நியமித்துள்ளது.
தமிழுக்கு எதிரான கருத்து கொண்டோர் தமிழுக்கு எதிரான கருத்தாளர்களைத்தானே விருதிற்குத் தேர்ந்தெடுப்பர். எனவேதான் தகுதியற்றவர்களை விருதுக் குழுவில் இருந்து நீக்க வேண்டுகிறோம்.
குடியரசுத் தலைவர் விருதுக் குழுவிலிருந்து தமிழுக்கு எதிரான நாகசாமியை நீக்க வேண்டுமெனத் திமுக தலைவர் முக.தாலின் முதலான பலரும் தமிழ் அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். தமிழகத் தலைவர்களுக்கும் தமிழ் அமைப்பினருக்கும் மேலோட்டமான பார்வைதான் இருக்கும் என்பதற்கு இவர்களின் எதிர்ப்பு முறையே சான்றாகும். குழுவிலிருந்து தகுதியற்ற மூவரை நீக்கித் தமிழறிஞர்களை நியமிக்க வலியுறுத்தாமல், இவரை மட்டும் நீக்குமாறு சொல்வதால், பிற இருவரை ஏற்றுக் கொள்வதாகத்தானே பொருள்.
எனவே, செம்மொழி விருதுக் குழுவில் இருந்து பொருத்தமற்ற மூவரை நீக்கிப் புதிய குழுவை அமைக்க மத்திய அரசை வேண்டுகிறோம். மத்திய ஆளுங்கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள தமிழக ஆளுங்கட்சியும் முயன்று செம்மொழி விருதிற்கான புதிய குழுவை அமைக்க வேண்டும் .
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் (திருவள்ளுவர், திருக்குறள் 517).
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல – இதழுரை
Leave a Reply